இன்றைய புனிதர் - ஜனவரி 16 - புனிதர் ஜோசப் வாஸ் ***


புனிதர் ஜோசப் வாஸ்

(St. Joseph Vaz)

இலங்கையின் திருத்தூதர்:

(Apostle of Sri Lanka)

கத்தோலிக்க குரு, மறைப்பணியாளர்:

(Catholic Priest and Missionary)

பிறப்பு: ஏப்ரல் 21, 1651

பெனோலிம், கோவா, போர்ச்சுகீசிய இந்தியா

(Benaulim, Goa, Portuguese India)

இறப்பு : ஜனவரி 16, 1711 (வயது 59)

கண்டி, கண்டி இராச்சியம், இலங்கை

(Kandy, Kingdom of Kandy, Sri Lanka)

ஏற்கும் சமயம்: 

ரோமன் கத்தோலிக்க திருச்சபை

(இந்தியா, இலங்கை சொற்பொழிவுக்கலை சபை)

(Roman Catholic Church 

(India, Sri Lanka and the Congregation of the Oratory)

அருளாளர் பட்டம்: ஜனவரி 21, 1995

திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல்

(Pope John Paul II)

காலிமுகத்திடல் பூங்கா, கொழும்பு, இலங்கை

(Galle Face Green, Colombo, Sri Lanka)

புனிதர் பட்டம்: ஜனவரி 14, 2015

திருத்தந்தை ஃபிரான்சிஸ்

(Pope Francis)

காலிமுகத்திடல் பூங்கா, கொழும்பு, இலங்கை

(Galle Face Green, Colombo, Sri Lanka)

முக்கிய திருத்தலங்கள்: 

புனித ஜோசப் வாஸ் திருத்தலம்,

முடிப்பு, பன்ட்வால், கர்நாடகா, இந்தியா மற்றும் இலங்கையிலுள்ள மஹாகலகமுவ, கலகமுவ

(St. Joseph Vaz Shrine, Mudipu, Bantwal, Karnataka, India & Mahagalgamuwa, Galgamuwa in Sri Lanka)

நினைவுத் திருவிழா: ஜனவரி 16

பாதுகாவல்: இலங்கையும் அந்நாட்டு மக்களும்

தற்போதைய இந்திய மாநிலமான கோவா, அந்நாளில் போர்ச்சுகீசிய பேரரசின்கீழ் இருந்த காலத்தில், புனிதர் ஜோசப் வாஸ், போர்ச்சுகீசிய இந்தியா என்றழைக்கப்பட்ட பகுதியான கோவாவின் “பெனோலிம்” என்னுமிடத்தில் தமது பெற்றோருக்கு பிறந்த ஆறு குழந்தைகளில் மூன்றாவதாகப் பிறந்தவர் ஆவார். இவரது தந்தை “கிரிஸ்டோவாவோ வாஸும்” (Cristóvão Vaz) தாயார் “மரியா டி மிராண்டாவும்” (Maria de Miranda) கத்தோலிக்க விசுவாசமிக்கவர்கள் ஆவர்.

தமது சிறு வயதில் போர்ச்சுகீசிய மொழியில் கல்வி கற்ற இவர், சிறந்த மாணவராகத் திகழ்ந்ததால் ஆசிரியர்களாலும் சக மாணவர்களாலும் மதிக்கப்பட்டார். மேல்படிப்புக்காக கோவா நகர் அனுப்பப்பட்ட வாஸ், “புனித பவுலின் இயேசு சபை கல்லூரியில்” (Jesuit college of St. Paul) சேர்ந்து “சொல்லாட்சி” (Rhetoric) மற்றும் “மனிதநேயம்” (Humanities) ஆகிய பாடங்களில் பட்டம் பெற்றார். மேலும், கோவா நகரின் டோமினிக்கன் சபையினரின் “புனித தோமஸ் அக்குயினாஸின்” (St. Thomas Aquinas') “டொமினிக்கன் கல்லூரியில்” சேர்ந்து (Academy of the Dominicans) தத்துவ ஞான சாஸ்திரம் மற்றும் இறையியல் கற்று தேர்ந்தார்.

கி.பி. 1675ம் ஆண்டு, கோவா உயர்மறைமாவட்டத்தில் திருத்தொண்டராக அருட்பொழிவு செய்யப்பட்டார். அடுத்த ஒரு வருடத்தில் கோவா உயர் மறைமாவட்ட பேராயரால் குருத்துவ அருட்பொழிவு செய்யப்பட்டார். குருத்துவம் பெற்ற உடனேயே அனுபவமிக்க மறைப் பணியாளர்கள் போல நடை பயணமாகவே பல ஊர்களுக்கு பயணித்து மறை போதனை செய்ய ஆரம்பித்தார். குரு மாணவர்களுக்காக "சேன்கோல்" (Sancoale) என்ற இடத்தில் ஒரு இலத்தீன் மொழி பள்ளியைத் நிறுவினார். கி.பி. 1677ம் ஆண்டு, தம்மைத் தாமே "மரியாளின் அடிமை" (Slave of Mary) என்று பிரகடனப்படுத்திக்கொண்டார். அதனை ஒரு உயிலாக பாவித்து சீலிட்ட உரையில் (Deed of Bondage) வைத்து பாதுகாத்தார்.

அந்நாளில், இலங்கையை ஆண்ட போர்ச்சுகீசியர்கள் (Portuguese) நாட்டை 'டச்சு' (Dutch) நாட்டவரிடம் ஒப்படைத்துவிட்டு வெளியேறினர். நாட்டை ஆளத் தொடங்கிய டச்சு நாட்டவர், தமது மத விசுவாசமான "கால்வினசம்" (Calvinism) சபையை ஏற்றுக்கொள்ள மக்களை வற்புறுத்தினர்.

("கால்வினசம்" (Calvinism) என்பது, 'John Calvin' என்பவரால் கத்தோலிக்கத்துக்கு எதிராக உருவாக்கப்பட்ட இறையியல் அமைப்பாகும். இது லூத்தரன் கோட்பாட்டை உள்ளடக்கியதாகும்.)

இந்தியாவின் கோவாவில் பிறந்த புனிதர் ஜோசப் வாஸ், இலங்கையில் கத்தோலிக்க விசுவாசம் டச்சுக்காரர்களால் அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டிருந்த வேளையில், இலங்கைவாழ் கத்தோலிக்கருக்கு சேவை செய்வதற்காக இலங்கை வந்தார். இவர் இலங்கையின் வடக்குப் பிராந்தியங்களில் "யோசேவாஸ் முனீந்திரர்" எனவும் அழைக்கப்பட்டார். பிற்காலத்தில் இவர் கண்டி இராச்சியத்தில் தங்கியிருந்து இலங்கையில் கத்தோலிக்க திருச்சபையை மீளமைத்தார்.

யாழ்ப்பாணம் வருகை:

கி.பி. 1687ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தார். அப்போது இலங்கையில் ஆட்சியில் இருந்த டச்சுக்காரர்கள் கால்வினிசத்தைப் (Calvinism) பின்பற்றியவர்கள். எனவே கத்தோலிக்கரையும், குருமாரையும் கொலை செய்தனர். பள்ளிகளைத் தரைமட்டமாக்கினர். இதனால் பிச்சைக்கார வேடத்தில் இலங்கை வந்த அடிகளாருக்கு சில்லாலையூர் மக்கள் புகலிடம் வழங்கினர். அவர் அங்கேயே தங்கி சில்லாலையிலும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் கத்தோலிக்க மக்களுக்கு சேவையாற்றினார். பின்னர் அவர் மாறுவேடத்தில் நடை பயணமாக 24 ஆண்டுகளாகப் வன்னி, புத்தளம், மன்னார், பூநகரி ஆகிய இடங்களுக்கும் சென்று மறை போதகம் செய்தார்.

கண்டிக்கு விஜயம்:

கி.பி. 1692ம் ஆண்டு, கண்டிக்குச் சென்ற வாஸ் அடிகளார், அங்கு ரோமன் கத்தோலிக்க விசுவாசத்தை மீண்டும் ஸ்தாபிக்கப் பெருமுயற்சி செய்தார். இதனால் அவர் அங்கு இரண்டாண்டுகள் சிறையிலும் இருக்க நேரிட்டது. கண்டியிலிருந்தே தனது சேவையைத் தொடர்ந்த வாஸ் அடிகள் கி.பி. 1696ம் ஆண்டு, இலங்கையின் (Vicar-General) பதவியைப் பெற்றார். கி.பி. 1710ம் ஆண்டில் மட்டக்களப்பு தாண்டவன்வெளி பரிசுத்த வியாகுலமாதா ஆலய வளவில் சிறு ஓலைக் கோயில் கட்டித் திருப்பலி ஒப்புக் கொடுக்கும்போது காட்டிக் கொடுக்கப்பட்டு மரத்தில் கட்டி அடிக்கப்பட்டார். கி.பி. 1711ம் ஆண்டில் கண்டியில் காலமானார்.

தமிழருக்கும் சிங்களவருக்கும் பணி:

வாஸ் அடிகளார் இலங்கை நாட்டில் தமிழ் மக்கள் மற்றும் சிங்கள மக்கள் மத்தியில் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் திருவிவிலியத்தை தமிழ், சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் மொழிபெயர்த்தார். அவ்விரு மொழிகளிலும் மக்கள் கடவுளை வழிபடுவதற்கான நூல்களையும் இயற்றினார்.

மடு நகரில் அமைந்துள்ள அன்னை மரியாள் ஆலயத்தைப் புதுப்பித்துக் கட்டுவதற்கு வாஸ் அடிகளார் துணைபுரிந்தார். மேலும், கிறிஸ்தவ விசுவாசத்தை இலங்கையில் பரப்புகையில், அந்தந்த மக்களின் பண்பாட்டுப் பாணிகளை மதிக்க வேண்டும் என்பதிலும் அவர் கவனமாயிருந்தார். மொழி, இன வேறுபாடுகளைக் களைந்து, கடவுள் நம்பிக்கையில் மக்கள் வளர வேண்டும் என்பது அவருடைய குறிக்கோளாக இருந்தது.

கத்தோலிக்கர்களுக்கு இவர் ஆற்றிய அரும்பணிகளுக்காக இவர் இலங்கையின் திருத்தூதர் என அழைக்கப்பட்டார். 

வழக்கமாக புனிதர் பட்டமளிப்புக்கு தேவைப்படும் இரண்டாம் புதுமையினை வேண்டாம் என்று திருத்தந்தை ஃபிரான்சிஸ், வாஸ் அடிகளாருக்கு விதிவிலக்கு அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் புனிதர் பட்டம் பெற்ற முதல் புனிதர் இவரேயாவார். இந்த நிகழ்வில் திருத்தந்தையிடம் ஆசிர் பெறுவதற்காக 4 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.