மனுமகன் சேசு பாகம் - 10

“ தூரத்திலிருந்து அப்பத்தைக் கொண்டுவருகிற கப்பல் போலானாள் “

பழமொழி ஆகமம் 31 : 14

“ நானே வானின்று இறங்கி வந்த உயிருள்ள உணவு “

அருளப்பர் 6 : 51

அப்பத்தில் வாசம் செய்யும் இயேசுவே ! திவ்ய நற்கருணை ஆண்டவரே ! எங்கள் நம்பிக்கை எல்லாம் உமது பேரில் வைக்கிறோம்.

உங்களை முழு உள்ளத்தோடும், முழு ஆன்மாவோடும், முழு வலிமையோடும், முழு விசுவாசத்தோடும் நேசிக்கிறோம்..

உங்களை விசுவசியாதவர்களுக்காகவும், ஆராதிக்காதவர்களுக்காகவும், நம்பாதவர்களுக்காகவும், நேசிக்காதவர்களுக்காகவும் உங்களிடம் மன்னிப்பைக் கேட்கிறேன்..

திவ்ய நற்கருணை ஆண்டவரை கதிர்பாத்திரத்தில் ஸ்தாபம் செய்து உருகி உருகி வேண்டி குணமாக்கும் வழிபாடுகள் நடத்தியவர்கள் எங்கே..? அன்னிய (நம் வீட்டிலும்) பாஷை பேசியவர்கள் எங்கே ?

(இன்னும் ஓரு சில இடங்களில் நடக்கிறது.. ஆனால் பெரும்பான்மையாக அந்த வழிபாடுகள் குறைந்தே போய்விட்டது..)

கதிர்பாத்திரத்தில் இருந்து நம்மைக் குணமாக்கிய கடவுளால் நம் நாவில் வந்து உடலுக்குள் சென்று நம்மை குணமாக்க முடியாதா?

தூரத்தில் நின்று குணமாக்கிய கடவுளால் மிக அருகில், நமக்கு உள்ளேயே வந்து நம்மை குணமாக்க முடியாதா?

குணமாக்கிய கடவுளை குணமாக்குகிற கடவுளை ஏதோ நோயைப் பரப்புகிறவரைப்போல பார்ப்பது நியாயமா?

முகக்கவசமும் சானிடைசரும் போட்டுதான் உன் கடவுளைத் தொடுவாயா?

முகக்கவசமும் சானிடைசரும் உன் கடவுளிடமிருந்து உன்னைக் காப்பாற்றும்.. ஆனால் கடவுளால் உன்னைக் காப்பாற்ற முடியாது.. அப்படித்தானே..

நாளைக்கே நீ வியாதியில் விழுந்தால் யாரிடம் சென்று உன்னைக் குணமாக்க வேண்டுவாய்?

எங்கே போகிறது கத்தோலிக்க விசுவாசம்..?

பயம்.. உயிர் பயம்..

யாரைப் பார்த்து பயம் ? யார் முன்னால் பயம் ?

எதைப்பார்த்து பயம் ? எதற்காக பயம்?

அன்று கூட்டத்தின் மத்தியில் உரக்க கத்திப் பேசிய நாவுகள் எங்கே ?

அந்நிய மொழி பேசிய ( உளரிய – சிலர் )  நாவுகள் எங்கே?

கடவுளுக்கு முன்னால் கடவுளுக்காக நாவுகள் மவுனமாகலாம்..

ஆனால் கடவுளையே ஒதுக்கித் தள்ளுவதற்காக ( காட்டிக் கொடுக்கப்பதற்காக) மவுனமாகக் கூடாது..

நாம் எதற்காக இந்த உலகிற்கு வந்தோம்? யார் துணையில் வாழ்கிறோம்?

நம் வாழ்க்கை முடிந்து கடைசியாக யாரிடம் செல்ல இருக்கிறோம்..

இங்கேயே 100, 500 அல்லது 1000 ஆண்டுகள் இங்கேயே வாழ்ந்துவிடப் போகிறோமா?

நமக்கு என்ன துன்பம், சோதனை, பிரச்சனை, தீராத நோய் வந்தால் யாரிடம் செல்வோம்? யாரை நாடுவோம்..?

கத்தோலிக்க கிறிஸ்தவத்தின் அடித்தளம், தூண், உயிர் மூச்சு, பேச்ச, சுவாசம் எல்லாம் திவ்ய நற்கருணை ஆண்டவரே ! அவரை ஒதுக்கிவிட்டு, புறம் தள்ளிவிட்டு, காட்டிக்கொடுத்துவிட்டு  நான் கிறிஸ்தவன் அதுவும் கத்தோலிக்க கிறிஸ்தவன் என்று  சொன்னால் நீயோ? நீங்களோ ? நாமோ  இருப்பது கத்தோலிக்க கிறிஸ்தவத்தில் இல்லை.. 

இதுவரை எத்தனை திவ்ய நற்கருணைப் புதுமை நடந்துள்ளது.. நடந்துகொண்டிருக்கிறது..?

தந்தை பியோ உட்பட எத்தனை பேர் ( 300-கும்) அதிகமான புனிதர்கள் ஐந்து காய வரங்களைப் பெற்றிருந்தார்கள்?

எத்தனைப் புனிதர்களின் உடல்கள் (இதுவும் 300-க்கும் அதிகம்) இன்னும் அழியாமல் இருக்கிறது?

எத்தனை புனிதர்கள் திவ்ய நற்கருணை ஆண்டவரை மட்டுமே உணவாக உட்கொண்டு எத்தனை ஆண்டுகள் ( 3, 5, 20, 40) உயிரோடு வாழ்ந்திருக்கிறார்கள்?

எத்தனைப் புனிதர்கள்.. பொது நிலையினர் ஆண்டவர் இயேசுவுக்கு சாட்சியாய் வாழ்ந்தார்கள்.. இரத்தம் சிந்தி மரித்தார்கள்..

நாம் அதிகமாகத் தேடிப்போகும் புனித அந்தோணியார் செய்த திவ்ய நற்கருணைப் புதுமை எல்லாம் மறந்துவிட்டதா?

இப்போது நமக்கு நம் உயிர்தான் முக்கியம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்..

திவ்ய நற்கருணை ஆண்டவர் இறக்கப்பட்டால், அவசங்கைப் படுத்தப்பட்டால் இன்னும் ஒரு வைரஸ் அல்ல 100 வைரஸ்கள் வரும் அல்லது வந்ததாக சொல்லப்படும்..

சாகும் வரை பயத்தோடுதான் வாழப்போகிறோம்..

குறைந்த பட்சம் இருக்கும் காலத்திலே விசுவாசத்தோடு பயமில்லாமல் வாழலாம் அல்லவா?

சிந்திப்போம்..

“ அன்பின் தேவ நற்கருணையிலே.. அழியாப் புகழோடு வாழ்பவரே ! அன்புப்பாதையின் வழி நடந்தே அடியோன் வாழ்ந்திட துணை செய்வீர் “

நம் நேசப்பிதா வாழ்த்தப் பெறுவாராக ! பரிசுத்த ஆவியானவர் போற்றி !

சுதனாகவும், வார்த்தையாகவும் இருந்து மனுவுருவான இயேசுவுக்கே புகழ் !

மனுவுருவாக, கடவுளுக்கு தன் சரீரத்தைக் கொடுத்த மா மரியாயே வாழ்க !