உத்தரியத்திகான சனிக்கிழமை சலுகை!

கார்மல் மலையின் பரிசுத்த கன்னி மாமரி, உத்தரியத்தினை விடாமுயற்சியுடனும், பக்தியுடனும் அணிந்திருக்கும் தனது குழந்தைகளை நித்திய நரகக் கேட்டிலிருந்து காப்பாற்றுவேன் என வாக்குறுதி அளித்துள்ளார்கள். அது மட்டுமின்றி, இவ்வுலகில் செய்த பாவங்களுக்கு பரிகாரம் செய்யாமல், உத்தரிக்கிற நிலையில் தனது பாவங்களுக்கான பரிகாரத்தினை நிறைவேற்றும் உத்தரியம் அணிந்திருக்கும் ஆன்மாக்களை, அவர்களது உத்தரிக்கிற நிலையின் காலத்தினை குறைத்து மிக விரைவில் மோட்சத்திற்கு கூட்டிச் செல்வேன் என்று வாக்குறுதி அளித்துள்ளார்கள்.

இந்த வாக்குறுதியானது, பாப்பரசர் 22 ஆம் அருளப்பரின் சுற்றுமடலின் வாயிலாக அறியலாம். அவருக்குத் தோன்றிய பரிசுத்த கன்னி மாமரி, தனது இரக்கத்தின் ஆடையினை அணிந்து மரிக்கும் தனது குழந்தைகளைக் குறித்து அவரிடம்,

“இரக்கத்தின் அன்னையாகிய நான், உத்தரியத்தினை அணிந்திருக்கும் என்னுடைய குழந்தைகள் இறந்த பின்னர் உத்தரிக்க நிலையில் வேதனைப்பட்டால், அவர்கள் இறந்த அடுத்த சனிக்கிழமை நானே உத்தரிக்க நிலைக்கு கீழே இறங்கி வந்து, அவர்களை நித்திய வாழ்விற்கு என்னுடன் பரிசுத்த மலைக்கு அழைத்துச் செல்வேன்” என கூறியுள்ளார்கள்.

இந்த சலுகையினை பெறுவதற்காக, தனது உத்தரிய பாதுகாப்பினை ஏற்றுக்கொள்ளும் ஒவ்வொரு ஆன்மாவும், தாங்கள் இவ்வுலகில் வாழும் நாட்களில், பின்வரும் நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் என பரிசுத்த கன்னி மாமரி கூறியுள்ளார்கள்.

1) எப்பொழுதும் உத்தரியத்தினை பக்தியுடன் அணிந்திருக்கவேண்டும்.

2) தான் வாழும் நிலைகேற்ற கற்பு நெறியினை கடைபிடிக்கவேண்டும். அதாவது, திருமணமானவர்கள் தங்கள் துணைக்கு உண்மையுள்ளவர்களாகவும், தனித்து வாழ்பவர்கள் இறைவனுக்கு உண்மையானவர்களாகவும் வாழ வேண்டும்.

3) தினமும் மரியாயின் ஜெபக்கிரீடமோ அல்லது திருச்சபையின் அறிவித்துள்ள நாட்களில் ஒருசந்தியும், புதன்கிழமை சனிக்கிழமைகளில் சுத்தபோசனமும் அல்லது குருவானவரின் அனுமதி பெற்று, நமதன்னையின் ஐம்பத்திமூன்று மணி ஜெபமாலையோ அல்லது குருவானவரின் அனுமதி பெற்று வேறு ஏதாவது நல்ல காரியங்களோ செய்ய வேண்டும்.

முதலாம் உலகப்போர் நிகழ்ந்த காலகட்டத்தில் இருந்த, பாப்பரசர் பதினைந்தாம் ஆசிர்வாதப்பர் (Pope Benedict XV), உத்தரியத்தினை பக்தியுடன் முத்தி செய்பவர்களுக்கு 500 நாட்கள் பலன்கள் என அங்கீகரித்தார்கள்.   

*****உத்தரிய பக்தியினால் காப்பற்றப்பட்ட துறவி***** 

1944 ஆம் ஆண்டில் நிகழ்ந்த இந்த புதுமை, புனித நாட்டில் இருந்த கார்மல் மாதா சபையினைச் சேர்ந்த துறவிக்கு, புனித நாட்டில் நேர்ந்த ஒன்றாகும்.

ஒருநாள் அத்துறவி, அருகிலிருந்த கைதிகள் முகாமிற்கு நோயில் பூசுதல் கொடுப்பதற்காக அழைக்கப்பட்டிருந்தார். முகாமிற்குச் செல்லும் சாலையானது சேறும் சகதியும் நிறைந்து காணப்பட்டதால், அந்த அராபிய பேருந்து ஓட்டுனர் துறவியை நான்கு மைல்கள் தொலைவிலேயே இறக்கிவிட்டு விட்டான்.

துறவி முகாமினை நோக்கி கால்நடையாக சென்று கொண்டிருந்த பொழுது, இரண்டு மைல்கள் கடந்த பின்னர், தனது பாதங்கள் கொஞ்சம் கொஞ்சமாக சேற்றில் அமிழ்ந்து போவதை உணர்ந்தார். அருகிலிருந்த உறுதியான சமதளத்தில் கால்களை வைக்க முயற்சித்த பொழுது, கால்கள் வழுக்கி அருகிலிருந்த சேற்றுக் குட்டையினுள் விழுந்தார்.

யாருமே துணைக்கு இல்லாமல், மரணத்தினை எதிர்நோக்கி சேற்றில் மூழ்கிக்கொண்டிருந்த அந்த வேளையில், பரிசுத்த கன்னி மாமரியினையும் அவர்களது உத்தரியத்தினையும் குறித்து நினைத்தார். எப்பொழுதும் பரிசுத்தமாக, விடாமுயற்சியுடன் அவர் அணிந்துகொண்டிருக்கும் உத்தரியத்தினை கரங்களில் ஏந்தி முத்தி செய்து, பரிசுத்த கன்னி மாமரிக்கான பக்தி முயற்சிகளின் பிறப்பிடமான கார்மல் மலை இருந்த திசையினை நோக்கி, தனது கண்களை ஏறெடுத்து நோக்கினார்.

அவ்வாறு பார்த்துக்கொண்டே, அவர் அழுதுகொண்டு, “ பரிசுத்த கார்மல் அன்னையே!!! என் உதவிக்கு வாருங்கள், என்னைக் காப்பற்றுங்கள்!!!” என மன்றாடினார். சிறிது நேரத்தில் அவர் தான் உறுதியான் ஒரு சமதளமான நிலத்தில் இருப்பதை உணர்ந்தார்.

பின்னர் அத்துறவி, “ நான் பரிசுத்த கன்னி மாமரியினால், அவரது பழுப்பு நிற உத்தரியத்தின் மேல் கொண்ட பக்தியினால்  காப்பாற்றப்பட்டேன் என்று எனக்குத் தெரியும். எனது காலணிகள் அந்த சேற்றில் தொலைந்து போய்விட்டன. எனது கால்களில் சகதி நிறைந்திருந்தது. ஆனாலும் மீதமிருந்த இரண்டு மைல் தொலைவினை மாமரியினைப் புகழ்ந்து கொண்டே நடந்து சென்றேன்.” என சான்று பகர்ந்துள்ளார்.

*****சிந்தனை***** 

நமது பரிசுத்த தேவதாயார், தனது பழுப்புநிற இரக்கத்தின் ஆடையாம் உத்தரியத்தின் வாயிலாக ஒவ்வொரு ஆன்மாவினையும் தனது மேலாடையின் பாதுகாப்பில் வைக்கிறார். இறைவனை ஆராதித்து நன்றி சொல்லி அவருக்காக வாழ அழைக்கப்பட்ட நாம் உடல், உலகம் மற்றும் பாசாசினால் பலவித சோதனைகளுக்கு உள்ளாகி தவிக்கின்றோம்.

உத்தரியத்தினை விடாமுயற்சியுடனும் பக்தியுடனும் நாம் அணிந்திருந்தால், நமதன்னை நமமை நித்திய நெருப்பிலிருந்து மட்டுமின்றி நம்மை நமது உத்தரிப்பு நிலையின் காலத்தினையும் குறைக்கிறார் என்பதனை அவரது சொற்களாலே உறுதிப்படுத்தியுள்ளார்கள்.

ஆனால் பாசாசானது பெரும்பாலான சமயங்களில், நம்மை திசைதிருப்பி, எடுத்துக்காட்டாக நகைகளுடன் எப்படி நாம் உத்தரியத்தினை அணியமுடியும்? என பெண்களின் மனதினை குழப்பி இந்த பக்தி முயற்சியினை கைவிட்டுவிடச் செய்கின்றது அல்லது சில சமயங்களில் அதை கழற்றிவிட்டு திரும்ப எடுதுபோட்டுவிடாத படிக்கு மறந்து விடச் செய்கின்றது.

அன்னையின் இரக்கத்தின் ஆடையின் பாதுகாப்பினை நாம் எப்பொழுதும் விடாமுயற்சியுடன் அணிந்து அன்னையின் வாயிலாக நமது மீட்பரை அடையலாமா???

இயேசுவுக்கே புகழ்!!!! மரியாயே வாழ்க!!!!!

நன்றி : சகோ. ஜெரால்ட்