பாத்திமா காட்சிகள் - பிரான்சிஸ் ஆவி பிரிந்தது

மறுநாள் ஏப்ரல் 3.  காலைப் பொழுது ரம்மியமாக இருந்தது. பிரான்சிஸ் அமைதியுடன் நற்கருணை சேசுவின் வருகையை எதிர் நோக்கியிருந்தான்.  அந்த அறையில் ஒரு சிறு மேஜை மீது வெள்ளைத் துணி விரிக்கப்பட்டு திரிகளும் வைக்கப்பட்டிருந்தன. சற்று நேரத்தில் குருவானவர் சேசு கொண்டு வரும் அறிவிப்பு மணி ஒலித்தது.

பிரான்சிஸ் கண்ணைத் திறந்தான். ஒலிம்பியா திரிகளைக் கொளுத்தினாள்.  பிரான்சிஸ் எழுந்து படுக்கையில் உட்கார முயன்றான்.  அவனால் முடியவில்லை.  அங்கு நின்ற அவன் ஞானத் தாய் அவன் எழும்ப வேண்டியதில்லை, படுத்திருந்தபடியே சேசு வாங்கலாம் என்று கூறினாள்.

குரு நற்கருணை சேசுவை பிரான்சிஸின் எதிரில் உயர்த்தியபடி “இதோ சர்வேசுரனின் செம்மறி...” என்று கூறினார். சேசுவைப் பார்த்ததும் பிரான்சிஸ் மோட்ச இன்பத்தை அடைந்தது போல் உணர்ந்தான். அன்று போல் அவன் இருதயம் மகிழ்ச்சியால் நிரம்பி வழிந்ததில்லை.

அன்று பிரான்சிஸிடம் செல்வதற்கு ஜஸிந்தாவுக்கு அனுமதி கொடுக்கப்பட்டது. அவள் அவனுடைய படுக்கையருகில் சென்று அமர்ந்தாள்.  “ஜஸிந்தா, இன்று நான் உன்னை விட அதிக மகிழ்ச்சியாயிருக்கிறேன்.  என் நெஞ்சுக்குள் மறைந்த சேசுவைக் கொண்டிருக்கிறேன். நான் மோட்சத்திற்குப் போகிறேன். அங்கே உன்னையும் சீக்கிரம் கொண்டு வரும்படி நம் ஆண்டவரிடமும் நம் அம்மாவிடமும் அதிகம் மன்றாடுவேன்” என்றான் பிரான்சிஸ்.

ஏறக்குறைய அன்று முழுவதும் ஜஸிந்தா தன் அண்ணனுடனேயே இருந்தாள்.  சில சமயம் அவனுக்காக ஜெபமாலை சொல்வாள். ஏனென்றால் பிரான்சிஸால் ஜெபமாலை சொல்ல முடியவில்லை.  அந்தச் சிறு உள்ளங்கள் சேசுவின் அன்பைப் பற்றியும், நம் தேவ அன்னையின் அன்பைப் பற்றியும், பாவிகளின் மனந்திரும்புதல் பற்றியும் என்னென்ன பேசினவோ!

பள்ளி முடிந்து லூஸியா வந்து சேர்ந்ததும் பிரான்சிஸ் அவளைப் பார்த்து: “லூஸியா, நான் உன் விருப்பம் நிறைவேறும்படி மோட்சத்தில் நிச்சயம் அதிகம் மன்றாடுவேன். யார் கண்டார்கள், ஒருவேளை நம் அம்மா உன்னையும் மோட்சத்துக்கு எடுத்துக் கொள்ளக் கூடும்” என்றான்.

லூஸியா தன் முந்திய விருப்பத்தை மாற்றிக் கொண்டிருந்ததால், “வேண்டாம் பிரான்சிஸ். இப்போது அப்படிக் கேட்க வேண்டாம். நீ நம் ஆண்டவர் பாதத்திலும், நம் அம்மாவின் பாதத்தருகிலும் இருப்பதாக நினை.  அவர்கள் எவ்வளவு நல்லவர்கள்!” என்றாள்.

“சரி” என்று கூறிய பிரான்சிஸுக்கு ஒரு பலத்த சந்தேகம் எழுந்தது. 

“ஒருவேளை நம் அம்மா என்னை மறந்திருப்பார்களோ?” என்றான் கவலையோடு.

“ஆமா, உன்னை அவர்கள் மறந்துதான் போயிருப்பார்கள். சும்மா இரு” என்றாள் லூஸியா.

பிரான்சிஸ் புன்னகை செய்தான்.  அவன் முகம் பரலோக வடிவம் பெற்றுக் கொண்டு வந்தது. அதைப் பார்த்த லூஸியா இனி அவனை இவ்வுலகில் சந்திக்க முடியுமோ என்று ஐயப்பட்டாள்.

“பிரான்சிஸ், இன்று இரவு நீ மோட்சத்துக்குச் சென்றால், அங்கே என்னை மறந்து விடாதே. கேட்கிறதா?” என்றாள்   மெதுவாக.

“நீ பயப்படாதே. உன்னை நான் மறந்து போக மாட்டேன்” என்றான் பிரான்சிஸ்.  

பின் லூஸியாவின் கரத்தைப் பிடித்துக் கொண்டு சற்று நேரம் அவளையே உற்றுப் பார்த்தான்.  இருவரின் கண்களும் நீரால் நிரம்பின.

“பிரான்சிஸ், உனக்கு வேறு ஏதும் வேண்டுமா?” என்று தட்டுத் தடுமாறிக் கேட்டாள் லூஸியா.

“வேண்டாம்” என்று மிக மெதுவான குரலில் பிரான்சிஸ் பதிலளித்தான்.

இந்நேரம் ஒலிம்பியா, லூஸியாவை அவள் வீட்டிற்கு அனுப்பி வைக்க வந்தாள்.

“பிரான்சிஸ், போய்வருகிறேன்.  மோட்சத்தில் நாம் சந்திக்கும் வரை” என்று கூறிய லூஸியா, அழுதுகொண்டே வெளியேறினாள்.  அவளால் அதற்கு மேல் தாங்க முடியவில்லை.

இரவு முழுவதும் தன் இருதயத்தில் வந்த சேசுவை நினைத்துக் கொண்டே படுத்திருந்தான் பிரான்சிஸ். 

அவன் தாகத்திற்கு ஒலிம்பியா கொடுத்த கொஞ்சம் பாலைக் கூட பருக அவனால் முடியவில்லை.  சில துளி தண்ணீர் மட்டுமே வாய்க்குள் இறங்கியது.  “அம்மா, எனக்கு ஒன்றுமில்லை.  எனக்கு ஒன்றும் தராதீர்கள்” என்றான் அவன்.

ஒரு தடவை அவன் தாயைக் கூப்பிட்டு,

“அம்மா, அதோ பாருங்கள்!  வாசலருகே என்ன அழகான ஒளி தெரிகிறது...! இப்போ அதைக் காணோம்” என்றான்.

மறுநாள் காலை ஏப்ரல் 4.  பிரான்சிஸ் தன் தாயிடம், தான் அவளுக்கு ஏதாவது உபத்திரவம் கொடுத்திருந்தால், அவற்றையெல்லாம் மன்னிக்கும்படி கேட்டான்.  காலை 10 மணியளவில் அவன் ஆவி பிரிந்தது. உயிர் போனதே தெரியாத அளவிற்கு அமைதியாக இது நிகழ்ந்தது. ஜஸிந்தாவும், லூஸியாவும் அவனைப் பார்க்க வந்தபோது, அவன் முகத்தில் புன்னகை அரும்பியிருந்தது.

ஏப்ரல் 5-ம் நாள் 1919. ஒரு சிறு பவனி அல்யுஸ்திரல் கல்லறைத் தோட்டத்தை நோக்கிச் சென்றது. பலிபீடச் சிறுவன் பாடுபட்ட சிலுவையுடன் முன் நடக்க, குருவானவர் சில ஆட்களுடன் நடந்து வர, வெண்ணுடை தரித்த நான்கு சிறுவர்கள் பிரான்சிஸின் சடலப் பெட்டியைச் சுமந்து சென்றனர். 

லூஸியா அழுது கொண்டே பின்னால் நடந்து வந்தாள். மார்ட்டோவும் ஒலிம்பியாவும் துயர அழுகையுடன் வந்தார்கள். கல்லறைத் தோட்டத்தின் முன் வாசலருகே இப்புனித சிறுவனின் சடலத்தை அன்புடன் அமைதியில் அடக்கம் செய்து திரும்பினார்கள். ஜஸிந்தா நோய் அதிகரித்திருந்ததால், அடக்கத்திற்கு வர இயலவில்லை.

பிரான்சிஸின் கல்லறையில் ஒரு சிறு மரச் சிலுவையை நட்டு வைத்தாள் லூஸியா.

தேவ இரகசியத்தைக் கொண்டிருக்கிற ரோஜா என்கிற புஷ்பமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.