“ அஞ்சாதீர், இதோ ! மக்களுக்கெல்லாம் மாபெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று தாவீதின் ஊரிலே உங்களுக்காக மீட்பர் பிறந்துள்ளார். அவரே ஆண்டவராகிய மெசியா “
லூக்காஸ் 2 : 11
அருமையான பாடல் வரிகளோடு ஆரம்பிப்போம்..
“காரிருள் வேளையில் கடுங்குளிர் நேரத்தில்
ஏழைக் கோலமதாய்
பாரினில் வந்தது மன்னவனே உம்
மாதயவே தயவு”
காரிருளில் கடுங்குளிரில் ஒளியாக உதித்த நம் மன்னவரான பாலன் இயேசு குழந்தையாக முதல் முறையாக இந்த உலகத்தைப் பார்க்கிறார்..
அவர் பிறந்திருக்கும் மாட மாளிகையான அந்த மாட்டுத்தொழுவத்தைச் சுற்றிப்பார்க்கிறார்..
மேலே பார்க்கிறார்..
“ ஆகா ! நட்சத்திரங்கள் தெரிகின்றன.. நாம் என்ன மோட்சத்திலா இருக்கிறோம்.. நாம்தான் மோட்சத்திலிருந்து பூமிக்கு வந்துவிட்டோமே !
இடை இடையே ஓலைகளும் தெரிகிறதே.. ஓ ! கூரையில் ஓட்டை.. அதன் வழியாகத்தான் நான் ஆகாயத்தைப் பார்த்திருக்கிறோம்..
மனிதர்களின் விசுவாச ஓட்டையை விட இது பெரிதாக தெரியவில்லை..
என்ன ஊசி குத்துவதுபோல் நம் உடலைத் துளைக்கிறதே.. மிகவும் குளிராக இருக்கிறது.. ஓ ! இதுதான் குளிர்ந்த காற்றோ..
இந்த ஊசி குத்துதல்களை மனிதர்கள் சொல்லும் பயணற்ற சொற்களாலும், புறணிகளாலும் என்னைக் குத்துகிறார்களே ! அதற்கு பரிகாரமாக ஒப்புக்கொடுப்போம்..
அருகில் என்ன ஜீவராசிகள் தெறிகிறது..
ஓ ! இவைகள் மாடுகள்.. தலையை அசைப்பதும், வாலை அசைப்பதும் பார்க்க அழகாக இருக்கிறதே..
ஓ ! இவர்கள் மத்தியில்தான் பிறந்திருக்கிறோமோ !
நல்ல வேளையாக பாவிகளான மனிதர்கள் மத்தியில் பிறக்காமல் வாயில்லா ஜீவராசிகளின் மத்தியில் பிறந்திருக்கிறேன்..
இது என்ன வாசனை.. ஓ ! இது இந்த தொழுவத்தில் இருந்துதான் வருகிறது..
மாட்டுகளின் கழிவின் வாசணையாக இது இருக்க வேண்டும்..
மனிதர்களின் பாவத்தால் நான் அனுபவிக்கும் நாற்றத்தைவிட இந்த வாசனை தேவலை போலிக்கிறது..
முதுகை ஏதோ அழுத்துவதுபோல் இருக்கிறது. ஓ ! அது மாட்டுத் தீவனத்தொட்டி..
அது பாவத்தால்.. பாவிகளால் உண்டாக்கப்படும் அழுத்தைவிட அது சுகமாகவே இருக்கிறது..
உலகத்தையும், தான் படைத்த மனித இனத்தையும் ஒருமுறை நினைத்துப்பார்க்கிறார்..
உலகமெங்கும் பாவ இருள் சூழ்ந்திருக்கிறது..
தன் சாயலாகவும், பாவனையாகவும் தன்னால் படைக்கப்பட்ட மனிதர்கள் அனைவரும் தங்கள் சாயலை இழந்து சுய நலவாதிகளாக, தற்பெருமைப் பிரியர்களாக, சுக போதை உள்ளவர்களாக, அதிகார ஆணவக்காரர்களாக, பாவத்தில் மகிழ்ச்சிகொள்பவர்களாக அலங்கோலமாக.. மனிதர்களாக இல்லாமல் டிராகுலாக்கள் போல தெரிகிறார்கள்.. அது மனக்கண் வந்து நின்றதும்..
நான் படைத்த மனித இனம் ! இப்போது மனித இனமாக இல்லை..
என்று அந்த ஆன்மாக்களைக் கண்டு பயந்து நடுங்கி அச்சத்தோடு..
எங்கே என் சாயல்? எங்கே என் பாவனை ? என்று ஏக்கத்தோடு தன் அருகே பார்க்கிறார்..
என் அருகே இருக்கிறது என் சாயல்.. என் சாயல் மட்டுமல்ல எங்கள் சாயல்.. எங்கள் பாவனை..
எப்படிப் படைத்தோமோ அப்படியே இருக்கிறது.. அப்படியேதான் நித்தியத்திற்கும் அது இருக்கும்..
அது மங்காத ஒளி ஜீவ ஜோதி.. அருள் மட்டுமே நிறைந்த தீப ஒளி !
அதில் இருள் என்பதே இல்லை.. அன்றே என் அப்பா சொல்லிவிட்டார்..
“ உனக்கும் பெண்ணுக்கும் நித்திய பகை “ என்று..
ஓ ! என் அம்மா! என் தாயே ! என் அன்பே ! எங்களுக்காகவும், இந்த உலகுக்காகவும் தன்னை அர்ப்பணித்தவளே ! தன்னை ஈந்தவளே ஓ ! என் நேச தாயே ! அம்மா ! நல்ல வேளையாக நீங்கள் என் அருகில் இருக்கிறீர்கள்..
என்று ஒரே ஒரு பார்வைதான் பார்க்கிறார்..
“ என் மகனைக் இந்த கடுங்குளிர் காற்று குத்துகிறதே ! இந்த தீவத்தொட்டி அழுத்துகிறதே. அவனை ஏதும் செய்துவிடுமோ ! என்று எண்ணி மனுக்குலத்தின் பாவமும் தன் குழந்தையை வதைக்கிறது என்பதை அப்போது அறியாதவராய்..
அவரைத் தீவனத்தொட்டியில் இருந்து வாரி எடுத்து தன் மடியில் கிடத்தி மார்போடு அணைக்கிறார்..
“ அம்மா ! நான் இப்போது பாதுகாப்பாக உணர்கிறேன் ! இந்த பாவமில்லாத பரிசுத்த இடம் எனக்கு இப்போது மிகவும் ஆறுதலாக இருக்கிறது..
நான் பிறக்கும்போது எனக்கு பயங்கரமாக தெரிந்த சிலுவை இப்போது சிறகுகளாக மாறிவிட்டது.
எப்படி இந்த உலகத்தில் 33 ஆண்டுகள் ஜீவிக்கப்போகிறேன்.. பாவம் நிறைந்த உலகத்தில் எப்படி வாழப்போகிறேன்..? என் தந்தை எனக்குக் கொடுத்த பணியை எப்படி நிறைவேற்றப் போகிறேன்..
என்று நினைத்த எனக்கு உங்களைப் பார்த்தவுடன் அத்தனையும் எனக்கு மறந்துவிட்டது.. பறந்து விட்டது.. எல்லாமே மிக எளிதாகத் தெரிகிறது..
நீங்கள் என் அருகில் இருந்தால் ஒரு சிலுவை அல்ல நூறு சிலுவை சுமப்பேன்..
ஒரு முறை அல்ல 100 முறை பிறப்பேன்..
ஒரு முறை அல்ல 100 முறை இறப்பேன்..
இனி எனக்கு கவலை இல்லை. பயம் இல்லை. உங்களோடு 30 ஆண்டுகள் மோட்ச வாழ்க்கை வாழப்போகிறேன்.. அதன் பின்பு 3 மூன்று ஆண்டுகள் உங்கள் துணையோடு பாவிகளான மனிதர்கள் மத்தியில் வாழப்போகிறேன்.. பயணம் செய்யப் போகிறேன்....
அந்த பாடுகளின் காலம் வரை..
உன் அன்பை சுவைப்பேன்.. உன் அன்பில் வாழ்வேன்.. உங்கள் அன்பில் மகிழ்வேன்..
இப்போது மாதாவின் மடியில் படுத்தாவாறு மீண்டும் கண்களை பாலன் சேசு பார்க்கிறார்.
சற்று அப்பால் புனித சூசை மாமுனி..
சூசை மாமுனியின் தரிசனம் கடவுளுக்குச் சித்தமானால் அடுத்த பகுதிக்கு அடுத்த பகுதியில்..
இந்தப் பகுதியை அதே பாடலோடு நிறைவு செய்வோம்..
“ விண்ணுலகில் சிம்மாசனத்தில்
தூதர்கள் பாடிடவே
வீற்றிருக்காமல் மானிடனானது
மாதயவே தயவு “
“காரிருள் வேளையில் கடுங்குளிர் நேரத்தில்
ஏழைக் கோலமதாய்
பாரினில் வந்தது மன்னவனே உம்
மாதயவே தயவு”
நம் நேசப்பிதா வாழ்த்தப் பெறுவாராக ! பரிசுத்த ஆவியானவர் போற்றி !
சுதனாகவும், வார்த்தையாகவும் இருந்து மனுவுருவான இயேசுவுக்கே புகழ் !
மனுவுருவாக, கடவுளுக்கு தன் சரீரத்தைக் கொடுத்த மா மரியாயே வாழ்க !