மன உறுதியோடு ஓடுவோமாக *** மறையுரை சிந்தனைகள்


மன உறுதியோடு போராடிய வங்கி உரிமையாளர்

விவேகானந்தர் ஒருமுறை பாரிசிற்குச் சென்றிருந்தபொழுது, ஒருநாள் மாலைவேளையில் அங்கிருந்த பெண்சீடர் ஒருவருடன் கோச் வண்டியில் நகரை வலம்வந்தார். அவ்வாறு வரும்பொழுது, வண்டியை ஓட்டிக்கொண்டு வந்தவர் வண்டியை ஓரிடத்தில் நிறுத்தினார். அங்கு மிகவும் ஆடம்பரமான உடையணிந்த ஒரு பெண்மணியும், இரண்டு சிறுவர்களும் இருந்தார்கள். அவர்களைக் கட்டியணைத்துக்கொண்டு சிறிதுநேரம் பேசிய அவர், அவர்களிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு வண்டியை ஓட்டத் தொடங்கினார்.

அப்பொழுது விவேகானந்தரின் பெண்சீடர் அவரிடம், “மிகவும் ஆடம்பரமாக உடையணிந்திருக்கும் இவர்கள் உங்களுக்கு என்ன உறவு வேண்டும், உண்மையில் நீங்கள் யார்?” என்றார். அதற்கு வண்டி ஓட்டுநர், “அவர்களெல்லாம் என் மனைவி மற்றும் பிள்ளைகள்... இந்த நகரில் ஒரு பிரபல வங்கி இருக்கின்றதல்லவா! அதன் உரிமையாளர் நான்தான். வங்கியிலிருந்து கடன்பெற்றவர்கள் அதைத்திருப்பிச் செலுத்தாததால், வங்கி திவாலாகிவிட்டது. வங்கியிலிருந்து கடன்பெற்றவர்களிடமிருந்து பணத்தைத் திரும்ப வாங்கி, வங்கி முன்புபோல் செயல்படுகின்றவரைக்கும் இந்தக் கோச் வண்டியை ஓட்டலாம் என்று முடிவுசெய்தேன். மேலும் என் மனைவி புதிதாக ஒரு தொழில் தொடங்கி, குடும்பத்தை ஓட்டுவதற்கு எனக்கு ஒத்துழைப்பை நல்கிக்கொண்டிருக்கின்றார். கூடியவிரைவில், இந்த வண்டியை ஓட்டுவதை விட்டுவிட்டு, வங்கியை நிர்வகிக்கத் தொடங்கிவிடுவேன்” என்றார். இதைப் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்த சுவாமி விவேகானந்தர், “தன் வங்கி திவாலானபோதும், மனம் உடைந்து போகாமல், மீண்டுமாக வங்கியை முன்புபோல் இயங்கிச் செய்வேன் என்று மன உறுதியோடு போராடிக்கொண்டிருக்கும் இவரல்லவா நம்பிக்கைக்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டு” என்றார்.

ஆம், வாழ்க்கையில் எத்தகைய இடர்வரினும் மன உறுதியோடும் நம்பிக்கையோடும் தொடர்ந்து போராடவேண்டும் அதற்கு இந்த நிகழ்வில் வரும் கோச் வண்டி ஓட்டுநர் பெரிய எடுத்துக்காட்டு. இன்றைய இறைவார்த்தை நம்பிக்கையோடும் மன உறுதியோடும் இருக்கவேண்டும் என்ற செய்தியை எடுத்துக்கூறுகின்றது. அதைக் குறித்துச் சிந்திப்போம்.

திருவிவிலியப் பின்னணி:

நம்பிக்கைக்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டுகளாக விளங்கிய பலரையும் பட்டியலிட்ட எபிரேயர் திருமுகத்தின் ஆசிரியர் தொடர்ந்து, “நமக்குக் குறிக்கப்பட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஒடுவோமாக!” என்கிறார். இதற்கு நாம் ஒவ்வொருவரும் இயேசுவின்மீது நம் கண்களைப் பதிய வைத்து வாழவேண்டும் என்கின்றார். இன்றைய நற்செய்தியில் நம்பிக்கையினால் நலம் பெற்ற இருவரைக் குறித்துப் படிக்கின்றோம். ஒருவர் பன்னிரண்டு ஆண்டுகளாக இரத்தப் போக்கினால் பாதிக்கப்பட்ட பெண்மணி, இன்னொருவர் தொழுகைக்கூடத் தலைவரான யாயிரின் மகள். இந்த இருவரும் நலம்பெற்றது நம்பிக்கையினாலேயே என்பதில் எந்தவொரு மாற்றுக்கருத்தும் கிடையாது. எனவே, நாம் நம்பிக்கையோடும் மனவுறுதியோடும் வாழக் கற்றுக்கொள்வோம்.

சிந்தனைக்கு:

 இறுதிவரை மன உறுதியுடன் இருப்பவரே மீட்கப்படுவர் (மத் 10: 22)

 நம்பிக்கை கொண்டோன் பதற்றமடையான் (எசா 28: 16)

 நம்பிக்கை சோதிக்கப்படும்போது மனவுறுதி உண்டாகும் (யாக் 1: 3)

இறைவாக்கு:

‘நம்பிக்கையிலான்றி எவரும் கடவுளுக்கு உகந்தவராயிருக்க முடியாது’ (எபி 11: 6) என்பார் எபிரேயர் திருமுகத்தின் ஆசிரியர். எனவே, ஆண்டவரிடம் நம்பிக்கைகொண்டு, மன உறுதியோடு இருந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

#மறைத்திரு_மரிய_அந்தோனிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.