தவக்கால சிந்தனைகள் 22 : ( இப்போதைய சூழலில்) ***

இயேசு நாதர் சுவாமி பாடுபட்ட 11-ம் ஸ்தலம்..

இயேசு கிறிஸ்து நாதரை சிலுவையில் அறைகிறார்கள்..

திவ்ய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி  நன்றி அறிந்த ஸ்தோஸ்த்திரம் செய்கிறோம். அதனென்றால் அர்ச்சிஷ்ட்ட பாரமான சிலுவையைக் கொண்டு உலகத்தை மீட்டு இரட்சித்தீர்…

ஆண்டவரே எங்களையும் எங்கள் குடும்பத்தையும் உம்மோடு சிலுவையில் அறைந்து விடும்..

“ நானே திராட்சைக் கொடி நீங்கள் அதன் கிளைகள் “ – அரு (யோவான்) 15:5

என்று மொழிந்த உம்முடைய வார்த்தைப்படி  நாங்கள் உம்முடைய கிளைகளாக இருக்க உம்மோடு எங்களை இணைத்துக் கொள்கிறோம்.. அதுவும் சிலுவையில்..”

“ என்னைப் பிரிந்து உங்களால் ஒன்றும் செய்ய முடியாது “ -(அரு 15:5)

ஆம் ஆண்டவரே உம்மைப் பிரிந்து எங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்பதை நாங்கள் கண்டு கொண்டோம்..

உம்மைப் பிரிந்து உலகமே கதி என்று கிடந்தோம்..
நீர் எங்களுக்கு கொடுத்திருந்த 24- மணி நேரங்களையும்.. எங்களுக்காக மட்டுமே செலவழித்தோம்.. தினமும் உமக்காக ஒரு பதினைந்து நிமிடங்கள் ஜெபமாலை ஜெபிக்க ஒதுக்கவில்லை.. எல்லாவற்றையும் எங்களுக்காகவே வைத்துக்கொண்டோம்..
பொழுதை எப்படியெல்லாமோ எங்கள் விருப்பப்படி போக்கினோம்.. உமக்காக ஒரு சிறிய பொழுதைக்கூட நாங்கள் தரவில்லை.. நீர் கொடுத்த அத்தனைப் பொழுதையும்.. முழு சுய நலத்தோடு எங்களுக்காக மட்டுமே பயன்படுத்தினோம்.. என்ற உண்மையை சொல்ல இப்போது எங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை..

நீர் கொடுத்த ஞாயிற்றுக்கிழமையும் உங்களுக்கு நாங்கள் தர வில்லை..
முழு திருப்பலியில் பங்கேற்கவில்லை… உம்மைப் பெற எங்களை நாங்கள் தயாரிக்கவில்லை..

இன்று ஆண்டவரைப் பார்க்கப் போகிறோம்.. ஆண்டவரிடம் பேச வேண்டும். ஆண்டவரும் நம்மிடம் பேசுவார். ஆண்டவரை என்னுள்ளத்தில் வர போகிறாரே.. என் உள்ளம்.. என் ஆன்மா எப்படி இருக்கிறது.. அவர் வந்து அமர சுத்தமாக இருக்கிறதா?..

ஐயோ கடந்த வாரங்களில் நான் செய்த பாவங்கள் எத்தனை ?
நாக்கை நீட்டி ஆண்டவரை வாங்கப் போகிறேனே.. இந்த வாரம் முழுவதும் நான் பேசிய பொய்கள் எத்தனை? புரணிகள் எத்தனை?  தீய சொற்கள் எத்தனை? பழிச்சொற்கள் எத்தனை? அநாவசியமாக பேசிய சொற்கள் எத்தனை? பிறரைத் தீர்ப்பிட நான் பயன்படுத்திய சொற்கள் எத்தனை? என் நாவு எதையெல்லாம் சுவைத்தன. ஆண்டவருடைய உயிர் மூச்சில் நான் எதையெல்லாம் கலந்தேன்..இன்னும்.. இன்னும் எத்தனையோ..
ஆண்டவரே.. அதைப்பற்றியெல்லாம் நான் யோசிக்காமால்.. கவலைப்படாமல்..
ஞாயிற்றுக்கிழமை கோயிலுக்கு செல்ல வேண்டும்.. நற்கருணை வாங்க வேண்டும்.. என்று கடமைக்காக சென்றேன்..

எப்படிச் செல்ல வேண்டும்? என்ன உடை உடுத்த வேண்டும்.. என்றுதான் யோசித்தேனே தவிர.. எந்த உள்ளத்தோடு செல்ல வேண்டும் என்று நினைக்க வில்லை..
திருப்பலி ஆரம்பிக்கும் முன்னதாக நான் சென்றேனா?
எந்த வித கூச்ச உணர்வின்றி .. பாதியில் நுழைந்தேனா?
ஆண்டவரே உம்மை நான் புறக்கணித்தேன் என்பது உண்மை.. உம் திருப்பலிகளை புறக்கணித்தேன்.. ஆலயத்தில் சொல்லப்படும் ஜெபமாலையை புறக்கணித்தேன்.. ஆலய வழிபாடுகளைப் புறக்கணித்தேன்.. எதிலும் நான் முழுமையாக பங்கேற்கவில்லை..
அதனால் இன்று எனக்கு ஆலயம் செல்ல முடியவில்லை..

 திருப்பலி இல்லை.. ஜெபமாலை இல்லை ( ஆலயத்தில்) தனிச்செபம் செய்ய முடியவில்லை..
நாங்கள் உம்மை முழுமையாக தேடாததால்.. நீரே உம்மை எங்களிடமிருந்து பிரித்துக்கொண்டு தனியாக இருக்கிறீர்..  இது தனிமைப்படுத்துதல்.. இல்லை.. தனிமைப்படுத்தப்படுதல்.. அதுவும் உம்மால் நாங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோம்..
உம்மைப் பிரிந்து எங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று மறுபடியும் காட்டிவிட்டீர்.. அதுவும் மிகவும் தீர்க்கமாக காட்டிவிட்டீர்.. இதை தவிர பெரிதாக எங்கள் கடவுளாகிய நீர் உணர்தத் தேவையில்லை..

ஆண்டவரே.. நாங்கள் பாவம் செய்தோம்.. பரிசுத்தரான உம்மை பரிசுத்தமின்றி நாங்கள் உட்கொண்டோம்.. பாவமே அறியாத உம்மை பாவத்தோடு உட்கொண்டோம்..
உம்மை அசுத்த சிறையில் தள்ளினோம்.

உலகமும், உலகக்காரியங்களும், பொழுது போக்குகளும் எங்கள் கண்களை உம்மைக் காணதவாறு, உணராதவாறு, தேடாதவாறு குருடாக்கிவிட்டது..

உலகம் எங்களை மறைத்ததால் மோட்சத்தை மறந்தோம்.. அதைத்தேட மறந்தோம்.. நிலையான மோட்சத்திற்கு எங்களைத் தயாரிக்க மறந்தோம்.. அதனால் உம்மிடமிருந்து எங்களைப் பிரித்துக்கொண்டோம்.. அதனால நீரும் எங்களிடமிருந்து பிரிந்து உம்மைத் தனிமைப்படுத்திகொண்டீர்.. இப்போதோ எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை..

"மண்ணுலகில் செல்வம் சேர்த்துவைக்க வேண்டாம். இங்கே பூச்சியும் துருவும் அழித்துவிடும்; திருடரும் கன்னமிட்டுத் திருடுவர்.
ஆனால் விண்ணுலகில் செல்வம் சேர்த்துவையுங்கள். அங்கே பூச்சியும் துருவும் அழிப்பதில்லை; திருடரும் கன்னமிட்டுத் திருடுவதில்லை.
உங்கள் செல்வம் எங்குள்ளதோ, அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்.”
மத்தேயு 6 : 19-21

இதுவரை எங்கள் செல்வம்.. உலகமாக இருந்ததால்.. எங்கள் உள்ளமும் உலகத்தின் மீதே இருந்தது.. இப்போது மோட்சத்தை கண்டு கொண்டோம்..
ஆண்டவரே  இப்போது நாங்கள் நிலையான மோட்சமாகிய உம்மைத் தேடுகிறோம்.. ஆம் ஆண்டவரே உம்மை மட்டுமே தேடுகிறோம்..
உம் திராட்சைக் கொடியில் இணைய விரும்புகிறோம்.. அதுவும் உம் திருச்சிலுவையோடு எங்களை பிணைக்க அறைந்து கொள்ள ஆசிக்கிறோம்..

இனி நாங்கள் உம்முடைய திருப்பலியில் எங்களைத் தயாரித்து (பாவசங்கீர்த்தனம் செய்து) பக்தியோடு முழுமையாக பங்கேற்போம்..
தினமும் குடும்ப ஜெபமாலை ஜெபிப்போம்.. பைபிள் வாசிப்போம்.. தினமும் ஒரு அதிகாரமாவது வாசிப்போம்..
ஆண்டவரே.. நீங்களும் தனியாக இருக்க வேண்டாம்.. எங்களாலும் தனியாக இருக்க முடியவில்லை..

ஊதாரி மைந்தன் தன் தவறை உணந்த போது எவ்வாறு அவனை அனைத்துக் கொண்டீரோ.. இப்போது நாங்கள் எங்கள் தவறை உணர்ந்து விட்டோம்… எங்களை அணைத்துக் கொள்ள இருகரம் விரித்தவராய் வாரும்.. நாங்கள் திரும்பவும் உலகத்தோடு ஓடிவிடாமல் இருக்க உம் திருச்சிலுவையோடு எங்களை அறைந்து விடும்..

எங்கள் பெயரில் தயவாயிரும் ஸ்வாமி தயவாயிரும்..

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !