ஜெபம், தவம், பரிகாரமே இந்நோய்க்கு மருந்து!

இப்போது நமக்கு அதிகமாக நேரம் கிடைப்பதால் ஓரு நாளைக்கு ஏன் இருமுறை ஜெபிக்கக்கூடாது. அதிகாலையில் அல்லது காலை உணவுக்குப் பின்னும், இரவு உணவுக்குப் பின்னும் ஜெபிக்கலாம். காலையில் ஒரு ஜெபமாலை இரவு ஒரு ஜெபமாலை ஜெபிப்போம். மதியம் 3 மணிக்கு இறையிரக்கத்தின் ஜெபமாலை ஒப்புக்கொடுப்போம்.

மேலும் தினமும் ஒரு சில ஒறுத்தல் முயற்சிகளையாவது செய்வோம். 

1. முதலில் இந்த சூழ்நிலையை ஒப்புக் கொடுப்போம். வீட்டுக்குள்ளேயே அடங்கிக்கிடப்பதால் ஏற்படும் சோர்வுகள், சலிப்பு அலுப்புகளை ஒப்புக்கொடுப்போம்.

2. டிவி பார்ப்பதின் இடையிடையே ஒரு ஐந்து நிமிடங்கள் அல்லது பத்து நிமிடங்கள் ஒதுக்கி நம் ஆண்டவரை நினைத்து அவருடன் பேசுவோம்.

3. ஜெபமாலையின் போது மட்டுமல்ல அடிக்கடி ஆண்டவருடைய திருப்பாடுகளை தியானிப்பது அவருடைய வாழ்கையை தியானிப்பது போன்ற செயல்களை தினமும் செய்ய வேண்டும்..

4. மேலும் நம்மோடு நமக்காக தங்களை அர்ப்பணித்து வாழும்  நம் குடும்ப உறுப்பினர்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்வது; நேரங்களை ஒதுக்குவது ( இதை ஒறுத்தல் முயற்சியாக கருதாமல் கடமையாக கருதி அவற்றையும் ஒப்புக்கொடுக்கலாம்).  மேலும் ஒரு சில ஒறுத்தல் முயற்சிகள் (தவக்காலச் சிந்தனையில் கொடுத்ததுதான்)

5. உணவை மருந்தைப் போல உண்ண வேண்டும். மருத்துவர் சொன்ன அளவுக்கு அதிகமாகவோ குறைவாகவோ யாரும் மருந்தை உட்கொள்வதில்லை. அதுபோல உணவையும் ஒரு குறிப்பிட்ட அளவு உட்கொள்வது ஒரு தவ முயற்சி.

6. பசிக்காக உண்பதும், ருசிக்காக உண்ணாதிருப்பதும் ஒரு தவ முயர்சி.

7. இரு உணவு வேளைகளுக்கு மத்தியில் நொறுக்குத் தீனியைத் தவிர்ப்பது ஒரு தவ முயற்சி.

8. உங்களுக்கு ஆண்டவர் எதைத் தருகிறாரோ அதைப் பிடித்த உணவு, பிடிக்காத உணவு என்று பிரிக்காதீர்கள். ஆண்டவருக்குத் தரப்பட்ட கசப்பான காடியை விட அதிக கசப்பான ( நமக்குப் பிரியமில்லாத) எந்த உணவையும் ஆண்டவர் நமக்குத் தரவில்லை.

9. சும்மா படுத்திருப்பது தீமைக்கு வழிவகுக்கும். அதற்கு பதில் பைபிள் வாசிப்பது; புனிதர்களின் வாழ்க்கை வரலாறுகள் நல்ல கத்தோலிக்க புத்தகங்கள் வாசிக்கலாம்.

10. இயல்பாகவே நமக்கு இருக்கும் உடல் வலிகள் அதாவது கை கால் வலி, மூட்டு வலி, வயிற்று வலி, தலை வலி மற்றும் நோவுகளை தாங்கிக்கொண்டு அவற்றை ஆண்டவரின் திருப்பாடுகளோடு ஒப்புக்கொடுப்பது.

11. சுகவீனம் என்ற ஒரு நிலை வருமானால் அதை அமைந்த மனதுடனும், தாழ்மையுடனும், பொறுமையுடனும் தாங்குவது ஒரு தவ முயற்சி. ஆனால் உரிய மருத்துவம் செய்வது நம் கடமை.

12. எதிர்காலத்தில் நடக்க இருப்பதைப் பற்றி கற்பனை செய்யாதீர்கள். ஆண்டவரின் பராமரிப்பை முழுவதுமாக நம்புங்கள்.

13. முக்கியமாக பொறுமையையும், நிதானத்தையும் சகிப்புத்தன்மையையும் கடைபிடிக்க வேண்டும்.

இப்படி ஒறுத்தல் முயற்சிகளையும், தவங்களையும், ஜெபங்களையும் செய்தால் நம் ஆண்டவர் கண்டிப்பாக மனம் இறங்குவார். இந்த நோய் பாதிப்பிலிருந்து நம் நாட்டிற்கும், இந்த உலகத்திற்கும் கொஞ்சம் கொஞ்சமாக விடுதலை தருவார். இந்த நோயை முற்றிலும் நீக்கி விடுவார். நாம் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பலாம்.  நமக்கு புத்துயிர் தருவார். 

ஆனால் ஒரு கண்டிஷன். நம் பரிசுத்த தேவன் நமக்கு கொடுக்க இருக்கும் அடுத்த வாய்ப்பில் நம் கண்டிப்பாக மாறித்தான் ஆக வேண்டும்.. நாம் இழந்த கடவுளின் சாயலையும், பாவனையையும் மீண்டும் பெற வேண்டும். சேசுவின், மாதாவின் குணாதிசங்களையும், நடத்தைகளையும் கடைப்பிடிக்க வேண்டும். ஆங்காரத்தை அகற்றி தாழ்ச்சியை கடைப்பிடிக்க வேண்டும்.

மொத்தத்தில் நம் ஆண்டவராகிய இயேசுவின் வயதை நிறைவு செய்வதே நம் வாழ்க்கையின் லட்சியமாகக் கொள்ள வேண்டும்.

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !