ஆண்டவர் காணிக்கையாக அர்ப்பணிக்கப்படல் *** மறையுரை சிந்தனைகள்


முழுமையாய் அர்ப்பணித்தல்:

துறவி ஒருவர் இருந்தார். இவரிடம் சீடராகச் சேர்ந்து ஆசி பெறுவதற்காக ஒருவர் வந்தார். வந்தவரிடம் துறவி, “நான் உன்னை என்னுடைய சீடராக ஏற்றுக்கொண்டு உனக்கு ஆசி வழங்கவேண்டும் என்றால், நீ நாளை அதிகாலை நான்கு மணிக்குத் தனியாக வரவேண்டும்” என்றார்.

அதன்படி அவர் மறுநாள் அதிகாலை நான்கு மணிக்குத் தனியாகத் துறவி இருந்த குடிசைக்கு வந்தார். அவரைக் கூர்ந்து நோக்கிய துறவி, “நான் உன்னைத் தனியாகத்தானே வரச் சொன்னேன்; எதற்காக இப்படி இரண்டு, மூன்று ஆள்களை உன்னோடு கூட்டிவந்திருக்கிறாய்?” என்றார். அதற்கு அவர், 'எங்கே தனக்குப் பின்னால் யாராது இருக்கிறார்களா?' என்று திரும்பிப் பார்த்தார். உடனே துறவி, “நான் வெளியே உள்ள ஆள்களைச் சொல்லவில்லை, உனக்கு உள்ளே இருக்கும் ஆள்களைப் பற்றிச் சொல்கிறேன்” என்றார்.

அவர் தனக்குள் கவனித்தார், அப்போதுதான் அவருக்கு, தனக்குள் தன்னுடைய மனைவி, பிள்ளைகள், தான் சேர்த்து வைத்திருக்கும் சொத்து, புகழ் எல்லாம் இருக்கின்றது என்ற உண்மை புரிந்தது. அப்பொழுது அவர் துறவியிடம், “எனக்கு ஓராண்டு காலம் அவகாசம் கொடுங்கள். அதற்குள் நான் என்னையே தகுதிப்படுத்திக் கொண்டு, மீண்டுமாக வந்து உங்களுடைய சீடராகச் சேர்கிறேன்” என்று சொல்லிவிட்டு அவரிடமிருந்து விடைபெற்றுச் சென்றார். 

ஓராண்டு காலம் முடிந்த பிறகு அவர் மீண்டுமாகத் துறவியிடம் வந்தார். இப்போது அவரைப் பார்த்த துறவி, அவர் மிகவும் பக்குவமடைந்து தனி ஆளாக வந்திருப்பதை அறிந்து, அவரைத் தன்னுடைய சீடராக ஏற்றுக்கொண்டு, அவருக்கு ஆசி வழங்கினார்.

துறவு வாழ்வுக்கு அல்லது பொது வாழ்வுக்குத் தங்களையே அர்ப்பணிப்போர் எல்லாவற்றையும் துறந்துவிட்டு, தங்களை முழுமையாய் அர்பணிக்கவேண்டும் என்ற உண்மையை இந்த நிகழ்வானது நமக்கு உணர்த்துகின்றது. 

கடவுளுக்காக - கிறிஸ்துவுக்காக- வாழவேண்டும்:

இன்று திருஅவையானது இயேசு கோயிலில் காணிக்கையாக அர்ப்பணிக்கப்பட்ட விழாவைக் கொண்டாடுகின்றது. புனித பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்தில் இவ்வாறு கூறுவார்: “வாழ்வோர் இனி தங்களுக்காக வாழாமல், தங்களுக்காக இறந்து, உயிர்த்த கிறிஸ்துவுக்காக வாழவேண்டும்" (2 கொரி 5:15). இன்று நாம் கொண்டாடும் ஆண்டவர் காணிக்கையாக அர்ப்பணிக்கப்பட்ட விழாவானது நமக்கு இத்தகைய அழைப்புத் தருகின்றது.

இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் மலாக்கி கூறுவார், “இதோ! நீங்கள் தேடுகின்ற தலைவர் திடீரென்று தம் கோயிலுக்கு வருவார்; நீங்கள் ஆவலுடன் எதிர்ப்பார்க்கும் உடன்படிக்கையின் தூதர் இதோ வருகிறார்.”  இதன்படி நற்செய்தி வாசகத்தில் தூய்மைச் சடங்கை நிறைவேற்றுவதற்காகக் குழந்தை இயேசுவை அதனுடைய பெற்றோர் எருசலேம் திருக்கோயிலுக்குக் கொண்டுவருகிறார்கள். 

“தலைப்பேறு அனைத்தும் எனக்கு அர்ப்பணம் செய்” (விப 13:2) என்ற ஆண்டவரின் வாக்கிற்கிணங்க இஸ்ரேயல் மக்கள் தங்களுடைய தலைப்பேற்றை ஆண்டவருக்கு காணிக்கையாகச் செலுத்திவந்தார்கள். அதன்படியே இயேசுவின் பெற்றோரும் அவரைக் கோயிலில் காணிக்கையாகச் செலுத்துகிறார்கள். இதன்மூலம் இயேசு இறைவனுக்குக் கையளிக்கப்பட்டவர் ஆகிறார்.

இறைத்திருவுளத்தின்படி வாழ வேண்டும்:

இறைவனுக்கு கையளிக்கப்படல் என்று சொல்கிறபோது, நமது வாழ்க்கையை இறைவனுக்கு முற்றிலுமாகக் கையளித்து, அவரது விருப்பத்தின்படி வாழ்வதாகும். ஆண்டவர் இயேசு கிறிஸ்து இறைவனுக்குத் தன்னையே முற்றிலுமாகக் கையளித்து, அவரது விருப்பத்தின்படி வாழ்ந்தார் என்பதை நற்செய்தியில் பல இடங்களில் வாசிக்கின்றோம். குறிப்பாக கெத்சமனித் தோட்டத்தில் ஆண்டவர் இயேசு பாடுகளை ஏற்பதற்கு முன்பாக, “தந்தையே! உமக்கு விருப்பமானால் இந்தத் கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றும். ஆனாலும், என் விருப்படி அல்ல; உம் விருப்பப்படி நிகழட்டும்” (லூக் 22:42) என்கிறார்.

இவ்வாறு இயேசு கிறிஸ்து தன்னுடைய வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் தந்தையின் திருவுளத்தை ஏற்று நடந்தார் என்பதை நாம் மிக எளிதாகப் புரிந்துகொள்ளலாம். திருமுழுக்கின் வழியாக கடவுளுக்கு அர்பணிக்கப்பட்ட நாம் ஒவ்வொருவரும் இறைத் திருவுளத்தின்படி வாழவேண்டும் என்பதுதான் நமக்குத் தரப்படும் அழைப்பாக இருக்கிறது.

இரண்டாம் வாசகத்தில் புனித பவுல் கூறுவார்: “ஊனும் இரத்தமும்கொண்ட பிள்ளைகளைப் போல கிறிஸ்துவும் அதே இயல்பில் பங்குகொண்டார்; இவ்வாறு சாவின்மேல் ஆற்றல் கொண்டிருந்த அலகையைச் சாவின் வழியாக அழித்துவிட்டார்.”ஆம், இயேசு கிறிஸ்து தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றி சாவின்மீது வெற்றிகொண்டார் என்றால், அவரது சீடர்களாக இருக்கும் நாமும் தந்தையின் திருவுளத்தின்படி நடந்து  சாவின் சக்திகளான வேற்றுமை, வறுமை, பஞ்சம், பசி, பட்டினி போன்றவற்றைக் களையவேண்டும்.

தன்னலத்தைச் சுட்டெரிக்க வேண்டும்: 

“சமூக நலன் என்ற அக்கினியில் தன்னல ஆசைகளைச் சுட்டேரிப்பதே தூய துறவு” என்பார் விவேகானந்தர். கடவுளுக்குத் தங்களை முழுமையாக அர்பணிப்போரும் தன்னல ஆசைகளைத் துறந்து, தன் விருப்பத்தை நிறைவேற்றுவதை விடுத்து, இறைவிருப்பதை நிறைவேற்றவேண்டும்.

ஆதலால் ஆண்டவர் இயேசுவைக் கோயிலில் காணிக்கையாக அர்ப்பணிக்கப்பட்ட விழாவைக் கொண்டாடும் இந்நாளில் நாம் இயேசுவைப் போன்று இறைத்திருவுளம் நிறைவேற்றுவோம். அதன் வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

#மறைத்திரு_மரிய_அந்தோனிராஜ்,

பாளையங்கோட்டை மறைமாவட்டம்.