என்பொருட்டுத் தம்மையே அழித்துக் கொள்கிற எவரும் வாழ்வடைவர்!

“என்பொருட்டுத் தம்மையே அழித்துக் கொள்கிற எவரும் வாழ்வடைவர்“ (மத்தேயு 16:24)

தமிழர்களான நாம் சுணாமிப்பேரலை மற்றும் கொடிய யுத்தம் மட்டுமல்ல கொடிய கோரோனோ ஆதிக்கத்தின் தனிமைப்படுத்தலில் வாழும் துன்பமான சூழ்நிலையில் பல இழப்புக்களை நேரடியாகச் சந்தித்த அனுபவங்களின் பின்னரும், எமது வாழ்வில் நமதென பற்றிப் பிடிப்பவைகளை நாம் இழக்க மறுக்கிறோம்.

யாரும் எதையும் இழக்க விரும்புவதில்லை. ஆனால், சிலவற்றை  இழக்கும் போது, அந்த இழப்புக்கு கைம்மாறாக நாம் பெறும் இன்பம் இழந்ததைவிட பன்மடங்கு மதிப்பு மிக்கது, மேலானது என்பதை அனுபவத்தின் மூலமாக அறிய முடியும் என்பது விவாதத்திற்கு அப்பாற்ப் பட்ட பேசுபொருள் என்பதனை எனது பணிவான கருத்தாகப் பதிவிடுகிறேன். 

ஞானிகள் மற்றும் புனிதர்கள் தமது வாழ்வின் இரகசியத்தை அறிந்திருந்ததால், எதையும் இழப்பதற்கு குறிப்பாக ஆண்டவர் இயேசுவுக்காக தமது உயிரையும் இழப்பதற்கு முன்வந்தனர், இந்த ஞானத்தையே , தம் உயிரைக் காத்துக் கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவர். மாறாக, என் பொருட்டு தம்மையே அழித்துக்கொள்கிற எவரும் வாழ்வடைவர் என்று இயேசு ஆண்டவர் (மத்தேயு 16:24-26) கற்றுத் தருகிறார்.

இன்ப துன்பம் நிறைந்த இவ்வுலக வாழ்வானது நிரந்தரமானதல்ல. வாழ்வில் துன்பம் வருகிற போது சோர்வடைவதும், மகிழ்ச்சி வரும்போது துள்ளிக் குதிப்பதும் எமது இயல்பு. சோகங்கள் வருகிறபோது சோர்ந்து போகாமல் இறைவனில் நம்பிக்கை வைத்து வாழ நாம்  அழைக்கப்பட்டுள் ளோம் என, அழியா இறை வார்த்தைகள் எமக்கு வேறுவிதமாக உணர்த்துகிறது என்று சொன்னால் அது மிகையாகாது (மத்தேயு 16:24-26).

இவ்வுலக வாழ்வானது எல்லாம் வல்ல இறைவனாலே எமக்கு வழங்கப்பட்ட மிகப்பெரிய கொடையாகக் கருதப்படவேண்டும். நாம் எமக் காகவோ எமது உறவுகளுக்காகவோ பாடுபட்டு உழைத்து வாழ்வதிலும் மேலாக நமதாண்டவர் இயேசுவுக்காக எமது சுய நலன்களைத் துறக்க அழைக்கப்பட்டுள்ளோம் (மத்தேயு 16:24) என அழியா வார்த்தைகளின் நற்செய்தி தெரிவிப்பதாக இறையியல் வல்லுனர்களும், நற்செய்தி ஆய்வாளர்களோடு எமது மூத்தோரும் தமது பட்டறிவால் தெரிவிக்கின்றனர். 

எமது வாழ்வின் மிகப் பெரிய மறைபொருள்களில் ஒன்று இழப்பு.  ஆண்டவர் இயேசுவுக்காக தமது வாழ்வை அர்ப்பணித்து வாழ்பவர்களது வாழ்வில் துன்ப, துயரங்கள் நேரிட்டாலும் அவ்வாறான சிலுவைகளைத் தாங்குவதற்கு எல்லாம் வல்ல இறைவன் மாட்சிமையோடு வரும்போது கைம்மாறு அளிப்பார் (மத்தேயு16:26) என்பது மறை பொருளான மிகப்பெரிய உண்மை. 

நாம் புதுவாழ்வு பெறவேண்டும் என்பதற்காக நமதாண்டவர் இயேசு தமது இனிய உயிரைப் பொருட்படுத்தாமல் எமக்காகக் களப்பலியானார். ஆண்டவர் இயேசுவின் தன்னலமற்ற இழப்பினால் நாம் ஒவ்வொருவரும் முடிவில்லா வாழ்வினை சுதந்தரித்துள்ளோம். 

இந்த உலகத்திலே எத்தனையோ கோடிக்கணக் கான மக்கள் வாழ்ந்தாலும், ஒரு சிலரை நாம் நினைவு கூர்கிறோம். காரணம், அவர்கள் தங்களது வாழ்வை, தங்களுக்காக வாழாமல், மக்கள் நல் வாழ்வு பெற வேண்டும் என்பதற்காக வாழ்ந் தவர்கள். அவர்களைத்தான் இந்த உலகம் நினைவுகூர்கிறது. அவர்களைத்தான் பெருமையோடு, இந்த உலகம் பார்க்கிறது. 

ஆண்டவர் இயேசுவுக்கு பிடித்தமான அத்தகைய வாழ்வை எமக்கு முன்னே வாழ்ந்த அன்னை தெரேசா போன்ற பல புனிதர்கள் - ஞானிகள் - அறிஞர்கள்  மனித வாழ்வில் தமது சுயத்தினை இழப்பதன் இரகசியத்தை அறிந்து தம் உயிரையும் இழப்பதற்கு அஞ்சாமல் வாழ்ந்ததனால் இன்று நாம் அவர்களைப் போற்றுகிறோம்.

இவ்வாறான உயரிய வாழ்வின் கொடைகளை இனாமாகப் பெற்றுள்ள நாம் ஆண்டவர் இயேசு எமக்கு வழங்கியுள்ள விண்ணக கொடையின் மதிப்பைச் சரியாக உணர்ந்தோமாயின் மாயையான இவ்வுலக செல்வங்களின் மதிப்பு களை மட்டுமல்ல “நான் – எனது” என்ற வரட்டுக் கௌரவங்களோடான எமது அகம்பாவத்தினைத் தேடி அலையமாட்டோம். 

பொருள் பண்டங்கள் மீதான எமது இவ்வுலகத் தேடல் பயணற்றதெனக் கருதுவது மட்டுமல்ல நாம் எமது சுயத்தை இழக்க முன்வரவேண்டும் - ஆண்டவர் இயேசுவைத் தேடி அவர் போதனைக்கு ஏற்ப நாம் நடந்தால் நாம் இழந்தவற்றிற்குப் பதிலாக பலகோடி மடங்கு மேலான நல்மதிப்புள்ள ''விண்ணக வாழ்வை'' பெற்றுக்கொள்வோம்.

ஆண்டவர் இயேசுவைப் பின்பற்றுவது மட்டுமல்ல அவருக்காக இவ்வுலக செல்வங்கள் - சொத்து சுகங்கள் - இன்பங்கள் அனைத்தையும் இழக்க நாம் ஒவ்வொருவரும் பெயர் சொல்லி அழைக்கப் பட்டுள்ளோம் – இதுவே கொடிய கோரோனோ எமக்குத் தரும் செய்தியாகும்.

எமக்காக உம்மையே உடைத்துத் தந்தவரே தேவரீர் எமக்குத் தரும் விண்ணக வாழ்வை நாம் சுதாகரிக்க எம்மை வழிநடத்தியருளும் – ஆமென்.