தாழ்ச்சி தந்த மாட்சி - முதல் மறையுரை

"தன்னை பெரியவர் என்று எண்ணிக்கொள்கிற எவனும் தன்னையே ஏமாற்றிக் கொள்கிறான். ஒவ்வொருவனும் தன்னுடைய நடத்தையை ஆய்ந்து பார்க்கட்டும்” (கலாத் 6/3-4)

குருப்பட்ட வழிபாட்டு நிகழ்ச்சி

பல புனிதர்கள் விண்ணுலகில் உண்டு. இவர்களில் பலர் தானதருமங்கள் எதுவும் செய்யவில்லை. அவர்களின் ஏழ்மை நிலை இதற்கு இடந்தரவில்லை. பல புனிதர்கள் உடலை வாட்டும் வாதனைகள் செய்யவில்லை. அவர்கள் உடல்நிலை அதற்கு ஒத்து வரவில்லை. பலர் துறவிகளாகச் செல்லவில்லை . அவர்கள் குடும்பநிலை அதற்கு வாய்ப்பளிக்கவில்லை. ஆனால் "தாழ்ச்சி" என்ற புண்ணியத்தை கடைப்பிடிகாத தூயவர்கள் வானுலகில் இல்லை.

தூய்மையும், கற்பு நெறியும் ஒருவரிடம் இருந்தும் அவரிடம் தாழ்ச்சி இல்லையேல் அதனால் வரும் பயன் யாது? என தூய அகஸ்தீனார் அறிவுறுத்தியுள்ளார்.

தூய தோமஸ் அக்வீனாஸ் சொல்வதாவது: "தாழ்ச்சி ஒரு புண்ணியம். அது நல்ல கிரியைகளில் பயன் தருகிறது".

தாழ்ச்சிமிக்க அந்தோனியார் மாட்சியடைய இறைவன் சித்தமானார். 1222ம் ஆண்டு குருப்பட்டம் அளிக்கும் வழிபாடு போர்லி பட்டணத்தில் நிகழ இருந்தது. சுவாமிநாதர் சபைத் துறவிகளும், பிரான்சிஸ் சபைத் துறவிகளும் பட்டம் பெறும் பட்டியலில் இடம் பெற்றனர். பழைய ஆலயமான தூய மெக்குராலே ஆலயத்தில் ஆயர் ரிக்காரத்தலூஸ் பெல்மான்தி சடங்குகளை நிறைவேற்றினார். குரு பட்டத்திற்கான மறையுரை ஆற்ற அழைக்கப்பட்ட பிரசங்கியார் வரவில்லை. சுவாமி நாதர் சபையினர் தங்களால் இயலாது என தட்டிக்கழித்தனர். அந்தோனியாரின் திறமையை எவரும் அறியவில்லை . யாவரும் மறுத்ததால் அந்தோனியார் மறையுரை ஆற்ற வேண்டுமென மேலாளர் கேட்டுக்கொண்டார்.

பின்பு "அந்தோனியார் மறையுரையாற்ற வேத சாஸ்த்திரம், விவிலியம் இவருக்குத் தளர் பாடமா? ஏதோ சாதாரண அறிவுடைய குருதானே! நமக்குத் தெரிந்தது கூட இவருக்குத் தெரியாதே! வேடிக்கை பார்க்கலாம்" என மற்ற துறவிகள் தமக்குள் சொல்லிக்கொண்டனர். மேலாளர், இவருக்குப் போதுமான மறையியல் அறிவு இல்லையே; இலத்தீன் மொழி தெரியாதே எனத் தயங்கினார். இவற்றில் அவர் மேதை என அவர்கள் அறிந்ததே இல்லை. ஏனெனில் அதனை ஒரு போதும் வெளிப்படுத்தியதில்லை. அந்தோனியார் தாழ்ச்சியால் உந்தப்பட்டு முதலில் மறுத்தார்; பின் பணிந்தார். அந்தோனியார் ஆயரின் ஆசி பெற்று மறையுரை ஆற்ற எழுந்தார்.

ஆற்றலைக் காட்டிய முதல் மறையுரை

"அவர் மரண மட்டும் கீழ்ப்படிந்திருந்தார்” என்பது அவர் எடுத்துக்கொண்ட பொருள். முதலில் வார்த்தைகள் மெதுவாய் வந்தன. பின் கடல்மடை திறந்தது போல் வெளிவந்தன. விவிலிய மேற்கோள்கள் விளக்கம், மறையியல் எடுத்துக் காட்டுகள் சரமாரியக வந்தன. "தூய ஆவியானவரின் அருட்கொடை பெற்றவர். மாபெரும் மேதை" என யாவரும் வியந்து பாராட்டினர். அவரது பிரசங்கத் திறமை பற்றிய செய்தி காட்டுத் தீ போல் எங்கும் பரவலாயிற்று, விளக்கை ஏற்றி மரக்காலால் மூடி வைப்பார்களா?

அந்தோனியாரின் பிரசங்க ஆற்றலை கிராசியான் சுவாமிகள் தூய அசிசியாரிடம் அறிவித்தார். அவர் மிகவும் மகிழ்ந்து "எனது சபையில் ஒரு மறை ஆயர் தோன்றியுள்ளார்'' என்றார். அது முதல் இவ்விருவருக்கும் நெருங்கிய தோழமை ஏற்பட்டது. தூய அசிசியாரின் வரலாற்றை எழுதியுள்ளார். அதில்

"அந்தோனியார் பிரான்சிஸின் தோழர், மகிமை மிகும் பிதா, பதுவை அந்தோனியார் புனித பிரான்சிஸின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சீடரில் ஒருவர். அவரை பிரான்சிஸ் எனது மறை ஆயர் என்று அழைப்பார் என எழுதியுள்ளனர். போர்லியோவில் அவர் எவ்வளவு நாள் இருந்தாரெனத் தெரியவில்லை .

ஆயின் போர்லியோவில் அவருக்கு மூன்று ஆலயங்கள் 1629, 1680, 1906 என்ற ஆண்டுகளில் எழுப்பப்பட்டன. அவரின் முதல் மறை உரைக்கு இவை தக்க எடுத்துக்காட்டுகள் ரோமாக்னா மாகாணம் முழுவதும் சென்று மறை உரை ஆற்றும் புதுப்பணியை அவருக்கு மேலாளர் அளித்தார்; ஏகாந்த நிலையினை விட்டு போதக நிலையைத் தெரிந்து கொண்டார். அன்று லம்பார்ட்டி எமிலாயா, ரிமினி, வெனிஸ், பிரூலி என்ற மாவட்டங்கள் ரோமாக்னா மாநிலத்துடன் இணைந்திருந்தன.

உலகம் ஒரு தோட்டம். அதில் கனி விளைவிப்பது மிகக் கடினமானது.

துறவிகள் மனிதரை விட்டகன்ற இடங்களில் உழைத்து நல்வாழ்வு, நற்பெயர் என்ற மணம் தனைப் பெற்று வாடி வீழ்ந்து மடிதல் எவ்வளவு சிறப்பானது? இதனால் தான் கிறிஸ்து “நான் வயலின் மலர்” என்று திருவுளம் பற்றி மகிழ்ந்தார் என அவர் தமது புதிய அப்போஸ்தலப் பணி பற்றி எழுதியுள்ளார்.

இட ஒரு பெரும் மறை இயல்மேதை, மறை உரை ஆற்றச் சென்று விட்டார். திரள் திரளாக மக்கள் அவரின் அமுத வாக்கியங்களை கேட்க திரண்டு வந்து, திருந்திய உள்ளத்தோடு திரும்பினர்.