திருப்பலி ஒழுங்குமுறைகள்.

திருப்பலி நூல் மாற்றத்தை தொடர்ந்து திருப்பலியில் கடைபிடிக்க வேண்டிய சில ஒழுங்குமுறைகளும் தவிர்க்க வேண்டிய செயல்களும் என திரு அவையின் ஒப்புதலுடன் இந்திய ஆயர் பேரவையும், தமிழக ஆயர் பேரவையும் நமக்கு கொடுத்துள்ளார்கள்.

இந்த ஒழுங்கு முறைகளை கடை பிடிக்கவில்லையெனில் அத்திருப்பலி செல்லத்தக்கது ஆகாது. ஆதாவது பலனளிக்காத திருப்பலியாகும்.

1. பலிபீடம் - கல்வாரி பலியை நம் கண் முன் கொண்டுவந்து திருப்பணியாளருடன் இணைந்து நாமும் இயேசுவின் உன்னத பரிசுத்த இரத்தப்பலியை மீண்டும் மீண்டும் இப்பலிபீடத்தில் இருந்து சம்மனசுகள், இறைவனின் தூதர்கள், அனைத்து புனிதர்கள் (மாதா உள்பட) புடைசூழ தந்தையாம் கடவுளுக்கு ஒப்புக்கொடுக்கிறோம்.

எனவே...

 🎷 பலிபீடத்தில் பூக்களோ வேறு எந்த பொருளும் இடம் பெறக்கூடாது.

🎷 இயற்கையான பூக்களை தான் பீடத்துக்கு பக்கவாட்டில் வைக்க வேண்டும். அதுவும் அளவோடு தான் இருக்கவேண்டும்.

🎷 சேலைகளால் அலங்காரப்படுத்துதல் தவிர்க்க வேண்டும். பீடத்துக்கு முன்பு எந்தவோரு சுருபங்களையும் வைக்க கூடாது.

🎷 பீட அலங்காரம் பீடத்தின் மாண்பை குறைப்பதாக இருக்க கூடாது.

🎷 திருப்பலியின் தொடக்கச் சடங்குகளும், இறுதிச் சடங்குகளும் திருப்பணியாளரின் இருக்கையில் இருந்தோ அல்லது அதற்கு என்று ஏற்படுத்தப்பட்டுள்ள தனி மேடையில் இருந்து தான் நடத்தப்படவேண்டும்.

🎷 முதல் வாசகம் முதல் விசுவாசிகள் மான்றாட்டுகள் வரை (நற்செய்தி வாசகம், மறையுறை உள்பட) வாசக மேடையில் இருந்தே நடத்தப்பட வேண்டும்.

🎷 காணிக்கை முதல் திருவிருந்து இறுதி மன்றாட்டு வரை பலிபீடத்தில் ஒப்புக்கொடுக்கப்பட வேண்டும்.

🎷 பலிபீட முற்றத்தில் (Alter) திருப்பலி ஒப்புக்கொடுக்கும் திருப்பணியாளர்கள் பீடச்சிறார்கள், திருத்தொண்டர், உபதேசியார் தவிர மற்றவர்களின் இருப்பை தவிர்த்தல் நலம். சிறு குழந்தைகள் உட்பட மற்றவர்கள் பலிபீடத்துக்கு முன்பு தான் இருக்க வேண்டும். ஒளி - ஒலி அமைப்புகள் Alter ல் இருந்தால் வேறு இடத்துக்கு மாற்றப்படவேண்டும். அந்த காலத்தில் இங்கு தடுப்புகள் இருக்கும். பாடுபட்ட சிலுவை மற்றும் நற்கருணை பேழை மட்டுமே (Projector screen உட்பட  இருக்க கூடாது) இருக்க வேண்டும்.

🎷 இறைமக்களின் கவனம் பலிபீடத்தின் மீதும் பலி ஒப்புக் கொடுக்கும் திருப்பணியாளர் மீதும் மட்டுமே இருக்கவேண்டும்.

🎷 பலி ஒப்புக்கொடுக்கும் திருப்பணியாளர் முழு மனதுடன் இறைமகன் இயேசுவுடன் ஒன்றித்து இறைமக்களுடன் இணைந்து இயேசுவின் இரத்தப் பலியை ஒப்புக் கொடுக்க வேண்டும். திருப்பாடல் குழுவினரையோ சிறு குழந்தைகள் / இறைமக்களையோ ஒழுங்குபடுத்தவோ / வழி நடத்தவோ முயற்சித்தல் கூடாது. திருபாடல் குழுவினரை வழி நடத்த விரும்பினால் அக்குழுவினருடன் இணைந்து அதற்குறிய இடத்தில் இருந்து முயற்சிக்கலாம். அதைவிடுத்து இறைமக்களுக்கு இடறலாக இருக்ககூடாது.

🎷 திருப்பலி நூலில் உள்ள வார்த்தைகளை மட்டுமே திருப்பணியாளர் மற்றும் இறைமக்கள் பயன்படுத்த வேண்டும். தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப கூட்டவோ குறைக்கவோ கூடாது.

🎷 திருப்பலி எந்தவோரு காரணத்துக்கும் இடையில் நிறுத்தப்படக்கூடாது. தொடக்கச் சடங்குகள் தொடங்கி பாவமன்னிப்பு மன்றாட்டு, இறைவாக்கு பகுதி, காணிக்கை மன்றாட்டு, நற்கருணை மன்றாட்டு,  திருவிருந்து பகுதி, நிறைவு பகுதி என தொடர்ந்து எந்த ஒரு தடங்கலும் இன்றி திருப்பலி அனைவரும் இணைந்து ஒப்புக் கொடுக்க வேண்டும்.

🎷 திருப்பலியின் நடுவில் ஒப்புரவு அருட்சாதனம் வழங்கப்படுதல் கூடாது.

🎷 திருப்பலியின் நடுவில் எந்த ஒரு ஒலி-ஒளி காட்சிகள் இடம்பெறுவது கூடவே கூடாது.

🎷 திருப்பணியாளர்கள் தங்களுக்குள்ளேயோ அல்லது மற்றவர்களுடனோ பலிபீடத்தில் ஆலோசித்தல் / பேசிக் கொண்டு இருப்பது கூடவே கூடாது. தகுந்த முன் தாயரிப்பை திருப்பலிக்கு முன்பே செய்வது நலம்.

2. வருகைப் பவனி: 

🎷 ஆலய முற்றத்தில் இருந்தோ அல்லது வேறு இடத்திலிருந்தோ இறைமக்களும் திருப்பணியாளரும் பவணியாக வரலாம்.

🎷 பவணியின் இறுதியில் இறைமக்கள், திருப்பணியாளர் (திருவிவிலியம் உட்பட) அனைவருக்கும் சேர்த்து அஞ்சலி ஒரே முறை தான் எடுக்கப்பட வேண்டும். அஞ்சலி எடுக்கும் பெண்கள் கலச்சார உடையில் தலைக்கு முக்காடிட்டு இருப்பது ஆவசியம்.

🎷 திருவிவிலிய பவணியோ அல்லது திருவிவிலியத்திற்கு அஞ்சலியோ தனியாக செய்தல் கூடாது.


3. காணிக்கைப் பவனி:

🎷 காணிக்கையாக கொடுக்கப்படும் பொருள்கள் திருப்பலியில், ஆலயத்தில் பயன்படுத்தக் கூடியதாகவோ அல்லது எழைகளுக்கு உதவக்கூடியதாகவோ இருக்க வேண்டும்.

🎷 அடையாளக் காணிக்கை கூடாது. அதுவும் விசுவாசிகள் மன்றாட்டுடன் சேர்த்து அடையாள காணிக்கை கொடுப்பதும் தவறு.

🎷 காணிக்கை எழைகளுக்கு உதவக்கூடியப் பொருள்களாக இருக்கும் பட்சத்தில் எழைகளுகளுக்கு மட்டும் தான் கொடுக்கப்பட வேண்டும். வேறு காரியங்களுக்கு பயன்படுத்துவது கூடாது. அல்லது வீண் செய்யப்படக்கூடாது.

4. இறைவாக்கு பகுதி: 

🎷 முதல் வாசகம் முதல் விசுவாசிகள் மன்றாட்டு முடிய வாசக மேடையில் இருந்து மட்டுமே நடக்கவேண்டும்.

🎷 அனைத்து வாசகங்களும் வாசக நூலில் இருந்து மட்டுமே வாசிக்கப்படவேண்டும். முதல் வாசகத்திற்கு பின்பு வரக்கூடிய பதிலுரைப்பாடலும் (தியானப் பாடல் கண்டிப்பாக கூடாது) இரண்டாம் வாசகத்திற்கு பின்பு வரக்கூடிய அல்லேலூயா பாடலும் வாசக நூலில் உள்ளபடியே பாடவோ / வாசிக்கவோ வேண்டும்.

5. திரு இசை:

🎷 அனைவரும் ஒருமித்து ஒன்றிப்புடன் திருப்பலி ஒப்புக் கொடுக்க திரு இசை பாடல் உதவியாக இருக்க வேண்டும். தேவையற்ற அதிகப்படியான சத்தம் தவிர்க்கப்பட வேண்டும்.

🎷 ஆயர்ப்பேரவையினால் அனுமதிக்கப்பட்ட பாடல்களை மட்டுமே பாடவேண்டும்.

🎷 பதிவு செய்யப்பட்ட பாடல்களை (Recorded songs) இசைதட்டுகள் (CDs) / விரலி (PEN DRIVE) மூலம் இசைக்கக் கூடாது.

🎷 புதிய பாடல் / தெரியாத பாடலாக இருப்பின் நன்கு பயிற்சி பெற்ற பின்பே பாடவேண்டும். இறைமக்கள் அனைவருக்கும் பயிற்சி கொடுப்பது வரவேற்கத்தக்கது.

🎷 பாடல் குழுவில் உள்ளவர்களோ அல்லது திருப்பணியாளரோ தங்களது புலமையை காட்டும் விதமாக மிக சத்தமாக தனியாக குழுவினருடன் / இசையுடன் ஒட்டாமல் பாடுதல் கூடாது.

🎷 திருப்பணியாளர் பலிபீடத்தில் இருந்தவாறு பாடல் குழுவினரை வழிநடத்தும் விதமாக பாடுதல் / சைகை செய்தல் கூடாது.

6. காணிக்கை மற்றும் நற்கருணை மன்றாட்டு:

🎷 திருப்பலி நூலில் உள்ளபடியே வாசிக்கப்படவோ / பாடவோ வேண்டும். ஒரு வார்த்தை கூட கூட்டவோ / குறைக்கவோ கூடாது.

🎷 திருப்பலி கருத்துகள் கூட வாசிக்கக் கூடாது. திருப்பலி கருத்துகள் வருகைப் பாடலுக்கு பின்பு தந்தை மகன் என்ற தொடக்க நிகழ்வுக்கு முன்பு  உள்ள இடைப்பட்ட நேரத்தில் வாசிக்கப்படவேண்டும்.

🎷 நற்கருணை எழுந்தேற்றத்தின் போதே பீடத்திற்கு முன்பு மட்டுமே அஞ்சலி எடுக்கப்பட வேண்டும்.

🎷 அஞ்சலிக்கு என்று தனியாக பாடல் பாடுவது கூடாது. இறைமக்கள் "ஆமென்" என்று சொன்னவுடன் நற்கருணை மன்றாட்டு பகுதி முடிவடைந்து விடுகிறது. எனவே திருப்பணியாளர் "இவரோடு இவரில்" என்று தொடங்கியதில் இருந்து இறைமக்கள் "ஆமென்" என்று சொல்லி முடிப்பதற்குள் அஞ்சலி எடுக்கப்படவேண்டும்.

🎷 அஞ்சலி எடுக்கும் பெண்கள் கலச்சார முறைப்படியான உடையில் இருப்பதுடன் முறைப்படி தலைக்கு முக்காடுடன் மண்டியிட்டவாறு அஞ்சலி எடுக்க வேண்டும்.

🎷 அஞ்சலி எடுக்கும் போது பலிபீடத்தையோ திருப்பணியாளரையோ மறைப்பதாக இருக்க கூடாது.

7.  திருவிருந்து பகுதி:

🎷 கர்த்தர் கற்பித்த செபத்தில் இருந்து திருவிருந்துக்கு பின்புள்ள திருவிருந்து இறுதி மன்றாட்டு வரையுள்ள பகுதியே திருவிருந்து.

🎷 நற்கருணை வாங்க வரும்போது மீதியடி (செருப்பு) இல்லாமல் வருவது சாலச்சிறந்தது. பெண்கள் தலைக்கு முக்காடிட்டு வருதல் நலம். ஆண்களோ பெண்களோ யாராக இருந்தாலும் மற்றவர் கவனம் சிதறாத வண்ணமும், மனம் தடுமறாத வண்ணமும் உடை உடுத்தவேண்டும்.

🎷 திவ்விய நற்கருணையை வரிசையில் வந்தோ/ மண்டியிட்டவாறோ தலைகுணிந்து வணங்கி நாவிலோ அல்லது கையிலோ பய பக்தியுடன் தகுந்த முன் தாயரிப்புக்கு பின்பே வாங்கவேண்டும். (நாவில் வாங்குவதே காலங்காலமாக பழக்கத்தில் உள்ளது. சிறந்ததும் கூட)

🎷 கையில் வாங்குவோர் அதே இடத்திலேயே திருப்பணியாளர் முன்பே உட்கொள்ள வேண்டும். நற்கருணையை கையில் வாங்கி திரும்பி நடந்துக் கொண்டோ / இடத்திற்கு எடுத்துச் சென்றோ உட் கொள்ளுதல் மிகப் பெரிய தவறு ஆகும்.

🎷 திருப்பலி ஒப்புக் கொடுக்கும் திருப்பணியாளர்களை தவிர மற்ற குருவானவர், அருட்சகோதரிகள் உட்பட திருத்தொண்டர், நற்கருணை பணியாளர் மற்றும் இறைமக்கள் என யாரும் நற்கருணை பாத்திரத்தில் இருந்து நேரிடையாக நற்கருணையை எடுத்து உட்கொள்ளக் கூடாது.

🎷 திருவிருந்து முடிந்த பின்பு சிறிது நேரம் அமைதியுடன் செபித்த பின் இறுதி நன்றி மன்றாட்டு திருப்பணியாளரால் செபிக்க வேண்டும்.

🎷 திருவிருந்து முடிந்தவுடன் இறுதி மன்றாட்டுக்கு முன்பு அறிவிப்பு கூடவே கூடாது. இந்த நேரம் நற்கருணை நாதருக்கு நன்றி சொல்லவே.

🎷 இறுதி மன்றாட்டு முடிந்தவுடன் ஒலை வாசித்தல், அன்பிய நிகழ்வுகள், வழிபாட்டு நிகழ்வுகள், அந்த வாரத்தில் வரும் புனிதர்களின் நினைவு நாள், ஆலய நிகழ்வுகள் போன்ற 5 நிமிடங்களுக்கு மிகாமல் உள்ள எழுதப்பட்ட சிறு அறிவிப்புகளை திருத்தொண்டரோ / உபதேசியரோ அல்லது பங்கு தந்தையோ அறிவிக்கலாம். (2005 ஆண்டு தமிழக ஆயர் பேரவை வெளியிட்ட திருவழிப்பாட்டு ஒழுங்குமுறைகள் என்ற அறிக்கையில் தெளிவாக இது வழியுறுத்தப்பட்டுள்ளது. இப்போதும் இதுவே நடைமுறையில் தொடர்கிறது.)

🎷 அறிவிப்புகள் அதிகமாக இருப்பின் அல்லது யாருக்காவது நன்றி / பாராட்டு தெரிவிப்பதாக இருப்பின் அல்லது பொன்னாடை போர்த்துவது அல்லது மற்ற எவ்வளவு பெரிய முக்கிய நிகழ்வாக இருப்பினும் கண்டிப்பாக திருப்பலி முடிந்தவுடன் ஆலய முற்றத்தில் அல்லது வேறு இடத்தில் நடத்த வேண்டும். திருப்பலி முடிந்த பின்பு கூட பலி பீடத்திலோ அல்லது பலி பீடத்துக்கு முன்போ நடத்த கூடாது.

8. திருப்பலியின் இறுதி பகுதி:

🎷 திருப்பணியாளரின் இறுதி வாழ்த்துரைக்குப் பின்பு இறுதி ஆசியுரை மிக மிக முக்கியம். இறுதி ஆசியுரை இறை மகன் இயேசு கிறிஸ்துநாதரே திருப்பணியாளர் வழியாக வழங்குவதாகவே திரு அவை போதிப்பதால் இறைமக்கள் மற்ற திருப்பணியாளர்கள் உட்பட அனைவரும் சென்று வாருங்கள் என்று சொல்லும் வரை வெளியே செல்லக் கூடாது.

🎷 திருப்பலி முடியும் முன்னரே வெளியேறுவது "இயேசுவின் இறுதி இரவு விருந்தில் இருந்து பாதியிலேயே யூதாஸ் ஸ்காரியத் வெளியேறியதற்கு" ஒப்பாகும்.

🎷 பாதியில் வெளியேறுவோர் யாராக இருந்தாலும், என்ன / எவ்வளவு பெரிய / முக்கிய காரணமாக இருந்தாலும் அவர் / அது யூதாஸ்க்கு ஒப்பாவர்.

சிந்தனைக்கு: 

🎤 மனித மீட்புக்கான இயேசுவின் மாக உன்னத பரிசுத்த ஈடு இணையற்ற இரத்த பலியாகிய திருப்பலியை இயேசுவின் வடிவமான திருப்பணியாளருடன் இணைந்து பலிபீடத்தில் ஒப்புக் கொடுக்கும் நாம், இயேசுவின் கல்வாரி பலியில் இயேசுவுடன் கூடவே பங்கு பெற்ற பின்வரும் இவர்களில் நமது பங்கு யாரை ஒத்து இருக்கிறது என சிந்திக்க முன்வருவோமா:

🔔 இயேசுவின் துயரத்தில் பங்கு பெற்ற தாய் மரியாளா?

🔔 இயேசுவின் திருமுகத்தை துடைத்து ஆறுதல் கொடுத்த வெரோணிக்காளா?

🔔 இயேசுவின் சிலுவையை சுமந்த சீரேனே ஊரானாகிய சீமோனா?

🔔 இயேசுவை சந்தித்து இயேசுவுக்காக அழத எருசலேம் நகர பெண்களா?

🔔 இயேசுவுடன் கூட சிலுவையில் தொங்கிய நல்ல கள்வனா?

🔔 இயேசுவே "அம்மா இதோ! உம்மகன்" என்று குறிப்பிட்ட இயேசுவின் அன்பு சீடரா?

🔔 இயேசுவின் சிலுவைருகில் நின்று கொண்டிருந்த அவர் தாயின் சகோதரியும் கிலோப்பாவின் மனைவியுமான மரியாவா? மதலேன் மரியாளா?

🔔 இயேசுவின் உயிரற்ற உடலை மடியில் சுமந்து மிகுந்த வியகுலமடைந்த வியகுல மாதாவா?

🔔 இயேசுவின் உடலை துணிவுடன் அடக்கம் செய்த அரிமத்தியாவூர் சூசையா?

🔔 வெள்ளைப் போளமும் அகில் தூளும் கலந்து நூறு இராத்தல் கொண்டு வந்து இயேசுவின் சடலத்தை யூதரின் அடக்க முறைப்படி பரிமளப்பொருட்களுடன் துணிகளில் சுற்றிக் கட்ட அரிமத்தியாவூர் சூசைக்கு உதவி செய்த நிக்கொதேமுவா?

🔔 "உண்மையில் இம்மனிதன் கடவுளின் மகனாக இருந்தார்" என்று உண்மை சாட்சியம் அளித்த நூற்றுவர் தலைவனா? அல்லது

🔔 "ஆண்டவரே, உம்மோடு சிறைக்கும் சாவுக்கும் உள்ளாக ஆயத்தமாய் இருக்கிறேன்" என்ற பேதுரு இயேசுவை மும்முறை மறுதலித்து பின்பு மனம் வெதும்பி அழுத பேதுருவா?

🔔 கெத்சமணி தோட்டத்தில் இயேசு பிடிபட்டவுடன் அவரை விட்டு ஓடிய சீடர்களா? அல்லது

🔔 இயேசுவிடம் குற்றம் ஒன்றும் இல்லை என தெரிந்தும் தலைமை குருக்களின் வற்புறுத்தலுக்கு பயந்து அநியாய தீர்ப்பளித்த பிலாத்துவா?

🔔 இயேசு அருஞ்செயல் ஏதாவது செய்யக் காணலாம் என காத்திருந்து அவரை பார்த்து மகிழ்ச்சியுற்று பல கேள்விகளை கேட்டும், தலைமை குருக்களின் வற்புறுத்தலுக்கு அடிபணிந்து அவரை அவமானப்படுத்தி எள்ளி நகையாடிய ஏரோதுவா? அல்லது

🔔 இயேசுவுடனே உண்டு குடித்து இருந்து, அவரது இறுதி உணவின் போது பாதியிலேயே வெளியேறி, இயேசுவை "ரபி" என்று நண்பனாக முத்தமிட்டு காட்டி கொடுத்த யூதாஸ் ஸ்காரியத்தா? அல்லது

🔔 "உன்னை அடித்தவன் யாரென்று தீர்க்கதரிசனமாகச் சொல்" என பழித்து பேசி அடித்து ஏளனம் செய்த காவலர்களா?

🔔 இயேசுவிடம் குற்றம் ஏதாவது கண்டுபிடிக்கவும் பொய் குற்றம் சாட்டிய தலைமைக் குருக்களா? மறைநூல் அறிஞர்களா? மூப்பர் சபையினரா?

🔔 இயேசுவுக்கு ஒசான்னா என்று புகழ் பாடி, பின்பு "இவரை கொல்லும்! கொல்லும்" என்று இயேசுவுக்கு எதிராக கூச்சலிட்ட மக்கள் கூட்டமா?

🔔 இயேசுவுக்கு மூள்முடி சூட்டி சாட்டையால் அடித்த படைவீரர்களா?

🔔 இயேசு சிலுவை சுமந்து சென்ற போது அவரை அடித்து துன்புறுத்திய குதிரை படைவீரர்களா?

🔔 இயேசுவின் உடையை உரித்து அதன் மீது சீட்டு போட்டு பிரித்துக்கொண்ட வீரர்களா?

🔔 இயேசுவை சிலுவையில் ஆணிகளால் துளைத்த வீரர்களா?

🔔 "நீ மெசியா அல்லவா? உன்னையும் எங்களையும் காப்பாற்று" என்று இயேசுவை பழித்த சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்த குற்றவாளிகளுள் ஒருவனா?

🔔 "மற்றவர்களை காப்பாற்றினான். இவன் கடவுளின் மெசியாவும், தேர்ந்தெடுக்கப் பெற்றவருமானால் தன்னையே காப்பாற்றிக் கொள்ளட்டும்!" என்று ஏளனம்  செய்த வழிப் போக்கர்களா?

🔔 இயேசு, "தாகமாய் இருக்கிறது" என்ற போது கடற்காளானை காடியில் தோய்த்து, ஈசோப்பில் பொருத்தி அவரது வாயில் வைத்த படை வீரனா?

🔔 இயேசுவின் விலாவில் ஈட்டியால் குத்திய படை வீரனா?

🎄 இயேசு, "தந்தையே, இவர்களை மன்னியும்; ஏனெனில் தாங்கள் செய்கிறது இன்னதென்று இவர்களுக்குத் தெரியவில்லை" என்று தன்னை பலியாக்கியவர்களை மன்னித்தார்.

🎄 திவ்விய திருப்பலியை நமது குற்ற செய்கையால் தெரிந்தே செல்லாததாக செய்யும் போது அதற்கு மன்னிப்பு கிடைக்காது என்பதை நினைவில் கொண்டு இயேசுவின் இரத்த பலியில் பக்தி சிரத்தையுடன் தகுந்த முன் தாயரிப்புடன் பங்கேற்க முயற்சி செய்வோம்.

🎄முழுமையான செல்லத்தகுந்த பலனுள்ள திவ்விய திருப்பலியில் பங்கேற்க நாம் ஒவ்வொருவருக்கும் பொறுப்பும் கடமையும் உள்ளது. திருஅவை இயேசுவின் இரத்த பலியான திருப்பலியில் பங்கேற்க முழு உரிமையும் அளித்து இருக்கிறது. இந்த உரிமையில் ஏதேனும் குறைவுபடுமேயானால் திருஅவையிடம் முறையிட உரிமையும் பொறுப்பும் உள்ளது.