பாத்திமா காட்சிகள் பகுதி- 38

துயி பட்டணத்தில் லூசியாவுக்கு தமத்திருத்துவக் காட்சி.

மாதாவின் மகிமைகளுக்கு ஓர் அளவுமில்லை, எல்லையுமில்லை;துவக்கமும் இல்லை, முடிவுமில்லை. ஆயினும் இப்பூவுலகில் அவர்களுடைய மகுடத்தில் முழுமையான மகிமையின் இரத்தினம் “மாதா சேசுவுடன் இனை மீட்பர்” என்பதே. இந்த ஒளி வீசும் ஞான இரத்தினக்கல், பாத்திமா செய்திக்குள் சிற்பிக்குள் முத்து என்பது போல் அடங்கியுள்ளது. அந்த முத்தை நமக்கு வெளிப்படுத்துவது பாத்திமாவின் இறுதிக்காட்சி எனக் கூறப்படும் பரிசுத்த தமத்திருத்துவத்தின் காட்சியாகும் ( இந்த காட்சிக்கு முன் மாதாவின், சேசுவின் தனிப்பட்ட காட்சிகள் லூசியாவிற்கு தரப்பட்டுள்ளது... மேலும் மாதாவின் ஆறாம் காட்சிக்கு பின் குழந்தை வாழ்க்கை எப்படி இருந்தது.. என்பதெல்லாம் வரும் பகுதிகளில் காணலாம்.. அதற்கு முன் சில முக்கியமான பதிவுகளை முடித்து விடுவோம்)

1929-ம் ஆண்டு ஜூன் மாதம் 13- தேதி இரவு அருளப்பட்ட தமத்திருத்துவ காட்சியை லூசியாவே தன் வார்த்தைகளிலேயே இங்கு தருகிறோம்...

தூயி பட்டணத்தில் லூசியாவுக்கு தமத்திருத்துவத்தின் காட்சி…

லூசியா கூறுகிறாள்: “ எங்கள் மடத்தின் சிற்றாலயத்தில் சங்.கொன்சால்வெஸ் சுவாமி அடிக்கடி பாவசங்கீர்த்தனம் கேட்க வருவார்… இச்சமயத்தில்தான் ரஷ்யாவை மரியாயின் மாசற்ற இருதயத்திற்கு ( பாப்பரசர் ஐக்கிய அர்ப்பணம்) ஒப்புக்கொடுக்க வேண்டுமென்பதையும், அந்நாட்டை நமதாண்டவர் மனந்திருப்ப வாக்களித்திருப்பதைப் பற்றியும் பரிசுத்த திருச்சபைக்கு நான் அறிவிக்க வேண்டும் என அவர் விரும்புவதாகவும் சேசு என்னிடம் தெறிவித்தார்.

வியாழக்கிழமை இரவு 11 முதல் 12 மணி வரை திருமணி ஆராதனை செய்ய என் ஞான அதிகாரிகளிடம் உத்தரவு கேட்டுப் பெற்றிருந்தேன். ஒரு நாள் நான் அப்படி தனியே இருக்கையில் கோவில் நடுவிலிருக்கும் கிராதியின் மத்தியில் சம்மனசின் ஜெபத்தை ( என் தேவனே நான் உம்மை விசுவசிக்கிறேன்…ஜெபம்) சாஷ்ட்டாங்கமாக ஜெபிப்பதற்காக முழங்காலிட்டடேன். களைப்பாக இருந்ததால் எழுந்து கைகளை விரித்தபடி அச்செபத்தை சொன்னேன். அங்கிருந்த ஒரே வெளிச்சம் வாடா விளக்குதான்.

திடீரென கோவில் முழுவதும் பரலோக வெளிச்சம் போல் காணப்பட்டது. பீடத்தின் மீது ஒளியாலான ஒரு சிலுவை காணப்பட்டது. அது மேற்கூறை வரையிலும் உயர்ந்து நின்றது. மிகத்தெளிவான இந்த வெளிச்சத்தில் சிலுவையின் மேல் பாகத்தில் ஒரு மனிதனின் உருவம் இடுப்பு முதல் சிரசு வரையிலும் காணப்பட்டது. அம்மனிதனின் மார்பில் ஒளிவீசும் ஓர் புறா இருந்தது. சிலுவையில் அறையப்பட்டவராக இன்னொரு மனிதன் காணப்பட்டார். அவரது விலாவின் சற்று கீழ் ஒரு பூசைப் பாத்திரமும் அதன் மேல் ஒரு பெரிய ஓஸ்தியும் ஆகாயத்தில் நிற்பதாக தெறிந்தது. சிலுவையில் அறையப்பட்டவருடைய கன்னங்களிலிருந்து வழிந்த சில இரத்தத்துளிகளும், அவர் மார்பின் காயத்திலிருந்து பாய்ந்த இரத்தமும் அந்த ஓஸ்தியில் பட்டு, பின் பாத்திரத்திற்குள் விழுந்தன. 

சிலுவையின் வலது கரத்தின் அடியில் மாதா நின்றார்கள். அது பாத்திமா மாதாதான். தன் மாசற்ற இருதயத்தை இடது கரத்தில் வைத்திருந்தார்கள். அதில் வாளோ ரோஜா மலர்களோ இல்லை. முள்ளாலான முடியும் சுவாலையும் இருந்தன. சிலுவையின் இடது கரத்தினடியில் படிகத்தண்ணீர் பெரிய எழுத்துக்களாக பாய்ந்து “ வரப்பிரசாதம் “, “ இரக்கம் “ என்ற வார்த்தைகளாக உருவெடுத்தது.

மகா பரிசுத்த தமத்திருத்துவத்தின் பரம இரகசியம் எனக்குக் காண்பிக்கப்பட்டதாக நான் கண்டுபிடித்தேன். அதைப்பற்றிய விளக்கத்தை நான் பெற்றுக் கொண்டேன். அதை வெளியிட எனக்கு உத்தரவு இல்லை.”

இது எப்படிப்பட்ட காட்சி! சத்திய கத்தோலிக்க வேதமே கட்டப்பட்டிருக்கிற பரிசுத்த தமத்திருத்துவ சத்தியத்தை அதன் பொருளுடன் தத்ரூபமாக ஒரு மானிட ஆன்மா பெற்றுக் கொண்டுள்ளது. சொல்லப்போனால் உண்மையும், சத்தியமும், மெய்யும் எதார்த்தமான இருத்தல் என்பதெல்லாமாயிருக்கிற தேவாதி தேவனாகிய சர்வேசுவரனையே இக்காட்சி வெளிப்படுத்துகிறதே ! இவ்வரிய காட்சியை காண்பித்த இந்த மகா பூஜிதமான, மிகுந்த பரிசுத்தமான சமையத்தில் கீழ்வரும் செய்தி கொடுக்கப்படுகிறது.

“ உலகிலுள்ள சகல மேற்றிராணிமாருடன் பாப்பரசர் ரஷ்யாவை என் மாசற்ற இருதயத்திற்கு ஒப்புக்கொடுக்கும்படி அவரைக் கடவுள் கேட்கின்ற தருணம் இது. இதன் வழியாக கடவுள் ரஷ்யாவைக் காப்பாற்றுவதாக வாக்களித்தார் “ என்று மாதா சகோதரி லூசியாவிடம் கூறுகிறார்கள்..

ரஷ்யாவை ஏன் மாதாவின் மாசற்ற இருதயத்திற்கு ஒப்புக்கொடுக்க வேண்டும்..அதன் மூலமாக கடவுள் நமக்கு என்ன சொல்ல என்ன தர வருகிறார் விரும்புகிறார் என்பதை இனி வரும் பகுதிகளில் காணலாம்..

சிந்தனை : இந்த காட்சியை நாம் ஒவ்வொரு முறை திவ்ய நற்கருணை நாதரை வாங்கும்போது நினைவு கூற வேண்டும்… நற்கருணை நாதரை வாங்கும் போது ஒரு அச்ச நடுக்கமும், பரிசுத்த அன்பும், தாழ்ச்சியும் நமக்கு வேண்டும்….

ஓ திருப்பலிப் பீடம் எவ்வளவு மகத்தானது…ஒவ்வொரு திருப்பலியும் எவ்வளவு பரிசுத்தமானது… அந்த திவய நற்கருணை நாதரை நாம் பெற்ற பின்பு ஒரு பதினைந்து நிமிடங்களாவது அவருடன் ஒன்றித்திருக்க வேண்டாமா?

நற்கருணை பெற்றுக்கொண்ட அடுத்த சில வினாடிகளில் சில ஆலங்களில் அதுவும் நகர்ப்புற ஆலயங்களில் நடக்கும் செயல்களைப் பார்த்தால்… சொல்ல விரும்பவில்லை…

நன்றி : மாதா பரிகார மலர், மாதா அப்போஸ்தலர்கள் சபை, தூத்துக்குடி. மாதா பரிகார மலர் இதழ் ( இருமாதங்களுக்கு ஒருமுறை) விரும்புவோர், தொடர்பு கொள்க சகோ.பால்ராஜ், Ph. 9487609983, பிரதர் கபரியேல், ph. 9487257479 மற்றும் பிரதர் ஜேசுராஜ் Ph: 9894398144