அந்தோனியார் வாழ்வின் இறுதி வேளை

அந்தோனியார் வந்த சேதியினை அறிந்த மக்கள் அவர் வாழ்ந்த மரத்தின் முன், தினமும் திரளாய்க் கூடினர். மரக்குடிலில் இருந்தே அவர்களுக்குப் போதித்தார். ஒவ்வொரு நாளும் மரக்குடிசையை விட்டு இறங்கி ஏனைய துறவிகளுடன் உணவருந்துவார்.

1231 ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 13ஆம் நாள் வெள்ளியன்று மடத்தில் மதிய உணவு மணி அடித்தது. குடிலில் இருந்து உணவு அருந்தச் சென்ற அவர் உணவு அறையில் பலவீனத்தால் தள்ளாடி மூர்ச்சையானார். உடன் துறவிகள் அவரை பக்கத்து அறையில் படுக்க வைத்தனர்.

சுயநினைவு வந்ததுடன், ரோஜர் சகோதரரிடம் ''நான் இங்குள்ள சகோதரர்களுக்குப் பாரமாக இருக்க விரும்பவில்லை பதுவை தூய மரியன்னை மடம் செல்ல விரும்புகிறேன்'' என்றார். சகோதரர்கள் உடன்படவில்லை. அவரின் அடுத்தடுத்த விண்ணப்பம் அவர்களை உடன்பட வைத்தது. ஒரு வண்டியில் ஏற்றி பதுவாபுரி நோக்கி விரைந்தனர்.

மிகவும் பிணியுற்ற அவரைக் கொண்டு வந்தவர்கள் ஆர்செல்லா நகரை அடைந்தனர். செல்லும் வழியில் அந்தோனியாரின் நெருங்கிய நண்பரான வின்னோற்னோ துறவியார் அந்தோனியாரைப் பார்க்க வந்து கொண்டிருந்தார். வண்டியை நிறுத்தினார். அவரின் மரண வேளை நெருங்கியதை அறிந்தார்.

பயணத்தால் மேலும் அவரை தொந்தரவு செய்யாது கிளாரம்மாள் கன்னியர் மடம் அருகிலுள்ள ஆர்செல்லா நகருக்கு அவரைக் கொண்டு செல்வதே நல்லது என்று ஆலோசனை கூறினார். தூயவரின் பலவீன நிலையையும் பதுவையின் சந்தடியையும் சுட்டிக்காட்டி, அவர் ஓய்வு பெற அமைதியான சூழ்நிலையுள்ள ஆர் செல்லாவே ஏற்றது என புனிதரிடம் உரைத்தனர். அவரும் இசைந்தார்.

ஆர்செல்லா பட்டணத்தில் ஒரு சிறிய ஆசிரமமும், அதன் அருகில் புனித கிளாரம்மாள் மடமும் இருந்தது. ஆர்செல்லா மடம் புகுந்ததும், மீண்டும் பிணி அவரை வன்மையாகத் தாக்கியது. பலம் அனைத்தும் இழந்தவராகக் காணப்பட்ட அவர் சிறிது நலமுற்றதும் பாவ சங்கீர்த்தனம் செய்து நற்கருணை அருந்தினார்.

அந்தோனியார் மரணமடைவதற்கு சற்று முன்னர் தனது நண்பரான தோமஸ் மடாதிபதிக்கு காட்சி தந்தார். இம்மடாதிபதி தொண்டை நோயால் அவதியுற்றார். "உங்களிடம் பிரியா விடை பெற வந்துள்ளேன்.

கழுதையை ஆர்செல்லாவில் விட்டுவிட்டு தந்தையின் நாட்டிற்குப் போகிறேன்” என அவரிடம் சொன்னார். பின் அவரது தொண்டையைத் தொட்டு நோயை அகற்றினார். பின் காட்சி மறைந்தது. அந்தோனியார் ஒரு வேளை தன் தாய் நாடான போர்ச்சுக்கல் போகலாம் என அவர் நினைத்தார்.

பல தினங்களுக்குப் பின் அத்துறவி அந்தோனியார் இறந்ததை அறிந்தார். அந்தோனியார். "கழுதை' என்று குறிப்பிட்டது - தம் உடலையே என அறிந்து கொண்டார். அசிசியார் இறக்கும் முன் அசிசி நகரை ஆசீர்வதித்தார். அந்தோனியாரும் அவ்வாறே பதுவையை ஆசீர்வதித்து "உனது இடத்தின் அழகிற்காய் நீ ஆசீர் பெறுவாயாக, உனது செழிப்பிற்காய் ஆசி பெறுவாய். உனக்காக பரம் வைத்திருக்கும் மகிமையான மகுடத்திற்காய் நீ ஆசீர்வதிக்கப்படுவாயாக" என்றார்.

அவர் ஆன்மா ஆனந்தத்தில் திளைத்தது. நோயை மறந்தார். தன் தாயார் தனக்குக் கற்றுத் தந்த, தன் வாழ்நாள் முழுவதும் பாடிவந்த தேவதாயின் “ஓ! மகிமை பொருந்திய ஆண்டவளே!” என்ற பாடலைப் பாடினார். இதன் பின் வானத்தையே அண்ணார்ந்து பார்த்த வண்ணமிருந்தார். அருகிலிருந்த சகோதரர் "எதைப் பார்க்கிறீர்?” என வினாவினார் “என் ஆண்டவரைக் காண்கிறேன்” என்று பதில் வந்தது.

பின் அவருக்கு அவஸ்தை பூசுதல் கொடுக்கப்பட்டது. தாவீதரசரின் தவச் சங்கீதங்களை அவர் செபித்தார். உடன் துறவிகளும் உருக்கமாய் அவருடன் செபித்தனர். எவ்வளவு இனிய சூழ்நிலை! மரணத்தை இவ்வளவு திடமாய், மகிழ்வாய், அமைதியாய் ஏற்றுக்கொள்வது எவ்வளவு சிறந்தது!

அரைமணி நேர மௌனம்: பின் அவரின் ஆவி அமைதியுடன் இறையடி சேர்ந்தது.

இது 1231 - ஆம் வருடம் ஜூன் திங்கள் 13 - ஆம் நாள் நிகழ்ந்தது. அன்று அவருக்கு வயது 36.

முப்பத்தாறு ஆண்டில் பெற்றோருடன் வாழ்ந்தது 15 ஆண்டுகள்: லிஸ்பன் மடத்தில் 2 ஆண்டுகள்: கோயிம்பிரா, அகஸ்தினார் மடத்தில் 9 ஆண்டுகள்: - பிரான்சீஸார் சபையில் 10 ஆண்டுகள்.


மரணத்தை சிறுவர் வெளியிடுதல்

அந்தோனியார் மக்களால் பெரிதும் போற்றப்பட்டதனால் ஜனத்திரள் கடல் அலைபோல் பொங்கிவரும் எனத்துறவிகள் கருதி அவரை ஆடம்பரமின்றி இரகசியமாய் ஆர்செல்லாவில் அடக்கஞ்செய்து விடவேண்டும்; எல்லாம் முடிந்த பின்னர் இதனை வெளியிட்டால் போதும் என்றும் முடிவு செய்தனர். ஆனால் இறைவன் தனக்காய் முற்றிலும் தன்னை அர்ப்பணித்து வாழ்ந்த திருமகனை, தம் திருவடிகளில் சேர்ந்த தனது அடியானை மகிமைப்படுத்த திருவுளமாகி பதுவை நகரச் 1 சிறுவர்களின் வாய்களைத் திறந்தார்,

அவர்கள் வீதிகளில் அங்குமிங்கும் ஓடி, "தூய பிதா இறந்தார். | அந்தோனியார் இறந்துவிட்டார்!” எனச் சொல்லித் திரும்பினர்.

பதுவை ஆலயமணிகளும், லிஸ்பன் ஆலயமணிகளும் ஒலித்தன. பாலகர்களின் வாய்மொழியைக் கேட்ட மக்கள் தங்கள் வேலைகளை அப்படியே போட்டுவிட்டு அதிர்ச்சியுடனும், தாங்க இயலாத மன வருத்தத்துடனும் ஆர்செல்லா சென்றனர்,

உடலுக்காக உரிமைச் சண்டை

புனிதரது உடலைக் கண்ட மக்கள் துக்கம் பீறிட கதறி அழுதனர்.

ஆர்செல்லா மக்களும், காப்பேதே போந்தே வாசிகளும் அந்தோனியாரது உடலை தம் ஊரிலேயே அடக்கம் செய்யவேண்டு மென்று அடம் பிடித்தனர். தான் இறந்தபின் தன்னைப் பதுவை மடத்துக் கல்லறைத் தோட்டத்தில் அடக்கஞ் செய்ய வேண்டுமென்று அந்தோனியார் கூறி இருந்தார்.

புனிதரின் விருப்பப்படி பதுவைக்கு அனுப்புவதே சரி என துறவிகள் கூறினர். பதுவை ஆசிரமத் துறவிகளும் இதற்கென வந்து விட்டனர். பலத்த சண்டை கிளம்பியது.

கிளாரா மடத்துக் கன்னியர்கள் ஆர்செல்லா நகர மக்களுக்கு ஆதரவு அளித்தனர். பதுவை ஆயர் ஜேக்கப் கொராடோ இதை முடிவுகட்டும் நடுவராக செயல்பட்டார். அந்தோனியார் விருப்பப்படி பதுவைக்கே எடுத்துச் செல்லப்பட வேண்டும் என ஆயர் அறிவித்தார். பலர் ஆயரையும் எதிர்த்தனர்.

உடல் கொண்டுசெல்ல இருந்த பாலத்தை சுற்றி வளைத்தனர். தற்காலிகப் பாலம் ஒன்று அமைக்கப்பட்டது, அதனையும் உடைத்தனர். எதிர்த்த ஆர்செல்லா மக்களுடன் இது பற்றிப் பேச ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. அவர்கள் கூட்டத்தில் இது பற்றி விவாதித்துக்கொண்டு இருக்கையில் அவர்களுக்குத் தெரியாமல் இரகசியமாக உடல் எடுத்துச் செல்லப்பட்டது.

நல்லடக்கம்

ஜூன் மாதம் 17ம் நாள் நல்லடக்கத்துக்காக ஊர்வலமாக எடுத்துச் சென்ற புனிதரின் உடலின் முன் மக்கள் எரியும் திரிஏந்திச் சென்றனர். துறவிகளின் ஆலயத்தில் ஆயர் திருப்பலி நிறைவேற்றிய பின் அடக்கம் நடைபெற்றது.

அந்தோனியார் பிரேதப் பெட்டியைத் தொட்ட பலர் குணமடைந்தனர். ஊமைகள் பேசினர். செவிடர்கள் கேட்டனர். குருடர்கள் பார்வையடைந்தனர். தீராப் பிணிகள் தீர்ந்தன. கேட்டவரங்களை மக்கள் அடைந்தார்கள். அவரின் அடக்க நாளில் இவ்வாறு பல புதுமைகள் நடந்தன.

இறந்தபின் நண்பருக்குக் காட்சி

அவரது நண்பரான லூக்காஸ் என்பவருக்கு அந்தோனியார் காட்சி அளித்தார். எல்ஸினோவின் கொடுங்கோன்மையிலிருந்து பதுவை விடுதலை பெறும் என அப்பொழுது அறிவித்தார்.

அந்தோனியாரின் உடல் அடக்கம் செய்யப்பட்ட ஆலயத்தை 1232-ல் மாபெரும் ஆலயமாக கட்டும் பணி தொடங்கப்பட்டது. (இப் பேராலயம் கட்டி முடித்திட 100 ஆண்டுகள் ஆயிற்று) அந்தோனியாரின் முதல் அடக்கத்தின் போது பயன்படுத்தப்பட்ட பெட்டியினை இங்கு காணலாம்.