திவ்ய நற்கருணை நாதர் பகுதி-18

‘ மண்டை ஓடு ‘ எனப்படும் இடத்திற்கு வந்தபின் அவரையும், அவரது வலப்பக்கத்தில் ஒருவனும், இடப்பக்கத்தில் மற்றவனுமாக அக்குற்றவாளிகளையும் சிலுவையில் அறைந்தனர்.

லூக்காஸ் 23 : 33

ஆண்டவரை சிலுவையில் அறைந்த நிகழ்வுகள் முடிந்துவிட்டதா? அது இன்னும் தொடர்கிறதா?

ஏற்கனவே புனித இராயப்பர் வேத சாட்சியத்திற்கு பயந்து சென்ற போது அவருக்கு எதிரே இயேசு சுவாமி சிலுவையோடு வந்தார்..

“ எங்கே போகிறீர் ஆண்டவரே? “ என்று இராயப்பர் கேட்க ஆண்டவர் சொன்னார்.. “ மீண்டும் சிலுவையில் அறையப்பட” என்று.. அப்போதுதான் அவருக்கு உண்மை புரிந்து தைரியத்தோடு சென்று வேத சாட்சி முடிபெற்றார் புனித இராயப்பர்.. அதுவும் அவரை இயேசுவைப்போல் அறையப்பட சென்றபோது அதை மறுத்து “ஆண்டவரைப் போல் அறையப்பட நான் தகுதியற்றவன். ஆகவே என்னைத் தலைகீழாக சிலுவையில் அறையுங்கள்” என்று கேட்டு வாங்கி வேத சாட்சி முடிபெற்றார்..

என்னை நேசிப்பவன்.. விசுவசிப்பவன் என்னிலும் மேலான காரியங்கள் செய்வான் என்ற ஆண்டவரின் சொல்லை உண்மையாக்கிய புனிதர் புனித இராயப்பர்..

பதினான்காம் நூற்றாண்டில் முத்திப்பேறு பெற்ற ஆலன் ரோச் திருப்பலி நிறைவேற்றிக்கொண்டிருந்தபோது நடுப்பூசையில் ஆண்டவர் அவரைப்பார்த்து “ என்னை ஏன் சிலுவையில் அறைகின்றாய்? “ என்று கேட்க அதிர்ந்து போய்விட்டார் ரோச்.  “என்ன ஆண்டவரே? “ என்று கேட்டதற்கு “ என் தாயினுடைய ஜெபமாலையைப் பற்றி உனக்கு போதிக்க போதிய அறிவு இருந்தும் ஏன் அதைச் செய்யாமல் இருக்கிறாய் ?” என்று கேட்டபின்பு புனிதர் ஜெபமாலையைப் பற்றி போதிக்க ஒரு வித தொய்வில் இருந்த ஜெபமாலை பக்தி மீண்டும் வலுப்பெற்றது..

இவர்களிடம் மட்டுமல்ல எத்தனையோ புனிதர்கள்-புனிதைகளிடம் ஆண்டவர் கேட்டிருக்கிறார்.. இதே கேள்வியை.. “ ஏன் என்னை சிலுவையில் அறைகிறாய் ?”

இப்போது நம் ஒவ்வொருவரிடமும் திவ்ய நற்கருணை ஆண்டரை வாங்க செல்லும் போது கேட்கிறார்..

“ என்னை ஏன் சிலுவையில் அறைகிறாய் ? “ என்று..

1. நற்கருணையில் நான் இருப்பதாக நீ விசுவசிக்கவில்லையா?

2. திவ்ய நற்கருணை என்பது என் உடலும், இரத்தமும் என்று நீ விசுவசிக்கவில்லையா?

3. சாதாரண வெண் சிறு அப்பம் நடுப்பூசைக்கு பின்பு என்னுடைய சதையாகவும், இரத்தமாகவும் மாறுகிறது என்பதை நீ விசுவசிக்கவில்லையா?

4. திவ்ய நற்கருணை என்பது ‘உன் கடவுள்’ என்பதை விசுவசிக்கவில்லையா?

மேலும் சில கேள்விகள் கேட்கிறார்..

5. என்னிடம் நோய்களை சுகமாக்க கோரிக்கை வைக்கும் நீ, நானே நோய்களைப் பரப்புவேன் என்று எப்படி எண்ணுகிறாய்..

6. உன் கடவுள் நோயை சுகமாக்குபவரா? பரப்புபவரா?

7. சாணிடைசரையும், முகக் கவசத்தையும் நம்பும் நீ, என்னை ஏன் நம்ப மறுக்கிறாய்?

8. எப்போதெல்லாம் நீ கத்தோலிக்க விசுவாசத்தில் தடுமாறுகிறாயோ அப்போவெல்லாம் நீ என்னை சிலுவையில் அறைகிறாய் என்று உனக்கு எப்படி நியாபகம் வராமல் போகிறது?

ஆம். கத்தோலிக்க விசுவாசத்தின் மையமான திவ்ய நற்கருணை இப்போது அசைத்துப்பார்க்கப் படுகிறது.. அதனால் கடவுளின் பொறுமை ரொம்பவே சோதிக்கப்படுகிறது..

திவ்ய நற்கருணையின் விசுவாசம் ஒரு கடுகளவு கூட குறைந்தாலோ, அல்லது அசைக்கப்பட்டாலோ பல… அல்ல பலப்பல எதிர் விளைவுகள் ஏற்படும்.. ஏற்கனவே ஏற்பட்டும் விட்டது..

நாம் இன்னும் அசட்டையாக இருந்தால்.. விளைவுகள் இன்னும் அதிகமாகும்.. மோசமாகும்..

ஆண்டவர் ஒவ்வொரு திருப்பலியின்போது திவ்ய நற்கருணை வாங்கச் செல்லும்போது நம்மைப் பார்த்து கேட்டுக் கொண்டே இருக்கிறார்..

“ ஏன் என்னை சிலுவையில் அறைகிறாய்? “ என்று..

அதற்கு நம் பதில் என்ன?

“ கல்வாரி மலையின் சிகரமதில் கனிவுடன் தினம் எனை நிலை நிறுத்தும்..

 நற்கருணை விசுவாசமதில் நம்பிக்கையூட்டி வளர்த்திடுமே..

இளமையின் பொழிவாம் திகழ்திருச்சபையும்.. யாவரும் வாழ துணை செய்வீர்..

நம் நேசப் பிதா வாழ்த்தெப் பெறுவாராக !

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !