எளியோர் உணவு உண்டு நிறைவு பெறுவர் *** மறையுரை சிந்தனைகள்


ஏழை எளியோருக்கு உணவிடம் சிநேகா மோகன்தாஸ்:

சென்னையைச் சார்ந்தவர் சிநேகா மோகன்தாஸ். இருபத்து மூன்று வயதே ஆன இவர் சென்னையிலும் அதன் சுற்றுப்புறமெங்கிலும் சாலையோரங்கில் பலர் உணவின்றித் தவிப்பதைக் கண்டார். அவர்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று நினைத்த இவர் ‘உணவு வங்கி’ என்ற ஒன்றைத் தொடங்கினார். இந்த உணவு வங்கியில் இவருக்குத் தெரிந்த பலர் உறுப்பினராக இருக்கின்றார்கள். இவர்களிடம் உதவியுடன் இவர் ஒவ்வொருநாளும் ஆயிரம் பேர்களுக்கு மேல் மூன்றுவேளை உணவளித்துக் கொண்டிருக்கின்றார்.

இவரால் எப்படி ஆயிரம் பேர்களுக்கு, அதுவும் மூன்று வேளை உணவளிக்க முடிகின்றது என்ற கேள்வி எழலாம். இவர் தொடங்கிய உணவு வங்கியில் உறுப்பினர்களாக இருப்பவர்கள், தங்களுடைய வீட்டில் உள்ளவர்களுக்குச் சமைப்பதைவிடச் சற்றுக் கூடுதலாகச் சமைக்கவேண்டும். அவ்வாறு சமைக்கப்பட்ட உணவை, உணவு வங்கியில் உள்ள தன்னார்வலர்கள் சென்று சேகரித்து, அதைச் சாலையோரங்களில் உள்ளவர்களுக்க்குக் கொடுப்பார்கள். இப்படித்தான் இவர் ஒவ்வொருநாளும் ஆயிரம் பேர்களுக்கு மேல் மூவேளையும் உணவளித்துக் கொண்டிருக்கின்றார். சமூக அக்கறையும் யாரும் பசியாய் இருக்கக்கூடாது நல்ல எண்ணமும் கொண்ட இவர் உணவு வங்கியைத் தொடங்கியபொழுது ஒருசிலர்தான் அதில் உறுப்பினர்களாக இருந்தார்கள். இன்றைக்குப் பலர் அதில் உறுப்பினர்களாக இருக்கின்றார்கள். அவர்கள் வழியாக இவர் ஒவ்வொரு நாளும் ஆயிரம் பேர்களுக்கும் மேல் உணவளித்துக் கொண்டிருக்கின்றார்.

யாரும் பசியாய் இருக்கக்கூடாது என்ற நல்லெண்ணத்தோடு செயல்பட்டு வரும் சிநேகா மோகன்தாஸ் ‘எளியோர் உணவு உண்டு நிறைவு பெறுவர்’ என்று இன்று நாம் பாடக்கேட்ட பதிலுரைப்பாடலில் வரும் வார்த்தைகளுக்கு அர்த்தம் தருபவராக இருக்கின்றார்.

திருவிவிலியப் பின்னணி:

‘மெசியாவின் பாடல்’ வகையைச் சார்ந்த திருப்பாடல் 22 தாவீது மன்னரால் பாடப்பட்ட திருப்பாடலாகும். இத்திருப்பாடல் மெசியாவின் காலத்தில் எளியோர் எப்படி உணவு உண்டு நிறைவு பெறுவர் என்பதை எடுத்துச் சொல்கின்றது. மெசியாவின் வருகின்றபொழுது பெரியதொரு விருந்து ஏற்பாடு செய்வார் என்று திருவிவிலியம் நமக்குச் சுட்டிக்காட்டத் தவறவில்லை (எசா 25: 6-9; மத் 8: 10-12; லூக் 13: 29; 14: 15). அவ்வாறு ஏற்பாடு செய்யப்படும் விருந்தில் எல்லாரும், அதிலும் குறிப்பாக எளியோர் உண்டு நிறைவு பெறுவர். இதற்கு சான்றுகளாக இருப்பவைதான் இயேசு ஐயாயிரம் பேர்களுக்கும், நான்காயிரம் பேர்களுக்கும் உணவளித்த இரண்டு நிகழ்வுகள்.

சிந்தனைக்கு:

 கடவுள் ஏழைகளுக்கு உணவளிக்கின்றார் எனில், அதை நம் வழியாகவே அளிக்கின்றார்.

 “நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்” (மத் 14: 16) என்று இயேசு தம் சீடர்களைப் பார்த்துச் சொன்ன வார்த்தைகள் நமக்கும் பொருந்தும்

 உணவு கொடுத்தோர், உயிர் கொடுத்தொருக்குச் சமமானவர்கள்.

ஆன்றோர் வாக்கு:

‘தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில், இந்த உலகினை அழித்திடுவோம்’ என்றார் பாரதியார். நாம் இந்த உலகில் உள்ள யாவருக்கும் உணவு கிடைக்கச் செய்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

#மறைத்திரு_மரிய_அந்தோனிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.