பெர்தினாந்து அந்தோனியாராதல்

"நானோ கைவிடப்பட்டளவள், தனியாளாய் இருக்கிறேன். அமைதியின் ஆடையைக் களைந்து விட்டேன். தவத்துக்கு உரிய மயிராடையை உடுத்துக்கொண்டேன். என் வாழ் நாளெல்லாம் உன்னதரை நோக்கி ஓலமிடுவேன்” (பாரூக் 4/19-20)

பிரான்சிஸ்கன் சபை 

துறவறச் சபைகளில் மிகவும் சிறப்புற்றது அசிசியாரின் பிரான்சிஸ்கன் சபை. சிலுவையில் அறையப்பட்ட இயேசுநாதர் ஒருநாள் பிரான்சிசைத் தழுவினார். இதனால் ஆண்டவரின் ஐந்து காயங்கள் அசிசியாரின் உடலில் பதிந்தன. இது முதல் அவர் ஐந்து காய பிரான்சீஸ் என அழைக்கப்படலானார். இதே சபைக் குருவானவர் பத்ரோ பீயோ அடிகளும் ஐந்து காயங்களைப் பெற்றவர். இவர் அண்மையில் காலமானார். தூயபிதா 2வது அருள் சின்னப்பர் பாப்பிறையானதும் அசிசி மாநகர் சென்று திருத்தலங்களைப் பார்வையிட்டார். இத்தாலி மக்களுக்கு மிகப் பிரியமான நகர் அசிசி. "அசிசியாரின் ஏழ்மை , இறைப்பற்று, மறை பரப்புப் பணி மீதான ஆவல், ஈகை இக்காலத்தில் மிகத் தேவை” என அப்பொழுது மக்களுக்கு அறிவுறுத்தினார்.

அசிசியாரை எல்லா மத்தினரும் போற்றுகின்றனர். பறவைகள், விலங்குகள் அவரின் சகோதர சகோதரிகள். இவர் ஒரு ஜவுளி வியாபாரியின் மகன். வாலிப வயதில் ஆடம்பர, வீர வாழ்வில் அவரது மனம் வட்டமிட்டது. நண்பர்களுக்கும் குறைவில்லை . அவரது குதிரையின் காலடிபடாத இடமே இல்லை எனலாம். இச்சந்தர்ப்பத்தில் இவர் வாழ்வில் ஒரு திருப்பம் ஏற்பட்டது, பிணியுற்றார். தேவ அருளால் குணமடைந்தபின் சான்தமியோனோ ஆலயத்தில் ஒரு தினம் அவர் உருக்கமாய் செபம் செய்து கொண்டிருந்தபோது பாடுபட்ட சுரூபத்திலிருந்து ஒரு குரல் எழும்பியது.

"என் பாழடைந்த ஆலயத்தை பிரான்சீஸ் நீ கட்டி எழுப்ப மாட்டாயா?” என்பதே அக்குரலொலி. அதற்கு செவிசாய்த்த அவர் தன் கடையிலிருந்த துணிகளை விற்றுப் பொருள் சேர்த்தார். தந்தை மகனைக் கடிந்தார். அசிசியார் ஆண்டகையிடம் முறையிட்டார். ''இனிமேல் என் தந்தை இறைவனே' என உரைத்து தந்தையார் தந்த உடைகளை அவரிடமே அளித்தார். ஆண்டகையிடமிருந்து காக்கி உடைகளைப் பெற்று அணிந்து இறைவனுக்கு தன்னை முழுவதும் அர்ப்பணித்து அவர் விட்ட வழியே சென்றார். பெரும் சீமாட்டியான கிளாரம்மாளும் யாவற்றையும் துறந்து அவர் பின் சென்றாள். மகளிருக்கு துறவற மடங்கள் ஏற்படுத்தப்பட்டன.

ஆப்பிரிக்காவில் வேதசாட்சிகள்

1219ஆம் ஆண்டு பெராடு, பீட்டர், அட்ஜித்தாஸ், அக்கூர்ஸியுஸ், ஓட்டே என்ற ஐந்து பிரான்சிஸ்கன் சபை துறவிகள் கோயின்பிரா மடத்தில் ஒரு நாள் தங்கினர். பெர்தினாந்து அவர்களுக்கு பணிவிடை செய்தார். இவர்களிடமிருந்து பெர்தினாந்து அசிசியாரை பற்றியும் அவரது சபையைப் பற்றியும் அறிந்தார். செல்வந்தரான் அசிசியார், கிளாரம்மாள் துறவு பூண்ட நிகழ்ச்சி அவரது மனதைக் கவர்ந்தது. பின்னர் இவர்கள் 1220 ஜனவரி 26ல் ஆபிரிக்காவில் தேவசாட்சிகளாயினர். அவர்களின் எலும்புகளை தோன் பெத்ரோ என்ற கோமகன் கோயம்பிரா எடுத்து வந்தார். அகஸ்தீனார் சபை துறவி ஜாண் ராபட்டிற்கு அவற்றை அன்பளிப்பாக அளித்தார். வேதசாட்சியாக வேண்டுமென்று அவர் அவாவுற்றார். ஒரு தினம் இரு அசிசியார் சபைத் துறவிகள் பிச்சை கேட்டு கோயிம்பிரா மடம் வந்தனர். தானும் அவர்கள் சபையில் சேர விரும்புவதாக அவர் தெரிவித்தார். இது பற்றி பிரான்சிஸ்கன் சபை மேலாளருக்கு அறிவிக்கப்பட்டது. அவரும் மனம் இசைந்தார். ஆனால் அகஸ்தீனார் சபை மேலாளர் இணக்கம் தரவில்லை . அகஸ்தீனார் சபை பிறநாட்களில் வேதபோதக அலுவலை மேற்கொள்ளவில்லை. கல்வி நிலையங்களை அவர்கள் நடத்தி வந்தனர். ஆலயத்திருப்பணியும், வழிபாடுகளும் நடத்தி வந்தனர். வேத சாட்சியாக வேண்டுமென்று பெர்தினாந்தின் ஆவல், அகஸ்தீனார் சபைத்தலைவரை அசைய வைத்தது. அவரும் தன் சபையை விட்டு, பிரான்சிஸ்கன் சபையில் பெர்தினாந்து சேர அனுமதி வழங்கினார். ஒரு நாள் அசிசியார் சபைத் தலைவரும் அகஸ்தீனார் சபை மேலாளரும் ஒன்று கூடினர். பிரான்சிஸ்கன் சபை அங்கியைப் பெர்தினாந்து பெற்றார். பிரான்சீஸ் சபைத் தலைவரிட மிருந்து அகஸ்தீனார் சபை வெள்ளை அங்கியை அகஸ்தீனார் மேலாளரிடம் கொடுத்தார்.

பெர்தினாந்தும் வேதசாட்சியாக விரும்பி அசிசி பிரான்சீஸாரின் சபையில் சேர்ந்தார். பெர்தினாந்து செல்லும் முன் ஒரு உடன்துறவி கிண்டலாக “நீ கட்டாயமாக புனிதராவாய்'' என்றார். அதற்கு அவர், ''நான் தூயவரானதைச் செவியுறும்போது நீர் இறைவனுக்குப் புகழ் உரைப்பீர்" என்றார். அவர் சொல்லியவாறே 1220ஆம் நாள் அவர் பிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்து "அந்தோனியார்'' என்ற பெயர் சூட்டப் பெற்றார். இவ்வாறு பெர்தினாந்து அந்தோனியாரானார்.

அக்காலத்தில் பிரான்சிஸ்கன் சபையில் சேருபவர் தன் பழைய பெயரை விட்டு புதிய பெயர் எடுப்பதில்லை . ஆனால் பெரும் துறவியாக விரும்பிய பெர்தினாந்து மாபெரும் மாமுனிவரான வனத்து அந்தோனியார் பெயரை தமக்கு சூட்டிக் கொண்டார். நாமும் இனி அவரை அந்தோனியார் என்றே அழைப்போமாக.

ஆபிரிக்கா பயணம்

ஆபிரிக்காவிலுள்ள சாரசன் சாதியாரை மனம் திருப்ப துறவிகள் அனுப்பப்பட வேண்டுமென மூன்றாவது ஓனோரியஸ் என்ற பாப்பரசர் அறிவித்தார். 1220 நவம்பரில் அந்தோனியார் மொராக்கோ புறப்பட்டு 1221ஆம் ஆண்டு கோடை காலத்தில் சேர்ந்தார். அங்கு பிணியுற்று படுக்கையிலானார். பிலிப்பினோ என்ற சகோதரன் அவரை கவனித்து வந்தார். இவர் அரசியால் அனுப்பப்பட்டவர். காய்ச்சல், உடல்வலி நீங்கியதும் தாயகம் திரும்ப வேண்டும் என்ற ஆணை பிறந்தது. வேத சாட்சியாகும் பேறு அவருக்குக் கிடைக்கவில்லை. ஆயினும் பணிந்து திரும்பினார். கடல் கொந்தளிப்பால் கப்பல், சிசிலித்தீவை அடைந்தது. இங்குள்ள சகோதரர்கள் அவரை நன்கு பேணிக்காப்பாற்றினர். பிணியும் நீங்கியது. இவ்வாறு அவர் இத்தாலி நாடு வந்தார்.

உப்பு நீர் சுத்த நீராகியது

ச சபை மேலாளர் வெளியூர் சென்றார். மடத்தின் கிணற்றுநீர் உப்பு நிரம்பி இருந்தது. இதனால் துறவிகள் வெளியில் சென்று நீர் கொண்டுவர வேண்டியதாயிற்று அந்தோனியார் கிணற்று நீரை சுத்த நீராக்கினார். திரும்பி வந்த தலைவர் நடந்ததை அறிந்தார்.

"துறவிகள் வெளியே சென்று தண்ணீர் கொண்டு வந்தால் என்ன கெட்டுவிடும்?' என வெகுண்டு, அந்தோனியாரை தனியறையில் அடைத்தார். கசையால் தன்னை அடித்து வாதனை செய்ய வேண்டும் என்று பணித்தார் சபை மேலாளர். நம் புனிதர், அறிவியல் மேதை - தாழ்ச்சியின் கண்ணாடி என்று அறிந்தாரில்லை, அந்தோனியார் பதில் எதுவும் பேசவில்லை .

அவர்மீது எந்த தப்பிதமும் இல்லை .

"நீ தவறிப் போகாதபடி உன் வார்த்தைகளில் கவனமாயிரு'' (சீராக் 1/38)

"விசுவாசத்திலும் சாந்தத்திலும் அவரைப் புனிதராக்கினார்" (சீராக் 45/4)

ஆம்! அந்தோனியார் இறைவனால் புனிதராகத் தெரிந்து கொள்ளப்பட்டவர்!

ஆகவே தான், சேர்ந்தது அகஸ்தினார் சபை
புகுந்தது அசிசியார் சபை!
சென்றது மொராக்கோ வேதசாட்சியாக,
வந்தது பிணி, அதற்கெதிராக!
புறப்பட்டது போர்த்துக்கல்லுக்கு!
அடைந்தது, சிசிலித் தீவுக்கு!

இதுதான் இறைவனின் திருவுளம்.