சேசுவின் திருஇருதய அரசாட்சி பாகம் - 72

நான் அன்பாயிருக்கிறேன்

நான் அன்பாயிருக்கிறேன். என் இருதயமானது அதை பற்றியெரியச் செய்யும்படி சுவாலையை தனக்குள் அடக்கி வைக்க முடியாததாய் இருக்கிறது.

நான் ஆத்துமங்களை எவ்வளவு நேசிக்கிறேன் என்றால் என் உயிரை அவர்களுக்காகக் கொடுத்தேன்.

இந்த அன்பு நான் திவ்விய நற்கருணைப் பேழையில் ஒரு கைதியைப்போல் சிறைப்பட்டு வசிக்கச் செய்கிறது. அப்பத்தின் குணங்களுக்குள் நான் மறைந்து, இரவும் பகலுமாய் சிறு வெள்ளை அப்பத்துக்குள் ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்திருக்கிறேன். மறதி, தனிமை, அவமானம், கடவுள் நிந்தை, கடவுளுக்கு துரோகம் இவற்றை நான் அன்பை முன்னிட்டு பொறுமையுடன் அதில் சகித்து வாழ்கிறேன்.

ஒருமுறை, இரு முறை மட்டுமே அவர்களை மன்னிக்கும்படியல்ல, ஆனால் அவர்களுக்கு தேவை இருக்கும்போதெல்லாம் கடவுளின் பரிசுத்தத்தனத்தைப் பெறும்படி ஒப்புரவு (பாவசங்கீர்த்தனம்) என்னும் அருள் சாதனத்தை நேசத்துடன் ஏற்படுத்தினேன். அவர்களுடைய பாவங்களை நீரினால் அல்ல, ஆனால் என் சொந்த இரத்தத்தால் கழுவும் படி நான் அங்கு அவர்கள் வரவை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.

நாளடைவில் பல வழிகளில் என் அன்பை வெளிப்படுத்தி - யிருக்கிறேன். என் இருதயத்தைக் காண்பித்து மனிதருடைய மீட்பை எவ்வளவாக நான் விரும்புகிறேன் என்றும் அவர்களுக்கு தெரிவித்திருக்கின்றேன். பல ஆத்துமங்களுக்கு என் இருதய பக்தி பெரும் ஒளியாய் இருந்திருக்கிறது. என் சேவைக்கு ஆத்துமங்களை கொண்டுவர விரும்பியவர்கள் இந்த பக்தியால் நன்மைகளைப் பெற்றிருக்கிறார்கள்.

இன்னும் அதிகமாக நான் கேட்கிறேன். மனிதர்கள் என் அன்புக்கு, பதில் அன்பு காண்பித்தால் மட்டும் போதாது. அவர்கள் என் இரக்கத்தில் நம்பிக்கை கொள்ள வேண்டும். என் இரக்கத்திலிருந்து எல்லாவற்றையும் எதிர்பார்க்க வேண்டும். மன்னிக்க நான் தயாராக இருப்பதை அவர்கள் மறக்கக் கூடாது, சந்தேகிக்கவும் கூடாது என நான் ஆசைப்படுகிறேன்.

நான் உன்னுடைய கடவுள், அன்பு தெய்வம், நான் உனது சர்வேசுரன், அன்புடன் நேசிக்கும் இரட்சகர். கொடுமையான முறையில் நடத்துபவரல்ல. என் இருதயம் அளவற்ற பரிசுத்தமுடையது, அளவற்ற ஞானமுள்ளது, மானிடரின் பாக்கியமற்ற நிலையையும், பலவீனத்தையும் நன்கு அறிகிறது; அளவற்ற இரக்கத்துடன் பாவிகள் மீது கனிவு காண்பிக்கிறது.

முதல் பாவம் செய்தபின் மன்னிப்புக் கோரி தாழ்ச்சியுடன் என்னிடம் வரும் ஆத்துமங்களை நான் நேசிக்கிறேன். தங்களது இரண்டாவது பாவத்தை நினைத்து அவர்கள் அழுதபின்பும் அவர்களை நேசிக்கிறேன். அவர்கள் திரும்பத் திரும்ப இவ்வாறு நடந்தபோதிலும்..... அவர்களை நான் நேசிக்கிறேன், அவர்களை நான் மன்னிக்கிறேன், என் இரத்தத்தில் அவர்களைக் கழுவுகிறேன், ஆரம்பத்திலிருந்து கடைசிவரை அவர்களுடைய கறைகளைத் துடைக்கிறேன்.

ஆத்துமங்களின் பேரில் நான் ஒருபோதும் சலிப்பு கொள்ள மாட்டேன். அவர்கள் என் இருதயத்தில் அடைக்கலம் தேடி வர வேண்டுமென்று என் இருதயம் எப்போதும் எதிர்பார்க்கின்றது. துன்பம் அதிகமாய் வந்தால் அவர்கள் அதிகமாய் என் இருதயத்தை நாட வேண்டும்.

நல்ல சுகத்துடனிருக்கும் குழந்தைகளைவிட நோய்வாய்ப்பட்ட ஒரு குழந்தையை தந்தையானவன் அதிக கவனத்துடன் கண்காணிப்பதில்லையா? அந்தக் குழந்தையின் தேவைகள் அதிகரிப்பதற்கேற்ப தந்தையின் கவனமும் அதிகமாகிறது. அதேபோல், நீதிமான்களைவிட பாவிகளின் மேல் என் இருதயம் அதிக அனுதாபமும் இரக்கமும் காண்பிக்கிறது.

தொடரும்...