பின்வரும் நிகழ்ச்சியானது இரண்டாம் உலகப் போரின் போது நிகழ்ந்த ஓன்று. இந்நிகழ்ச்சியானது முதன் முதலில் ஒரு ஜெர்மா னியப் பத்திரிகையில் “ Seine Muller Meine Muller “ என்ற தலைப்பில் A M Weigl என்பவரால் எழுதப்பட்டது. பின்னர் அன்னா என்பவரால் ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.
ஐரின் படைப்பிரிவின் இடம்பெற்றிருந்த படையணி ஒன்றிலிருந்த போர்வீரர் விளக்கிய உண்மைச் சம்பவம்.
“எதிரிகளைத் தாக்கி முன்னேறிச் சென்று கொண்டிருந்த நாங்கள், இந்தோபென் நகரைக் கடந்து உடேன் என்ற நகரின் வழியாக, எங்களது பீரங்கிகளும், போர் வாகனங்களுடேன் சென்று கொண்டிருந்தோம். அன்று மாலையில் நிமேகன் என்ற ஊரில் இருந்த பயன்படுத்தப்படாத விவசாயப் பண்ணை நிலத்தில் நாங்கள் ஓய்வெடுத்தோம். அப்பண்ணையில் இருந்த வீட்டின் பின்புறத்தில், செங்கல்களின் மறைவில் அடிபம்பு ஓன்று இருந்தது.
மணிக்கணக்காக போரிட்டு வியர்வையிலும், புழுதியிலும் மூழ்கியிருந்த எங்களுக்கு, எங்களை சுத்தப்படுத்திகொள்ள நல்ல ஒரு வாய்ப்பாக அது அமைந்தது. அதனை நாங்கள் எங்கணம் பயன்படுத்தியிருப்போம் என்பதனை நீங்கள் கற்பனை செய்து பார்த்துக்கொள்ளலாம். அப்படையணியில் அங்கம் வகித்துக்கொண்டிருந்த நானும், நான் அணிந்திருந்த ஆடைகளைக் களைந்து, அணிந்திருந்த உத்தரியத்தினை கழற்றி பம்பின் மேல் போட்டு விட்டு என்னை கழுவிக்கொண்டேன்.
ஒரு மணி நேரத்திற்குப் பின்னர், இன்னமும் முன்னேறிச் சென்று, ஒன்றரை மைல் தோலைவில் இருந்த, எதிரிகள் விட்டுச் சென்றிருந்த பதுங்கு குழி ஒன்றினை கைப்பற்றி அதில் இருக்குமாறு எங்களுக்குஉத்தரவு வந்தது. அவ்வாறே செய்த நாங்களும், அந்த பதுங்கு குழியினுள் எங்களது இரவினை அன்று அமைதியாக கழிக்கலாம் என்று எதிர் நோக்கி இருந்தோம்.
அங்கு சென்று படுத்துக்கொண்டு நான் எனது மேலாடையின் பொத்தான்களை கழற்றும் பொழுதுதான் எனது உத்தரியத்தினை அணியாத பயங்கரமான உண்மை எனக்கு உரைத்தது. அந்த உத்தரியமானது எனது தாய் எனக்குத் தந்திருந்த அன்புப் பரிசு. இந்தப் போரின் பொழுது எல்லா நேரங்களிலும் அதனை அணிந்திருந்த நான், போரின் கடைசி கட்டமாக சிங்கத்தின் குகைக்குள் செல்லப் போகும் இந்நேரத்தில் அதனை இழந்துவிட்டேனே என தவித்துக் கொண்டிருந்தேன்.
திரும்பிச் சென்று அதனை எடுத்து வருவதென்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. அதனால் நான் அதனை மறந்துவிட்டு தூங்குவதற்கு முயன்று கொண்டிருந்தேன். தூக்கம் வராமல் வலப்பக்கமும் இடப்பக்கமும் புரண்டு கொண்டே இருந்தேன். எனக்கு தூக்கம் வரவில்லை. என்னைச் சுற்றிலும் சக வீரர்களாகிய எனது நண்பர்கள், வெகு அருகில் பீரங்கிக் குண்டுகள் விழும் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தாலும், அதனை பற்றி கவலைப்படாமல் மரக்கட்டை போல தூங்கிக்கொண்டிருந்தனர்.
கடைசியில் எப்படியாவது திரும்பிச் சென்று, எனது உத்தரியத்தினை எடுத்து வருவது என தீர்மானித்து, மெதுவாக உறங்கிக் கொண்டிருந்த எனது நண்பர்களைத் தாண்டி தவந்து சென்றேன். இரவு காவல் காத்துக்கொண்டிருக்கும் வீர்ர்களைத் தாண்டி வெளியே செல்வதென்பது எளிதல்ல, ஆனாலும் நான் எப்படியோ அவர்களைக் கடந்து ஓட்டமும் நடையுமாக, நாங்கள் முன்பு ஓய்வெடுத்துக் கொண்டிருந்த அந்த பண்ணை வீட்டினை நோக்கிச் சென்றேன்.
அது அடர்ந்த காரிருள் சூழ்ந்த நேரம், ஆனால் என்னது நல்ல நேரம் நான் வேகமாக அந்த இடத்தினை அடைந்தேன். அந்த பம்பின் அருகில் சென்று, அந்த கும்மிருட்டில் எனது கரங்களால், நான் கழற்றி வைத்த உத்தரியத்தை தேடினேன். ஆனால் அது எனக்குக் கிடைக்கவில்லை. எனவே நான் ஒரு தீக்குச்சியினை பற்ற வைக்க முயன்ற பொழுது, மிகப் பயங்கரமான வெடிகுண்டுச் சத்தம் கேட்டது.
ஐயோ! நான் என்ன செய்வேன்? இது எதிரிகளின் தாக்குதலுக்கான அடையாளமோ? என எண்ணிக்கொண்டே, எவ்வளவு வேகமாக ஓட முடியுமோ அவ்வளவு வேகமாக நான் எங்களது பதுங்கு குழியினை நோக்கி ஓடி வந்தேன். விரைவாக அங்கு சென்று எனது நண்பர்களுக்கு உதவலாமென்று எண்ணினேன்.
பதுங்கு குழியின் அருகில் சென்ற பொழுதுதான், பொறியாளர்கள் வேக வேகமாக சரிந்து கிடந்த மணலையும், அதன்மேல் மலை போல கிடந்த தடுப்புக் கம்பிகளையும் அப்புறப்படுத்திக் கொண்டிருந்தார்கள். எனது நண்பர்கள் உறங்கிக் கொண்டிருந்த அந்த பதுங்கு குழி இருந்த இடத்தில் குண்டு வெடித்ததால் உண்டான மிகப் பெரிய பள்ளம் ஒன்று காணப்பட்டது.
எதிரிகள் அந்த பதுங்கு குழியினை விட்டுச் செல்லும் பொழுது சிறுது நேரம் கடந்த பின்னர் வெடிக்கக் கூடிய வகையில் குண்டு ஒன்றினை தயார் செய்து வைத்துவிட்டுச் சென்றுள்ளனர். அக்குண்டானது நான் எனது உத்தரியத்தினை தேடிச் சென்ற சமயத்தில் வெடித்து விட்டது. அந்த வெடிகுண்டு விபத்தில் ஒருவருமே உயிர் பிழைக்கவில்லை. நான் எனது உத்தரியத்தினைத் தேடி செல்லாமலிருந்தால், நானும் உயிரிழந்த அவர்களில் ஒருவனாக இருந்திருப்பேன்.
அடுத்த நாள் கலையில் நான் எனது பிரிவின் சமையலறையினுள் சென்ற பொழுது என்னுடைய நண்பனான சகவீரன் ஒருவனைக் கண்டேன். அவன் என்னைப் பார்த்து மிகவும் ஆச்சரியத்துடன், “நீயும் பதுங்கு குழியினுள் இருந்தாய் என்றல்லவா நான் எண்ணிக் கொண்டிருந்தேன்” எனக் கூறினான். நான் மறுமொழியாக நானும் அவ்வாறே எண்ணிக் கொண்டிருந்தேன் என ஆச்சரியத்துடன் கூறினேன்.
அதற்கு அவன் கூறியதாவது, “ நானும் பதுங்கு குழியினுள் தான் இருந்தேன். ஆனால் நான் உறங்கப் போகும் முன், உன்னைத் தேடி வந்தேன். உன்னைக் காணவில்லை. நமது பிரிவின் தலைவர் நான் அங்குமிங்கும் அலைவதைக் கண்டு என்ன வேண்டும் எனக் கேட்டார். நானும் உன்னைத் தேடுவதை அவரிடம் கூறிய பொழுது, இந்த நேரத்தில் இது முடிகிற காரியமா? அதைவிட அந்த அறையினுள் சென்று எனக்கு குடிக்க ஒரு பாட்டில் தண்ணீர் கொண்டு வா எனக் கூறியதால் நான் அங்கு சென்றேன். அந்நேரத்தில் தான் அந்த பயங்கரமான வெடிவிபத்து நிகழ்ந்தது” எனக் கூறினான்.
நானும் மயிரிழையில் உயிர்பிழைத்தேன் என்று கூறிக்கொண்டே என்னை அவன் தேடியதற்கான காரணத்தைக் கேட்ட பொழுது அவன், உன்னிடம் இதனை கொடுக்கத்தான் என்று கூறிக் கொண்டே அவனது சட்டைப்பையிலிருந்த, எனது உத்தரியத்தினை எடுத்து என்னிடம் கொடுத்தான்.” என அந்த போர்வீரன் சான்று பகர்ந்துள்ளான்.
*****சிந்தனை*****
சாத்தானுக்கெதிரான நமது இவ்வுலக வாழ்வில், நம்மை காப்பாற்றிக்கொள்ளக் கூடிய பலம் நம்மிடம் இல்லை. தனது பிள்ளைகளாகிய நமது நிலை கண்டு மனமிரங்கி, அரக்கப் பாம்பாகிய சாத்தான் நம்மை கொத்திச் சென்று விடாதபடிக்கு, கடவுள் தனக்களித்த கழுகின் சிறகுகளால் நம்மை தேவ தாயார் பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அவரது பிள்ளைகளுக்கான அடையாளமாக, நமது ஆன்மாவின் பாதுகாப்பு கவசமாக அவர்கள் நமக்கு உத்தரியத்தினை அளித்துள்ளார்கள். நாம் அதன் மகத்துவத்தினை உணராமல், மிகச் சிறந்த இந்த எளிய பக்தி முயற்சியினை, தேவதாயரின் பாதுகாவலை ஏற்றுக் கொள்ள மறுக்கிறோம்.
அன்னையின் பாதுக்காப்பு கவசமாகிய அவரது இரக்கத்தின் ஆடையினை ஏற்றுக் கொண்டு, அவரது பிள்ளைகளாக, அவரது சிறகுகளின் நிழலில் அடைக்கலம் தேடும் குழந்தைகளாக மாற நாம் தயாரா?
இயேசுவுக்கே புகழ்!!!! மரியாயே வாழ்க!!!!!
நன்றி : சகோ. ஜெரால்ட்