பாத்திமா காட்சிகள் - போர்ட்டோ மடத்தில் லூஸியா

லெயிரியா ஆயர் செய்திருந்த ஏற்பாட்டின்படி 19.6.1921 இரவு முழுவதும் பயணம் செய்து, மறுநாள் அதிகாலையில் ஸ்பெய்னில் விலார் நகரையடுத்த போர்ட்டோ என்ற இடத்தில் அர்ச். டோரதி கன்னியர் மடத்தில் கால் வைத்தாள் லூஸியா.  

அப்பொழுது அங்கு திவ்யபலிபூசை நடந்து கொண்டிருந்தது. அதில் பங்கு பெற்று சேசுவை உட்கொண்டது லூஸியாவுக்கு மிக மிக ஆறுதலாயிருந்தது.

பூசை முடிந்த பின் லூஸியா அந்த மடத்துத் தாயாரைச் சந்தித்தாள். 14 வயதுடைய பாமரச் சிறு பெண் ஒருத்தியை அந்தத் தாயார் எப்படி ரூபிகரித்தார்களோ - லூஸியாவின் தோற்றம் தாயார் பார்வையில் நல்ல அபிப்பிராயத்தை ஏற்படுத்தவில்லை. ஆயினும் மேற்றிராணியாருக்குத் தான் கொடுத்திருந்த வாக்கைக் காப்பாற்றுவதற்காக லூஸியாவை மடத்தில் உட்பிள்ளையாக ஏற்றுக் கொண்டார்கள். அவர்கள் லூஸியாவிடம் சில எச்சரிப்புகளைக் கூறினார்கள்:

“இங்கே யாராவது உன் பெயரென்ன என்று கேட்டால், வியாகுல மரி என்று சொல்ல வேண்டும்.  சொல்வாயா?”

“சொல்கிறேன் தாயாரே.”

“உன் ஊர் எது என்று யாரும் கேட்டால், லிஸ்பன் பக்கத்தில் என்று சொல்ல வேண்டும்.”

“சரி.”

“பாத்திமாவில் நிகழ்ந்தவை பற்றி நீ யாரிடமும் பேசக் கூடாது; கேட்டால் பதிலும் கூறக் கூடாது.”

“சரி.”

“ஒரு ஆளிடம் கூட, நீ பாத்திமா பற்றிய பேச்சையே எடுக்க மாட்டாய்தானே?”

“எடுக்க மாட்டேன்.”

“மற்ற உட்பிள்ளைகளுடன் நீ உலாவச் செல்லக் கூடாது. ஏன் செல்லவில்லை என்று யாரும் கேட்டால், நீ எந்தக் காரணமும் சொல்லக் கூடாது.”

“சொல்ல மாட்டேன்.”

“அவ்வளவுதான்.  இனி நீ போகலாம்” என்று முடித்தார்கள் மடத்துத் தாயார்.

லூஸியாவின் வாய்க்கு இடப்பட்ட இரண்டாவது பலமான முத்திரை இது.

லூஸியாவுக்குத் தான் வியாகுல மரி என்று அழைக்கப்படு வதை விட சேசுவின் மேரி என்று அழைக்கப்பட விருப்பம்.  ஏனென்றால் அவளுடைய ஞானஸ்நானப் பெயர் சேசுவின் லூஸியா என்பது. ஆயினும் பரித்தியாக உணர்வோடு எந்தப் பதிலும் கூறாமல் அப்படியே தாயாரின் விருப்பங்களை லூஸியா ஏற்றுக் கொண்டாள்.

அன்று முதல் நான்கு ஆண்டுகளாக லூஸியா வியாகுல மரி என்ற பெயரில் வாழ்ந்தாள்.  எவ்வளவு தூரத்திற்கென்றால் லூஸியா என்ற ஒரு பிள்ளை வியாகுல மரியின் கனவில் தோன்றிய ஒரு ஆள் தானோ என்ற அளவிற்கு லூஸியா மறைந்து விட்டாள்.  

அந்நான்கு ஆண்டுகளிலும் லூஸியா எழுதவும், வாசிக்கவும், கைவேலைகள் செய்யவும் கற்றுக் கொண்டாள்.  தாயாருக்குத் தான் கொடுத்திருந்த வாக்கை எவ்வளவு தூரம் காப்பாற்றி வந்தாளென்றால், தன் தாய் மரிய ரோஸா இரண்டு தடவைகள் தன்னைப் பார்க்க வந்தபோது கூட, பாத்திமா என்ற சொல்லையே உபயோகிக்காமல் கவனமாயிருந்தாள். தாயாரும் தகுந்த காரணத்துடன்தான் ஆயரின் விருப்பப்படி இவ்வளவு பெரிய கண்டிப்பை அவள்மீது சுமத்தினார்கள்.  

பாத்திமா காட்சிகள் பொய் என்றால், 4 ஆண்டுகளுக்குள் லூஸியா அதுபற்றி மறந்து விடுவாள்.  காட்சிகள் உண்மையயன்றால், அவளால் அதை ஒருபோதும் மறக்கவே முடியாது.  எனவே இந்தக் கண்டிப்பினால் எவ்விதமான தீமையும் விளையாது. 

யாராவது ஒரு செய்தி நிருபர் எப்படியோ கேள்விப்பட்டு பாத்திமா காட்சி பெற்ற லூஸியா இந்த மடத்தில்தானே படிக்கிறாளாம் என்று கேட்டு வந்தால், வாசலறையிலேயே “இங்கு லூஸியா என்ற பெயருடைய யாரும் இல்லை” என்று தீர்மானமாகச் சொல்லி அனுப்பி விடுவார்கள். அவ்வளவு கண்டிப்புடன் லூஸியா மறைக்கப்பட்டாள்.

புனித டோரதி மடத்தில் லூஸியா அமைதியே உருவான நங்கையாக வாழ்ந்து வந்தாள். அவளை முதலில் யாரோ எவரோ என்று கருதிய சகோதரிகள், வெகு விரைவில் அவளைப் பற்றிய தங்கள் கருத்தை மாற்றிக் கொண்டார்கள். 

லூஸியாவின் தாழ்ச்சியும் கீழ்ப்படிதலும், துன்பங்களை முறைப்பாடு சொல்லாமல் சகிக்கும் தன்மையும் எல்லோரையும் கவர்ந்தன. அவளுக்கு அர்ச்சியசிஷ்ட குழந்தை தெரேசம்மாளுடைய “ஓர் ஆன்மாவின் வரலாறு” என்ற      சுய சரிதை மிகவும் பிடித்திருந்தது.  அத்துடன் அர்ச். பெர்க்மான்ஸ் அருளப்பருடைய கீழ்ப்படிதலும் மிகவும்  பிடித்தமாயிருந்தது.  

இவ்விரு இளம் அர்ச்சியசிஷ்டவர்களையும் லூஸியா விரும்பி, அவர்களை முன்மாதிரிகையாகக் கொண்டாள்.

நான்கு ஆண்டு படிப்பு முடிந்ததும் தாயார் லூஸியாவிடம் அவள் தன் வாழ்க்கையைத் தெரிந்துகொள்ளும்படி ஆலோசனை கூறினார்கள்.  அர்ச். குழந்தை தெரேஸ் லூஸியாவுக்கு மிகவும் பிடித்திருந்ததினாலோ என்னவோ, அவள் கார்மெல் மடத்தில் சேர விரும்புவதாகக் கூறினாள்.  

கார்மெல் மடத்தின் தவ உபவாச ஒறுத்தல்கள் அவளுடைய பலவீனமான உடலுக்குத் தாங்கக் கூடாததாயிருக்கும் என்று அறிந்த தாயார், அப்படி அவள் மடத்தில் சேர விரும்பினால், தவ ஒறுத்தல்கள் குறைவாக உள்ள மற்ற ஏதாவது மடத்தில் சேருமாறு கூறினார்கள். இதை லூஸியா ஏற்றுக்கொண்டாள். 

மேலும் கொஞ்சம் சிந்தனை செய்தபின், அவள் தாயாரிடம் தான் அங்கே, அர்ச். டோரதி மடத்திலேயே சகோதரியாகச் சேர விரும்புவதாகக் கூறினாள்.

“நீ ஏன் டோரதி மடத்தில் சேர விரும்புகிறாய்?” என்று தாயார் கேட்டார்கள்.

“கோவிலுக்குச் சென்று ஜெபிக்க அதிக சுதந்திரம் கிடைக்குமல்லவா? அதற்காக” என்று பதிலளித்தாள் லூஸியா.

தாயார் லூஸியாவை இன்னொரு வருடம் காக்க வைத்தார்கள்.  அந்த வருட முடிவிலும் லூஸியா அதே விருப்பத்தைத் தெரிவித்ததால், 1925-ம் ஆண்டு அவளை அர்ச். டோரதி சபையில் ஆயத்த நிலைக்கு ஏற்றுக் கொண்டார்கள்.  ஒரு ஆண்டு கடந்த பின், 2.11.1926-ல் லூஸியா நவகன்னிகையானாள்.

லூஸியா நவகன்னிகையான இரண்டாம் வருடத்தில், அதாவது 1927ல் நமதாண்டவர் அவளுக்கு இரண்டு தடவை காட்சி தந்து மரியாயின் மாசற்ற இருதய பக்தி பற்றிய தம் விருப்பத்தை மீண்டும் உறுதிப்படுத்தினார்.  

பாத்திமா ஜூலை மாதக் காட்சியில் கூறப்பட்ட கடைசி இரகசியம் தவிர மற்றவைகளைத் தகுந்த வேளையில் வெளியிட அவளுக்கு உத்தரவும் அளித்தார்.   

3.11.1928-ல் லூஸியா தன் முதல் வார்த்தைப்பாடுகளைக் கொடுத்தாள். அவள் தன் கடைசி வார்த்தைப்பாடுகளைக் கொடுத்தது ஆறு வருடங்களுக்குப் பின், அக்டோபர் 3-ம் நாள், 1934-ம் ஆண்டில்.

லூஸியா அவள் மடத்தில் சகோதரி வியாகுலம் என்றே பொதுவாக எல்லோராலும் அழைக்கப்பட்டாள். மடத்தின் தாழ்வான பணிகளை விருப்பத்துடன் செய்து வந்தாள். நற்கருணை சேசுவிடம் அவள் செலவிட்ட நேரமே அவளுக்கு மிகவும் விருப்பமுள்ளதாயிருந்தது. 

தன் நெஞ்சில் கரங்களைக் குறுக்காக சார்த்தியபடி வெகு நேரம், அனுமதி கிடைத்தால், பல மணி நேரம் கூட முழங்காலில் நின்றபடியே சேசுவுடன் ஐக்கிய ஜெபத்தில் ஈடுபட்டிருப்பாள். சகோதரி ஆன பிறகும் பாத்திமா காட்சிகளை லூஸியா இரகசியமாகவே வைத்திருந்தாள்.

ஒருநாள் லூஸியாவும், இன்னொரு சகோதரியும் ஸ்பெய்னில், துயி பட்டணத்திலிருந்து போர்த்துக்கல் எல்லைக்கு உள்ளே வரை நீண்டு செல்லும் ஒரு பாலத்தில் நடந்து சென்றனர். போர்த்துக்கல் எல்கைக்குள் வரவும், அதே பாலத்தில் 3 பெண்கள் அவர்களைச் சந்தித்தார்கள்.

“நீங்கள் துயி பட்டணத்தில் அர்ச். டோரதி சபைச் சகோதரிகள்தானே?  நாங்கள் அங்குதான் செல்கிறோம். லூஸியா அந்த மடத்தில்தான் இருப்பதாகக் கேள்விப்படுகிறோம், பாத்திமாவில் காட்சி பெற்றாளே, அந்த லூஸியா” என்றார்கள் அந்தப் பெண்கள்.

இதைக் கேட்ட சகோதரிகள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தார்கள்.  வந்த பெண்கள் தொடர்ந்து,

“லூஸியா ஸ்பெய்னில்தானே இருக்கிறாள்?” என்று மீண்டும் கேட்டார்கள்.

லூஸியா அவர்களைப் பார்த்து, “இல்லையே!  அவள் இப்போது நிச்சயம் போர்த்துக்கலில்தான் இருக்கிறாள்” என்றாள்.

“அப்படியா?” என்று கூறிவிட்டு அப்பெண்கள் சென்றனர். அவர்கள் போனதும் லூஸியாவால் சிரிப்பை அடக்க முடியவில்லை.  

அல்யுஸ்திரலில் அவர்களைத் தேடி ஓயாமல் வந்து கொண்டிருந்த பயணிகளைப் பொய் சொல்லாமல் ஏமாற்றி தப்பித்துக் கொண்டு  அப்புறம் மூவரும் சேர்ந்து விழுந்து விழுந்து சிரித்த இளவயது ஞாபகம் லூஸியாவுக்கு வந்தது.

அர்ச். டோரதி மடத்தில், எப்பொழுது லூஸியாவின் அடையாளம் அறிவிக்கப்பட்டது என்று நிச்சயமாகத் தெரியவில்லை.

சொர்ணமயமான ஆலயமே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்