பாத்திமா காட்சிகள் பகுதி- 10

அருளாளர் பிரான்சிஸ்.

பிரான்சிஸ் ஒரு சாதாரணச் சிறுவன்தான். ஆயினும் சில தனியான, குறிப்பிடக்கூடிய குணங்கள் அவனிடம் இருந்தன. “ நம் ஆண்டவரின் விளக்கைப்போல் அழகுள்ளது எதுவுமே இல்லை” என்று வியப்புடன் கூறுவான். சூரிய உதயமும் மாலையில் அது மறையும் காட்சியும் அவனை மிகவும் கவர்ந்தன. புல்நுனியில் ஒளிரும் பனித்துளியும், குளத்து நீரில் பிரதிபலித்த சூரிய ஒளியும் அவனை மிகவும் மகிழ்வித்தன.

லூசியா ஆடுகளை ஓட்டிக்கொண்டு மாலையில் வீடுவந்ததும் ஜஸிந்தா அவளுடன் சேர்ந்து இருவருமாக ஆடுகளைப்பட்டியில் அடைப்பார்கள். பிரான்சிஸ் தன் ஊது குழலை எடுத்து ஒரு கல்லில் உட்கார்ந்து இராகங்களை ஒலித்துக்கொண்டே இருப்பான். அந்தக்குழல் அவனுக்கு மிகவும் பிடிக்கும்.

அமைதியான சுபாவம் உடையவன் அவன். எந்த ஒரு பொருளின் மீதும், அது எவ்வளவு பிடித்தமாயிருந்தாலும், அதை இழந்து போவதைப் பற்றி கவலைப்படமாட்டான். விளையாட்டில் அவன் ஜெபித்த பொருட்களை மற்ற சிறுவர்கள் பிடுங்கிக்கொண்டால், “ ம்! எனக்கு அது ஒரு பொருட்டென்று நினைக்கிறாயோ? அதை நீயே வைத்துக்கொள்!“ என்று அலட்சியமாக கூறிவிடுவான்.

ஒரு நாள் அவனுக்கு ஒரு கைக்குட்டை கிடைத்தது. அது மிக அழகானது. தேவதாயின் உருவம் பல வண்ணங்களில் அதில் தைக்கப்பட்டிருந்தது. பெருமையுடன் அதை எடுத்துக்கொண்டு லூசியா வீட்டிற்கு சென்றான். அங்கு பல சிறுவர் சிறுமிகள் கூடி நின்றனர். ஒவ்வொருவராக அதை வாங்கிப்பார்த்தனர். நல்ல கைக்குட்டை என்று எல்லோரும் பேசிக்கொண்டிருக்கும்போதே அது மாயமாய் மறைந்துவிட்டது. முடிவில் கைக்குட்டை யாருடைய பையில் இருக்கிறது என்று தேட ஆரம்பித்தார்கள். ஒரு சிறுவனுடைய கையில் அது அகப்பட்டது. அந்தச்சிறுவன் அது தன்னுடைய கைக்குட்டை என்று கூறவும் துணிந்துவிட்டான். அவனிடமிருந்து அதைப்பிடிங்கிக்கொள்ள பிரான்ஸால் முடியும். ஆயினும் அவன், “ அப்படியானால் அதை நீயே வைத்துக்கொள். ஒரு கைக்குட்டை எனக்கு அவ்வளவு பெரிதா?” என்று கேட்டுவிட்டு சும்மா இருந்து விட்டான்.

நன்றி : பாத்திமா காட்சிகள் நூல், மாதா அப்போஸ்தலர்கள் சபை, ரோசா மிஸ்திக்கா, சகாயமாதாப்பட்டனம், தூத்துக்குடி-628 002, Ph. 0461-2361989, 9487609983

பாருங்கள் எவ்வளவு சிறுவனாக இருக்கும்போதே பிரான்சிஸ்க்கு எவ்வளவு பக்குவம். எது நிலையானது; நிரந்தரமானது, எது நிலையற்றது என்று தெறிந்து வைத்திருக்கிறான். அவன் இடத்தில் நம்மவர்கள் இருந்தால் எடுத்தவனிடம் சண்டை போட்டு, அவனை தரக்குறைவாகப் பேசி ஊரையே கூட்டியிருப்பார்கள்.

ஆண்டவர் வாழும் உள்ளத்தில் நிதானம், பக்குவம், உறுதி இருப்பதில் வியப்பென்ன. இந்த பகுதி நமக்குத் தரும் செய்தி, நாம் எதையாவது இழந்தால் ஆண்டவர் அதை நமக்குத்தேவையில்லை என்று எடுத்துவிட்டார் என்று நினைக்க வேண்டும். மேலும் இந்த பகுதி நமக்குத் தரும் பாடம்.

"மண்ணுலகில் செல்வம் சேர்த்துவைக்க வேண்டாம். இங்கே பூச்சியும் துருவும் அழித்துவிடும்; திருடரும் கன்னமிட்டுத் திருடுவர்.

“ ஆனால் விண்ணுலகில் செல்வம் சேர்த்துவையுங்கள். அங்கே பூச்சியும் துருவும் அழிப்பதில்லை; திருடரும் கன்னமிட்டுத் திருடுவதில்லை.

“உங்கள் செல்வம் எங்குள்ளதோ, அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்”

      மத்தேயு 6 : 19-21

ஆகையினால் மண்ணுலகில் வாழும் போது நிலையானவைகளையே நாம் தேட வேண்டும். நாம் சேர்த்துவைப்பதும் நிலையானதும் நிரந்தரமானதுமாக இருக்க வேண்டும்.

நம் செல்வம் விண்ணுலக செல்வமாக இருக்கும் போது நம் உள்ளமும் கடவுளுக்குண்டானவைகளையே தேடும்; நாடும்; ஓடும்.

குறிப்பு : வருகிற மேமாதத்தில் அருளாளர் பிரான்ஸிஸ்க்கும், அருளாளர் ஜஸிந்தாவுக்கும் புனிதர் பட்டங்கள் கொடுக்க இருப்பது குறிப்பிட்த்தக்கது.

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !