மரணத்திற்குப் பின் மகிமை

"நற்செய்தியை அறிவிக்கவும் சமாதானத்தை தெரிவிக்கவும் மீட்பைத் தெரிவிக்கவும் வருகிறவ ருடைய மலரடிகள் எத்துணை அழகாய் இருக்கின்றன.” (இசை .52/7)

புனிதர் பட்டம் பெறுதல்

அந்தோனியார் மறைந்த பின் அவரை மக்கள் புனிதர் என்றும் கருதிவிட்டனர். அவரது கல்லறைக்குச் செல்லும் கூட்டத்தைக் கட்டுப்படுத்த இயலவில்லை . நகரத்தின் பிரபுக்களும், போர் வீரர்களும், மாணவர்களும் அணி அணியாய் வந்தனர். அவர்கள் கொண்டு வந்த திரிகள் மிகப்பெரிதாக இருந்தன. அவற்றைத் தூக்கிவர பதினாறுபேர் தேவைபட்டனர்.

பல புதுமைகள் நடந்தேறியமையால் காப்பேதே போந்தே மக்கள் அந்தோனியார் உடலிற்காகத் தாங்கள் செய்த கலகம் பெரும் தவறு என எண்ணி மனம் வருந்தினர். வெறுங்காலுடன் சங்கீதங்களை பாடி, குருக்களுடனும் திரிகளுடனும் அவரது கல்லறைக்குச் சென்று அதனைத் தரிசித்து பாவப்பரிகாரஞ் செய்தனர். பதுவை ஆயரும், பிரபுக்களும், தலைவர்களும் அந்தோனியார் இறந்த ஒரு மாதத்திற்குள் அவருக்குப் புனிதர் பட்டமளித்திட வேண்டுமென பாப்பிறைக்கு விண்ணப் பித்தனர்.

பாப்பிறை 9 - வது கிரகோரியார் தூயவர் மீது பற்றுடையவர். அவரை நன்கு அறிந்தவர் - நண்பர். அவர் ஆய்வுக்குழு ஒன்றினை அமைத்தார். புனித ஆசீர்வாதப்பர்சபை, அகஸ்தீனார்சபை மடாதிபதிகள், பதுவை ஆயர் என்போரைக் கொண்ட ஒரு குழுவை பாப்பிறை நியமித்தார். அவர்களும் அந்தோனியாரைப் பற்றிய அறிக்கையினைத் தயாரித்து விரைவில் அனுப்பி வைத்தனர். ஒரு சில கருதினால் மார்கள் இவ்வளவு விரைவில் தூயவர் பட்டமளிப்பது சரியன்று என்று திட்டமாய் உரைத்தனர். அவர்களில் முதல்வரான கருதினால் ஒரு தினம் கனவு கண்டார். ஆலயப் அபிஷேகத்திற்கென பாப்பிறையும் கருதினால்மாரும் குழுமியிருந்தனர். பீடத்தின்மேல் புனிதப் பண்டங்கள் இல்லை. பாப்பிறை எங்கே? என்று கேட்டார். அங்கும் இங்கும் தேடினர். ஒரு சவப்பெட்டியைக் கண்டனர். அதைத்திறந்தனர். நறுமணம் வீசியது. அர்ச்சியஷ்ட பண்டமாக உதவியது" இது தான் கனவு. அப்பெட்டியிலிருந்த உடல் அந்தோனியாருடையது என உணர்ந்த கருதினால் தனது போக்கை மாற்றினார். தடங்கலும் நீங்கியது. அவருக்குப் புனிதர் பட்டம் 1232 மே திங்கள் 30 - ஆம் நாள் தூய ஆவியானவர் திருநாளன்று தரப்படுமெனத் தீர்மானிக்கப்பட்டது. ஸ்போலியோவில் இப் பெரும் நிகழ்ச்சியினை நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

குறிக்கப்பட்ட நாள் காலை பாப்பிறை புனிதர் பட்டமளிப் பதற்கான திருவுடைகளை அணிந்து: கருதினால்கள், ஆயர்கள். மறையவர்கள் புடை சூழ ஸ்போலியோ பேராலயம் வந்தனர்.

தூயவரின் பக்தி, புதுமைகள் அனைத்தும் எடுத்துச் சொல்லப் பட்டன. மட்டற்ற மகிழ்வுடன் தூய பிதா தம் இருக்கையிருந்து எழுந்து, கரங்களை வானகத்தை நோக்கி உயர்த்தி, அந்தோனியார் தூயவர் எனப் பிரகடனஞ் செய்து, அர்ச்சியஷ்ட பட்டமளித்தார். உடனே "தேதேயும்'' என்ற தூய அமிர்தநாதரின் நன்றியறிதல் கீதத்தைத் தொடங்கினார்.

மணிகள் ஒலித்தன. ஆலயமனைத்தும் மங்கள இசை வானை மூட்டியது.

மெய்சிலிர்த்தது மக்களுக்கு, மறைந்த ஒரு வருடத்திற்குள் புனிதர் என்ற பட்டத்தைப் பெறும் மாபெரும் பேற்றினை அந்தோனியார் பெற்று விட்டார்.

ஈன்ற பொழுதிலும் பெரிதும் உவந்த பெற்றோர்

"நீதிமானின் தந்தை மிகுதியாக அகமகிழ்கிறான். ஞானியைப் பெற்றவன் அவனைப் பற்றி மகிழ்கிறான். உன் தந்தையும், தாயும் மகிழ்வார்களாக”.

அந்தோனியாரின் தந்தையான மார்த்தீன் பிரபுவும், தாய் மரியும் தூயவர் பட்டமளிப்புச் சடங்கில் கலந்திடும் மாபெரும் பாக்கியத்தைப் பெற்றனர்.

அவர்களின் மகிழ்ச்சியினை அளவிட இயலுமா? தம் மகனை நோக்கி வேண்டினர்.

பாப்பிறைக்குப் பேரானந்தம் தாங்க முடியவில்லை. ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.

நன்றியறிதல் பாடல் முடிந்ததும் தேவ ஏவுதலால் "ஓ பெரும் மறை மேதையே...'' என்ற திருவார்த்தைகளைப் பாடினார்.

''ஓ! மகா! மறை இயல் மேதையே! திருமறையின் விளக்கே! தூய அந்தோனியாரே! இறைவனின் சட்டங்களை விரும்பியவரே! இறைவனின் திருமகனிடம் எங்களுக்காய்ப் பரிந்து பேசுபவராய் இரும்" என வேண்டினார்.

தூயவரின் தாய் தந்தையரை பாப்பிறையும் மக்களும் கண்டு ஆனந்தமடைந்தனர்.

பாப்பரசர், இதற்குச் சில தினங்களுக்குப் பின்னர் அந்தோனியார் "உலகமனைத்திற்குமான புனிதர்" எனவும் இவர் திருநாளை திருச்சபை அவர் இறந்த ஜூன் திங்கள் 13 - ஆம் நாள் கொண்டாட வேண்டு மெனவும் பிரகடனஞ் செய்தார். கோடி அற்புதர் உலகின் கோடானுகோடி மக்களின் புனிதரானார்.

பாப்பிறை 9-ம் கிரகோரியாரின் ஆணை

மதிப்பிற்குரிய சகோதரர்களுக்கு நலமும், அப்போஸ்தலிக்க ஆசீரும்.

"நமது ஆண்டவர் தீர்க்கதரிசி வழியாய், புகழ், வாழ்த்து, மகிமையாய் உன்னை எல்லா மக்களுக்கும் அளிப்பேன். அவர் வழியாக நீதிமான் சூரியனைப் போல இறைவனின் திருமுன் ஒளிர்வான். தங்களது தகுதியாலும், தூய்மையாலும் இறைவனால் முடிசூட்டப்படுபவர்கள் மீது நாமும் நமது செபத்தாலும் வணக்கத்தாலும் புகழ் செலுத்துவது நீதியாகும். தமது தூயவர்களுடன் நித்தியத்திற்கும் புகழப்படுவரையே நாம் அவர்கள் வழியாகப் புகழ்கின்றோம். தனது மகத்துவத்தையும், கருணையுடன் அவர்கள் வழியாய் நமது ஈடேற்றத்திற்காக அளித்த பல அடையாளங்களாலும் புதுமைகளாலும் பேசுகத்தை நசுக்கி திருச்சபையை மகிமைப்படுத்த திருவுளமானார். விசுவாசிகள் இன்னமும் அதிக ஆர்வமுடனும் நற்செயல்கள் புரியவும் தாங்கள் நடக்கும் இருளிலும் குருட்டாட்டத்திலிருந்தும் விடுதலை பெற்று சரியான பாதையை அடையவும், ஒளியும் வழியும் உண்மையுமான கிறிஸ்துவை யூதர்களும் அஞ்ஞானிகளும் முதலாய் அறியவும் இவர்கள் தரப்பட்டுள்ளனர்.”

ஆகையால் பிரியமான பிள்ளைகளே! எல்லா அருள்கொடைக ளையும் தருபவருக்கு நன்றிகூறுவோமாக. நமது நாட்களில் கத்தோலிக்க நெறிகளில் உறுதிப்படுத்தவும், பேதகங்களைத் தகர்த்திடவும் புதிய அடையாளங்களைச் செய்து இவ்வுலகில், கத்தோலிக்க விசுவாசத்தை தங்கள் முழு இருதய சேவையாலும், சொல்லாலும் தூய செயலாலும், நிலை நிறுத்திடவும், தமது வல்லமையை மீண்டும் ஒரு முறை (அவர்களுக்கு) அளித்திடச் சித்தமானார். இவர்களில் ஒருவர்தான் முத்திப் பேறுபெற்ற, நினைவில் கொண்டிடத்தக்க பிரான்சீஸ் சபை தூய அந்தோனியர்.

உலகில் அவர் வாழ்ந்தபோது பல நல்லியல்புகளைப் பெற்றிருந்தார், பரத்தில் அவரது பல புதுமைகளால் மகிமைப்படுத்தப் படுகின்றார். இவ்வித உறுதியான அடையாளங்களால் அவரது தூய்மை வெளிப்படுத்தப்படுகின்றது.

"திருச்சபையில் இறுதி பரிந்தம் இறைவனுடன் நிலைநிற்பது போதுமெனின் இறுதிவரை உண்மை உள்ளவனாயிரு: உனக்கு வாழ்வின் முடிவைத் தருவேன்” - என்று போராடும் திருச்சபையில் தூயவரென ஒருவர் ஒப்புக்கொள்ளப்படுவதற்கு இரு காரியங்கள் தேவையாகின்றது.

அவை மேலான புண்ணியமும், புதுமைகளுமாம். இவை இரண்டும் ஒன்றிற்கொன்று ஒப்புரவாக வேண்டும்.

புண்ணியமில்லா புதுமையையும், புதுமையில்லா புண்ணியமும் தூயவரென நிரூபணமாவதற்கு முழுச் சான்றுகளாகாது.

உண்மையான நல்லியல்புடன் திட்டமான புதுமைகளும் முன்காணப்பட்டால், தூய்மையான உண்மையான அடையாளத்தை நாம் பெறுகின்றோம். அந்த நல்லியல்புகளால், அவரை கனம்பண்ணும் படியாக நாம் இறைவனால் தூண்டப்படுகின்றோம்.

இவ்வுலக வாழ்விற்குப் பின் இயேசுவிடம் வாழ்ந்திட அவர் தகுதியுடையவரானார். இறைவன் இவ்வாறு மகிமைப்படுத்திய அவரை மனிதர்களும் வணங்குவதென்ன?

விளக்கைக் கொழுத்தி மரக்காலால் மறைத்து வைப்பவனுண்டோ? என்ற வேதவாக்கு, அதனை விளக்குத் தண்டின் மேல் வைத்து வீடு முழுவதும் ஒளியைப் பரப்புவான் என்கிறது.

யார் புனிதர் பட்டியலில் சேர்க்கப்பட்ட அந்தோனியாரும் சுடர் வீசும் விளக்காக ஒளிர்ந்தார். எனவே விசுவாசிகள் தங்கள் இரட்சிப்பிற்காக அவரை மகிமைப்படுத்தவும், இறைவன் அவரது செபத்தால் கவரப்பட்டு இவ்வுலக வாழ்வில் நமக்கு அருளையும், மறு உலக வாழ்வில் மகிமையையும் தர அவர் திருநாளை ஆண்டு தோறும் ஜூன் திங்கள் 13 - ஆம் நாள் கொண்டாட வேண்டும் என்று இந்த எழுத்தின் மூலம் பணிக்கின்றோம் - வேண்டுகின்றோம்.

தமது புதுமைகளால் திருச்சபையில் பேரொளியை ஏற்றும் இவரது கல்லறையை தரிசித்து மரியாதை செய்ய வேண்டுமெனவும் விரும்புகின்றோம். இறைவன் மீதுள்ள நம்பிக்கையாலும், தூய அப்போஸ்தலர்களான இராயப்பர் சின்னப்பர் அதிகாரத்தாலும் அதனை அவர் திருநாளிலோ அதன் இடைவேளையிலோ சந்தித்து மனம் வருந்தி நல்ல பாவசங்கீர்த்தனம் செய்தவர்களுக்கு ஒரு வருடப் பலனை அருளுகின்றோம்.

ஸ்போலியோவில் ஜூன் திங்கள் 11ம் ஆம் நாள் நமது ஆட்சியில் ஆறாவது ஆண்டு தரப்பட்டது.

மணிகள் தாமாக ஒலித்தல்

அந்தோனியார் புனிதர் என பிரகடனஞ் செய்யப்பட்டவுடன், லிஸ்பன் ஆலயமணிகள் தாமாகவே அடித்தன. அவரது சொந்த ஊர், தங்கள் ஊரில் ஒரு மாபெரும் தூயவர் தோன்றியதற்காக இறைவனுக்கு அஞ்சலி செலுத்தியது.

1263ல் பதுவை சட்டசபை உறுப்பினர்கள், புதிதாக கட்டப்பட்டு வரும் பேராலயத்திற்கு அவர் உடல் எடுத்துச் செல்லப்பட வேண்டும் என முடிவு செய்தனர். பதுவை மக்களின் ஆர்வத்தாலும் தாராள பொருள் உதவியாலும் பைஸாந்திய கோதிக் பாணியில் பிரமாண்டமான ஆலயம் கட்டி முடிக்கப்பட்டது. இது பதுவையில் கம்பீரமாக அமைந்துள்ளது.