மேலும் சில புதுமைகள்

பாவங்கள் ஒன்றன்பின் ஒன்றாய் மறைதல்

இத்தகைய இறை வார்த்தைகளால் பற்றியெரிந்த இதயம் கொண்ட அந்தோனியாரிடம் பாவிகள் ஓடோடி வந்ததில் வியப்பில்லை.

ஒரு பாவி தன் பாவங்களை அறிக்கையிட அஞ்சினான்; அவற்றை எழுதிக் கொண்டு வருமாறு பணித்தார், அவ்வாறே செய்தான்.

அவன் ஒவ்வொரு பாவத்தையும் படிக்கப் படிக்க அது காகிதத்திலிருந்து மறைந்தது. பச்சாத்தாபத்தின் பெருமையை அறிந்தான். நல்ல பாவசங்கீர்த்தனம் செய்தான். மனமகிழ்ச்சி ஏற்பட்டதோடு தானும் திருந்தியதுடன், மற்றவரையும் நல்ல பாவசங்கீர்த்தனம் செய்யத் தூண்டி வரலானான்.

பாவசங்கீர்த்தனத்தை இக்காலத்தில் பலர் அசட்டை செய்கின்றனர். விசுவாச தளர்வால் பிரிவினைச் சபைகளில் சேர்ந்து திருச்சபையின் படிப்பினைக்கு எதிராக செயல்படுகின்றனர். இவர்கள் மனம் திரும்புவார்களாக.

தூரத்தில் கேட்ட மறையுரை

அந்தோனியாரின் பிரசங்கத்தைக் கேட்க ஒரு பெண் விரும்பினாள். - தெய்வ பக்தியற்றவனும் முரடனுமான அவளது கணவன், பிரசங்கம் கேட்க அவள் சென்று வர இசையவில்லை .

மன உறுதியுடனும் விசுவாசத்துடனும் மாடி மீது ஏறினாள். "அன்தோனியாரே உமது பேச்சைக் கேட்க எனக்கு ஆசை. என்ன செய்வது?' என மன்றாடினாள். இரண்டு மைல்களுக்கப்பால் பிரசங்கம் செய்து கொண்டிருந்த அந்தோனியாரின் செவிகளில் அவள் வார்த்தைகள் ஒலித்தன.

என்ன அற்புதம்! அவரது வார்த்தைகள் தெளிவாய் மாடி மீது ஒலித்தன. அவளுக்கு ஒரே ஆச்சரியம். அவள் கணவன் அதை நம்பவில்லை . ஏதோ அவள் உளறுகிறாள் என்று நினைத்து அவளைக் கேலி செய்யும் எண்ணத்துடன் மாடித்தளம் சென்றான். அவனது செவிகளிலும் தெளிவாக அவர் பிரசங்கம் ஒலித்தது.

''மூடனே தன் மனத்தினுள் கடவுள் இல்லை என்று சொல்கிறான்” என்ற வேத வசனத்தை நினைத்தான். மனந்திரும்பினான், அந்தோனியார் பக்தன் ஆனான். தன் கணவனை நல்லவனாக்கியதற்கு அவள் புனிதருக்கு நன்றி செலுத்தி மகிழ்ந்தாள்.

அலகையை ஓட்டுதல்

அலகைக்கு இவர் மீது ஆத்திரம். அது விரித்த வலைகளை கிழித்து எறிந்தார். தந்திரங்களை மாய்த்தார். பல ஆன்மாக்களை கரை சேர்த்தார். ஒரு தினம் இவர் தூங்கிக் கொண்டிருந்தபோது பயங்கர உருவத்தில் அவர் படுக்கை அண்டை சாத்தான் வந்தது. அவரது கழுத்தை நெரித்துக் கொல்ல முயன்றது. தயக்கத்துடன் திருச்சிலுவை அடையாளமிட்டு, மரியன்னையின் பெயரை உச்சரித்தார். சாத்தான் நடுங்கி மறைந்தது.

கடின தப முயற்சிகள், சலியாத சேவையால் உடல்நலம் குன்றினார்.

''என்னைப் பலப்படுத்துகிறவரைக் கொண்டு என்னால் எல்லாம் செய்யக்கூடும்" என்று விசுவசித்து சேவையினைத் தொடர்ந்தார். திருத்தொண்டில் இன்பங் கண்டார்.

அரசன் மகனின் அற்புத விடுதலை

அந்தோனியார் வாழ்ந்த நாளில் எல்ஸினோ என்ற சர்வாதிகாரி இருந்தான். அவன் ஜெர்மனி நாட்டைச் சார்ந்தவன். வெரோனோ, பதுவை என்ற நகரங்கள் அவனது ஆட்சியின் கீழ் இருந்தன. பாப்பிறைகளின் கட்டளைகளைக் காற்றில் பறக்க விட்டு கொடுங்கோல் ஆட்சி செய்தான். மக்கள் அவனுக்கு எதிராகக் கொதித்து எழுந்தனர். ஒரே நாளில் 12,000 பதுவை மக்களைக் கொன்று குவித்தான். வெரோனாவிலும் மற்றும் எங்கும் மக்களின் புலம்பல் கேட்டது. போர் வீரர்கள் வீதிகளில் நடமாடிய பாமர மக்களைப் பந்தாடினர்.

எஸ்ஸாலினோ என்பவன், பேரரசனின் மருமகன். இவன் ரிக்காந்தோ என்ற இளைஞனை கடத்திச் சென்றான். அந்தோனியாரின் நண்பரான காஸில் பாண்ட் பட்டணத் தளபதியின் பேரன்தான் ரிக்காந்தோ. தன் விருப்பப்படி நடக்காவிட்டால் வாலிபனைக் கொன்று விடுவதாக அச்சுறுத்தினான். மக்கள் பயந்து அந்தோனியாரிடம் சென்று முறையிட்டனர். அவரும் தீயவனைப் பார்க்கச் சென்று சிறுவனை விடுதலைச் செய்யச் சொன்னார். மறுத்தான். கொடுங்கோலா! நீ விரைவில் தண்டிக்கப்படுவாய், உருவிய வாள் உன் தலைமேல் தொங்குகிறது'' என்றார். அவர் கண்களில் கனல் வீசியது. முகத்தில் ஒளி வீசியது. எஸ்ஸாலினோ பயந்து, வாலிபனை விடுதலை செய்தான்.

அவருக்கு விலையுயர்ந்த பரிசுகளைப் பணியாளரிடம் கொடுத்து அனுப்பினான். அவர் அவைகளை ஏற்றுக் கொண்டால் உலகப் பொருளை விரும்பும் கபடத் துறவி என பறைசாற்றிக் கொன்று வாருங்கள் என ஆணையிட்டான்.

அவர் அவைகளை ஏற்றுக்கொள்ளவில்லை “பரலோக மட்டும் அபயமிடும் ஏழைகளிடமிருந்து கவரப்பெற்ற பொருட்கள் எனக்குத் தேவையில்லை. அதை அவர்களுக்குத் திரும்பக் கொடுப்பதுதான் எனக்கு அளிக்கும் பரிசு” என கண்டித்துரைத்து அவர்களைத் துரத்தி விட்டார்.

1259ல் இவ்வரசன் லம்பார்டி இளவரசனால் கொலை செய்யப்பட்ட போது நாடே மகிழ்வால் ஆர்ப்பரித்தது.

நசுங்கிய கொடிகள் மீண்டும் எழல்

பதுவை மாநகரிலுள்ள மரியன்னை மடத்தில் வாழ்ந்து, தனது எழுத்துப் பணியை தொடரலானார். வேளாவேளைகளில் மறைஉரை மடத்திலிருந்து செய்து வருவார். அதை விரும்பிக் கேட்டிட மக்கள் கூட்டம் மடம் நோக்கி வந்த வண்ணம் இருந்தது. அவர்களால் மிதிக்கப்பட்ட செடி கொடிகள் நசுங்கின. ஏனெனில் மிகவும் சிரமத்துடன் இவை துறவிகளால் வளர்க்கப்பட்டவை, எழில் மிக்கவை.

அந்தோனியார் அருளால் மாய்ந்த செடி கொடிகள் மீண்டும் பழைய நிலையில் தோன்றியது.

அந்தோனியாரது வாழ்க்கை நெறிப்படி வாழ விரும்புவோர் வாழ்வதற்கு, ஒரு தவமடத்தையும் அமைத்துக் கொண்டார்.