சேசுவின் திருஇருதய அரசாட்சி பாகம் - 71

சீடர்கள் தேவை

என் வார்த்தைகளை மக்கள் அனைவருக்கும் வெளிப்படுத்த வேண்டுமென்று நான் ஆசைப்படுகிறேன். நான் அன்புள்ள தேவன், மன்னிப்பளிக்கும் கடவுள், இரக்கம் நிறைந்த சர்வேசுரன் என உலகினர் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டுமென்று நான் விரும்புகிறேன். உலகத்தில் உள்ள அனைவரையும் மன்னித்துக் காப்பாற்ற எனக்குள் பற்றியெரியும் ஆசையை அவர்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டுமென்பதே என் விருப்பம்.

 பாக்கியமில்லாதவர்களும் அஞ்ச வேண்டாம், குற்றம் செய்தவர்களும் என்னை விட்டு ஓடக் கூடாது. அனைவரும் என்னிடம் வர வேண்டும். ஒரு தந்தையைப் போல நான் என் கரங்களை விரித்து அவர்களுக்கு உயிரும், உண்மையான மகிழ்ச்சியும் கொடுப்பதற்காக அவர்களை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.

உலகம் என் அளவில்லா இரக்கத்தை அறிந்து கொள்ளும்படி, என் இருதயத்தைப் பற்றி அறிவிக்கக் கூடிய சீடர்கள் தேவை. முதலில் அவர்களே என் இருதயத்தைப் பற்றி அறிந்திருக்க வேண்டும். அறியாதவர் மற்றவர்களுக்கு எவ்விதத்தில் அறிவிக்க முடியும்? என் இரக்கத்தையும் அன்பையும் உலகின் கடைசி எல்லைவரை அறிவித்து பரப்பும்படி , எனக்கு ஒப்புக் கொடுக்கப்பட்ட ஆத்துமங்களிடையே ஓர் இணைப்பை ஏற்படுத்த நான் ஆசையாய் இருக்கிறேன். 

என் பாடுகளின் துயரங்களுக்கு பரிகாரம் செய்யும் ஆவல் என்னால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மத்தியிலும், விசுவாசிகளிடையேயும் அதிகரித்து வளர வேண்டுமென நான் ஆசைப்படுகிறேன். ஏனெனில் இவ்வுலகம் பாவச்சேற்றில் அமிழ்ந்து கிடக்கிறது. உலகமும் அதன் மக்களும் என் சினத்தை இப்போது தூண்டுகிறார்கள். ஆனால் அன்பால் அரசாள விரும்புகிறவர் தம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆத்துமங்களிடம் தம் ஆசையைத் தெரிவிக்கிறார்.

உலகம் முழுதும் காப்பாற்றப்பட வேண்டும் என்பதே என் விருப்பம். அமைதியும் ஒற்றுமையும் உலகில் அரசு புரிய வேண்டுமென்று ஆசிக்கிறேன். நானே உலகில் அரசாள விரும்புகிறேன். என்னால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் செய்யும் என் பாடுகளின் துயரங்களுக்கான பரிகாரத்தினாலும், என் அன்பை, இரக்கத்தை வெளிப்படுத்தியும் நான் அரசாள வேண்டும். எண்ணற்ற ஆத்துமங்களுக்கு என் வார்த்தைகள் ஒளியும் உயிருமாயிருக்கும். எல்லாம் அச்சிடப்படும், வாசிக்கப்படும், போதிக்கப்படும்; அவை ஆத்துமங்களுக்கு ஒளியூட்டி மாற்றும்படி நான் அவைகளுக்கு சிறப்பான ஒரு வரம் கொடுப்பேன்.

அவர்கள் தங்கள் உள்ளத்தில் என்னைத் தேடுவார்களாக; ஏனெனில் தேவ இஷ்டப்பிரசாத நிலையில் (கடவுளின் பரிசுத்தத்தனத்தில்) இருக்கும் ஆத்துமம் பரிசுத்த ஆவியாரின் உறைவிடம் என அவர்கள் என்னை என் உண்மையான நிலையில் - தங்களுடைய கடவுளாக - நேசமிக்க இறைவனாக - கருதுவார்களாக. அன்பு அச்சத்தைப் போக்கட்டும்; முக்கியமாக நான் அவர்களை நேசிக்கிறேன் என்பதை அவர்கள் ஒருபோதும் மறவாதிருப்பார்களாக. இந்த அன்பை முன்னிட்டுத்தான் தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக பலர் உணர்ந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தங்கள் பேறு பலன்களை இழந்து தவித்திருக்கையில், நான் ஒருவேளை மாறி விட்டேன் என்றும், முன்பைக் காட்டிலும் அவர்களை குறைவாக நேசிக்கிறேன் என்றும் அவர்கள் எண்ணிக் கொள்ளலாம்.

எல்லோரும் என்னுடன் புதிதாக ஒன்றிணைந்து வாழ்வதைக் காண நான் விரும்புகிறேன் என்பதை அவர்கள் அறிய வேண்டும் என்றும், நான் உண்மையாகவே வசிக்கிற ஆலயத்தில் அவர்கள் என்னுடன் உரையாடுவதுடன் மட்டுமே திருப்தி அடைந்து விடக்கூடாது என்றும், நான் அவர்கள் உள்ளத்தில் குடியிருப்பதாகவும், இந்த ஒன்றிப்பில் மகிழ்ச்சியடைவதாகவும் அவர்கள் எண்ணிப் பார்க்கவும் வேண்டுமென நான் விரும்புகிறேன்.

தொடரும்...