மரியாளை கடவுளின் தாயாக ஏற்றுக்கொள்வதால் என்ன பயன்?

கன்னி மரியாள் கடவுளின் தாய் என்பது நற்செய்தி எடுத்துக் கூறும் உண்மை. மாற்றுக் கருத்துக்கு இடமில்லாத இந்த உண்மையை ஏற்றுக்கொள்வது ஒவ்வொரு கிறிஸ்தவரின் கடமை. ஏனெனில், "ஆண்டவர் தாமே உங்களுக்கு ஓர் அடையாளத்தை அருள்வார். இதோ, கருவுற்றிருக்கும் அந்த கன்னிபெண் ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார்; அக்குழந்தைக்கு அவர் 'இம்மானுவேல்' என்று பெயரிடுவார். ஆட்சிப்பொறுப்பு அவர் தோள்மேல் இருக்கும்; அவர் திருப்பெயரோ வியத்தகு ஆலோசகர், வலிமை மிகு இறைவன், என்றுமுள தந்தை, அமைதியின் அரசர் என்று அழைக்கப்படும்" (எசாயா 7:14,9:6) என்று இறைவாக்கினர் முன்னறிவித்தது, இயேசுவின் பிறப்பில் நிறைவேறியது. மகனாகிய கடவுளைத் தம் வயிற்றில் சுமந்து பெற்றெடுத்ததால், "கடவுள் நம்முடன் இருக்கிறார்" என்று அன்னை மரியாளால் சொல்ல முடிந்தது.

கடவுள் அனுப்பிய வானதூதர் மரியாளிடம், "பரிசுத்த ஆவி உம்மீது வருவார். உன்னதரின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலின் பிறக்கும் திருக்குழந்தை கடவுளின் மகன் எனப்படும்." என்றார். (லூக்கா 1:35) இறைமகனைப் பெற்றெடுத்தவர் 'இறைவனின் தாய்' என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இது மனிதரின் நம்பிக்கை மட்டுமல்ல, பரிசுத்த ஆவியாரால் வெளிபடுத்தப்பட்ட உண்மையும் ஆகும். மரியாள்வின் வாழ்த்தைக் கேட்டதும் பரிசுத்த ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்ட எலிசபெத், "பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?" (லூக்கா 1:41-43) என்று உரத்த குரலில் கூறுவதைக் காண்கிறோம். எனவே, திருமுழுக்கின் வழியாக பரிசுத்த ஆவியைப் பெற்ற ஒவ்வொருவரும் மரியாள்வை கடவுளின் தாய் என்று அறிக்கையிடுவர். 

இயேசுவின் மீட்பு அலுவலில் முழுமையாக ஒத்துழைத்த மரியாள், கடவுளின் தாய் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. "மகனோடு தாய் கொண்டுள்ள இந்த ஒன்றிப்பை, கிறிஸ்து கன்னி மரியாளிடம் கருவாக உருவானதிலிருந்து அவரது சாவு வரை நாம் காண்கிறோம். இவ்வாறு பரிசுத்த கன்னியும் நம்பிக்கைத் திருப்பயணத்தில் முன்னேறிச் சென்றார். தம் மகனோடு கொண்ட ஒன்றிப்பை சிலுவைவரை விடாது காத்து வந்த மரியாள், கடவுளின் திட்டத்திற்கேற்ப சிலுவையின் அருகே நின்றார். இறுதியாக சிலுவையில் உயிர்விட்ட அதே கிறிஸ்து இயேசுவே, மரியாளைத் தம் சீடருக்குத் தாயாக அளித்தார்." (திருச்சபை எண். 57,58) எனவே, பாவமின்றி உற்பவித்த மரியாளை கடவுளின் தாயாகவும், நம் அன்னையாகவும் ஏற்றுக்கொள்வதன் வழியாக நாம் இயேசுவின் விருப்பத்தை நிறைவேற்றுபவர்களாகத் திகழ முடியும்.