இன்றைய புனிதர் - ஜனவரி 17 - புனிதர் வனத்து அந்தோனியார் ***


புனிதர் வனத்து அந்தோனியார்

(St. Antony the Great)

வணக்கத்துக்குரியர்; துறவிகளின் தந்தை; 

கடவுளை கைகளில் ஏந்தியவர்:

(Venerable; God-bearing; Father of Monasticism)

பிறப்பு: கி.பி. 251

ஹெராகிளியோபோலிஸ் மேக்னா,எகிப்து

(Herakleopolis Magna, Egypt)

இறப்பு: கி.பி. 356 

கோல்சிம் மலை, எகிப்து

(Mount Colzim, Egypt)

ஏற்கும் சமயம்: 

கத்தோலிக்க திருச்சபை

(Roman Catholic Church)

காப்டிக் மரபுவழி திருச்சபை

(Coptic Orthodox Church)

கிழக்கு அஸ்ஸிரியன் திருச்சபை

(Assyrian Church of the East)

கிழக்கு மரபுவழி திருச்சபை

(Eastern Orthodox Church)

ஓரியண்ட்டல் திருச்சபை

(Oriental Orthodox Churches)

ஆங்கிலிக்கன் சமூகம்

(Anglicanism)

முக்கிய திருத்தலங்கள்: 

புனித வனத்து அந்தோனியார் மடம், எகிப்து

(Monastery of St. Anthony, Egypt)

புனித அந்தோனியார் திருத்தலம், மாரம்பாடி, தமிழ்நாடு

(St. Anthony Shrine, Marambadi, Tamil Nadu, India)

புனித அன்டோய்ன்-அய்'அப்பாயே, ஃபிரான்ஸ்

(Saint-Antoine-l'Abbaye, France)

நினைவுத் திருநாள்: ஜனவரி 17

பாதுகாவல்: 

தோல் நோய்கள், கூடை நெய்வோர், சவக்கிடங்கு தோண்டுவோர்

(Skin diseases, basket makers, Gravediggers)

புனித வனத்து அந்தோனியார் (Anthony of the Desert) எகிப்து நாட்டின் கிறிஸ்தவ துறவியும் தமது மரணத்தின் பின்னர் புனிதராகவும் மதிக்கப்பட்டவரும் ஆவார். இவர், தமக்குப் பின்வந்த அனைத்து துறவிகளின் தந்தை (Father of All Monks) என்றும் அழைக்கப்படுகின்றார்.

இவர் பின்வரும் பல்வேறு பட்டப்பெயர்களால் அழைக்கப்படுகிறார்:

"பெரிய அந்தோனியார்" (Anthony the Great) 

"எகிப்தின் அந்தோனியார்" (Anthony of Egypt) 

"மடாதிபதி அந்தோனியார்" (Anthony the Abbot) 

"பாலைவனத்து அந்தோனியார்" (Anthony of the Desert) 

“துறவி அந்தோனியார்" (Anthony the Anchorite)

"அலெக்சான்றியாவின் அதனாசியஸ்" (Athanasius of Alexandria) எழுதிய அந்தோனியாரின் சரிதம், அதன் லத்தீன் மொழியாக்கம் மூலம், முக்கியமாக மேற்கத்திய ஐரோப்பிய நாடுகளில் கிறிஸ்தவ துறவறத்தின் கருவினை பரப்புவதில் உதவியது.

புனித வனத்து அந்தோனியார், எகிப்து நாட்டிலுள்ள "கோமா” (Coma) என்னும் சிற்றூரில் மிக வசதி படைத்த செல்வம் மிக்க குடும்பத்தில் பிறந்தார். சுமார் பதினெட்டு வயதில் பெற்றோர்களை இழந்தார். இதனால் தம்முடைய திருமணமாகாத உடன்பிறந்த சகோதரியை கவனிக்கும் பொறுப்பை ஏற்றார்.

தினம் தவறாது திருப்பலியில் பங்கெடுத்தார். சிறிது காலத்திலேயே ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நற்செய்தி அறிவுரையான, "உமக்கு இன்னும் ஒன்று குறைபடுகிறது. உமக்குள்ள யாவற்றையும் விற்று ஏழைகளுக்கு கொடும்; அப்போது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்." (லூக் 18:22) என்பதை பின்செல்ல முடிவெடுத்தார்.

பின்னர், தன் சொத்துக்கள் செல்வங்கள் அனைத்தையும் ஏழைகளுக்கு பகிர்ந்து கொடுத்துவிட்டு, தமது சகோதரியை கிறிஸ்தவ கன்னியர் குழுவொன்றில் விட்டார். பின்னர், இயேசுவைத் தேடி தனிமையில் வனத்திற்கு சென்று தவ வாழ்வு வாழ்ந்தார். பாலைவனத்தில் சிறிய இல்லம் ஒன்றை அமைத்து கடுமையான வாழ்வு வாழ்ந்தார். ஏறக்குறைய 20 ஆண்டுகள் காட்டிலும் பாலைவனத்திலும் வாழ்ந்தார்.

பின்னர் இவர் அரசர் “மாக்சிமினஸ் டாஸா” (Maciminus Daza) என்பவருடன் இணைந்து கிறிஸ்தவ மக்களுக்கு பல அறிவுரைகளை வழங்கினார். அரசர் மாக்சிமீனுசின் ஆலோசகராகவும் பணியாற்றினார். துறவிகள் பலரின் வாழ்வுக்கு வழிகாட்டினார். இவர் வாழ்ந்த வாழ்க்கையை கண்ட பல இளைஞர்கள் இவரைப் பின்பற்றி குருவானார்கள். இவர் தன்னை பின்பற்றிய மற்ற துறவிகளையும் பாலைவனத்தில் கதவு இல்லாமல் அமைக்கப்பட்ட குடிசைகளில் வாழ வைத்தார்.

இவர் தன்னுடன் வாழ்ந்த அனைத்து குருக்களுக்கும் இறைவன் தனக்களித்த அன்பை வாரி வழங்கி தந்தையாய் இருந்தார். தனது துறவிகளுக்காக எதிரிகளால் பலமுறை வேதனைக்குட்படுத்தப்பட்டார். “டையோக்ளேசியன்” (Diocletian) என்ற அரசன் கிறிஸ்தவர்களை துன்புறுத்தியபோது உறுதியுடன் நம்பிக்கையை அறிக்கையிடுமாறு புனித அந்தோனியார் அவர்களை ஊக்குவித்தார். “ஆரியன்” (Arians) ஆதரவாளர்களுக்கு எதிராக போராடிய அத்தனாசியுசுக்கு துணை நின்றார்.

கரடுமுரடான கட்டாந்தரையில் படுத்து உறங்கி உப்பும், ரொட்டித் துண்டும் உண்டு உடலை ஒருத்து வாழ்ந்தார்.

புனிதரின் பக்தி முயற்சியை முறியடிக்க சாத்தான் பல வகைகளில் சோதித்தான் முடிவு தோல்வியே. அந்தோனியார் பல மீயியற்கை சோதனைகளை எதிர்கொண்டார், பல முறை சாத்தான் அவரை சோதித்தது. ஒரு முறை சாத்தான் பெண் வேடமிட்டு வந்து சோதிக்க சிலுவை அடையாளத்தால் அவனை முறியடித்தார், மறுமுறை தங்க, வெள்ளிக்கட்டிகளை பாதையில் இட்டு பொருளாசையால் சோதிக்க, அந்தோனியார் அதை ஒரு பொருட்டாய் மதிக்காமல் இயேசுவின் பெயரால் விரட்டியடித்தார். சிலுவை அடையாளத்தினாலும், இயேசுவின் பெயராலும், செபத்தாலுமே, பேய்களை எல்லாம் சிதறடித்தார்.

இறுதிக்காலம்:

தமது இறுதிக்காலம் நெருங்கியதை உணர்ந்த வனத்து அந்தோனியார், தமது சீடர்கள் அனைவரையும் "புனித மகாரியஸ்" (Saint Macarius) என்ற துறவியைப் பின்செல்ல அறிவுறுத்தினார். தமது அங்கி ஒன்றினை "புனித அதனாசியஸ்" (Saint Athanasius) என்பவருக்கு அளிக்கும்படி அறிவுறுத்தினார். மற்றொரு அங்கியினை தமது சீடர்களில் ஒருவரான "புனித செராபியனுக்கு" (Saint Serapion) அளிக்கும்படி அறிவுறுத்தினார்.

கி.பி 356ம் ஆண்டு இறந்த அவரது விருப்பப்படி அவரது சீடர் துறவிகளைத் தவிர வேறு எவருக்கும் தெரியாமல் அவரது கல்லறை இரகசியமாக மறைக்கப்பட்டது. கல்லறை வெளிப்படையாக இருந்திருந்தால் மக்கள் தம் கல்லறையையே பெரிதாக எண்ணி, படைத்த இறைவனை மறந்துவிடுவார்கள் என்று அவர் கருதியதே இதற்கு காரணம்.

அனேகமாக, இவர் தமது தாய்மொழியான "காப்டிக்" (Coptic) மொழியையே பேசினார். ஆனால் அவரது கற்பித்தல் யாவும் கிரேக்க மொழியாக்கத்திலேயே பரவின. இவரது சரித்திரம் "புனிதர் அதனாஸியசால்" (Saint Athanasius) எழுதப்பட்டன. "புனிதர் பெரிய அந்தோனியாரின் சரித்திரம்" (Life of Saint Anthony the Great) என்று தலைப்பிடப்பட்டது. இப்புனிதர் தாமாக துறவு மடம் எதுவும் நிறுவவோ அமைக்கவோ இல்லையென்றாலும், அவரைச்சுற்றி ஒரு சமூகம், அவரையும் அவரது துறவறத்தையும் அவரது தனிமைப்படுத்தப்பட்ட வாழ்க்கையையும் முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு வளர்ந்தது. புனிதர் அதனாஸியஸ் எழுதிய இவரது சரிதம், இவரது கொள்கைகளை பரப்புவதில் மிகவும் உதவியாக இருந்தது.