பாத்திமா காட்சிகள் பகுதி- 33

மாதாவின் ஐந்தாம் காட்சி

செப்டம்பர் மாதம் 12-ம் நாளே கோவா தா ஈரியாவுக்குச் செல்லும் பாதைகள் எல்லாம் மக்கள் கூட்டம். அன்று இரவை திறந்த வெளியிலேயே அவர்கள் கழித்தார்கள். மறுநாள் சூரிய உதயத்தில் பார்த்தால் இன்னும் கூட்டம் அதிகரித்து வந்தது.

பெருங்கூட்டமான மக்கள் இக்குழந்தைகளை காணும்படி காலையிலேயே அல்யுஸ்திரலுக்குச் சென்றார்கள். ஜெபமாலையும், மாதாவின் பிராத்தனையும் எங்கும் எதிரொலித்துக் கொண்டிருந்தன. குழந்தைகள் புறப்பட்டுச்செல்வதே சிரமாயிருந்தது. எல்லோரும் குழந்தைகளைக் காணவும், அவர்களிடம் பேசவும் விரும்பினார்கள். கூட்டத்தை நெரித்துக்கொண்டு சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருந்தவர்கள் கூட குழந்தைகள் முன் முழங்காலிட்டு தங்கள் விண்ணப்பங்களை தேவ அன்னையிடம் தெறிவிக்கும்படி கேட்டார்கள். மக்களின் துன்பங்களையெல்லாம் ஒவ்வொன்றாய் எடுத்துச் சொல்வதுபோல் விண்ணப்பங்கள் ஒலித்தன.

சிலர் குழந்தைகளைப் பார்ப்பதற்காக மரங்களிலும், வீட்டுச் சுவர்களின் மேலும் ஏறிக்கொண்டனர். சில ஆண்கள் குழந்தைகளுக்கு கூட்டத்தில் வழி உண்டாக்கிக்கொடுத்து, அழைத்துச் சென்றனர். அன்றைய கூட்டம் மிகப்பெரிதாய் இருந்தது. சுமார் 3000 பேர் குழுமியிருந்தனர். முப்பது குரு மாணவர்களும், 500 குருக்களும் வந்திருந்தனர்.

எங்கு திரும்பினாலும் ஒரே மக்கள் திரளாக காணப்பட்டது. பகல் பணிரெண்டு மணி ஆகியது எங்கும் நிசப்தம். சில ஜெப முனகல்கள் தவிர எங்கும் ஒரே அமைதி! வானம் முழு நீலமாயிருந்தது. ஒரு சிறு மேகம் கூட காணப்படவில்லை. ஆனால் சூரியனின் ஒளி மங்கத்தொடங்கியது. ஆகாயம் ஒருவித பொன்னிறத்தில் காணப்பட்டது. ஒளி எவ்வளவு குறைந்துவிட்டதென்றால் நட்சத்திரங்கள் கூட தென்பட்டன. ஒவ்வொரு மாதமும் 13-ம் தேதி நிகழ்ந்து வந்த இந்த அதிசய நிகழ்வை ஜனக்கும்பல் பார்த்துக் கொண்டேயிருந்தது. திடீரென மகிழ்ச்சி ஒலிகள் கேட்டன. “ அதோ, அதோ “ என்று ஆயிரக்கணக்கான விரல்கள் வானத்தில் எதையோ சுட்டிக் காட்டின. “ உனக்குத் தெறியவில்லையா?” “ அதோ,அதோ பார்! ” “ ஆம் தெறிகிறது “ வெண்மேக உருண்டை தெறிகிறது “. இப்படி பல பல குரல்கள் ஒலித்தன.

ஒரு உருண்டை வடிவமான மேகம் கிழக்கிலிருந்து புறப்பட்டு கம்பீரமாக ஆகாயத்தில் நீந்தி கீழே மெதுவாக இறங்கி மேற்கு நோக்கி வந்தது. அந்த மேகம் குழந்தைகள் மூவரும் இருந்த அஸின்ஹேரா மரத்தின் மீது இறங்கியது. பல ஆயிரம் கண்கள் அதைப்பார்த்தன. ஆனால் வேறுபலர் ஒன்றையும் காணவில்லை. அந்த சமையத்தில் வானத்திலிருந்து மழை பொழிவதுபோல் வெண் மலர்களும், இதழ்களும் பொழியப்பட்டன. ஆனால் தரையில் விழும்முன் அவைகள் மறைந்து போயின. பலர் தங்கள் தொப்பிகளில் சேகரிக்க முயன்றும் ஒன்றும் அகப்படவில்லை. இந்த மலர் மழை இதற்குப் பிறகும் பல சந்தர்ப்பங்களில் திருயாத்திரை வேளைகளில் இதுபோல் பொழியப்பட்டதை திருப்பயணிகள் கண்டிருக்கின்றனர். லெயிரியா ஆயரும் தன் கண்ணால் இதனைக் கண்டிருக்கிறார்.

   அஸிஹேரா மரத்தில் இறங்கிய வெண் மேக உருண்டையில் தேவ அன்னை நம் சிறுவர்களுக்குத் தோன்றினார்கள். அவர்களின் இனிய காட்சியாலும், மதுர மொழியாலும் அம்மூவரும் பரவசமாயினர். இந்த ஐந்தாம் காட்சிதான் மற்ற எல்லா காட்சிகளையும் விட சுருக்கமாயிருந்தது.

குழந்தைகளை மிகுந்த அன்புடன் பார்த்து நம் தேவ அன்னை கூறினார்கள்:

“ இந்தப் போர் முடிவடையும்படி (முதல் உலகப்போர்) தொடர்ந்து ஜெபமாலை சொல்லி வாருங்கள். அக்டோபர் மாதம் நமதாண்டவரும், வியாகுல அன்னையும், கார்மேல் மாதாவும் இங்கு வருவார்கள். உலகத்தை ஆசீர்வதிக்க அர்ச்.சூசையப்பர் குழந்தை சேசுவுடன் தோன்றுவார். உங்களுடைய பரித்தியாகங்களால் கடவுள் மகிழ்கிறார். ஆனால் அந்தக் கயிற்றோடு நீங்கள் உறங்குவதை அவர் விரும்பவில்லை. அதைப் பகலில் மட்டும் அணிந்து கொள்ளுங்கள்,”

( வீதியில் கிடந்த முரட்டுக்கயி, அதைத் தொட்டாலே காந்தல் மற்றும் வலி தரக்கூடிய கையிறை இக்குழந்தைகள் பாவிகள் மனம் திரும்ப பரித்தியாகமாக யாருக்கும் தெறியாதவாறு தங்கள் இடுப்பில் கட்டியிருந்தார்கள். அதனால் இரவில் தூங்கமுடியாமல் தவித்தார்கள்)

தேவ அன்னை இவ்வாறு பேசியபின் லூசியா, மக்கள் அவளிடம் கேட்டுக்கொண்ட விண்ணப்பங்களை கூறினாள். அதற்கு நம் அன்னை மறுமொழியாக,

“ அவர்களில் சிலரைக் குணப்படுத்துவேன், மற்றவர்களை அல்ல. அக்டோபர் மாதம் எல்லோரும் நம்பும்படி ஒரு அற்புதத்தை செய்வேன் ” என்றார்கள்.

லூசியாவின் பக்கத்தில் இருந்த யாரோ ஒரு சிறுமி லூசியாவிடம் ஒரு யு டி கொலோன் பாட்டிலை (வாசனைத் திரவியப்புட்டி) அதை மாதாவிடம் கொடுக்கும்படி கேட்டாள். லூசியாவும் அதை மாதாவிடம் நீட்டினாள். அதற்கு நம் தேவ அன்னை, “ இது பரலோகத்திற்கு தேவைப்படாது” என்றார்கள்.

இதன் பின் மாதா செல்ல எழுந்தார்கள். லூசியா கூட்டத்தைப்பார்த்து, “அவர்களைக் காண வேண்டுமானால் அதோ பாருங்கள் ” என்று கூறி “ அதோ அவர்கள் போகிறார்கள், மேலே போகிறார்கள்” என்றாள். அந்த மேகம் எழுந்து வானில் மறைந்தது.

இந்த ஐந்தாம் காட்சியால் குழந்தைகள் மூவரும் அதிக திடம் பெற்றார்கள். மிகுந்த ஆறுதலும் அடைந்தார்கள்.

நன்றி : பாத்திமா காட்சிகள் நூல், பாத்திமா காட்சிகள் மற்றும் சிறந்த கத்தோலிக்க புத்தகங்கள் வாங்க தொடர்புக்கு, மாதா அப்போஸ்தலர்கள் சபை, ரோசா மிஸ்திக்கா, 11/519, சகாயமப்பட்டனம், இரண்டாவது தெரு, V.V.D. பள்ளி எதிரில் தூத்துக்குடி-628 002, Ph. 0461-2361989, 9487609983, மேலும் சகோ. ஜேசுராஜ் : 9894398144.

சிந்தனை : மாதாவின் அருகாமையும், பாதுகாப்பும் நம் ஒவ்வொருவருக்கும் மிகவும் தேவை. கத்தோலிக்க மக்களுக்கு மாதா பக்தி மிகவும் இன்றியமையாதது. ஜெபமாலை சொல்லாமல் நான் மாதாவை நேசிக்கிறேன் என்றால் அவர்கள் மாதா பிள்ளைகள் அல்ல. ஜெபமாலை மாதத்தில் மட்டும் அல்ல எப்போதுமே..ஜெபிப்போம்.. ஜெபிப்போம்..ஜெபமாலை..

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !