தொடக்க காலத்திருச்சபையில் பல யூதர்கள் இயேசுவை ஏற்றுக் கொன்டனர். வழமைப் போன்று சனிக்கிழமை (ஓய்வு நாள்) தொழுகைக் கூடத்திற்குச் சென்றனர். திருத்தூதர்கள் ஆங்காங்கே சிறிய கிறிஸ்தவ சமூகங்களை உருவாக்கினர்.
கிறிஸ்தவ சமூகங்களை இறைவார்த்தையில் ஊன்றச் செய்து, ஒருவர் ஒருவர் மட்டில் அக்கறை கொண்டு வாழ்ந்து மற்றும் செபித்து, வழிபாட்டில் ஈடுபட கட்டியெழுப்புவதை நாம் திருத்தூதர் பணிகளில் 2:42-47 இல் வாசிக்க கூடியதாக உள்ளது. மனம் மாறிய யூதர்கள், கிரேக்கர்கள், தங்கள் பழக்க வழக்கங்களை கிறிஸ்தவ மயமாக்கினர்.
மனம் மாறிய யூதர்கள் தொழுகைக்கூட வடிவத்தை தங்கள் வழிபாடுகளில் பின்பற்றினர். ஆனால் மனம் மாறிய கிரேக்கர்கள் தனித் தலைமையைக் கொண்டு ஒன்று கூடினர்.
மனம் மாறிய யூதர்கள், நாளடைவில் செபக்கூடம் செல்வதைக் கைவிட்டனர். சனிக்கிழமை சூரியன் மறைந்த பிறகு ஒன்று கூடினர். வீடுகளில் ஒன்று கூடி செபித்தனர். தூய யஸ்டின் உரோமையில் நடந்த திருப்பலியை பற்றி குறிப்பிடுவதை நாம் பார்க்கும் பொழுது, அவர்கள் அன்று கொண்டாடியது போல் இன்றும் நாம் கொண்டாடுகின்றோம்.
அவர்கள் அன்று என்ன செய்தார்கள்? இயேசுவின் பாடுகளை தியானித்து, ஏழைகளுக்கு உதவி செய்து, செபத்தில் நிலைத்திருந்து, அதுபோல் தலைவர்களின் கடிதங்களை வாசித்து, இறைவார்த்தைகளை தியானித்து, மறையுரையை கேட்டு மன்றாடி திருப்பலியை கொண்டாடினர்.
முதன் நான்கு நூற்றாண்டுகளில் கிரேக்க மொழியில் இருந்து வழிபாட்டு முறைமைகள் மாற்றம் காணத் தொடங்குகிறது. இப்பொழுது உரோமை மொழி முன்னுரிமை பெற தொடங்குகிறது. இக்காலம் உரோமை வழிபாட்டின் 'பொற்காலம்" எனக் கூறினால் அது மிகையாகாது.
உரோமைய வழிபாட்டின் பொற்காலமாக இருந்தாலும், ஒட்டு மொத்த கிறிஸ்தவ வழிபாட்டின் பொற்காலம் என கூறமுடியாது. ஏனென்றால் கொன்ஸ்டன்டைன் பேரரசனின் மனமாற்றத்திற்கு பிறகு அரசாங்கமே பொதுக்கட்டிடங்களை கொடுத்தது. கோயில் (Church) என்ற அமைப்பு உருவாகிறது.
வீடுகளில் ஒன்று கூடி செபிக்கும் பழக்கம் குறையத் தொடங்குகிறது. பலிக்காக ஒன்று கூடும்போது 'அன்புவிருந்தில்" (Agape) குளறுபடிகள் ஏற்படுகின்றன. மக்கள் நிறைய கூடி வருகிறார்கள். ஆகவே 'அன்பு விருந்து" நிறுத்தப்படுகிறது. வீடுகளில் கூடிய போது மேசை இருந்தது, பலிப்பீடம் இல்லை.
பொது இடங்களில் கோயில் கட்ட தொடங்குகிற பொழுது நடுவில் கற்களைக் கொண்டு பலீப்பீடம் அமைத்தனர். இது இயேசுவை குறிப்பதாக கருதப்பட்டது.
தெய்வீகம், இறைபிரசன்னத்திற்கு முக்கிய இடம் கொடுக்கப்பட்டது. வீடுகளில் கூடியபோது இருந்த பாசம், பகிர்வு, நெருக்கம், உறவு இங்கே வெது வெதுப்போயிற்று. இயேசுவின் தெய்வீகத்தை குறைவாக மதிப்பிட்ட ஆரிய பேதகத்திற்கு எதிராக, தெய்வீக தன்மையை வலியுறுத்தும் நோக்கில் மெழுகுவர்த்திகள், தூபம், தெண்டனிட்டு வணங்குதல், பவனி, வழிபாட்டு ஆடைகள் என்பன வழிபாட்டில் சேர்க்கப்பட்டமையினால் ஆதியில் இருந்த தாக்கம் படிப்படியாக குறையத் தொடங்கியது.
ஆரம்பத்தில் மக்களே வீடுகளில் இருந்து அப்பம் கொண்டு வந்தனர். 8ஆம் நூற்றாண்டு காலம் தொடங்கி எளிதில் உடையக்கூடிய மென்மையான வெண்மை அப்பங்கள் பயன்படுத்தப்பட்டன. காலப்போக்கில் முழுத் திருப்பலியிலும் இறைபிரசன்னம் இருப்பதை மறந்து எழுந்தேற்ற நேரத்தில் அப்பத்தில் இறைவனைக் காணும் பழக்கம் உருவாகியது.
எனவே எழுந்தேற்ற நேரங்களை பார்த்து, ஆலயம் செல்லும் பழக்கம் உண்டானது. வீடுகளில் கூடிய பொழுது இருந்த பாச பிணைப்பு அற்று போனது. நற்கருணையில் இயேசு முழுமையாய் பிரசன்னமாக இருக்கின்றார் என்று அப்ப இரசத்தில் இயேசுவை பார்க்க முனைந்தனர்.
12ஆம் நூற்றாண்டில் நற்கருணையை உற்று நோக்கிபார்த்து செபிக்கிற பழக்கம் உருவானது. எனவே நற்கருணை வாங்கும் பழக்கம் குறைந்து போனது.
இக்கலகட்டத்தில் இருந்து, 2ம் வத்திக்கான் சங்கம் வரை திருப்பலியை புரிந்து கொள்வதிலும், மீண்டும் அதன் பழைய இயல்புக்கு அழைத்துச் செல்வதிலும் கவனம் செலுத்தப்பட்டது. பழங்கால திருப்பலியில் இருந்து அழிந்துபோன நல்லவற்றை மீண்டும் திருப்பலியோடு இணைத்தது.
அது மட்டுமன்றி இக்காலத்தில் தேவைக்கேற்ப, மக்கள் நன்முறையில் பங்கேற்கும் வண்ணம் திருவழிபாடு சீரமைக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாகவே 1970க்கு பிறகு நாம் தமிழ் மொழியில் திருப்பலியை கொண்டாடுகின்றோம்.