மனுமகன் சேசு பாகம் - 08

“ குழந்தை ஒன்றைத் துணிகளில் பொதிந்து முன்னிட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள். இதுவே உங்களுக்கு அடையாளம் “

லூக்காஸ் 2 : 12

ஏழையாக பிறந்த ஒரே அரசர்…

மாட்டுத் தொழுவத்தில் பிறந்த ஒரே அரசர்..

வறுமையில் வாடின ஒரே அரசர்..

பணியாளர்கள் இல்லாத ஒரே அரசர்..

பணியாளனாக வாழ்ந்த ஒரே அரசர்..

தன்னுடைய வேலைகளை தானே செய்த ஒரே அரசர்..

எல்லாம் இருந்தும் எதுவுமே இல்லாமல் வாழ்ந்த ஒரே அரசர்..

தீவனத்தொட்டியையும், சிலுவையையும் சிம்மாசனமாக மதித்த ஒரே அரசர்..

மக்களுக்காக உயிரைக் கொடுத்த ஒரே அரசர்..

அந்த அரசர் பிறந்த போது உலகம் எப்படி இருந்தது..? 

குறிப்பாக அந்த இரவு எப்படி இருந்தது?

மாட மாளிகைகளும், கூட கோபுரங்களும், வசதி படைத்த வீடுகளும், ஏன் நடுத்தர வர்க்கத்தின் வீடுகளும் கூட ஒளியால் ஒளிர்ந்திருந்த நேரம்.

உலக மக்கள் உலகபோக்கிலும், உலக மாயையிலும், கேளிக்கைகளிலும், உலகக் கவலையிலும், பாவத்திலும் வாழ்ந்ததால் அங்கே ஒளியிருந்தாலும். அதன் மேலே ஒரு பாவ இருள் மூடியிருந்தது..

பெருவாரியான மக்களின் உள்ளம் பாவத்தில் மகிழ்ச்சியுற்றிருந்தாலும் அவர்கள் அகத்தில் ஒரு இருள், ஒரு வெறுமை குடிகொண்டிருந்த நேரம்..

இப்போது கூட உலகம் பாவ இருள் சூழ்ந்துதான் இருக்கிறது..

அன்று யாரும் எதைப்பற்றியும் கவலைப்படவில்லை..

இன்று கூட யாரும் எதைப்பற்றியும் இன்னும் கவலைப்பட்டதாக தெரியவில்லை..

நாம் என்ன நடந்தாலும், எது வந்தது என்றாலும் நாம் நம் போக்கில்தான் வாழ்கிறோம்..

லாக்டவுன் வந்தால் கடவுளைத் தேடுவது.. அதை எடுத்துவிட்டால் மறுபடியும் உலகப்போக்கில் வாழ்வது..

ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது.. ? இதற்கு என்ன காரணம்? கடவுள் நமக்கு என்ன சொல்ல வருகிறார்? நம்மிடம் என்ன எதிர்ப்பார்க்கிறார்? நாம் என்ன செய்ய வேண்டும்?

என்று எப்போதாவது யோசிக்கிறோமா?

போன ஆண்டு வந்தது? இந்த ஆண்டு வந்தது? இன்னும் ஏதோ வருகிறது என்கிறார்கள்.. எது வந்தாலும் நம்மிடம் மனமாற்றம் வருகிறதா? கடவுளைத் தேடி ஓட வேண்டும் என்று  நினைக்கிறோமா? எப்போதும் அவர் நமக்குத் தேவை.. அவரோடு வாழவேண்டும்; அவர் பாதுகாப்பில், பராமரிப்பில் வாழ வேண்டும்; அவருக்கு எந்த சூழ்நிலையிலும் பிரமாணிக்கமாய் இருக்க வேண்டும் என்று நினைக்கிறோமா? முயற்சி எடுக்கிறோமா?

அன்றும் அப்படித்தான் இருந்தது.. உலகம் உலகபோக்கில் பாவத்தில் இன்புற்று, களிப்புற்று இருந்ததால் அன்று உலகம் இன்றுபோல் புறத்திலும் அகத்திலும் இருளாகவே இருந்தது..

ஆனால் அந்த இருளைக் கிழித்துக்கொண்டு உலகத்தின் பாவ இருளைக் கிழித்துக்கொண்டு… அலகையின் ஆதிக்கத்தை ஒழித்துக்கட்ட ஒளியாக உதயமாகிறார் ஒளியின் தேவன் அரசருக்கெல்லாம் அரசரான அரசர் நம் மீட்பர் இயேசு சுவாமி..

உலக இருள் மட்டும் சூழ்ந்திருந்த அந்த மாட்டுக் கொட்டகைக்குள் ரொம்ப சாதாரனமாக.. ரொம்ப எளிமையாக வறுமையில் ஒரு தரித்திரராக ஆனால் ஓளியாக பிறக்கிறார் உத்தமரான நம் ஆண்டவர்..

கிறிஸ்மஸ், கிறிஸ்து பிறப்பு திருவிழா நமக்கு ஒரு புற அடையாளமாக, புற கொண்டாட்டமாக, கேளிக்கையாக மட்டும் இருந்தால் இதில் ஒரு பயனும் இல்லை..

இதை இன்னும் நாட்டுப்புற வழக்கில் சொல்வதானால் நாம் எவ்வளவு சிறப்பாக கொண்டாடினாலும் “ அது ஒரு பத்து பைசாவுக்கு கூட புரயோஜனமாக இருக்கப்போவது இல்லை..

கடவுள் அதை மதிக்கப்போவது இல்லை..

சிந்திக்க வேண்டும்.. கிறிஸ்து பிறப்பு திருநாள் நமக்கு என்ன சொல்கிறது..?

நம்மிடம் இருக்கும் அக இருளைக் அது கிழிக்கிறதா?

நம் இருதயத்தில் அவரைப் பிறக்க அனுமதிக்கிறோமா?

நம்மில் அவரை செயல்பட விடுகிறோமா?

என்ற சிந்தனைகளோடு கடவுளுக்குச் சித்தமானால் அடுத்த பகுதியில்..

நம் நேசப்பிதா வாழ்த்தப் பெறுவாராக ! பரிசுத்த ஆவியானவர் போற்றி !

சுதனாகவும், வார்த்தையாகவும் இருந்து மனுவுருவான இயேசுவுக்கே புகழ் !

மனுவுருவாக, கடவுளுக்கு தன் சரீரத்தைக் கொடுத்த மா மரியாயே வாழ்க !