தனித்திரு! விழித்திரு! ஜெபித்திரு!

"கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், கண்டடைவீர்கள்; தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும்.

ஏனெனில், கேட்கிற எவனும் பெறுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்.” – மத்தேயு 7 : 7-8.

பரபரப்புக்களை தள்ளிவைப்போம். வைரஸை பற்றிய செய்திகளை பார்ப்பதிலும், பகிர்வதிலும் கொஞ்சம் இருந்து விலகுவோம்.  ரிலாகஸ் மோடுக்கு வருவோம். 

எதுவும் நம் கையில் இல்லை. ஆண்டவர் அனுமதியில்லாமல்  நம் தலையிலிருந்து ஒரு முடி கூட கீழே விழாது என்று சொல்லியிருக்கிறார் நம் தேவன்.

“கவலைப்படுவதனால் உங்களில் எவன் தன் வளர்த்திக்கு ஒரு முழம் கூட்டமுடியும் ? “ மத்தேயு 6: 27

“அவர் நம் பிணிகளை ஏற்றுக்கொண்டார்; நம் நோய்களைச் சுமந்துகொண்டார் “ – மத்தேயு 8: 17

ஆண்டவர் இயேசு சுவாமி அனுமதியில்லாமல் நம்மை எந்த நோயும் அனுகாது.. நம்மை பாதுகாக்கும் பணியை அவர் பார்த்துக்கொள்வார்.

இதுபோன்ற நேரத்தில் நம் தேவமாதா தன் காட்சியில் நமக்கு சொல்லிக்கொடுத்த ஜெபம்..

“இயேசுவே ! என் நம்பிக்கையெல்லாம் உம் பெயரில் வைக்கிறேன் “ என்பதுதான்.

இச்செபத்தை அடிக்கடி உச்சரிப்போம்.. மேலும் மன வல்லிய ஜெபங்களான,

“இயேசுவின் இரத்தம் ஜெயம் ! “, “ மரியாயே வாழ்க!“ , “இயேசு“ ( ஆண்டவருடைய நாமமே ஒரு ஜெபமதான் மற்றும் குணமாக்கும் மருந்து), “ "பிதா சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே ஆமென் “ ( இச்சிரிய ஜெபத்தை சொல்லும்போது நம் மேல் நாமே சிலுவை அடையாளம் வரைந்து கொள்கிறோம்), மேலும் சில பரலோக அருள் நிறை மந்திரங்கள் சொல்வது ( உதாரணம் : ஒரு பரலோக மந்திரம், மூன்று அருள் நிறை மந்திரங்கள்)

மேலே சொன்னவைகள் ஆபத்து நேரங்களில் நம்மைக் காப்பாற்றிக்கொள்ள..

மேலும் நாம் இப்போது பெரும்பாலும் நம் வீடுகளில் நான்கு சுவர்களுக்குள் அடைபட்டிருக்கிறோம். இந்த சூழ்நிலையை ஒப்புக்கொடுப்போம். பொதுவாக கிறிஸ்தவன் தான் வாழும் அனைத்து சூழ்நிலையையும் ஒப்புக்கொடுக்கும்போது எந்த தவறும் செய்ய மாட்டான். ஒரு வேளை நாம் ஒரு சூழ்நிலையில் மாட்டிக்கொண்டோம். அது நம் ஆன்மா தவறிவிடும் சூழ்நிலையாகக் கூட இருக்கலாம். உடனே நாம் செய்யவேண்டிய காரியம் “ ஆண்டவர் இயேசுவே இந்த சூழ்நிலையை உம்மிடம் ஒப்புக்கொடுக்கிறேன். இதிலிருந்து என் ஆன்மாவைக் காப்பாற்றும் என்பதுதான். கண்டிப்பாக நாம் காப்பாற்றப்படுவோம்..

அதுபோல் நாம் நாம் செய்யும் ஒவ்வொரு பணியையும் ஆண்டவருக்கு அடிக்கடி ஒப்புக்கொடுக்கலாம். தாய்மார்கள் தாங்கள் செய்யும் சமையலையும், மாணவ மாணவிகள் தாங்கள் படிக்கும் படிப்பையும் ஒப்புக்கொடுக்கலாம்.

சரி வீட்டுக்குள் முடங்கி கிடக்கிறோம். நாம் இப்போது என்ன செய்யலாம். நாம் இப்போது தவக்காலத்தில் இருக்கிறோம். தவக்காலத்தில் மட்டுமல்ல எப்போதுமே நம்முடைய துன்பங்களை, அசவுகரீகங்களை, வலிகளை, கஷ்ட்டங்களை ஆண்டவருடைய சிலுவைப்பாடுகளோடு ஒப்புக்கொடுத்துவிட்டால் அந்த சிலுவைகள் புண்ணியங்களாக மாறிவிடும். அதே சமையத்தில் “ எனக்கு மட்டும் ஏன் கஷ்ட்டம்; துயரம்; வலி, நான் என்ன பாவம் செய்தேன் என்று முனுமுனுத்தால் “ அன்று இஸ்ராயேல் மக்களின் முனுமுனுப்பாக மாறி அத்தனையும் வீணாகிவிடும்..

நாம் இருந்த இடத்தில் இருந்தே புண்ணியங்களை சம்பாதிக்க முடியும்.. அத்துன்பங்களை ஏற்றுக்கொண்டு ஒப்புக்கொடுத்தால்..

அன்று நல்ல கள்ளன் கடைசி நேரத்தில்.. கடைசி வாய்ப்பை.. பயன்படுத்தினானே.. அதைப்போல.. அவன் மனமாற காரணமாயிருந்த அந்த வசனங்களைக் கூட நாம் அடிக்கடி உச்சரிக்க வேண்டும்..

“நாம் தண்டிக்கபடுவது முறையே… ஏனெனில் நாம் பாவம் செய்தோம் “

நாம் என்ன புனிதர்களா?... புனிதர்களாகவா வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.. ஒரு நாள் காலை எழுந்ததில் இருந்து உறங்கும் முன் எத்தனை முறை தவறுகிறோம். எத்தனை பாவங்கள் செய்கிறோம். நம் நாவால்.. நம் நடத்தையால்… குறைந்தது யாரையும் புண்படுத்தாமல் நாம் தூங்குகிறோமா..?

பெரிய பாவங்களை விட்டு விடுவோம்..

“தன்னைத்தானே நேசிப்பது போல பிறரையும் நேசி “

“உன்னைத் துன்புறுத்துபவர்களுக்காக ஜெபியுங்கள் “

இந்த இரண்டு நம் ஆண்டவரின் வார்த்தைகளை நாம் கண்டிப்பாக கடைபிடிப்பதில்லை…

விஷயத்திற்கு வருவோம்.. ஆகையால் இந்த தனிமையை... இந்த சிறையை ஆண்டவர் இயேசுவின் திருப்பாடுகளோடு ஒப்புக்கொடுப்போம்.. கேளிக்கை நிகழ்ச்சிகளை அதிகமாக பார்ப்பதை தவிர்ப்போம்..

வைரஸால் பாதிக்கப்பட்ட எத்தனை மக்கள் தனிமைச் சிறையில் இருக்கிறார்கள்..  நாமாவது குடும்பத்தோடு அல்லது குடும்ப உறுப்பினர்களோடு இருக்கிறோம். அவர்கள் நிலமை.. அரசன் முதல் ஆண்டிவரை அனைவருக்கும் ஒரே நிலமை. தனிமை..

அவர்களுடைய தனிமைகளுக்காக நம் தனிமைகளை ஏற்றுக்கொள்வோம்.. ஒப்புக்கொடுப்போம்..

பகல் 12 மணி நேரத்தில் ஒரு அரைமணி நேரமாவது டிவியை அனைத்துவிட்டு குடும்பமாக உட்கார்ந்து குடும்ப ஜெபமாலை ஜெபிப்போம்.. அதனோடு ஆண்டவருடைய நற்செய்தியின் ஒரு பகுதியை வாசிப்போம்.. நம்பிக்கையோடு ஒரு பத்துமணிகளை நம் குடும்பத்திற்காகவும், மற்ற 40 மணிகளை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும்; அது மேலும் பரவாமல் விடை பெறவும் ஜெபிப்போம்…. “

அப்படி ஜெபித்தால் கண்டிபாக நல்ல பலன் கிடைக்கும்..  மாதாவின் அறிவுறுத்தலின் பேரிலும், நம் கத்தோலிக்க திருச்சபையின் அறிவுறுத்தலின் பேரிலும் இதே போல் குடும்பமாகவோ, குழுக்களாகவோ, ஜெபமாலை பவனியாகவோ ஜெபித்து எத்தனையோ விடுதலை பெற்றிருக்கிறோம்.. நம் திருச்சபையின் வரலாறு தெறிந்தவர்களுக்கு இது நன்றாகத் தெறியும்..

உதாரணம் சில..

1.     குறைந்த கிறிஸ்தவ படைகள் அவர்களைவிட வலிமையான பல்லாயிரக்கணக்காக அதிகமான வீரர்களைக்கொண்ட போரில் வெற்றி பெற்றுள்ளது. முதல் முதல் கிறிஸ்தவ மதத்திற்கு சுதந்திரம் கிடைத்ததே இதனால்தான். மன்னன் காண்ஸ்டான்டைன் மனம் மாறியது இதனால்தான். முதலில் மனம் மாறி கிறிஸ்தவளாக மாறியது அரசி ஹெலன் என்பது குறிப்பிடத்தக்கது.

2.     அந்நிய தேசத்தின் அதுவும் வலிமையான தேசத்தின் ஆதிக்கத்தில் இருந்த ஒரு குட்டி நாட்டை ஒரு லட்சம் பேர் திரண்டு செய்த ஜெபமாலை பவனியின் பலனாக யாருமே எதிர்பாராமல் அந்த குட்டி நாடு விடுதலை பெற்றது (பிரேசில்).

3.     போரில் தோற்று நாடு கடத்தப்பட்ட மன்னன் ஒரு வருடமாக தனியாக இருந்து ஜெபமாலை ஜெபித்ததன் மூலமாக வீரர்களைத்திரட்டி மீண்டும் தன் ஆட்சியைக் கைப்பிடித்தான் ( ஆதாரம்.. ஜெபமாலை இரகசியம் என்ற நூல்).

4. எண்ணற்ற புனிதர்களின் ஜெபமாலை அனுபவங்கள் ( புனித சுவாமி நாதர்,  புனித தந்தை பியோ, புனித தொன்போஸ்கோ,  புனித ஜெத்ரூத்,  புனித குழந்தை தெரசா,  புனித அந்தோணியார், புனித லூயிஸ் மரிய மோன்போர்ட் இன்னும் பல புனிதர்கள்...

5.     மேலும் பசி, பஞ்சம், பட்டினி, கொடிய நோய்களிலிருந்து விடுதலை, தனிப்பட்ட வெற்றி, தீய சக்திகளிலிருந்து விடுதலை, பசாசின் பிடியிலிருந்து விடுதலை, பாவப்பிடியிலிருந்து விடுதலை,உயிர் பிழைக்க முடியாது என்று மருத்துவர்களால் கைவிடப்பட்ட நபர்கள் அதியமாக உயிர்பிழைத்தது.. மரண தருவாயில் இருந்த நூற்றுக்கணக்காண மக்கள் உயிர் பிழைத்தது என்று சொல்லிக்கொண்டே போகலாம்..

“ நீ விசுவசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் “  - அருளப்பர் (யோவான்) 11 : 40.

விசுவசித்தால்தானே கிடைக்கும்; நம்பினால்தானே நடக்கும்; கேட்டால்தானே கிடைக்கும்..

ஆகவே தனியாக; குடும்பமாக அடைந்திருக்கும் இவ்வேளையில்..

1.     குடும்ப ஜெபமாலை சொல்வோம்.

2.     பரிசுத்த வேதாகமம் வாசிப்போம்.

3.     புனிதர்களுடைய வாழ்க்கை வரலாறுகளை வாசிப்போம்..மேலும் பல நல்ல கத்தோலிக்க நூல்கள் இருக்கிறது.. அதை வாசிப்போம்..

4.     ஆண்டவருடைய திருப்பாடுகளை தியானிப்போம்..

நம்மை நாம் மாற்றி நாம் வாழ்ந்து கொண்டிக்கும் வாழ்க்கையை அலசி ஆராய்வோம்...தினமும் எதற்கெல்லாம், யாருக்கெல்லாம், எதனுடமெல்லாம் நம் நேரத்தை செலவழித்தோம்.. எத்தனை உபயோகமற்ற செயல்களை செய்தோம்.. எத்தனை பாவத்தைக் கட்டிக் கொண்டோம். 

ஆண்டவர் நமக்கு நன்மை செய்யக் கொடுத்த எத்தனை வாய்ப்புகளை நாம் வீணாக்கினோம்..

இன்னும் எத்தனையோ.. ஆண்டவர் நமக்கு.. நம்மை திருத்த ஒரு அருமையான வாய்ப்பைக் கொடுத்துள்ளார்.. இப்போதும் இந்த நேரத்தையும் நாம் வீணடித்தோம் என்று சொன்னால் கடவுள் கூட நம்மைக்காப்பாற்ற மாட்டார்..

இப்போதாவது நம் ஆண்டவரின் அன்பு மொழி நம் காதில் ஒலிக்க வேண்டும்.

 "என்னைப் பின்செல்ல விரும்புகிறவன், தன்னையே மறுத்துத் தன் சிலுவையை நாள்தோறும் சுமந்துகொண்டு என்னைப் பின்தொடரட்டும். லூக்காஸ் 9: 23

நம் பாவத்திற்கு மனம் வருந்தி.. மன்னிப்பு கேட்டு ஆண்டவர் இயேசுவை பின் சென்று.. ஆண்டவர் இயேசுவாக மாற குறைந்த பட்சம் முயற்சியாவது எடுப்போம்..

“ நாம் சரியானால்… எல்லாம் சரியாகும் “ இல்லையென்றால் ????.

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !