அன்னையின் ஆறாம் காட்சி
1917 அக்டோபர் மாதம் 12-ம் நாள் மாலையிலிருந்தே மக்கள் கூட்டம் கோவா தா ஈரியாவில் திரள ஆரம்பித்தது. வானம் கறுத்து அடைத்துக் கொண்டிருந்தது. கடும் புயலும் மழையும் எந்நேரமும் வரலாம். இந்த அறிகுறிகளைக் கண்டு மக்கள் பின்வாங்குவதாயில்லை.
கொஞ்ச நாட்களாக ஆட்சி பீடமும், வேத எதிர்ப்பு பத்திரிக்கைகளும் மக்களின் விசுவாசத்தை உடைக்கவும், முடிந்த அளவு குறைக்கவும் ஒன்று திரண்டு முயன்றன. நிந்தையும், பரிகாசமும், ஏளனமும் மிகுந்தன. அச்சுறுத்தல்கள் பல பக்கங்களிலும் கேட்டன. “ உலகம் “ என்ற பிரபல நாளிதழில் திருச்சபை பழிப்பும், பாமர மக்களின் விசுவாச பரிகசிப்பும் நிறைந்திருந்தன. எதிர்ப்பிரச்சார துண்டு பிரசுரங்கள் எங்கும் விநியோகிக்கப்பட்டன.
ஆனால் விசுவாசம் சந்தேகத்தை விட வலிமையானது. அன்பு பகையை விட அதிக சக்தியுடையது, இவ்வுண்மையை நிலை நாட்டுவது போல் போர்த்துக்கல் எங்குமுள்ள கத்தோலிக்க மக்கள் எறும்பு ஊறுவதுபோல் எல்லாத்திசைகளிலிருந்தும் கோவா தா ஈரியாவை நோக்கி நடந்தவண்ணமாயிருந்தனர். உணவிற்கு என்ன செய்வோம், எங்கு உறங்குவோம், மழையில் எங்கு தங்குவோம் என்ற எண்ணம் எதுவுமே இல்லாமல் கையில் உணவுப் பொட்டலம், தண்ணீர் பாட்டில், குடை சகிதமாக மக்கள் திரண்டு கொண்டிருந்தனர்.
கூட்டம் கூட்டமாக அவர்கள் ஜெபமாலை ஜெபித்தபடி வந்தார்கள். ஒவ்வொரு கூட்டத்திலும் சிலர் அருள் நிறை மந்திரத்தின் முதல் பாகத்தைச் சொல்ல மற்றவர்கள் மறுபாகத்தைச் சொல்லி அன்னையை வாழ்த்திக்கொண்டே வழி நடந்தார்கள். மாதா மீது பாடல்களும், மாதா பிராத்தனையும் எங்கும் ஒலித்துக்கொண்டேயிருந்தன. மனமகிழ்ச்சியால் எழுந்த இனிய சிரிப்பொலியைக் கேட்ட போது, அந்த மக்களுக்கு தேவ அன்னையின் நினைவைத் தவிர வேறு எந்தக் கவலையும் இருந்ததாக தெறியவில்லை என பார்வையாளர்கள் கருதினர்.
இக்கும்பலில் பலர் நோயாளிகள், பற்பல உடல் நோய்களால் நொந்தவர்கள். நடக்க முடிந்தவர்கள் நடந்து வந்தார்கள். நடக்க இயலாதவர்களை மற்றவர்கள் சுமந்து கொண்டோ, வாகனங்களில் அல்லது பர்ரோ என்ற குட்டைக் கழுதையின் மீது ஏற்றியோ கொண்டு வந்தார்கள். மிகப்பலர் மனக் கவலையாலும், உள்ள வேதனையாலும் நொந்தவர்கள்.
இன்னும் பலர் வேத எதிர்ப்பாளர்கள். கடவுளைக்கூட ஏற்காத நாஸ்திகர். சிலர் பெரிய தனவந்தர்கள் உல்லாசமாக உடுத்து, மோட்டார் வாகனங்களிலும், குதிரை வண்டிகளிலும் வந்து கொண்டிருந்தார்கள். அநேகர் சும்மா வேடிக்கை பார்க்கவும், பொழுது போக்கவும், இங்கு என்னதான் நடக்கிறது என்று பார்ப்போம் என்ற விநோதப் பிரியத்துடனும் அங்கு சென்றார்கள். மிகப்பெருவாரியான மக்கள் சாதாரன பாமர மக்கள்தான்.
குழந்தைகளின் குடும்ப நிலை : அல்யுஸ்திரலில் லூசியா குடும்பமும், பிரான்சிஸ், ஜஸிந்தா குடும்பமும், ஒரு மாதிரி வியப்புக்குறியதும், எதிர்ப்பார்ப்பு ஏக்கம் நிறைந்ததுமான என்னவென்று விவரிக்க முடியாத நிலையில் இருந்தனர். லூசியா, பிரான்சிஸ், ஜஸிந்தா மூவருக்கும் அன்னையின் நினைவும், சேசுவைப் பார்க்கலாம் என்ற ஆவலும் மிகுந்திருந்தன. அவர்கள் கலங்கவுமில்லை, பயங்கொள்ளவுமில்லை. ஆனால் மற்றவர்களுக்கு அந்த இரவு பயமூட்டுவதாக இருந்தது. ஆனால் மார்ட்டோ (பிரான்சிஸ், ஜஸிந்தாவின் தந்தை) திடமாகவே இருந்தார்.
அக்டோபர் 13 புலர்ந்தது. அன்று சனிக்கிழமை!. இரு குடும்பத்தினரும் அதிகாலையிலேயே விழித்துக்கொண்டனர். மரிய ரோசாவுக்கு ( லூசியாவின் தாய்) என்ன சொல்வது என்ன செய்வது என்று ஒன்றுமே ஓடவில்லை. குடும்பத்தில் யாரும் அமைதியாக எதையும் செய்யவோ, பேசவோ முடியாமல் அநேக மக்கள் இரு வீடுகளையும் முற்றுகையிட்டதுபோல் வளைத்துக்கொண்டனர். காட்சி காணும் குழந்தைகளை பார்க்கவும், பேசவும் ஏற்பட்ட ஆவலால் மரியாதை, சம்பிரதாயம் எதையும் கவனிக்காமல் சும்மா வீட்டினுள் கும்பல் நுழைந்து விட்டது. மார்ட்டோ கூட்டத்திலும் இதே கூட்டமும் சந்தடியும்தான்.
ஒலிப்பியாவுக்கு ஒரே பயம். தன் குழந்தைகளுக்காகவும், குடும்பத்திற்காகவும் அவள் ஜெபித்துக்கொண்டே இருந்தாள். ஆயினும் பிரான்சிஸும், ஜெசிந்தாவும் அமைதியாய் இருக்கக்கண்டு ஆச்சரியப்பட்டாள். அதுமட்டுமல்ல அக்குழந்தைகள் அப்பெருங்கூட்டத்தில் இறந்துவிடவும் ஆயத்தமாக இருந்தது அதை விட அவளுக்கு ஆச்சரியமாய் இருந்தது.
“ அவர்கள் எங்களைக் கொன்றால் நாங்கள் உடனே மோட்சத்திற்கு போவோம். ஆனால் அவர்கள் பாவம் நரகத்திற்கு போவார்களே !” என்று கூறினாள் ஜஸிந்தா.
இவ்வளவு திடமும் அமைதியும் இந்தச்சிறு குழந்தைகளுக்கு எங்கிருந்து வந்திருக்கக்கூடும் ? இது தேவ அன்னையின் உதவியாகத்தானே இருக்க முடியும் என்று பெற்றோர் எதுவுமே சொல்ல முடியாமலும் மனம் கேளாமலும் கடவுளே கதி என்று விட்டுக்கொடுத்தல் நிலைக்கு வந்து விட்டனர்.
கோவா தா ஈரியா நோக்கி செல்வது ஏறக்குறைய முடியாததாயிருந்தது. அத்தனை மக்கள் கூட்டம். ஒரு இடம் பாக்கியில்லாமல் ரோடு முழுவதும் கும்பல். ஒரு திடமுள்ள மனிதன் ஜஸிந்தாவை தன் தோளில் தூக்கிக் வைத்துக்கொண்டு வழி உண்டாக்கியபடி நடந்தான். மார்ட்டோ, லூசியா, பிரான்சிஸ் மூவரும் அம்மனிதனின் பின்னால் நடந்து சென்றார்கள்.
மழை! ஒரே மழை! 13- தேதி காலையிலிருந்தே மழை பெய்துகொண்டிருந்தது. ஏறக்குறைய எல்லாரும் காலணிகளை கையில் தூக்கிக்கொண்டு மெதுவாக நடந்து கொண்டிருந்தனர். மழை இவ்வளவு அதிகம் பெய்தாலும், அதற்கு சற்றும் பின்வாங்காமல் கூட்டம் பெருகிக்கொண்டே இருந்தது. கடும் காற்றும் சில்லென்று வீசியது. காற்றாடி இயந்திரத்தின் முரட்டுத் துணிகள் எல்லாம் கிழிந்து தொங்கின. வானம் முனகிக் கொண்டேயிருந்தது. மின்னல் வெட்டியது. நடைபெறவிருக்கும் மாபெரும் அற்புதத்தைக் காண இம்மக்களை விசுவாசத்தில் தயாரித்து திடப்படுத்துவதைப்போல் இப்பெரும் சோதனை அவர்களுக்கு கொடுக்கப்பட்டது.
மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் குழந்தைகள் கோவா தா ஈரியா நிலப்பரப்பை அடைந்தார்கள். அங்கே கண் எட்டுமட்டும் ஒரே ஜனக்கூட்டம். எங்கும் விரிந்த குடைகள், நனைந்த மனிதர்கள்! தரை எங்கும் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது, சிலருக்கு கரண்டை, முழங்கால் வரை தண்ணீர். தொப்பல் தொப்பலாய் நனைந்த ஆடைகள்! குளிர்! எந்தவிதமான சவுரியமும் அங்கு இல்லை. இந்த கொட்டும் மழையில் அங்கு வந்திருந்த கூட்டம் குறைந்தது 70,000 (எழுபதாயிரம்) பேர். ஆனால் இன்னும் கூட்டம் பெருகிக்கொண்டுதான் இருந்தது.
நாஸ்திகரும், திருச்சபையின் எதிரிகளும் கூட ஆங்காங்கே கூட்டமாக நின்றனர். பத்திரிக்கை செய்தியாளர்கள் ஏராளம். போர்த்துக்கலின் ஏறக்குறைய எல்லாப் பத்திரிக்கை நிரூபர்களும் வந்திருந்தனர். போட்டோ படம் எடுக்க காமிராக்களுடன் ஏராளமானோர் நின்றார்கள். சில குருக்களும் காணப்பட்டனர்.
“ தேவதாயை கண்ட குழந்தைகளுக்கு வழிவிடுங்கள் “ என்று கூறியபடி ஜஸிந்தாவை தூக்கி வைத்திருந்த மனிதன் கூட்டத்தில் வழி கண்டுபிடித்து முன்னால் நடந்து கொண்டிருந்தான். அந்த அஸிஹேரா மரத்தடிக்கு குழந்தைகள் மூவரும் வந்து சேர்ந்தனர்.
அம்மரத்தைப் பூக்க்களாலும், வண்ணத் தாள்களாலும் மரிய கொரேய்ரா என்ற பெண் அலங்கரித்து வைத்திருந்தாள். ஒலிம்பியா இன்னொரு பாதை வழியாக அவர்களுக்கு முன்பே அம்மரத்தடியில் வந்து காத்திருந்தாள்.
எங்கும் மழையின் இரைச்சலும், அதற்கு மேல் எழும்பி வந்த ஜெபமாலைச் சத்தமும் கேட்டுக்கொண்டிருந்தன. எல்லார் மனங்களும், கண்களும் அஸின்ஹேரா மரத்தையும், அதனருகில் இருந்த மூன்று குழந்தைகளையும் நோக்கியிருந்தன.
நன்றி : பாத்திமா காட்சிகள் நூல், பாத்திமா காட்சிகள் மற்றும் சிறந்த கத்தோலிக்க புத்தகங்கள் வாங்க தொடர்புக்கு, மாதா அப்போஸ்தலர்கள் சபை, ரோசா மிஸ்திக்கா, 11/519, சகாயமப்பட்டனம், இரண்டாவது தெரு, V.V.D. பள்ளி எதிரில் தூத்துக்குடி-628 002, Ph. 0461-2361989, 9487609983, மேலும் சகோ. ஜேசுராஜ் : 9894398144.
சிந்தனை : கடவுள் ஒரு மிகப்பெரிய அற்புதம் செய்வதற்கு முன்னால் மக்களின் விசுவாசத்தை கொஞ்சம் அல்ல சற்று அதிகமாகவே சோதிக்கிறார். ஆனாலும் அம்மக்கள் விசுவாசத்தில் சற்றும் தளர்ந்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கிறார்கள். அதே போல் இந்த பாத்திமா சிறுமிகள் நம்மை ரொம்பவே ஈர்க்கிறார்கள். மாதாவைப் பார்த்த பின்பு எதற்கும், யாருக்கும் அச்சப்படுவதில்லை. உயிரே போனாலும் அதைப்பற்றிய கவலையும் இல்லை. அவர்களின் துணிச்சலைப் பார்க்கும்போது ஆயிரக்கணக்கான வேத சாட்சிகள் எந்த துணிச்சலில் தங்கள் இன்னுயிரை கொடுத்துள்ளார்கள் என்பது தெளிவாகிறது. அதுவும் மாதா போன்ற ஒரு தாயார் அருகில் இருந்தால் இயேசு சுவாமிக்காக உயிரைக் கொடுப்பது பயமற்ற மகிழ்ச்சி தரும் விசயமாக இருக்கும்...
இந்த நேரத்தில் இயேசுவுக்காய் மனமகிழ்சியோடு உயிரைவிட்ட தேவமாதாவால் நேசிக்கப்பட்ட புனித பெரிய யாகப்பரையும் (சந்தியாகப்பர்) நினைத்துப்பார்க்கிறேன்.... வேதசாட்சி மரணம்.. என்பதே நம்மை நேசிக்கும் கடவுளுக்கு நாம் தரும் பதில் அன்பு... வேதசாட்சிகள் பாக்கியசாலிகள்..
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !