மரியாள் கடவுளின் தாய்' என்றால் தூய்மைச் சடங்கை நிறைவேற்றியது ஏன்?

"கடவுள் வடிவில் விளங்கிய இறைமகன் இயேசு, கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை வலிந்து பற்றிக் கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை. ஆனால் தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார்." (பிலிப்பியர் 2:6-7) உலக மக்களின் மீட்புக்கான இறைத்திட்டம், இயேசுவில் மட்டுமின்றி அவரது தாய் மரியாளிடம் நிறைவேற வேண்டியிருந்தது. ஆகவே, இறைமகனின் தாயாகுமாறு அழைப்பு பெற்ற மரியாளும் தம்மை "ஆண்டவரின் அடிமை"யாக (லூக்கா 1:38) ஒப்படைத்தார். இவ்வாறு இறைமகனின் உள்ளமும், இறையன்னையின் உள்ளமும் இறைத்தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுவதில் இணைந்து செயல்பட்டன. தந்தையாகிய கடவுளின் மீட்புத் திட்டம் இவ்வுலகில் நிறைவேறுமாறு, மகனாகிய கடவுள், பரிசுத்த ஆவியின் வல்லமையால் கன்னி மரியாளின் வயிற்றில் கருவாகி மனிதராகப் பிறந்தார்.

"காலம் நிறைவேறியபோது திருச்சட்டத்திற்கு உட்பட்டிருந்த நம்மை மீட்டுத் தம் பிள்ளைகள் ஆக்குமாறு, கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும் திருச்சட்டத்திற்கு உட்பட்டவராகவும் அனுப்பினார்." (கலாத்தியர் 4:4-5) இறைமகனை ஈன்றெடுத்த அன்னை மரியாளும், "பாவத் தடையின்றித் தம் முழு இதயத்தோடு கடவுளின் மீட்புத் திருளத்தை ஏற்று, தம் மகனுக்கும் அவரது அலுவலுக்கும் தம்மையே ஆண்டவரின் அடிமையாக முற்றிலும் கையளித்தார்." (திருச்சபை எண். 56) எனவே, "ஆண் தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்படும்" என்ற திருச்சட்டத்தை நிறைவேற்றுவதில் கருத்தாய் இருந்தார். "மோசேயின் சட்டப்படி தூய்மைச் சடங்கை நிறைவேற்ற வேண்டிய நாள் வந்தபோது, குழந்தை இயேசுவை ஆண்டவருக்கு அர்ப்பணிக்க மரியாள் தம் கணவர் யோசேப்புடன் எருசலேமுக்குச் சென்றார்." (லூக்கா 2:22)

"இயேசு, பரிசுத்த ஆவியால் கன்னி மரியாளின் வயிற்றில் கருவாக உருவானார். ஏனெனில், அவர் புதிய படைப்பைத் தொடங்கிய புதிய ஆதாம்: 'முதல் மனிதர் மண்ணில் இருந்து வந்தவர், இரண்டாம் மனிதர் விண்ணில் இருந்து வந்தவர்.' கருவானது முதலே கிறிஸ்துவின் மனிதத் தன்மை பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டிருந்தது. கடவுளோடு உறவில் இணைந்திருப்பதற்கான மனிதரின் அழைப்பு, மரியாளின் கன்னித் தாய்மையில் முழுமையாக நிறைவு பெறுகிறது." (கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வி எண். 504,505) இவ்வாறு புனிதத்தில் நிறைந்திருந்த அவர், தம்மை பாவம் நிறைந்த மனிதகுலத்தின் உறுப்பினராகக் காட்ட தூய்மைச் சடங்கை நிறைவேற்றினார். இறைமகனை கருவில் சுமந்ததால் பரிசுத்த கன்னியாக திகழ்ந்தாலும், இறைத் தந்தையின் திருவுளம் நிறைவேறுமாறு மரியாள் இவ்வாறு செய்தார். எனவே, கன்னி மரியாள் 'கடவுளின் தாய்' என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.