பாத்திமா காட்சிகள் பகுதி- 9

நற்கருணை சேசு

ஜஸிந்தாவின் முதல் ஆசை அவளும் லூசியாவோடு ஆடு மேய்க்க செல்ல வேண்டும். அவளின் இன்னொரு பெரிய ஆசை, புது நன்மையில் சேசுவை வாங்க வேண்டும் என்பது. லூசியா ஆறு வயதிலே சேசுவை வாங்கினாள் நானும் ஏன் சேசுவை வாங்கக்கூடாது என்பது அவளது நினைப்பு. சேசு பவனியில் சிறுமிகள் சம்மனசுக்கள் போல் உடை அணிவகுத்து சேசுவுக்கு பூ தூவும் காட்சி அவளைக் கவர்ந்தது. ஒரு நாள் லூசியா சேசுவை வாங்கி வந்த பின், ஜஸிந்தா சில பூக்களை மாலை போல் தொடுத்து லூசியாவின் தலையில் சூட்டினாள். “ இப்படி ஏன் செய்கிறாய் ? “ என்றாள் லூசியா. “ சம்மனசுக்கள் செய்வது போல் நான் உனக்குச் செய்கிறேன். உனக்கு பூக்கள் தருகிறேன் “ என்று பதிலளித்தாள் ஜஸிந்தா.

அடுத்த சேசு பவனிக்கு ஜஸிந்தாவும், பூ தூவும் சிறுமியர் குளுவில் சேர்க்கப்பட்டாள். மற்ற சிறுமியர் நற்கருணை சேசுவை நோக்கி மலர்களை அள்ளி தூவினர். ஆனால் ஜஸிந்தா மலர் அள்ளித் தூவாமல் கதிர்பாத்திரத்தை ஏந்தி வந்த குருவை உற்றுப்பார்த்துக் கொண்டே நின்று விட்டாள். “ நீ ஏன் சேசுவை நோக்கிப் பூ தூவ வில்லை?” என்று லூசியாவின் சகோதரி மரியா கேட்ட போது, “ ஏனென்றால் நான் அவரைக் காணவில்லையே “ என்றாள், ஜஸிந்தா. “ ஆயினும் லூசியா செய்ததுபோல் நீயும் செய்திருக்க வேண்டும்” என்றாள் மரியா.

இதன்பின் ஜஸிந்தா லூசியாவிடம், “ அப்போ நீ சின்ன சேசுவை பார்த்திருக்கிறாயோ? ” என்று கேட்டாள். 

“ இல்லை. திருஅப்பத்தில் உள்ள சின்ன சேசுவை நாம் ஒரு போதும் பார்ப்பதில்லை. அவர் மறைந்திருக்கிறார். நன்மை வாங்கும்போது அவரையேதான் வாங்குகிறோம் என்பது உனக்குத் தெறியாதா?”

“அப்போ, நீ நன்மை வாங்கும்போது சேசுவிடம் பேசுவாயா?”

“ ஆம் “

“ அப்போ, அவரை ஏன் நீ பார்க்கிறதில்லை”

“ ஏனென்றால் அவர் மறைந்திருக்கிறார் “

“ நானும் சேசுவை வாங்க உத்தரவு தரும்படி என் அம்மாவிடம் கேட்கப்போகிறேன் “

“ உனக்கு பத்து வயது ஆகும்வரை நன்மை வாங்க நம் பங்குத்தந்தை விட மாட்டார் “

“ நீ மட்டும் வாங்குகிறாயே, உனக்கு பத்து வயது ஆகவில்லையே “

“ எனக்கு ஞானப்பாடம் தெறியும். உனக்குத் தெறியாதே “

இந்த உரையாடலுக்குப்பின் ஜஸிந்தா லூசியாவின் மாணவியாகிவிட்டாள். ஞானோபதேசத்தை மனப்பாடம் மட்டும் செய்யாமல் அதன் பொருளையும், காரணத்தையும் துளைத்து துளைத்து கேட்டுப்படித்தாள்.

“ மறைந்த சேசுவை இத்தனை பேர் எப்படி ஒரே நேரத்தில் பெற்றுக்கொள்கிறார்கள்?. இத்தனை பேருக்கும் ஒவ்வொரு பாகம் எப்படிக்கிடைக்கும்?”

“ திருஅப்பங்கள் நிறைய இருக்கின்றன அல்லவா? அதில் ஒவ்வொன்றிலும் சேசு முழுமையாக இருக்கிறார்.” இப்படிக் கேள்வியும் பதிலுமாக ஞான உபதேச வகுப்பு நடந்தது. ஆனால் சீக்கிரத்தில் லூசியா முன்பு சொன்னதையே திருப்பிச் சொல்ல ஆரம்பித்தாள்.

“ இதெல்லாம் படித்ததுதானே, வேறு புதியது சொல் “ என்றாள் ஜஸிந்தா. எப்படியோ பாடம் முடிந்தது. ஜஸிந்தா தன் தாயிடம் சேசுவை வாங்க தேவையான பாடம் எல்லாம் படித்து விட்டதாக கூறினாள். ஒரு நாள் ஒலிம்பியா தன் மகளை பங்குத்தந்தையிடம் அழைத்துச்சென்றாள்.

சங்.பெனா சுவாமி ஜஸிந்தாவைப் பல கேள்விகள் கேட்டுவிட்டு, ஒலிம்பியாவிடம், ஜஸிந்தா மிகவும் சிறு பிள்ளை, மேலும் அவளுக்கு இன்னும் ஞான அறிவு பற்றாது என்று கூறி அனுப்பி விட்டார்.

தான் சேசுவை வாங்க அனுமதிக்கப்படவில்லை என்று அறிந்ததும் ஜஸிந்தா மிகவும் வேதனை அடைந்தாள். எவ்வளவோ ஆசித்தும் ஒன்றும் நடக்கவில்லை. ஆயினும் அவள் அந்த வேதனையை மறக்க முயன்று ஓரளவு வெற்றியும் பெற்றாள்.

நன்றி : பாத்திமா காட்சிகள் நூல், புனித சூசை அச்சகம், ரோசா மிஸ்திக்கா, சகாயமாதாப்பட்டனம், தூத்துக்குடி-628 002, Ph. 0461-2361989, 9487609983

பாருங்கள் அந்த சிறுமிக்கு சேசுவை வாங்க எவ்வளவு ஆர்வம்; அவர் மேல் எத்தகைய பக்தி; எத்தகைய அன்பு. மேலும் கள்ளம் கபடம் இல்லாத இந்த சிறுவர்கள் நற்கருணை ஆண்டவர் மேல் எவ்வளவு அன்பு வைத்துள்ளார்கள் பாருங்கள். இது போன்ற வெள்ளை அன்பைதான் தூய தமத்திருத்துவம் நம்மிடம் எதிர்பார்க்கிறது. நற்கருணை சேசுவின் மேல் வைத்துள்ள அளப்பறிய அன்பு, நேசம், மரியாதை, நம்பிக்கை, விசுவாசம் இதுவே இந்த குழந்தைகளை இத்தகைய நிலைக்கு கொண்டு செல்கிறது.

நாம் இந்த மாடப்புறாக்கள் போல் நற்கருணை சேசுவின் மேல் அன்பும், மரியாதையும் வைத்துள்ளோமா? ஒவ்வொரு முறை நற்கருணை சேசுவை உட்கொள்ளும் முன் தகுந்த தயாரிப்பு செய்கிறோமா ? பாவமில்லாமல் நம் பரமனை உட்கொள்கிறோமா? மாதம் ஒரு முறையாவது நாம் பாவசங்கீர்த்தம் செய்கிறோமா?

பொறாமை வருகிறது அந்த மாடப்புறாக்களின் மேல் அவர்களைப்போல் மாற வாழ நம் எல்லாருக்குமே ஆசை வருகிறது.. இதனால்தானோ நம் தேவன் சொன்னார், 

“ நீங்கள் குழந்தைகளாய் மாறாவிடில் விண்ணரசில் நுழைய மாட்டீர்கள் “

நற்கருணை சேசுவே மொழிந்த வார்த்தையோடு நம் திவ்ய நற்கருணை நாதரை தியானிப்போம்.

"நானே உயிர் தரும் உணவு. என்னிடம் வருகிறவனுக்குப் பசியே இராது; என்னில் விசுவாசங்கொள்பவனுக்கு என்றுமே தாகம் இராது“

            அருளப்பர் 6 : 35

“ நானே வானினின்று இறங்கிவந்த உயிருள்ள உணவு. இதை எவனாவது உண்டால், அவன் என்றுமே வாழ்வான். நான் அளிக்கும் உணவு உலகம் உய்வதற்காகப் பலியாகும் என் தசையே."

             அருளப்பர் 6 : 51

நாமும் ஜஸிந்தா, லூசியா சிறுமிகள் போல் ஆர்வத்தோடும், அன்போடும், பிரியத்தோடும், தூய உள்ளத்தோடு ஒவ்வொரு முறையும் நற்கருணை சேசுவை வாங்குவோம்; அவரை நம் ஆன்மாவில் தாங்குவோம்.

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !