பாத்திமா காட்சிகள் - பிரான்சிஸ்க்குப் பாவசங்கீர்த்தனமும், நன்மையும்

பிரான்சிஸ் எவ்வளவு பலவீனப்பட்டிருந்தானென்றால் அவனால் ஜெபமாலை கூட சொல்ல முடியவில்லை.  உதடுகளை அசைத்து அருள் நிறை மந்திரம் சொல்ல இயலவில்லை.  தேவ இரகசியங்களைத் தியானிப்பது அதை விடக் கடினமாயிருந்தது. 

தன் தாயிடம் அவன், “அம்மா, அருள்நிறை மந்திரத்தைச் சொன்னால் எனக்கு எல்லாமே குழம்பி விடுகிறது.  என்னால் சொல்ல முடிய வில்லை” என்றான்.  ஒலிம்பியா இப்படிக் கூறும் தன் மகனை நினைத்து மிகவும் வேதனைப்பட்டாள்.  

அவன் நெற்றியில் கை வைத்தபடி, “அப்போ உதட்டை அசைக்காமல் சொல்.  அதையும் மாதா கேட்பார்கள்.  இதுவும்  அவர்களுக்குப் பிரியமாகவே இருக்கும்” என்றாள்.  பிரான்சிஸ் திருப்தியோடு புன்னகை செய்தான்.

1919 ஏப்ரல் மாத ஆரம்பம்.  லூஸியாவைப் பார்க்க வேண்டும் என்றான் பிரான்சிஸ்.  லூஸியா ஓடோடி வந்தாள்.

“லூஸியா, என் நோய் மிகவும் அதிகரித்துள்ளது. சீக்கிரமாக மோட்சத்துக்குப் போகப் போகிறேன்” என்று கூறினான் சிறுவன்.

“அப்படியா?  அங்கே பாவிகளுக்காக அதிகம் ஜெபிக்க மறவாதே. பரிசுத்த பிதா பாப்பரசருக்காகவும், ஜஸிந்தாவுக்காகவும், எனக்காகவும் மன்றாட வேண்டும்.” 

“நிச்சயம் மன்றாடுவேன்.  ஆனால் இதை ஜஸிந்தாவிடம் சொல்.  நமதாண்டவரிடம் போகையில் ஒரு வேளை இவற்றை நான் மறந்து விடுவேன்.  முதலில் நான் அவரை ஆறுதல்படுத்த வேண்டும்... சரி லூஸியா, நான் பாவசங்கீர்த்தனம் செய்ய வேண்டுமே” என்றான் பிரான்சிஸ்.

ஏப்ரல் 2ம் நாள் இரவு அவன் நிலை மிகவும் கவலைக்கிடமாயிருந்தது. ஆதலால் மறுநாள் காலையில் முதல் வேலையாக குருவானவரை வரவழைத்து, அவனுக்குப் பாவசங்கீர்த்தனமும், நன்மையும் கொடுக்க ஏற்பாடு செய்வதாக அவன் பெற்றோர் உறுதி கூறினார்கள்.

மறுநாள் அதிகாலையில் தன் சகோதரி தெரேசாவிடம், “அக்கா, லூஸியாவை உடனே பார்க்க வேண்டும். வரச் சொல்” என்றான் பிரான்சிஸ்.

தெரேஸா ஓடிச் சென்றாள் லூஸியாவின் வீட்டிற்கு.

“லூஸியா, உடனே வா. பிரான்சிஸ் ரொம்ப மோசமாக இருக்கிறான்.  உன்னிடம் ஏதோ சொல்ல விரும்புகிறான்” என்று அறிவித்தாள்.

லூஸியா பிரான்சிஸிடம் ஓடி வந்தாள். அங்கு பிரான்சிஸின் தாயார், அவன் அண்ணன் ஜான் மற்றும் அவன் இரு சகோதரிகளும் நின்றார்கள். பிரான்சிஸ் லூஸியாவிடம் தனியாகப் பேச விரும்பியதால், அவர்கள் சற்று வெளியே செல்லும்படி லூஸியா கேட்டாள். அவர்களும் சென்றனர்.

“லூஸியா, நான் பாவசங்கீர்த்தனம் செய்யப் போகிறேன். நற்கருணை உட்கொண்டு அதன்பின் இறப்பேன்.  நான் ஏதாவது பாவம் செய்வதை நீ கண்டிருந்தால் சொல். ஜஸிந்தா ஏதாவது பார்த்திருந்தால் அவளிடமும் கேள்” என்றான் பிரான்சிஸ்.

லூஸியா சற்று ஞாபகப்படுத்திப் பார்த்தபின், “சில சமயம் நீ உன் அம்மாவுக்குக் கீழ்ப்படியவில்லைதானே? வீட்டில் இருக்கும்படி அவர்கள் சொன்னபோது, நீ ஓடி ஒளிந்து கொண்டாயல்லவா?” என்றாள்.

“ஆம். அது உண்மைதான். இனி நீ ஜஸிந்தாவிடம் போய் அவளுக்கு ஏதாவது ஞாபகத்தில் உள்ளதா என்று கேட்டு வா” என்றான் பிரான்சிஸ்.

ஜஸிந்தா நோயுற்றுப் படுத்திருந்த அறைக்கு லூஸியா சென்றாள். செய்தியறிந்த ஜஸிந்தா நன்றாக நினைத்துப் பார்த்து விட்டு, “அம்மா நமக்குக் காட்சி தருமுன், அவன் அப்பாவிடமிருந்து ஒரு டோஸ்டன் (ஏறக்குறைய ஒரு ரூபாய்) திருடி ஜோசப் மார்ட்டோவிடம் மெளத் ஆர்கன் வாங்கினான். அதோடு போலெய்ரோஸ் பையன்கள் மீது அல்யுஸ்திரல் பையன்கள் கல் எறிந்த போது, அவனும் எறிந்தான்” என்று கூறினாள் ஜஸிந்தா.

இந்தச் செய்தியைக் கொண்டு லூஸியா பிரான்சிஸிடம் வந்தாள்.

“அதையயல்லாம் நான் முன்பே சொல்லி விட்டேன். ஆயினும் திரும்பவும் அவற்றைச் சொல்வேன். ஒருவேளை நான் இப்படிச் செய்ததினால்தான் சேசு  இவ்வளவு  துயரமாயிருக்கிறார் போலும்.  

நான் சாகாமலிருந்தால் அவற்றை ஒருபோதும் செய்யவே மாட்டேன். அவற்றிற்காக மிகவும் வருந்துகிறேன்” என்றான் பிரான்சிஸ்.

இப்படிச் சொன்ன பிரான்சிஸ் தன் கரங்களைக் கூப்பி, “ஓ என் சேசுவே, எங்களை மன்னியும். நரக நெருப்பிலிருந்து எங்களைக் காப்பாற்றும். எல்லா ஆன்மாக்களையும், விசே­மாய் யார் அதிகத் தேவையிலிருக்கிறார்களோ, அவர்களையும் மோட்சத்திற்கு அழைத்தருளும்” என்று ஜெபித்தான். பின் லூஸியாவைப் பார்த்து,

“லூஸியா, நீயும் ஆண்டவர் என் பாவங்களை மன்னிக்கும்படி கேள்” என்றான்.

“நான் கேட்பேன். நீ கவலைப்படாதே. நமதாண்டவர் உன்னை மன்னியாதிருந்திருந்தால் அன்றைக்கு நம் அம்மா ஜஸிந்தாவிடம் அவர்கள் உன்னை மோட்சத்திற்குக் கொண்டு செல்ல சீக்கிரம் வருவதாகக் கூறியிருக்க மாட்டார்கள். இப்போது நான் பூசைக்குப் போகிறேன். அங்கே மறைந்த சேசுவிடம் உனக்காக மன்றாடுவேன்” என்றாள் லூஸியா.

“பங்குக்குரு எனக்கு சேசு தரும்படி ஆண்டவரிடம் கேள்.” 

“சரி, கேட்கிறேன்.” 

அத்துடன் லூஸியா பூசைக்குச் சென்றாள்.

பூசை முடிந்து அவள் திரும்பி வந்தபோது, பிரான்சிஸின் கட்டில் ஓரத்தில் ஜஸிந்தா உட்கார்ந்திருந்தாள். லூஸியாவைக் கண்டவுடன் பிரான்சிஸ், 

“பங்குக் குரு எனக்கு சேசு தரும்படி மறைந்த சேசுவிடம் கேட்டாயா?” என்றான்.

“ஆம்” என்றாள் லூஸியா.

“மோட்சத்தில் நான் உனக்காக ஜெபிப்பேன்” என்றான் பிரான்சிஸ்.

“சரி. ஆனால் அன்றைக்கு எனக்காக செபிக்க மாட்டேன் என்றாய்தானே?” 

“அது உன்னை சீக்கிரம் மோட்சத்திற்குக் கொண்டு செல்வதைப் பற்றி. ஆனால் நீ விரும்பினால் நான் கேட்பேன். அப்போது நம் அம்மா நீ விரும்புவதைச் செய்வார்கள்.” 

“நீ கேள்.  அது எனக்கு விருப்பம்தான்” என்றாள் லூஸியா.

இதன்பின் லூஸியா வீட்டில் தன் வேலைகளைச் செய்து விட்டு பள்ளிக்குச் சென்றாள். அவள் திரும்பி வந்தபோது பிரான்சிஸ் மிக்க மகிழ்ச்சியுடனிருந்தான். பங்குக் குரு வந்து அவன் பாவசங்கீர்த்தனத்தைக் கேட்டிருந்தார். மறுநாள் சேசு கொண்டு கொடுப்பதாகவும் கூறியிருந்தார்.