உத்தரியத்திற்கான வத்திக்கானின் அங்கீகாரம்!

உத்தரியத்தினை நாம் அணியும் பொழுது நாம் கார்மல் மாதா சபையின் மூன்றாம் நிலையினராக இணைகிறோம். நாம் பக்தியுடன் உத்தரியத்தினை அணிந்திருப்பதன் வாயிலாக, நாம் தேவதாயாரிடம் நமது ஆன்ம ஈடேற்றத்திற்கான தடைகளை அகற்ற, சாத்தானின் சூழ்ச்சிகளிலிருந்து வெற்றி பெற உதவி வேண்டி ஒவ்வொரு நொடியும் மறைமுகமாக செபிக்கிறோம். கார்மல் மாதா சபையின் அனைத்து செபங்களிலும், புண்ணியங்களிலும் நாம் பங்கு பெறுகின்றோம்.

பாப்பரசர் பன்னிரண்டாம் பத்திநாதர் உத்தரியத்தின் மகிமைகளைக் குறித்து அடிக்கடி எடுத்துரைத்துள்ளார். நமதன்னை புனித சைமன் ஸ்டாக்கிற்கு உத்தரியத்தினை வழங்கிய 700 ஆம் ஆண்டு நிறைவு பெருநாளில், ”உத்தரியம் அணிந்திருப்பது, நாம் நம்மையே அன்னை மரியாளின் மாசற்ற இருதயத்திற்கு அர்ப்பணிப்பதற்கான அடையாளம்” என்று குறிப்பிடுகிறார்.

மேலும் உத்தரியமானது நமதாண்டவரின் இனிமையான நுகத்தடிக்கு அடையாளமாக இருப்பதாகவும் அதனை தாங்குவதற்கு அன்னை மரியாள் நமக்கு உதவுவதாகவும் குறிப்பிடுகின்றார். கடைசியாக, உத்தரியமானது நம்மை அன்னை மரியாளின் தேர்ந்து கொள்ளப்பட்ட குழந்தைகளாக அடையாளம் காட்டுவதாகவும், நமக்கு இரக்கத்தின் ஆடையாக இருப்பதாகவும் குறிப்பிடுகின்றார். கூடியிருந்த அனைவரிடமும் அன்னையின் மாசற்ற திரு இருதயத்திற்கு தங்களை அர்ப்பணிப்பதன் அடையாளமாக உத்தரியம் அணிந்து கொள்ள வலியுறுத்தினார். நமதன்னையும் பாத்திமாவில் அளித்த கடைசி காட்சியில் உத்தரிய அன்னையாக தோன்றினார்கள். 

ஜெர்மானியர்கள் உத்தரியத்தினை “இரக்கத்தின் ஆடை (Garment of Grace)” என அழைக்கின்றனர். ஏனெனில், நமதன்னை எண்ணற்ற உத்தரிய அற்புதங்களின் வாயிலாக பல்லாயிரக்கணக்கான மக்களை நரக நெருப்பிலிருந்து மீட்டேடுத்துள்ளர்கள் என பல புனிதர்களின் குறிப்புகள் வாயிலாக நாம் அறிந்து கொள்கின்றோம். உத்தரியத்தினை அணிந்துள்ள ஒவ்வொரு ஆன்மாவிற்கும் மரண வேளையில் உதவியாகவும், பாவங்களுக்காக மனம் வருந்தி பாவ  மன்னிப்பு பெறவும் உதவுகிறார்கள்.

புனித கிளாட் தே கொலம்பியர், “ நமதாண்டவரின் தாயாரை மகிமைப்படுத்து நாம் மேற்கொள்ளும் பல்வேறு கீழ்படிதலுள்ள பக்தி முயற்சிகளில் உத்தரியத்தினைப் போன்றது வேறு எதுவுமில்லை. வேறு எந்த பக்தி முயற்சிகளும் இதனைப் போன்று பல்வேறு அற்புதங்களால் உறுதி செய்யப்படவில்லை” என குறிப்பிடுகின்றார்.

*****அர்ப்பணிப்பிற்கான அழைத்தல்******

1952 ஆம் ஆண்டுன் அக்டோபர் மாதத்தில், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இருந்த விமானப்படை அதிகாரி ஒருவர் தனது உத்தரிய அனுபவங்களை பதிவு செய்துள்ளார்.

அவர் இதனை பதிவு செய்த ஆறு மாதங்களுக்கு முன்னர் அவர் உத்தரியம் அணிந்து கொண்டுள்ளார். உத்தரியம் அணிய ஆரம்பித்த சில நாட்களுக்குள்ளாகவே, தனது வாழ்வின் மிகச் சிறந்த மாற்றங்களை அவர் உணர்ந்ததாக பதிவு செய்துள்ளார்.

மேலும், உத்தரியம் அணிய ஆரம்பித்த உடனே, தினமும் திருப்பலிக்குச் சென்றதாகவும், சில நாட்களுக்குப் பின்னர் திவ்ய நற்கருணை உட்கொள்ள ஆரம்பித்ததாகவும் குறிப்பிடுகின்றார். தவக்காலத்தினை முன்னெப்போதும் இல்லாதவாறு, முழுவதும் அர்ப்பண உணர்வுடன் ஆண்டவரின் பாடுகளை தியானிக்க துவங்கியதாகவும், அதன் வாயிலாக தன்னையே ஆண்டவரின் வழிக்கு தயார்படுத்தி, அவரது வழியில் நடக்க முயற்சிப்பதை உணர்ந்ததாகவும் குறிப்பிடுகின்றார்.

கடைசியாக, இவை அனைத்திற்கும் பரிசுத்த தேவதாயாரின் உத்தரியமே காரணம் என பதிவு செய்துள்ளார்.

*****மரண வேளையில் மனமாற்றத்திகு உதவிய உத்தரியம்*****   

உத்தரியத்தினால் அன்னையின் வாயிலாக நிகழ்ந்த முதல் அற்புதமானது, நமதன்னை உத்தரியத்தினை புனித சைமன் ஸ்டாக்கிற்கு வழங்கிய அதே நாளில் நிகழ்ந்தது.

நமதன்னை உத்தரியத்தினை புனிதருக்கு வழங்கிய அதே நாளில், லின்றன் நகரினைச் சேர்ந்த பீட்டர் என்ற பிரபுவால், மரணப் படுக்கையில் இருந்த அவனது சகோதரனுக்கு உதவுவதற்காக, புனிதர் அவசரமாக அழைக்கப்பட்டார். மரணப்படுக்கையில் இருந்த அம்மனிதன் இறை நம்பிக்கையின்றி கடவுளின் நட்பை விட்டு வெகு தொலைவில் இருந்தான்.

புனிதரும் அவனுக்கு உதவுவதற்காக உடனடியாக அங்கு புறப்பட்டுச் சென்றார். அங்கு சென்றவுடன், அன்னை அவருக்கு வழங்கியிருந்த உத்தரியத்தினை அந்த மனிதனின் மேல் வைத்து, பரிசுத்த தேவதாயரிடம் அவர்கள் அருளியிருந்த வாகுறுதியினை நிறைவேற்றி வைக்குமாறு உருக்கமுடன் மன்றாடினார்.

சிறிது நேரத்திலேயே அம்மனிதன் தனது பாவங்களை நினைத்து மனம்வருந்தி, நல்ல பாவசங்கீர்த்தனம் செய்து, மாதாவின் பேறுபலன்களின் வாயிலாகப் பெற்ற கடவுளின் இரக்கத்தினால், அவரது நண்பனாக இறந்தான்.

அந்த இரவு அவன் தனது சகோதரனுக்குத் தோன்றி, “நான் மிகவும் சக்தியுடைத்தான இராக்கினியால், என்னருகில் இருந்த அம்மனிதனின் உத்தரியத்தினை கேடயமாகக் கொண்டு மீட்கப்பட்டேன்” என்று வெளிப்படுத்தினான்.

*****சிந்தனை*****           

அன்னையின் இரக்கத்தின் ஆடையான உத்தரியத்தினை மிகவும் பக்தியுடன் அணிந்திருந்தால், நம்மை நோக்கி எய்யப்படும் அம்புகள் போன்ற சாத்தானின் சூழ்ச்சிகள் நம்மை எதுவும் செய்யாதவாறு பாதுகாப்பு கவசமாக செயல்படுகின்றது.

ஒரு ஆன்மாவின் மரண நேரத்தில் சாத்தான் எப்படியாவது, அதனை நரகத்திற்கு கொண்டு செல்லவேண்டுமென முயற்சி எடுக்கிறது, அந்த ஆன்மா உலகில் வாழ்ந்த நாட்களில் செய்த பாவங்களை வரிசையாக அதன் கண் முன்னால் காண்பித்து, மோட்சம் அதற்கு கிடைக்காது போன்ற ஒரு அவ நம்பிக்கையினை ஏற்படுத்துகின்றது.

ஆனால், நாம் ஜெபிக்கும் ஒவ்வொரு அருள் நிறை மந்திரத்திலும் நாம் பரிசுத்த தேவதாயரை நமது மரண வேளையில் துணைக்கு அழைக்கின்றோம். நாம் ஜெபிக்கும் ஒவ்வொரு அருள் நிறை மந்திரமும் சாத்தானுக்கு எதிரான ஆயுதமாகவும், நாம் அணிந்திருக்கும் உத்தரியம் நம்மை பாதுகாக்கும் கவசமாகவும் இருக்கும்.

எப்பொழுதும் பக்தியுடன் உத்தரியம் அணிந்திருக்கும் ஒரு ஆன்மாவின் மரண வேளையில், பரிசுத்த தேவதாயார் அதற்குத் தேவையான அருளுதவிகளை தமத்திருத்துவத்திடம் மன்றாடி பெற்றுத் தருகிறார்கள். குறிப்பாக நல்ல பாவ மன்னிப்பு, மற்றும் குருவானவரின் அருகாமை என அவ்வான்மாவிற்கு தேவையானவற்றை உறுதி செய்கின்றார்கள்.

நாமும் அன்னையின் இரக்கத்தின் ஆடையின் பாதுகாப்பில் நமது கொண்டு செல்ல தயாரா????

இயேசுவுக்கே புகழ்!!!! மாமரித்தாயே வாழ்க!!!!

நன்றி : சகோ. ஜெரால்ட்