எப்படி இருந்த நாம் இப்படி ஆகிட்டோம்!

மீண்டும் திவ்ய நற்கருணை சிந்தனை..

முன்பெல்லாம் சனிக்கிழமை மாலையில் நாம் ஆலயத்தில் இருப்போம்..

மாலை ஜெபமாலைக்குப்பின் பங்குத்தந்தையின் பாவசங்கீர்த்தனத் தொட்டியைப் பார்த்துக்கொண்டே இருப்போம்..

அவர் சரியாக ஜெபமாலை முடியவும் ஆலயத்தின் பின்பகுதிக்கு வந்து சிறிது நேரம் முழங்காலில் நின்று ஜெபித்துவிட்டு.. பாவசங்கீர்த்தனத்தொட்டியில் அமர்வார்..

ஒரு புறம் பெண்கள், மறு புறம் ஆண்கள் என்று முழங்காலில் நிற்க நாம் பாவசங்கீர்த்தனம் செய்ய ஆர்வமோடு முன்டியடித்துக் கொண்டு ஆயத்தமாகுவோம்.. பாவசங்கீர்த்தனம் செய்த பின்புதான் வீடு செல்வோம்  நண்பர்களோடு பேசிக்கொண்டு..

மறு நாள் திருப்பலிக்கு வெறும் வயிரோடு செல்வோம்.. திவ்ய திருவிருந்து நேரத்தில் நாமே சென்று பீடத்தின் முன்புறம் இருக்கும் கிராதி முன்பு முழங்காலில் இருந்து பக்தியோடு ஆண்டவரை  நாவில் வாங்கிக்கொண்டு எவ்வித பராக்குகளுக்கும் இடங்கொடுக்காமல் நாம் இருந்த இடம் வந்து முழங்காலில் நின்று சிறிது நேரம் ஜெபிப்போம்.. ஜெபித்துவிட்டு அமர்வோம்.. அமர்ந்ததும் பங்குத்தந்தை ஜெபிக்க ஆரம்பிப்பார்..

எப்படி என்றால், “ சிறிது நேரம் அமைதியாக அமர்ந்து இப்போது நம்மிடம் வந்திருக்கும் இயேசு ஆண்டரிடம் அமைதியாக ஜெபிப்போம்.. என்று சொல்லிவிட்டு அவர் மவுனமாக ஜெபிப்பார்.. நாமும் நம் உள்ளத்தில் வந்த ஆண்டவரிடம் அமைதியாக ஜெபிப்போம்.. அதன் பின்புதான் “நன்றி கூறி மன்றாடுவோமாக.. ஜெபத்தை குருவானவர் ஜெபிப்பார்…

ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை.. நாம் செய்த பாவசங்கீர்த்தனம் எங்கே?

முழங்காலில் நின்று நாவில் மட்டும் திவ்ய நற்கருணை ஆண்டவரை வாங்கிய பழக்கம் எங்கே ?

திவ்ய நற்கருணை வாங்கிய பின்பு ஆண்டரோடு மவுனமாக செலவழித்த 10 நிமிடங்கள் எங்கே?

ஓரு மூன்று மணி நேரமாவது ஆண்டவரை வாங்கும் முன் வெறும் வயிரோடு இருந்த பழக்கம் எங்கே?

திவ்ய நற்கருணை பேழையை கடந்த போதெல்லாம் ஒரு கால் முட்டி போட்ட பழக்கம் எங்கே?

ஆண்டவரை தாழ்ந்து பணிந்து ஆராதித்த பழக்கம் எங்கே?

இப்படியிருந்த நாம் எப்படி மாறிப்போனோம்..?

நின்று கொண்டு வாங்க ஆரம்பித்தோம்..

அப்புறம் நொட்டாங்கையில் (இடது கையில்) வாங்க ஆரம்பித்தோம்?

இப்போது நாமே துணிச்சலோடு திவ்ய நற்கருணை பாத்திரத்தில் கையை விட்டு  நம் அர்ச்சிக்கப்படாத கரங்களால் ஆண்டவரை தொட்டு, திவ்ய திரு இரத்தப்பாத்திரத்தில் நம் கையை விட்டு ஆண்டவருடைய திவ்ய திருஇரத்தத்தில் தோய்த்து நாம் ஆண்டவரை உட்கொள்ளும் அளவுக்கு நமக்கு துணிச்சலும், அகங்காரமும் பெருகிவிட்டதே அது எப்படி?

வர.. வர.. விசுவாசம் வளர வேண்டுமா? அல்லது தேய வேண்டுமா?

இதைத்தான் ‘கழுதை தேய்ந்து கட்டெரும்பு ஆன கதை ‘ என்பார்கள்..

தயாரிப்பு இல்லாமல் ஆண்டவரை வாங்கும் பழக்கம் எப்படி வந்தது..?

சனிக்கிழமை இரவு தூங்கும் வரை டி.வி பார்த்துவிட்டு அப்படியே தூங்கி முழித்து ‘ ஆ! இன்று ஞாயிற்றுக்கிழமை பூசைக்கு போக வேண்டுமே ! என்ற எண்ணத்தில் கிளம்பி பூசைக்கு கால் பூசை, அரை பூசை முக்கால் பூசைக்கு நுழைந்து எந்தவித தயாரிப்புமில்லாமல் தெய்வீக விருந்தில் துணிச்சலோடு நுழைந்து ஆண்டவரை வாங்கும் பழக்கமும், வழக்கமும் எப்படி நுழைந்தது..

அது மட்டுமா செய்கிறோம்…

உபவாசத்தோடு நன்மை வாங்கிய பழக்கம் போய் நன்றாக வெளுத்து கட்டி உண்ட பிறகு திருப்பலியில் பங்கேற்றல்..

நன்மை வாங்கிய உடனே பொங்கலை வாயில் போட்டு அமுக்குதல், நன்மை வாங்கிய பின் டீ பிஸ்கட் வயிற்றில் ஊற்றுதல்..

நன்மை வாங்கிய உடனே அறிக்கைக்கு செவி சாய்த்து பராக்குகளுக்கு இடம் கொடுத்து சப்பென்று தரையில் அமர்ந்துகொள்ளும் பழக்கம் எப்போது முளைத்தது?

அப்படியிருந்த நாம் இப்படி மாறிவிட்டோம் ? இப்படியிருக்கும் நாம் மறுபடியும் அப்படி எப்போது மாறப் போகிறோம்?

நம் அன்பின் ஆண்டவர்.. தெய்வீக ஆண்டவர்.. அன்றும் அப்படித்தான் இருந்தார்.. இப்போதும் அப்படித்தான் இருக்கிறார்.. எப்போதும் அப்படித்தான் இருக்கப் போகிறார்.. அவர் மாறாத தெய்வம்.. 

நாம் மட்டும் ஏன் அடிக்கடி மாறுகிறோம்…

உயிர் அச்சத்தோடு வாழும் நாம் ஏன் கடவுளின் மேல் அச்சத்தோடு வாழக் கூடாது?

“ஞானத்தின் தொடக்கம் தெய்வபயம் “  - சீராக் 1 : 16

“ தெய்வபயமே ஞானத்தின் நிறைவு “ – சீராக் 1 :20

ஞானத்தின் தொடக்கமும், ஞானத்தின் நிறைவும் தெய்வ பயமே..

மேலும் கடவுளின் சில உயிருள்ள வார்த்தைகள்..

“ தெய்வ பயம் மகிமையும் மகத்துவமும் களிப்பும் மகிழ்ச்சியின் முடியுமாய் இருக்கின்றது.

தெய்வ பயம் இதயத்தை மகிழ்விக்கும்; அகமகிழ்ச்சியையும் அக்களிப்பையும் நீடிய ஆயுளையும் கொடுக்கும்.

ஆண்டவருக்கு அஞ்சி நடப்பவன் தன் இறுதிக் காலத்தில் பேறு பெற்றவன் ஆவான்; மரண நாளிலும் ஆசீர்வதிக்கப்படுவான்.

கடவுள்பால் உள்ள நேசமே மேன்மையுள்ள ஞானம்.

யார் யாருக்கு அது காணப்படுகிறதோ அவர்கள் தாங்கள் அதைக் கண்டதாலும், அதன் மாட்சிகளை அறிந்ததாலும் அதை நேசிக்கிறார்கள்.”

சீராக் 1: 11-15

நற்கருணை நாதரை நேசிவிப்போம்.. விசுவசிப்போம்..

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !