தவக்காலச்சிந்தனைகள் 23: இயேசு நாதர் சுவாமி பாடுபட்ட 12-ம் ஸ்தலம்.. இயேசு நாதர் சுவாமி சிலுவையில் மரிக்கிறார்.. ***

திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி  நன்றி அறிந்த ஸ்தோஸ்த்திரம் செய்கிறோம். அதனென்றால் அர்ச்சிஷ்ட்ட பாரமான சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர்…

2020 ஆண்டுகளுக்கு முன்பு என்ன காரணத்திற்காக பிறந்ததோ அந்த காரணத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியது இந்த 33 வயது குழந்தை..

எல்லோருக்கும் மரணம் எப்போ வரும்? எப்படி வரும்னு தெறியாது? ஆனால் இந்த குழந்தைக்கு பிறக்கும்போதே தெறியும் நான் ஏன் பிறந்தேன்? எப்போது.. அதுவும் எப்படி சாவேன் என்று தெறியும்.. நம் நேச பிதா அதையும் கூட அவருக்கு மறைத்து வைக்கவில்லை.. அந்த சந்தோசம் கூட நம் ஆண்டவருக்கு இல்லை.. எத்தகைய கொடிய மரணம் என்பது கடவுள் என்ற முறையில் அவருக்கு தெறிந்ததால்.. அம்மரணக்காட்சி எத்தனை முறை அவர் கண்முன் வந்து நின்றிருக்கும்.. அதைப் பார்த்து எத்தனை முறை பயந்திருப்பார்..

“ உங்களுக்குத் தெறியாத உணவு ஒன்று எனக்குள்ளது “ அரு (யோவான்) 4:32.

“ என்னை அனுப்பினவரின் விருப்பப்படி நடந்து அவரது வேலையைச் செய்து முடிப்பதே என் உணவு “ அரு 4 : 34

பிதா கொடுத்த உணவை உண்டு முடித்துவிட்டார்.. அதுமட்டுமல்ல தானும் உணவாகிப்போனார்..
ஆண்டவர் ஏன் தன்னை’ உணவு ‘ என்று குறிப்பிட்டார்.. ஒரு செம்மறி கிடாயை.. உயிரோடு அடித்து நொறுக்கி, கீறி.. பிளந்து சமைத்தால் எப்படி இருக்குமோ.. அதைவிட கொடுமையான வேதனையோடு சமைக்கப்பட்டார்.. அவர் சொல்லிவாறே உணவாகிவிட்டார்.. அந்த உணவை உண்டு .. பாவம் என்ற உணவை நாம் கக்க வேண்டும் என்பதற்காக.. இந்த உணவு நமக்கு அருமருந்து.. ஆம் பாவம் என்ற பிணி போக்கும் மருந்து..

சாதித்துவிட்டார்.. தான் சொல்லியதை சற்றும் பிசகாமல் கடைபிடித்துவிட்டார்.. பூலோகத் தலைவர்கள் போல் அல்ல தான் சொல்லிய.. போதித்த அத்தனை விஷங்களையும் செய்து காட்டிவிட்டார்..
அப்படி என்ன சாதித்தார்..?

1. அகில உலகத்தையும் படைத்தவர்; துவக்கமும் முடிவும் இல்லாதவர்.. அடக்க முடியாதவர்.. ஒரு தாயின் கருவறையில் அடங்கிவிட்டார்.. தன்னை அடைத்துக் கொண்டார் அதுவும் 10 மாதங்கள்..

2.  அகில உலகிற்கும் சாப்பாடு போட்டவர் தன் தாய் தரும் உணவை மட்டுமே உண்டார்..

3. மோட்ச மகிமையில் சம்மனசுகளுக்கு மத்தியில் வாழ்ந்தவர்.. மாடுகளுக்கு மத்தியில்.. மாட்டுத் தொழுவத்தில்..அதுவும் தீவனத்தொட்டியில் பிறந்தார்.. அதுவும் என்னைவிட ஏழ்மையாக யாரும் இனி பிறக்கமுடியாது என்று சொல்லும் அளவுக்கு ஏழ்மையாக பிறந்தார்..

4.  உலகத்திற்கே பாடம் சொன்னவர்.. பாடம் புகட்டியவர்.. பத்து கட்டளைகளைக் கொடுத்து கடைபிடிக்க சொன்னவர்.. இதோ அதில் வரும் 4-வது கட்டளையை தானும் கடைபிடித்தார். தாய் தந்தைக்கு கீழ்ப்படிந்தார்..

5. கடவுள் மனிதனாக பிறக்க முடியுமா? மனிதனாக வாழ முடியுமா? பிறந்தார்… வளர்ந்தார்.. பாவம் தவிர அனைத்திலும் மனிதனாக வாழ்ந்தார்.. அத்தனை சோதனைகளுக்கு மத்தியிலும் பாவமின்றி பரிசுத்தமாக வாழ்ந்தார்..

6. “தாய் தந்தையரைப் போற்று “ என்று சொல்லியவர்.. தன் தாய்க்காக தச்சு வேலை பார்த்து தன் தாயைக் காப்பாற்றினார்..(30 ஆண்டுகள் அவருக்கு பணிந்திருந்தார்)

7. அவருக்கு தாகமெடுத்தது, பசியெடுத்தது, கோபம் வந்தது ஏன் அழுகையும் வந்தது..உடல் வலித்தது

8. ஒரு கடவுள் மனிதனிடம் போய் அடி வாங்க முடியுமா? உதை வாங்க முடியுமா? கிழி வாங்க முடியுமா? அல்லல்.. இன்னல்கள் அதுவும் தன்னால் படைக்கப்பட்ட மனிதர்களிடம்.. எல்லாம் பட்டார்.. கடைசியில் மனுக்குலத்திற்காக தன் உயிரயும் கொடுத்துவிட்டார்..

9. இன்னும் அவர் செய்த சாதனைகளை சொல்லிக்கொண்டே போகலாம்..

10. எதுதான் செய்யவில்லை எல்லாம் செய்தார்..
இப்போது அவர் திருமேனி ஓய்வு கொள்கிறது…

ஒரு இதயம் அடங்கி விட்டது.. ஒரு இதயம் உடைந்துவிட்டது.. இத்தனை நேரம் தன் மகன் உடைந்து விடக்கூடாது என்று அடக்கி அடக்கி வைத்திருந்த அணை உடைந்து விட்டது மடை திறந்துவிட்டது.. கண்ணீர் வெள்ளம்.. ஆறாய்ப்பாய்கிறது…
மகனைப் போல் இந்த அன்னைக்கும் சேசுவின் பிறப்பின் இரகசியமும், இறப்பின் இரகசியமும் தெறியும்… மகன் கரங்களைக் காட்டி சிரிக்கும் போது பொங்கி வந்த ஆனந்தம் அடுத்த நொடியிலேயே அடங்கி வேதனையாக வெளிவரும்.. தன் மகனின் பிஞ்சு கரங்களையும்..பிஞ்சு கால்களையும் பார்க்கும்போதெல்லாம்.. ஆணியும், சுத்தியலும்தான் அன்னைக்கு ஞாபகம் வந்தது.. அதிலும் மகிழ்ச்சி கொள்ளமுடியவில்லை.. துயரம்.. வியாகுலம்..கண்ணீர்..

“ உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுறுவும் “ என்று சொன்ன சிமியோனின் வாக்கு நிறைவேறுகிறது..

ஆண்டவருடைய இதயத்தை ஊடுறுவிய வாளால் மகனுக்கு வலியில்லை.. வலி முழுவதும் இந்த தாய்க்கு..
இந்த நேரத்தில் அவர் நமக்கு தரும் செய்தி..

என் தாய் உள்ளமும், என் உள்ளமும் ஒன்றே.. எனக்கு அடி என்றால் என் தாய்க்கு வலிக்கும்.. என் தாய்க்கு அடி எனக்கு வலிக்கும்..  நான் உடலால் இந்த உலகத்தை மீட்டேன்.. என் தாய் உள்ளத்தால் என்னோடு சேர்ந்து இந்த உலகத்தை மீட்டார்.. ஆம் அவளும் ஒரு இரட்சகிதான்.. இணை இரட்சகி..
அவள் இருதயமும், என் இருதயமும் ஒன்றே.. என்பதற்கு இந்த காட்சியே சாட்சி.. விவிலியமும் சாட்சி..
அதனால்தான் என் இருதயத்திற்கு ஒத்த மரியாதையும், வணக்கமும் என் தாயின் இருதயத்திற்கு செய்யப்பட வேண்டும்  என்றேன்..

என் இருதயத்திற்கு தலை வெள்ளியென்றால்.. என்தாயின் இருதயத்திற்கு முதல் சனி..

முதல் சனி கண்டிப்பாக அனைத்து கத்தோலிக்க கிறிஸ்தவர்களாலும் கடைபிடிக்கப்பட வேண்டும்..( இன்று முதல் சனி)

மனித ஆறுதலுக்காகவும், பரிகாரத்திற்காகவும் எங்கள் இரு இருதயங்களும் காத்துக்கிடக்கின்றன.
எங்கள் இருதயதயங்களுக்கு நீங்களாவது ஆறுதல் கொடுப்பீர்களா??

ஏங்கள் பெயரில் தயவாயிரும் ஸ்வாமி.. தயவாயிரும்…

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !