பாத்திமா காட்சிகள் - லூஸியா

பாத்திமா அன்னை முன்னறிவித்தபடி காட்சி கண்டவர்களில் முதன்மையாயும், மூத்தவளாயுமிருந்த லூஸியா தனியே விடப்பட்டாள்.  அவளுடைய உயிர்த் தோழர்கள் இருவரும் இரண்டே ஆண்டுகளுக்குள் பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டனர். 

அதைத் தொடர்ந்து 1919 ஜூலை 31-ம்நாள் லூஸியாவின் தந்தையும் காலமானார்.  அதனால் லூஸியா குடும்பம் மிகுந்த துன்பங்களுக்கும் கவலைகளுக்கும் உட்பட நேர்ந்தது. லூஸியாவின் தாய் தன் கணவன் இறந்தபின், நாளுக்கு நாள் உடல் வாட்டமுற்று வந்தாள். இதைப் பார்த்த லூஸியாவின் சகோதரிகள் ஒருநாள் அவளிடம்:

“லூஸியா, நமக்கு அப்பா இல்லை. அம்மாவும் இறக்க நேர்ந்தால், நீ அனாதைதான். நீ மாதாவைக் கண்டது உண்மையானால், அம்மாவைக் குணப்படுத்தும்படி அவர்களிடம் கேள்” என்றார்கள்.

இதைக் கேட்ட உடனே லூஸியா எழுந்து ஒரு பெரிய கம்பளித் துணியைப் போர்த்திக்கொண்டு கடுங்குளிர், மழையைப் பொருட்படுத்தாமல் கோவா தா ஈரியாவுக்குச் சென்றாள். 

அந்த அஸின்ஹேரா மரத்தருகே முழங்காலிட்டுப் பணிந்து அன்னையிடம் மனமுருகி மன்றாடினாள். திரும்பும்போது அம்மண்ணில் ஒரு பிடியளவு எடுத்துக்கொண்டு வந்து, தன் சகோதரியிடம் கொடுத்து, அதில் கஷாயம் இறக்கி, தன் தாய்க்குக் கொடுக்கும்படி கூறினாள். 

அவளது சகோதரி அதை அவ்வாறே காய்ச்சி, “வயலட் பூக்களில் வடித்த கசாயம்” என்று கூறி தன் தாய்க்குக் கொடுத்தாள். மரிய ரோஸா அதை வாங்கிக் குடித்தாள்.  அதிலிருந்து அவளுடைய இருதய நோய் குணமடைந்து வந்தது. ஆனால் மற்ற சில சில்லரை நோய்கள் இருந்தே வந்தன.

தன் தாய்க்கு சுகமளித்த தேவ அன்னைக்கு லூஸியா வாக்களித்திருந்த நேர்ச்சையைச் செய்ய அவளும் அவள் சகோதரிகளும் சென்றனர். இருட்டிய பின் அவர்கள் கோவா தா ஈரியாவுக்கு, ரோட்டிலிருந்து செல்லும் இறக்கப் பாதை முழுவதும் முழங்காலிலேயே சென்றனர்.  மரிய ரோஸா அவர்கள் பின்னால் மெதுவாக நடந்து செல்வாள்.  இப்படி ஒன்பது நாள் செய்தார்கள்.

பிரான்சிஸும், ஜஸிந்தாவும் தன்னுடன் இல்லாதது லூஸியாவுக்கு மிகப் பெரும் வேதனையாக இருந்தது. எங்காவது மேய்ச்சலுக்குச் செல்லும் ஆடுகளைக் கண்டதும் அவள் நினைவு அவ்விருவரிடமும்தான் பறந்து செல்லும்.  

வானத்தில் தோன்றும் “அம்மா விளக்”கான நிலவையும், “சம்மனசுக்களின் விளக்குகளான” நட்சத்திரங்களையும், “நமதாண்டவரின் விளக்கான” சூரியனையும் கண்ட போதெல்லாம் லூஸியா தன் உடன் தோழர்களையே நினைத்து வருந்தினாள். 

“சம்மனசுக்கள் செய்வது போல் நான் உனக்குச் செய்கிறேன். உனக்குப் பூக்கள் தருகிறேன்” என்ற ஜஸிந்தாவின் மழலை மொழி எப்போதும் லூஸியாவின் காதில் ஒலித்துக் கொண்டேயிருந்தது. எந்தக் குன்றைப் பார்த்தாலும், எந்தச் சுவரின் மேலும் குழலூதும் பிரான்சிஸைத்தான் அவள் கண்டாள்.

லூஸியாவின் வீட்டார் அவளை இப்போது போதிய அன்புடன் தான் நடத்தினார்கள். அவளை நம்பாமல் அவளுக்கு இழைத்த கொடுமைகளுக்குத் தகுந்த பரிகாரம் வீட்டில் நடந்திருக்கக் கூடும். ஆயினும் லூஸியா அவற்றை ஏற்று மீண்டும் முன்போல் தன் குடும்பத்தில் நெருங்கி மனம் திறந்து அளவளாவ ஏனோ இயலவில்லை. அது இனிமேல் இயலாத ஒன்றுதான். 

பிறந்து வளர்ந்த வீட்டில் அவள் உரிமை உறவு எதுவும் இல்லாதவளாகவும், முழுவதும் பரலோகத்தைச் சார்ந்தவளாய் பூமியில் விடப்பட்டவளாகவும் இருந்தாள். கடவுளின் அன்னையைக் கண்ணால் பல முறை கண்டு, அவர்களுடன் பேசி, பரலோக இரகசியங்கள் பல ஒப்படைக்கப் பட்டு, உலகத்தின் வருங்காலத்தை நிர்ணயிக்கும் செய்திகளைத் தன் இருதயத்தில் தாங்கியிருந்த ஒரு சிறுமியை இந்த உலகம் எவ்வாறு கண்டுபிடிக்கும்?  

இந்த உலகத்துடன் அவள்தான் எப்படி இயல்பாக ஒட்டி வாழ முடியும்? அவள் தனித்த பறவைதான் இனி வாழ்நாள் முழுவதும்.  அவளைக் கண்டுபிடிக்கக்கூடிய இருவரும் மோட்சத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பின் இந்தத் தனிமையை அவள் தவிர்க்க முடியாது.  தாங்கத்தான் வேண்டும்.

ஜஸிந்தா இறந்த ஆறு மாதங்களில், 1920, ஆகஸ்ட் 5ம் நாள் வந். ஜோஸ் ஆல்வெஸ், லெயிரியா ஆயராக ஏற்படுத்தப்பட்டார். பாத்திமாவும் கோவா தா ஈரியாவும் அல்யுஸ்திரலும் லெயிரியா மேற்றிராசனத்தைச் சார்ந்தவையே. புதிய ஆயர் செய்த முதல் காரியம், அம்மாதம் 15-ம் நாள் பரலோக மாதா திருநாளன்று தம் மேற்றிராசனத்தை தேவ அன்னைக்கு அர்ப்பணம் செய்ததேயாகும்.

போர்த்துக்கலில் 1910 முதல் நடைபெற்று வந்த வேத எதிர்ப்புச் செயல்களால் திருச்சபை மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது. ஆட்சியினர் வேதத்தை நசுக்குவதில் தீவிரமாக இருந்து வந்தனர். 

முதல் யுத்தம் சீக்கிரம் முடியும் என்று தேவதாய் கூறியதுபோல் அது முடிவுற்று ஓரளவு அமைதி திருச்சபைக்கு அந்நாட்டில் கிடைத்தது. ஆயினும் பத்து ஆண்டுகளுக்கு மேலாக பட்ட கஷ்டங்களால் அநேகர் விசுவாசத்தில் தளர்ந்த நிலையில் இருந்தார்கள்.  

தளர்ந்தவர்களைத் தேறச் செய்யவும், புதிய லெயிரியா மேற்றிராசனத்தை நிலைப்படுத்தி, உறுதிப்படுத்தவுமே புதிய ஆயருக்கு அலுவல் போதுமானதாக இருந்தது. ஆனால் இந்த அலுவலை அவர் மாமரியின் பாதுகாவலில் செய்ய ஆரம்பித்திருந்தார். எனவே திடமாக இருந்தார். அதே வேளை மிகவும் விவேகமுடனும் நடந்து கொண்டார்.

பாத்திமா காட்சிகளை ஏற்றுக் கொள்ளாத அரசாங்கத்துடன் மோதல் ஏற்படாத வண்ணம் தேவ அன்னையை நம்பி அந்த அன்னையின் வழிநடத்துதலையே அவர் பின்சென்றார்.  

பலர் பாத்திமா காட்சிகளைத் திருச்சபை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து, அந்த பக்தியைப் பரப்ப வேண்டும் என்று மனுச் செய்தனர். வேறு பலர் பாத்திமா என்பதே வெறும் புரளி; அதை மறுத்து மறந்து விட வேண்டும் என்று கோரினர். உடனடியாக இதில் ஒரு தீர்மானம் செய்வது மிகவும் கடினமாயிருந்தது.  

புதிய ஆயருக்கு அவகாசம் தேவைப்பட்டது.  தேவ உதவியையும், அன்னையின் பாதுகாவலையும் அவர் தேடினார். அவர் மன்றாடிக் கேட்ட ஒளி அவருக்கு அருளப்பட்டது. அவர் இவ்வாறு முடிவு செய்யலானார்:  அதாவது: இந்தக் காட்சிகளைப் பற்றி சில காலம் ஆறப் போட வேண்டும், லூஸியாவையும் மறைவான ஓர் இடத்தில் கொண்டு சேர்க்க வேண்டும். 

பாத்திமா காட்சிகள் தெய்வ சம்பந்தமுடையனவாய், பரலோக செய்திகளைத் தாங்கியனவாய் இருந்தால், நிச்சயம் இந்த இடைக்காலத்தில் அது அழிந்து போகவே போகாது. மாறாக, ஒருவேளை இது தேவ சித்தத்துக்கு ஏற்புடையதாக இல்லாதிருந்தால் இவ்விடைக்காலமே போதும் அதை அழித்துவிட.  இவ்வாறு சிந்தித்த ஆயர், வந். ஜோஸ் ஆல்வெஸ், அதன்படி செயல்படத் துவக்கினார்.

மரிய ரோஸா தன் மகள் லூஸியாவோடு தன்னை வந்து பார்க்கும்படி ஆயர் கேட்டுக் கொண்டார். 1921-ம் ஆண்டு ஜூன் மாதம் 13-ம் நாள் அவர்கள் ஆயரை சந்தித்தனர். தாயுடன் சற்று நேரம் பேசியபின், ஆயர் லூஸியாவிடம் அவள் கல்வி கற்பதற்கு அல்யுஸ் திரலை விட்டு வேறு இடத்திலுள்ள ஒரு போர்டிங் பள்ளிக்குச் செல்ல விருப்பமா என்று அன்புடன் கேட்டார். 

இந்த யோசனை லூஸியாவுக்கு உடனே பிடித்து விட்டது. தன்னந்தனியாக விடப்பட்ட தன்னை பாத்திமா பக்தர்கள் தினம் கூட்டம் கூட்டமாக வந்து ஆயிரம் கேள்விகளை மீண்டும் மீண்டும் கேட்டு வதைப்பதை அவள் மிகவும் வேதனையுடன்தான் தாங்கி வந்திருந்தாள்.  அது மட்டுமல்ல, பாத்திமாவின் விரோதிகளின் பயமுறுத்தலும், வீண் ஆர்ப்பாட்டங்களும் அக்குழந்தையின் பிஞ்சு உள்ளத்தைக் கலங்க வைத்திருந்தன.  

மேலும் பிரான்சிஸும், ஜஸிந்தாவும் இல்லாத இவ்வுலகில் அவள் இனி எல்லோரிடமிருந்தும் மறைந்து விடவே விரும்பினாள்.  எனவே மேற்றிராணியாரின் ஆலோசனை அவளுக்கு உடனே பிடித்து விட்டதில் ஆச்சரியமில்லை.

மரிய ரோஸாவுக்கு இந்த ஏற்பாடு மிகவும் பிரியமாக இருந்ததிலும் வியப்பில்லை.  பரலோகத்துடன் தொடர்பு கொண்டு, கடவுளின் இரகசியங்களைத் தன் இதயத்தில் சுமந்திருந்த ஒரு சிறு மகளை அவள் இனி எப்படி நடத்துவது என்பதே ஒரு பெரிய பிரச் சினைதான்.  

அல்யுஸ்திரலுக்கு அவள் வீடு தேடி வரும் கும்பல்களை அவளால் சமாளிப்பதே முடியாத காரியமாக இருந்தது.  தன் மகளின் பிரிவு தன்னைத் தாக்கும் என்றாலும், அவள் தன்னுடன் இருப்பது முடிந்த ஒரு காரியமல்ல என்று அவளுக்குத் தெரிந்தது.  எனவே இருவரும் வந். மேற்றிராணியாண்டவரிடம் தங்கள் சம்மதத்தைத் தெரிவித்தனர். அவரும் அவர்களிடம் அன்புடன் பேசி, அதற்கு வேண்டிய ஏற்பாடுகளைத் தாமே செய்வதாக ஒப்புக் கொண்டார்.

லூஸியாவிடம் ஆயர் சில காரியங்களைப் பற்றிப் பேசினார். சில நாட்களுக்குள் அவள் புறப்படலாம் என்று கூறினார்.  புனித டோரதியின் கன்னியர் சபையால் போர்ட்டோ என்னுமிடத்தில் நடத்தப்படும் உட்பிள்ளைகள் விடுதியில் தங்கி அவள் படிக்கலாம் என்று கூறினார்.  அத்துடன்,

“நீ எங்கு செல்கிறாய் என்று யாரிடமும் சொல்ல மாட்டாயே?” என்றார்.   

“சொல்ல மாட்டேன்” என்றாள் லூஸியா.

“நீ சேரப் போகும் பள்ளியில் யாரிடமும் உன்னைப் பற்றிய விவரங்களைக் கூற வேண்டாம்.”

“கூற மாட்டேன்.”

“பாத்திமா காட்சிகளைப் பற்றி ஒருவரிடமும் பேசாதே.”

“பேச மாட்டேன்.” 

இவ்வாறு லூஸியாவின் வாய்க்கு முதல் முத்திரையிடப்பட்டது.

லூஸியா புறப்படுமுன் எஞ்சியிருந்த சில நாட்களில் பயணத் துக்கும், பள்ளியில் தங்குவதற்கும் வேண்டிய சில ஏற்பாடுகள் செய்யப் பட்டன.  

ஜூன் மாதம் 18-ம் நாள் - அன்றுதான் இறுதி நாள் - லூஸியா கபேசோ குன்றில் ஏறி, சம்மனசு முதல் முறை தோன்றிய இடத்தில் சாஷ்டாங்கமாக விழுந்து தூதன் கற்பித்த ஜெபத்தைச் சொன்னாள்.  “என் தேவனே, உம்மை விசுவசிக்கிறேன், உம்மை ஆராதிக்கிறேன், உம்மை நம்புகிறேன், உம்மை நேசிக்கிறேன்...” 

“மகா பரிசுத்த தமதிரித்துவமே, பிதாவே, சுதனே, இஸ்பிரீத்து சாந்துவே...” மூன்று வருடங்களுக்கு முன் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் அத்தனையும் லூஸியாவின் நெஞ்சில் எதிரொலித்து, அவளை தெய்வீக அன்பினாலும், இப்பொழுது அவள் அனுபவிக்கும் தனிமையுணர்வின் ஏக்கத்தாலும் நிரப்பின.  

லூஸியா தான் தேவ அன்னை யுடன் பேசிய அஸின்ஹேரா மரத்தடியில் சென்று, மீண்டும் தலை கவிழ்ந்து நிலத்தில் படிய, இவ்வுலகில் தன்னை முழுவதும் ஆட்கொண்டு மாற்றிய அவ்விடங்களை விட்டு நிரந்தரமாகப் பிரியப் போகும் வேதனை ஒருபுறம் இருக்க, அக்காட்சிகளின் மகத்துவம் அவள் இதயத்தை நிரப்ப, “நான் தனியாகவா இங்கு இருக்க வேண்டும்?” என்று தேவ அன்னையிடம் கேட்ட போது, 

“இல்லை மகளே, நீ அதிகம் வேதனைப்படுகிறாயோ? திடம் இழந்து போகாதே.  உன்னை ஒருபோதும் நான் கைவிட மாட்டேன்.  என் மாசற்ற இருதயம் உன் அடைக்கலமாகவும், சர்வேசுரனிடம் உன்னைக் கொண்டு சேர்க்கும் வழியாகவும் இருக்கும்” என்று அன்னை கூறிய ஆறுதல் மொழிகள் அவள் நினைவில் எழ, லூஸியா திடம் பெற்று எழுந்தாள்.

வீட்டுக்குத் திரும்பும் வழியில் பாத்திமாவிற்குச் சென்று, அங்கே தான் புது நன்மை வாங்கிய அர்ச். அந்தோனியார் ஆலயத்தில் தன் கடைசி மன்றாட்டைச் செலுத்தினாள்.  அதன்பின் வீட்டுக்கு வருமுன் பிரான்சிஸின் கல்லறைக்குச் சென்று முழந்தாளிட்டு, தன் உயிருடன் ஒன்றாகக் கலந்து, அத்தனை பரலோகக் காட்சிகளுக்கும் மவுன சாட்சியாய்த் துயிலும் பிரான்சிஸை நினைத்து கண்கலங்கி அழுதாள்.

“பிரான்சிஸ், நான் போய் வருகிறேன்.  மோட்சத்தில் என்னை மறவாதே” என்று கூறிவிட்டு எழுந்தாள்.  பின் தன் மாமா மார்ட்டோ, அத்தை ஒலிம்பியா மற்றும் குடும்பத்தினரைப் பார்க்கச் சென்றாள்.  இரண்டு ஆண்டுகளுக்குள் நான்கு பிள்ளைகளை இழந்து விட்ட மார்ட்டோ - ஒலிம்பியா இருவரின் வேதனையை அவளால் உணர முடிந்தது. பிரான்சிஸையும், ஜஸிந்தாவையும் நினைத்து அவள் அழுத கண்ணீர் கொஞ்சமல்ல.

தன் வீடு சேர்ந்ததும் மரிய ரோஸா லூஸியாவுக்கு வேண்டிய இறுதி ஆயத்தங்களைச் செய்து கொண்டிருந்தாள்.  லூஸியா சற்று நேரம் வெளியே வந்து நின்று வானத்தை நோக்கிப் பார்த்து பெருமூச்சு விட்டாள்.  அச்சிறிய உள்ளம் என்ன நினைவலைகளால் அலைக்கழிக்கப்பட்டதோ!  ஆயினும் அன்னையின் திடமொழி லூஸியாவுக்கு ஆறுதலாக இருந்தது.

இரவு லூஸியா சரியாக ஓய்வு கொள்ள முடியவில்லை. விடியற்காலம் இரண்டு மணிக்கு மரிய ரோஸா லூஸியாவை எழுப்பினாள்.  ஒரு சிறு வண்டியில் சாமான்களை ஏற்றி லூஸியாவும் மரிய ரோஸாவும் ஏறிக் கொண்டனர். யார் கண்ணிலும் படாமல் விடியு முன் அந்த எல்லையைக் கடந்துவிட வேண்டும். வண்டி புறப்பட்டது.

கோவா தா ஈரியா வழியாகவே வண்டி சென்றது.  எனவே அங்கு இறங்கி வண்டியோட்டியும், தாயும், மகளும் ஆக மூவரும் மாதா காட்சி தந்த இடத்திற்குச் சென்றனர். அங்கு அமைக்கப்பட்டிருந்த மிகச் சிறிய கோவிலுள் மாதாவின் சுரூபத்திற்கடியில் விளக்கு ஒன்று எரிந்து கொண்டிருந்தது. அங்கு மூவரும் முழங்காலிட்டு ஒரு ஜெபமாலை சொன்னார்கள்.

ஜெபமாலை முடிந்தது.  அந்த அஸின்ஹேரா மரம் நிலவொளியில் எப்படியோ காட்சியளித்தது.  லூஸியாவின் கண்கள் மீண்டும் நீரைச் சிந்தின.  அவள் வானத்தையே பார்த்தாள்.

இனி தாமதிக்கவும் நேரமில்லை.  11 மணிக்கும் லெயிரியா செல்ல வேண்டும்.  ஒன்பது மணி நேர பயணம் அது.  இறுதியாய் அந்த எல்கையைப் பார்த்துப் பிரியாவிடையளித்து விட்டு லூஸியா திட மனதுடன் புறப்பட்டாள்.

11 மணியளவிற்கு லெயிரியாவில் வந். ஆயர் அனுப்பியிருந்த ஒரு வழித்துணை மாது இவர்களைக் கண்டுகொண்டாள். அதன்பின் இரயில் நிலையம் சென்றார்கள். அங்கு லூஸியாவை அம்மாதுடன் வழியனுப்பி வைத்து விட்டு, மரிய ரோஸா கண்ணீருடன் வீடு திரும்பினாள்!

ஒரு பெரும் அத்தியாயம் முடிவடைந்தது. பாத்திமா காட்சி பெற்றவர்களுள் எஞ்சிய ஒரே குழந்தை - லூஸியா உலகிற்கு முழுவதும் மறைந்தாள்.

தந்த மயமான உப்பரிகையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்