பாத்திமா காட்சிகள் பகுதி- 37

அன்னையின் ஆறாம் காட்சியின் தொடர்ச்சி....

மாதாவின் ஐந்தாம் காட்சியில் அன்னை கூறிய செய்தி : “அக்டோபர் மாதம் எல்லோரும் நம்பும்படி ஒரு அதிசயத்தைச் செய்வேன்...” (அன்னையின் முன்னறிவிப்பு)

குழந்தைகள் எதிர்ப்பார்த்தபடி, அன்னை முன்னறிவித்தபடி மாபெரும் அதிசயம் நடைபெற்றுவிட்டது… சேசுவின் புதுமைகள், அவரது கல்வாரி மரணம், உயிர்ப்பு, சேசுவின் பரலோக ஆரோகனம், இந்த வரிசையில் வைக்கப்பட வேண்டிய அற்புதம் இது. இத்தகைய மாபெரும் புதுமை திருச்சபை வரலாற்றிலேயே வேறு எங்கும் கிடையாது.. மூன்று மாதங்களுக்கு முன்பே அன்னையால் முன்னறிவிக்கப்பட்டது. ஒரு குறிப்பிட்ட வருடம், குறிப்பிட்ட மாதம், குறிப்பிட்ட நாள், குறித்த நேரத்தில் அது நடந்தது.

70000 முதல் ஒரு லட்சம் பேர் கொண்ட மிகப்பெரும் ஜனத்திரள் முன்பாக அனைவரும் பார்க்கும் விதத்தில் நடைபெற்றத. மூன்று எழுத்தறிவில்லாத இளஞ்சிறுவர் வழியாக அறிவிக்கப்பட்டு அத்தனை ஆயிரம் மக்கள் முன்னிலையில் நடத்தப்பட்டது.

“ எல்லோரும் நம்பும்படியாக “ இவ்வாறு செய்வேன் என்று பரலோகத்திலிருந்து வந்த நம் அன்னையே முன்னுரைத்தபடி நடந்தது. கத்தோலிக்கர், வேத எதிர்ப்பாளர், வேத மறுப்பாளர், அரசியல்வாதிகள், ஆட்சியாளர்கள், விஞ்ஞானிகள், கல்வியில் தேர்ந்தோர், நாஸ்திகர் ஆகிய எல்லா தரப்பினரும் கண்டு வியந்து ஒப்புக்கொண்ட அதிசயம் அது.

சூரிய நடன அதிசயத்தை கண்டு அதிசயித்து, மெய்மறந்து சர்வேசுவரன் இருக்கிறார் என்ற உண்மையின் நேரடி சாட்சியான இம்மாபெரும் காட்சியைக் கண்டு திருப்தியும் பெருமிதமும் அடைந்த மாபெரும் மக்கள் திரள் அமைதியுடன் கலைந்து சென்றது. அன்னை காலூன்றி நின்ற அசின்ஹெரா மரம் இலை,கிளைகளை இழந்து பரிதாபமாக காட்சியளித்தது. மக்கள் அன்னையின் நினைவு சின்னமாக அகப்பட்டதையெல்லாம் கொண்டு சென்றனர்.

மூன்று குழந்தைகளும் மிகவும் சோர்ந்து களைப்புற்றுக் காணப்பட்டனர். லூசியாவை ஒரு மனிதன் தோளில் தூக்கிக்கொண்டு கூட்டத்திற்கு கூட்டம் எடுத்துச் சென்றான். லூசியா மக்கள் மிகவும் விரும்பித் தேடிய செய்தியாகிய, “ யுத்தம் விரைவில் நிற்கும்; யுத்த வீரர் சீக்கிரம் வீடு திரும்புவார்கள் “ என்ற செய்தியைக் கூறிக்கொண்டேயிருந்தாள். குழந்தைகளின் ஆடைகளின் ஓரங்களும், தலைமுடியும் அருளீக்கங்களாக  சிறுகச் சிறுக கத்தரித்து எடுக்கப்பட்டிருந்தது. 

அவர்கள் வீடு சேர வெகு நேரமாயிற்று. வழியில் அவர்களை யாரும் உடனே விடுவதாயில்லை. அவர்கள் கரத்தை முத்தம் செய்தனர், மாலை சூடினர், குழந்தைகள் வீட்டிற்கு வந்த பிறகு அவர்கள் வீடுகளைச் சுற்றி கும்பல் நின்று கொண்டேயிருந்தது. எல்லோரும் குழந்தைகளை அருகில் வைத்துப்பார்க்கவும், பேசவும் விரும்பினார்கள்…

1917-ல் நிகழ்ந்த சூரிய அதிசயத்தை நேரில் கண்டவர்கள் இன்னும் கூட உயிருடன் இருக்கிறார்கள்.. (இப்புத்தகத்தின் முதல் பதிப்பு 1987-ல் தூத்துக்குடி பிஷப் S.T.அமலநாதரால் வெளியிடப்பட்டுள்ளது). பாத்திமாவில் ஒரு பரலோகக் காட்சி அருளப்பட்டது என்பதை மறுக்க முடியாத ஆதாரங்களுடன் சர்வேசுவரனே உலகிற்கு நிரூபித்துக் காட்டியுள்ளார்.

சிந்தனை : இந்த சூரிய நடன அற்புதத்தை திருவெளிப்பாடு 12 –ன் ஒரு சிறு துளியாகவே பார்க்கலாம்.. கடவுள் எத்தகைய வல்லமையை நம் தாய் மரியம்மாவுக்கு கொடுத்துள்ளார் பாருங்கள்..

“ விண்ணகத்தில் அரியதோர் அறிகுறி தோன்றியது; பெண் ஒருத்தி காணப்பட்டாள். அவள் கதிரவனை ஆடையாக அணிந்திருந்தாள்; நிலவின் மேல் நின்று கொண்டிருந்தாள்; தலையின் மீது பன்னிரு விண்மீன்களை முடியாகச் சூடியிருந்தாள்”. – திருவெளிப்பாடு 12:1

சூரியனை ஆடையாக அணியவும், நிலவின் மேல் நிற்கவும் வல்லமை உள்ள மரியம்மாவுக்கு சூரியனை இடம் பெயர செய்ய முடியாதா என்ன? மரியம்மாவுக்கு இந்த வல்லமையை கொடுத்தது யார்? அது நம் மூவொரு கடவுளன்றோ,,,ஏன் இத்தகையை வல்லமையை கொடுத்தார்.. சாத்தானை ஒழித்துக்கட்ட அல்லவா கொடுத்தார்..அதுதானே கடவுளின் திருவுளம்…

ஒரு பெண்ணால் வந்த பாவ தோஷத்தை இன்னொரு பெண்ணை வைத்துதானே கடவுள் கழுவுவார்..ஆதியாகமத்தில் கடவுளின் முதல் நேரடி தீர்க்க தரிசனமும் அதுதானே…

“ உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்குமிடையே பகையை உண்டாக்குவோம்; அவள் உன் தலையை நசுக்குவாள்; நீயோ அவளுடைய குதிங்காலைத் தீண்ட முயலுவாய் “ என்றார். ஆதியாகமம் 3:15

மாதாவைக் கண்டுபிடித்தவர்கள்… கடவுளை கண்டுபிடித்துவிடுவார்கள்… மாதாவின் துணையை நாடுபவர்கள் பாதுகாக்கப்படுவார்கள்.. மாதாவை அம்மாவாக ஏற்றுக்கொண்டவர்கள் எப்படியும் நரகத்திலிருந்து தப்பித்துக் கொள்வார்கள்… ஆனால் அம்மா இல்லாத பிள்ளைகளின் நிலமைதான் மாதாவை ஏற்றுக்கொள்ளாதவர்களின் நிலமை.. அவர்கள் கரங்களில் இருக்கும் பைபிள் கூட கத்தோலிக்க திருச்சபை கொடுத்ததுதான்…

நன்றி :  பாத்திமா காட்சிகள், மேலும் என்னைப்படி வருத்தப்படு, கடவுள்-மனிதனின் காவியம், மாதா பரிகார மலர் (மாதாந்திர இதழ், வருட சந்தா ₹Rs 125-) மற்றும் சிறந்த கத்தோலிக்க புத்தகங்கள் வாங்க தொடர்புக்கு, சகோ.பால்ராஜ், மாதா அப்போஸ்தலர்கள் சபை,Ph. 0461-2361989, 9487609983, மேலும் சகோ. ஜேசுராஜ் : 9894398144.

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !