பாத்திமா காட்சிகள் பகுதி- 8

இணை பிரியாத மூன்று உள்ளங்கள்.. தொடர்ச்சி..

மூன்று பேரும் ஆடுகளை ஓட்டிக்கொண்டு போகும்போது ஜஸிந்தா ஆடுகளின் மத்தியில் நடப்பாள். சில சமையம் சிறிய ஆட்டுக்குட்டி ஒன்றை தோலில் வளைத்துப் போட்டுக்கொள்வாள்.

“ ஜஸிந்தா, ஏன் இப்படி ? “ என்று கேட்டால்,

“ நம் ஆண்டவர் செய்தது போல் செய்கிறேன் “ என்பாள். யாரோ ஒருவர் ஜஸிந்தாவுக்கு நல்ல ஆயன் படம் ஒன்றைக் கொடுத்திருந்தார். அதில் ஆண்டவர் ஆட்டைத் தோலில் போட்டிருந்த பாவனையைப் போல், தானும் அவ்வாறு செய்வதாகக் கூறினாள். ஆனால் ஆடுகள் மேய்க்கத் தொடங்கி விட்டால், எல்லா வகையான விளையாட்டுகளையும் விளையாட அவள் தயாராகி விடுவாள்.

சிறுவர் மூவரும் சில நாட்கள் கோவா தா ஈரியாவில் ஆடுகளை மேய்ப்பார்கள். சில நாட்கள் வாலினோஸ் என்னுமிடத்திற்குச் செல்வார்கள். அவர்கள் மிக விரும்பிய இடம் கபேசா என்ற கற்பாறை நிறைந்த நிலப்பரப்புதான். அது உயரமான இடம் அங்கிருந்து பார்த்தால் அழகிய தூரக்காட்சிகள் தெறியும்.

கபேசாவில் இன்னொரு கவர்ச்சியும் அவர்களுக்கு இருந்தது. கபேசா குன்றுகளில் எதிரொலி கேட்கும். குழந்தைகள் மூவரும் இந்த எதிரொலியைக் கண்டுபிடித்தபின் நெடுநேரம் வரை சத்தமிட்டு தங்கள் குரல் எதிரொலிப்பதைக் கேட்டு மகிழ்வார்கள். “ மரியே !” என்ற குரல் எதிரொலிப்பதைக் கேட்க ஜஸிந்தாவுக்கு மிகவும் விருப்பம். சில சமையங்களில் “ அருள் - நிறைந்த – மரியே – வாழ்க “ என்று மங்கள வார்த்தையைத் திருப்பி திருப்பி சொல்வாள். எதிரொலியும் அதே போல் பேசுவதைக் கேட்டு மூவரும் மகிழ்வால் துள்ளுவார்கள். சில வேலைகளில் மூவரும் சேர்ந்து அதே மங்கள வார்த்தையை உரத்துச் சொல்வார்கள். “ பெண்களுக்குள் – ஆசீர்வதிக்கப்பட்டவள் – நீரே... “  ஒவ்வொரு வார்த்தையும் எதிரொலித்து வரும்போது அவர்கள் எல்லையில்லா மகிழ்ச்சி கொள்வார்கள்.

பாட்டுக்கு அபிநயம் பிடிப்பதிலும் சிறுமிகளுக்கு மிகுந்த விருப்பம் உண்டு. ஜஸிந்தாவுக்கு அதில் அலாதி பிரியம். பிரான்சிஸ் தனது ஊது குழலில் இராகங்களை இசைப்பான். மற்ற இருவரும் அபிநயம் பிடிப்பார்கள்.

பகல் உணவை முடித்ததும் மூவரும் எந்த இடத்திலானாலும் சரி, முழங்காலிலிருந்து ஜெபமாலை சொல்வது வழக்கம். லூசியாவின் தாய் மரிய ரோசா இதை ஞாபகப்படுத்தி விடுவாள். ஆனால் சிறு பிள்ளைகளுக்குரிய விளையாட்டுப் புத்தியினால் இந்த ஜெபமாலையில் தேவ இரகசியங்களைத் தியானிப்பது மங்கி மறைந்து வந்தது. மேலும் பரலோக மந்திரத்தை “ பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே “ என்பதுடன் முடித்து விடுவார்கள். அருள் நிறை மந்திரமும், “ அருள் நிறைந்த மரியாயே “ என்பதுடன் முடிவுக்கு வந்துவிடும். பறவைகளைப் போல் சுதந்திரமாய், கடவுளைத் தந்தையாகக் கொண்டு, அவரின் கைவேலையாகிய அமைதி நிலவிய அக்காட்டுப் புறத்தில் எவ்வித கவலையுமின்றி ஆடுகளை மேய்த்துக் கொண்டும், ஆடிப்பாடிக்கொண்டும் களங்கமில்லா உள்ளங்கள் இம்மூன்றும் அன்பினால் பிணைக்கப்பட்டு ஆனந்தமாய் உலவின ! 1915-ம் ஆண்டு முடிந்து 1916-ம் ஆண்டு வரும் அது தங்களிடம் எவ்வளவு பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும் என்று சற்றும் நினையாது அமைதியில் நீந்தி விளையாடினர் அன்புக்குழந்தைகள் மூவரும்..

( 1916-க்கு செல்வதற்கு முன் திவ்ய நற்கருணை ஆண்டவர் குறித்த சிறுமிகளின் உறையாடலையும், புது நன்மை வாங்க சிறுவர்களுக்கு இருந்த ஆர்வத்தையும் ஒரு சில பகுதிகளில் பார்த்துவிட்டு செல்வோம்... வானவரின் வருகைப் பார்க்க..)

நன்றி : பாத்திமா காட்சிகள் நூல், புனித சூசை அச்சகம், ரோசா மிஸ்திக்கா, சகாயமாதாப்பட்டனம், தூத்துக்குடி-628 002, Ph. 0461-2361989, 9487609983, 9894398144

சிந்தனை :  இந்த சிறு பிள்ளைகள் விளையாடும்போது கூட கடவுளை மறக்காமல் இருப்பதும், விளையாட்டில் கூட “ அருள் நிறை மந்திரத்தை “ சொல்லி விளையாடுவதையும், மாதா மேல் இப்பிள்ளைகள் வைத்திருக்கும் பாசத்தையும் பார்க்கும் போது இந்த பிள்ளைகளின் கள்ளம் கபடற்ற மனங்களையும், கடவுள் பக்தியையும் எப்படி புகழ்வது என்று தெறியவில்லை.. அவர்கள் சிறுவர்களாகத் தெறியவில்லை சிறு புனிதர்களாகத்தெறிகிறார்கள்..

மேலும் அந்த பிள்ளைகளை எவ்வளவு அழகாகவும், கண்டிப்பாகவும், கட்டுப்பாடாகவும் கடவுள் பக்தியில் வளர்த்திருந்த அப்பிள்ளைகளின் பெற்றோரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.. அவர்கள் காலில் விழுந்து நன்றி சொல்லலாம் போலிக்கிருக்கிறது.. இப்போதிருக்கும் பெற்றோர்கள் படிக்க வேண்டிய பாடப்புத்தகமாக இருக்கிறார்கள் இச்சிறுமிகளின் பெற்றோர்கள்..

“ குழந்தை உள்ளம் கொண்டோர்கள் பேறு பெற்றோர்கள் “

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !