மெஸினாமடத்தில் அருள் வாழ்வு

"மனிதன் மீது நம்பிக்கை வைப்பதை விட ஆண்டவரிடம் தஞ்சம் புகுவதே நலம்" (சங் 117/8)

வட இத்தாலி செல்லுதல்

பிரான்சிஸ்கன் சபை விரைவில் அதிக வளர்ச்சி அடைந்தது. சபை மாநாடு ஒன்று கூட்ட ஆயத்தம் செய்யப்பட்டது. சபைத் துறவிகள் அனைவருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது. சபை அமைப்பாளரான தூய அசிசி பிரான்சீஸ், தன் துறவிகளை நேரில் பார்த்திட விரும்பினார். அவர்கள் எவ்வாறு வாழ்கின்றனர்? என்ன சேவை செய்கின்றனர்? அவர்களுக்கு நேரிடும் துயர், தடங்கல்கள் எவை? என்பதை நேரில் அறிய விரும்பினார். தேவையான அறிவுரைகளை வழங்கிட அவர் ஆவலாய் இருந்தார். சுபாஸியோ சமவெளியை அடுத்து போர்சியுங்குலா ஆலயம் இருக்கிறது. இது அசிசியாருக்கும் மிகவும் பிடித்தமான இடம். இவ்விடத்தில் அவர் பல போராட்டங்களுக்கு விடை கண்டார். பிரச்சனை களுக்கும் தீர்வு கண்டார் தனிமையில் இனிமை பெற்றார். இலத்தலம் பிரான்சிஸ்கன் சபை தொட்டில் என அழைக்கப்படுகிறது.

இங்கு வருடம் இருமுறை தூய ஆவியானவர் திருநாளன்றும், அதிதூதர் தூய மிக்கேல் திருநாளன்றும் துறவிகள் ஒன்று கூட வேண்டும் என்பது அவரின் விருப்பம். ஏற்கனவே இத்தகைய மூன்று மாநாடுகள் நடைபெற்றிருந்தன. அவை 1217, 1219, 1221 ஆகிய ஆண்டுகளில் நடந்தேறின. அவற்றில் 1221ம் ஆண்டு நிகழ்ந்த மாநாடு தூய ஆவியானவர் திருநாளன்று நடந்தது. இது பிரான்சிஸ்கன் சபை வரலாற்றில் தனிச் சிறப்புப் பெற்றது.

மெஸினாவில் சபையின் பொதுக்கூட்டம் 1221 மே திங்கள் 30ல் போர்ஸியுஸ் கோலாவில் நடக்க இருப்பதை அந்தோனியார் அறிந்தார். உடல் நலம் குன்றியிருந்த அவர் சபைத் தலைவரான அசிசி பிரான்சீஸை நேரில் பார்த்திட அங்கு சென்றார். 3000 பேர் கூடினர். அந்தோனியாரை யாருமே அறியவில்லை. அவரும் தன்னை யாரென்றும் வெளிப்படுத்தவும் இல்லை.

மாநாட்டுத் திருப்பலியில் அசிசியார் திருக்கோனாகச் செயல் பட்டார். மறைஉரையும் ஆற்றினார். அது வருமாறு: "இவ்வுலக துன்ப துயரங்கள் குறுகியவை. பரலோக இன்பம் முடிவில்லாதது. இறைவனின் திருக்கொடைகளில் நம்பிக்கை வையுங்கள். திருச்சபை, நமது தூயதாய். அவளை என்றும் மதித்து அவளுக்குக் கீழ்ப்படியுங்கள். உங்களிடம் ஒருவருக்கொருவர் சகோதர அன்பு காணப்பட வேண்டும். எல்லா மனிதருக்காகவும் மன்றாடுங்கள். உங்கள் அனைவருக்கும் தூய கீழ்படிதலின் பேரால் நான் உத்தரவிடுவது: உணவு, பானம், பிற தேவைகளைப் பற்றி கவலையுறாதீர். எந்த ஒரு காரியத்திலும், செபத்திலும் கடவுளை வாழ்த்துங்கள். உங்கள் உடலைப் பற்றிய கவலையே வேண்டாம். ஏனெனில் இறைவன் உங்களை உருக்கமாய்க் கவனித்து வருகின்றார்”

இந்த மாநாட்டிற்குத் தூய சுவாமிநாதர் வந்து இருந்தார். தூய சுவாமிநாதரும், அசிசியாரும் நண்பர்கள். அசிசியார் கடின கட்டளையைக் கேட்டு அதிசயமடைந்தார். இத்தனை ஆயிரம் துறவிகளின் உணவிற்கு இவர் எங்கே போவார்? என சிந்தித்தார். உணவுகளுக்கு வேண்டிய பொருட்களை மக்கள் ஏராளம் கொண்டு வந்திருந்தனர். ஜெர்மெனிக்கு வேத போதக அலுவல் செய்ய துறவிகளை அசிசியார் தெரிந்து அனுப்பினார். அந்தோனியார், தூய அசிசியாரின் மகிமைக்கு முன் தன் வாழ்வு வெறும் உப்புச் சப்பற்றது என எண்ணினார். எனவே அசிசியாரை அணுகவில்லை. தான் யாரென்று அறிவிக்கவுமில்லை அசிசியாரை நேரில் பார்த்ததில் மகிழ்ச்சியடைந்தார்.

மறைந்த வாழ்க்கையைப் பற்றி பிற்காலத்தில் அந்தோனியார் எழுதியதாவது, "நாம் பிச்சைக்காரர்களைப் போல் செயல்படுவோம். சிலர் நல்ல ஆடைகளை மறைத்து கந்தையணிந்து யாசகம் கேட்கின்றனர். நமது நல்லியல்புகளை மறைத்து, குற்றங்களையும் தவறுகளையும் வெளிக்காட்டினால் தேவ அருள் என்ற பிச்சையை இறைவன் இடுவார்"

தூய ஆவியானவரின் திருநாளன்று பொது அமர்வு நிகழ்ந்தது. முன் கூறியது போல் புனிதர், அசிசி பிரான்சிஸைக் கண்டாரெனினும் இருவரும் நேர்முகமாக சந்திக்கவில்லை . ஏனெனில் அசிசியார் நோய் வாய்ப்பட்டு இருந்தார். பேச வேண்டியவைகளை சகோதரர் எலியாசே பேசினார். சில துறவிகளுடன் அசிசி அண்ணலார் அளவளாவினார். அவர் அளவளாவுமளவு அந்தோனியார் அன்று புகழ் பெறவில்லை . கூட்டம் முடிந்து எல்லோரும் புறப்பட்டு விட்டனர். அவரை எவரும் அழைத்துச் செல்லவில்லை. கிராஸியான் துறவி அங்கு வந்தார். அந்தோனியார் அவரிடம் தன்னை யாரும் அழைத்து செல்லவில்லை - எனவே மடத்துச் சட்டங்களைப் பயின்றிட தன்னை அவருடன் ரொமாக்னா பட்டணம் அழைத்துச் செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். "தன்னைத் தாழ்த்துகின்றவனுடைய வேண்டுதல் மேகங்களை ஊடுருவிப் போகும்” (சீராக் 35/21) ''மனிதன் மீது நம்பிக்கை வைப்பதை விட ஆண்டவரிடம் தஞ்சம் புகுவதே நலம்" (சங் 117/8) தனது கல்வி அறிவையும், முன் அனுபவத்தையும் அவர் வெளியிடவில்லை . இளைய துறவி கிராஸியான் நம் புனிதரைக் கவர்ந்தார். அவரைத் தன்னுடன் அழைத்துச் சென்றார். இவ்வாறு அந்தோனியார் வட இத்தாலி நாட்டை அடைந்தார்.

கடின தவ வாழ்வு

அருகில் உள்ள மாண்டிபயாலோ ஆசிரமத்திற்குச் சென்று தவவாழ்வு நடத்த ஒப்புதல் கேட்டார். ஒப்புதலும் தரப்பட்டது. துறவிகளின் குடிலைச் சுற்றி அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் அளித்த தோட்டமொன்று இருந்தது. “மூன்று அல்லது நான்கு துறவிகள் சேர்ந்து ஒன்றாக வாழவேண்டும், அவர்களில் இருவர் தாயாகவும், மற்றிருவர் பிள்ளைக ளாகவும் இருக்க வேண்டும். முதலிருவர் மார்த்தாளைப் போலும், பின் இருவர் மரிய மகதலேனாளைப் போலும் வாழ வேண்டும். உரிய காலத்தில் கட்டளைச் செபங்கள் அனைத்தும் செய்யப்பட வேண்டும். பிள்ளைகள் தாயிடம் இருந்து உண்ண வேண்டும். தாயைத் தவிர வேறு எவருடனும் பேசக்கூடாது. தினம் மூன்று முறை பேசலாம். இது அசிசியார் வகுத்த விதி. இதன்படி மரிய மகதலேன் அம்மாளாக அந்தோனியார் வாழ்ந்து வந்தார். உடன் துறவி ஒருவரிடமிருந்த குகை ஒன்றில் தவ வாழ்வு நடத்தினார்.

ஒரு சிறு துண்டு ரொட்டியும் சிறிது குடி நீரும்தான் அவரது உணவு.

கடின உடல் வாதனையால் பலவீனமடைந்து அவர் உடல் தள்ளாடியது.

"இரு துறவிகள் அவரைத் தாங்கி மீண்டும் ஆச்சிரமத்தில் விட்டுச் சென்றனர்.

இயற்கை எழில் மிகும் இடங்களில் மாண்டிபயாலோவும் ஒன்று. இது ஒரு குன்றின் மீது அமைந்தது. குன்றின் மேல் நின்றால் அட்ரியாடிக் கடல் வரை பரந்து இருக்கும் ரோமானோ சமவெளி சாட்சியளிக்கும். மேலும் அதிகத் துறவற முயற்சிகளை மேற்கொள்ள துறவியொருவரின் குகையொன்றைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்தினார். அவரின் இசைவு பெற்று அந்தோனியார் காலையில் பொதுக் கட்டளை செபம் முடிந்ததும் இக்குகைக்கு வந்து விடுவார். ஓரிரு உரொட்டித் துண்டுகள், ஒரு குவளைத் தண்ணீர் அவரது உணவு. இங்கு அவர் வனத்து அந்தோனியாரைப் போன்று மிகக் கடின தப முயற்சிகளை மேற்கொண்டார். மாலையில் மடம் திரும்புவார். 'ஒன்றில் வேதனைப்பட வேண்டும் அல்லது சாகவேண்டும்" என எழுதியுள்ளார் தூய அவிலா தெரசம்மாள். தவம் செய்ய வேண்டும் என்பது நம் ஆண்டவரின் அறிவிப்பு. தூயவர்கள் எந்த அளவிற்குத் தூயவர்களாயிருந்தனரோ அந்த அளவிற்கு கடின தவஞ் செய்தனர். இதற்கு அந்தோனியாரும் விதி விலக்கல்ல. இக்குகையில் அவருக்கு ஏற்பட்ட பல சோதனைகளை அவர் தவ வலிமை வென்றது.

ஒரு நாள் மேலாளரிடம் முழந்தாப்படியிட்டு, சமையல் அறையை சுத்தம் செய்தல், பாத்திரங்களை கழுவுதல் போன்ற பணியினைத் தான் செய்து, மற்றவர்களுக்கு உதவ உத்தரவு தரவேண்டுமென வேண்டினார். உத்தரவும் கிடைத்தது. குருவானவரான இவர் ஏனைய சாதாரண துறவிகளைப் போல் மன மகிழ்வுடன் இப்பணிகளைச் செவ்வனே செய்தார். இவ்வாறு அடக்கமுடன் ஏழ்மையாக வாழ்ந்து வந்தார் நமது புனிதர்.