புனித தொன் போஸ்கோ கண்ட கனவு

புனித தொன் போஸ்கோ தமது காவல் சம்மனசானவரால் ஒரு முறை நரகத்தைக் காணும்படி கனவில் அழைத்துச் செல்லப்பட்டார். இப்போது நரகத்தின் வாசலில் அவர் நின்று கொண்டிருக்கிறார். இனி அவரே நேரடியாகப் பேசுவதைக் கேட்போம்:

“நான் கடும் திகிலோடு ஏறிட்டுப் பார்த்தபோது, தொலைவில் ஒருவன் அந்தச் சரிவான சாலையில் கட்டுப் படுத்தப்பட முடியாத வேகத்தில் வந்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். அவன்மீது வைத்த கண்ணை எடுக்காமலே, அவன் யாரென்று அடையாளம் காண முயன்றேன். அவன் அருகில் வந்தபோது, அவன் என் (விடுதியிலுள்ள) சிறுவர்களில் ஒருவன்தான் என்று நான் கண்டுகொண்டேன். கலைந்திருந்த அவனுடைய தலைமுடியின் ஒரு பகுதி அவன் தலை மீது குத்திட்டு நிற்க, மறு பகுதி காற்றில் பின்பக்கமாகத் தள்ளப்பட்டது. 

தண்ணீரில் விழுந்து மிதக்கும் முயற்சியில் தண்ணீரில் கைகளை அடித்துக் கொள்ளும் ஒருவனைப் போல, அவனுடைய கரங்கள் விரிக்கப்பட்டிருந்தன. அவன் நிற்க விரும்பினான், ஆனால் முடியவில்லை. நீட்டிக் கொண்டிருந்த கற்களில் கால் இடறியதால், அவன் தொடர்ந்து இன்னும் வேகமாக விழுந்து எழுந்து கொண்டிருந்தான். “நாம் அவனுக்கு உதவி செய்வோம், அவனைத் தடுத்து நிறுத்துவோம்” என்று நான் கத்தினேன். ஒரு வீண் முயற்சியாக அவனைத் தடுக்க என் கரங்களை நீட்டவும் செய்தேன்.

"அவனை விட்டு விடும்” என்று என் வழிகாட்டி பதில் சொன்னார்.

"ஏன்?"

"கடவுளின் பழிதீர்த்தல் எவ்வளவு பயங்கரமுள்ளது என்று உமக்குத் தெரியாதா? அவரது நீதியுள்ள கடுஞ்சினத்திலிருந்து தப்பியோடிக் கொண்டிருப்பவனை உம்மால் தடுத்து நிறுத்தி விட முடியும் என்று நினைக்கிறீரா?"

இதனிடையே அந்தச் சிறுவன், கடவுளின் கடுங்கோபம் தன்னை இன்னும் துரத்திக் கொண்டு வருகிறதா என்று பார்க்கும் முயற்சியில் நெருப்பு மயமான தன் பார்வையைப் பின்நோக்கித் திருப்பியிருந்தான். அடுத்த கணம் அவன் கால் இடறி கீழே விழுந்து உருண்டு, அந்த மலையிடுக்கின் அடிவாரத்திற்கு வந்து, தனது ஓட்டத்தில் தான் தஞ்சமடைய வேறு நல்ல இடம் கிடைக்காது என்பது போல, அந்த வெண்கலக் கதவில் வேகமாக மோதினான்.

“அவன் ஏன் கடும் அச்சத்தோடு பின்னோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தான்?” என்று நான் கேட்டேன்.

“ஏனெனில் கடவுளின் கடுங்கோபம் நரகத்தின் வாசல்களையும் ஊடுருவி அவனைச் சென்றடைந்து, நரக நெருப்பின் மத்தியிலும் கூட அவனைச் சித்திரவதை செய்யும்!”

சிறுவன் கதவில் மோதியதும், அது ஒரு பெரும் கர்ஜனையோடு வேகமாகத் திறக்க, அடுத்தடுத்து, உள்ளேயிருந்த ஓராயிரம் கதவுகள் காதைச் செவிடாக்கும் இடியோசையுடன் திறந்தன. கண்ணுக்குத் தெரியாத, மிகுந்த வன்மையுள்ள, எதிர்க்கப்பட முடியாத கடும் சூறாவளியால் வீசியெறியப்பட்ட ஒரு பிரமாண்டமான பொருளால் தாக்கப் பட்டது போல அவை திறந்தன. 

ஒன்றுக்குப் பின் ஒன்றாக, ஒன்றுக்கொன்று கணிசமான தூரத்தில் இருந்த இந்த வெண்கலக் கதவுகள் ஒரு கணம் மட்டுமே திறந்திருக்க, அந்த இடைவெளியில், வெகு தூரத்தில், தீச்சூளையைப் போன்ற ஒன்றைக் கண்டேன். சிறுவன் அதனுள் விழவும், அதிலிருந்து நெருப்புப் பந்துகள் தெறிப்பதையும் நான் கண்டேன். எவ்வளவு வேகமாக அவை திறந்தனவோ, அவ்வளவு வேகமாக அவை மீண்டும் மூடிக் கொண்டன.” 

(ஆதாரம்: "Forty Dreams of St. John Bosco," compiled and edited by Fr. J.Bacchiarello, S.D.B.).