தேவமாதா யார்? பகுதி-47 : கள்ளன் எப்படி நல்ல கள்ளன் ஆனான்?

“ நாம் தண்டிக்கப்படுவது முறையே “

லூக்காஸ் 23 : 41

கடவுளும் மனிதனும், பிதாவின் ஏக சுதனுமான இயேசு சுவாமி கொடுத்த பொறுப்பை எப்போது துவக்கினார் நம் தேவ தாய்?

தேவ மாதாவின் அகராதியில் பணி கொடுக்கப்பட்டுவிட்டது என்றால் அடுத்த நொடிலேயே தன் பணியைத் துவக்கிவிடுவார்கள்.. 

எப்படி கபிரியேல் சம்மனசானவர் மங்கள வார்த்தை சொல்லி முடியவும், மாதா “இதோ ஆண்டவரின் அடிமை” என்று சொல்லி பொறுப்பை ஏற்றதும் அடுத்த வசனம் சொல்கிறது.. மாதா புறப்பட்டு யூதா மலை நாட்டிலுள்ள ஒரு ஊருக்கு விரைந்து சென்றார் என்று (லூக்காஸ் 1 :39).

அதுதான் மாதா.. மாதா யோசித்துக்கொண்டு உட்கார்ந்து கொண்டிருக்கமாட்டார்கள்..  நேரத்தைப் வீணக்க மாட்டார்கள்.. யாரிடமும் கலந்தாசித்துக் கொண்டு காலத்தைப் போக்க மாட்டார்கள்..

அடுத்த நொடி..ரெடி.. இதுதான் மாதாவின் அற்புதமான ஸ்பெசல் குணாதிசயம்.

“ கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்ப்பது ஏன் “ என்று சொன்னவரின் அம்மாவாச்சே! அப்புறம் எப்படி இருப்பார்கள்?

மேலும்,

மாதா கடவுளால் படைக்கப்பட்ட ஞானமாக இருப்பதால் இயல்பிலேயே விரைந்து செல்லக் கூடியவர்கள்.. சுறுசுறுப்பானவர்கள்..

ஏனென்றால்..

“ ஞானம் அசைவுகளுக்கெல்லாம் மிக விரைவானது “ – ஞான ஆகமம் 7 : 24

இதையும் பார்த்துவிட்டோம்.. ஆக மாதா உடனே அவருடைய பொறுப்பை ஏற்றுக்கொண்டு தன் வேலையைத் துவக்கிவிட்டார்கள்.

இப்போது முதன் முதலாக எந்த பன்றிக் குட்டி சிங்கக்குட்டியானது என்று பார்க்கப் போகிறோம்..

கள்ளன் எப்படி நல்ல கள்ளன் ஆனான்.. அதாவது இரண்டு கெட்ட கள்ளன்களில் ஒரு கெட்ட கள்ளன் எப்படி நல்ல கள்ளன் ஆனான்..?

நாம் யாரையும் தீர்ப்பிடக்கூடாது பைபிளில் அப்படி இருப்பதால் இப்படி குறிப்பிட வேண்டியுள்ளது..

“ அவ்வாறே அவருடன் அறையுண்ட கள்வரும் அவர்மேல் வசை கூறினர் “

மத்தேயு 27 : 44

“ அவருடன் அறையுண்டவர்களும் அவர்மேல் வசை கூறினர் “ 

மாற்கு 15 : 32

ஆக முதலில் நல்ல கள்ளனும் கெட்ட கள்ளனாகத்தான் இருந்தான்..

நேரம் ஆக ஆகத்தான் அவனுக்குள் ஒரு மனமாற்றம் நிகழ்ந்திருக்க வேண்டும்.. அவன் தன் பக்கத்தில் அறையப்பட்டிருக்கும் ஆண்டவரை எத்தனை நேரம் உற்றுப்பார்த்திருப்பான்..

ஆண்டவரின் திருமேனியைப் பார்த்திருப்பான்.. அதில் இருந்த காயங்களைப் பார்த்திருப்பான்.. ஆண்டவரிடம் மனித சாயலே இல்லை என்கிறது இறைவார்த்தை. அந்த அளவுக்கு காயப்பட்டிருப்பவர் எப்படி இந்த அளவுக்கு பொறுமையாக இருக்கிறார்.. அவரால் எப்படி முடிகிறது?

அவரிடம் இருந்து ஒரு சிறு முனுமுனுப்புகூட வரவில்லை.. அந்த நிலையிலும் ஜெபிக்கிறார்.. முக்கியமாக இந்த அளவுக்கு அவரை வதைத்துக் கொடுமைப்படுத்தி சிலுவையில் அறைந்தவர்களை மன்னிக்கிறார்.. எப்படி இவரால் முடிகிறது?

இது கண்டிப்பாக ஒரு மனிதனால் எப்படி முடியும்?

கொடிய வேதனைக்களுக்கு மத்தியிலும் நீடித்த பொறுமை, நிதானம், ஜெபம், மன்னிப்பு. அப்படியானால் இவர் மனிதன் அல்ல.. மனித உறுவில் தெய்வம்..

இயேசு சுவாமியை உற்று நோக்கிய அவன் கண்கள் அவர் திருத்தாயையும் எத்தனை முறை உற்றுப்பார்த்திருக்கும்..

“ மாசற்ற முகம் ; கருணையே வடிவான கண்கள்; சம்மனசைப் போன்ற தோற்றம்; வானில் இருந்து இறங்கி வந்த ஒரு தேவ தூதரைப் போல் மாசின்றி காட்சியளிக்கிறார்; இவருடைய மகனா பாவி என்று குற்றம் சாட்டப்பட்டு சிலுவையில் அறையுண்டு தொங்குகிறார்”

“ இவரைப் பார்த்தால் விசித்திரமாக இருக்கிறது.. இவர் இப்படிப்பட்ட இந்த கொடுமையான சூழ்நிலையிலும் பொறுமையோடு இருக்கிறார் அளவற்ற வேதனைக் கடலிலும் ஒரு நிதானத்தைக் கடைப்பிடிக்கிறார். கண்ணீர்க் கடலையையும் அணையிட்டு தடுக்கிறார்.. அது அணையையும் தாண்டி சிறிது சிறிதாகவே வழிகிறது.. அந்த நேரத்திலும் ஏதோ ஒன்று செய்கிறார். ஆம் ஜெபிக்கிறார். ஏதோ ஒப்புக்கொடுக்கிறார். தன் மகனை உற்று நோக்குகிறார். இவரால் எப்படி இந்த சூழ்நிலையிலும் இதைச் செய்ய முடிகிறது.

“ இவர் ஏன் மற்ற தாயாரைப்போல நடந்து கொள்ளவில்லை.. இவர் இடத்தில் மற்ற தாய் இருந்திருந்தால்.. சிலுவையில் அறைந்தவர்களைத் திட்டித் தீர்த்திருப்பார்.. உங்களுக்கு கண் இல்லையா..? இருதயம் இல்லையா? என் மகன் என்ன குற்றம் செய்தான்? ஏன் இப்படி செய்தீர்கள்? என்று கத்தி கூப்பாடு போட்டு ஆர்ப்பாட்டம் செய்திருப்பார்.. ஆனால் இவரும் அமைதி காக்கிறார்.. தாயும் சேயும் நடந்துகொள்கிறது மிகவும் வித்தியாசமாக இருக்கிறதே “

“ இப்படி ஒரு தாய் எனக்கு இருந்திருந்தால் நான் கண்டிப்பாக ஒரு கள்ளனாக இருந்திருக்க மாட்டேனே, எனக்கு இந்த நிலைமை வந்திருக்காதே, நான் நல்லவனாய் இருந்திருப்பேனே, அம்மா எனக்காகவும் ஜெபியுங்கள் அம்மா ! இப்போது என்னுடைய அம்மா நினைவிற்கு வருகிறது.. அவர் என் அருகில் இல்லை. உங்களை அம்மா என்று கூப்பிடலாமா? அந்த தகுதி எனக்கு தகுதியில்லையே ! “

இப்போது ஏதோ நடக்கிறதே.. அவர் ஏதோ பேசுகிறாரே..

“ அம்மா ! இதோ உம் மகன் “ என்கிறாரே !

“ இதோ உன் தாய் “ என்கிறாரே என்ன நடக்கிறது இங்கே..

“ இதுதான் சமயம். நாமும் அவர்களை அம்மாவாக ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான். நமக்கு நல்ல சாவாவது கிடைக்கும் “ என்று மனதுக்குள் எண்ணி தேவ மாதாவைக் கருணையோடு பார்த்திருப்பான்..

அந்த நொடியிலேயே அவனைத் தேவமாதா தன்னுடைய மகனாக ஏற்றுகொண்டு அவன் மனமாற்றத்திற்காக ஜெபிக்க ஆரம்பித்திருப்பார்கள்..

அதே நேரம் பொறுப்பை ஏற்ற உடனே இந்த இரண்டு கள்வர்களுக்காகவும் ஜெபிக்க ஆரம்பித்திருப்பார்கள்.. முக்கியமாக அவர்கள் நரகம் சென்றுவிடக்கூடாது என்று ஜெபித்திருப்பார்கள்..

அவர் திருமகனின் இரத்தத்தை அவர்களுக்காகவும் ஒப்புக்கொடுத்திருப்பார்கள்..

ஒரு பன்றிக் குட்டி கன்றுக்குட்டியாக மாறி கடைசியில் சிங்கக்குட்டியாகவும் மாறிவிட்டது..

ஆனால் மற்ற பன்றிக்குட்டி மேலும் சேற்றைவாறி பூசிக்கொண்டு பெரிய பன்றியாக மாறிக்கொண்டிருந்தது..

ஒன்றிடம் இருந்த ஏதோ ஒன்று இன்னொன்றிடம் இல்லை..  தொடர்ச்சி கடவுளுக்கு சித்தமானால் அடுத்த பகுதியில்..

“ ஜெபமாலை இராக்கினியாய் வந்து ஜெயம் தரும் மாமரி வாழியவே.. ஜெபிப்போம் ஜெபிப்போம்.. ஜெபமாலை..

பரிசுத்த ஆவியானவர் போற்றி !

நம் நேசப்பிதா வாழ்த்தப்பெறுவாராக !

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !