திவ்ய நற்கருணை நாதரை நாவில் மட்டுமே வாங்கலாமே!


“ இதோ! தொழுநோயாளி ஒருவன் வந்து அவரைப் பணிந்து, "ஆண்டவரே, நீர் விரும்பினால், என்னைக் குணமாக்க உம்மால் கூடும்" என்றான்.

இயேசு கையை நீட்டி, "விரும்புகிறேன், குணமாகு" என்று சொல்லி அவனைத் தொட்டார். உடனே தொழுநோய் குணமாயிற்று.”

மத்தேயு 8 : 2-3

யூத மக்கள் நோயாக மட்டும் கருதாமல் பெரும் தீட்டாக கருதிய தொழுநோயாளியை அவர்கள் முன்னால் நம் திவ்ய இரட்சகர் தொட்டு குணமாக்குகிறார்.

“ நாவில் இயேசுவை வாங்குவது சுகாதாரக்குறைவு, நோய்கள் பரவும் என்று எத்தனையோ காரணங்களைச் சொல்லி கரங்களில் பலர் வாங்குகிறார்கள். அன்று இயேசு சுத்தம் பார்த்தாரா? ஒரு தொழுநோயாளியை அவரால் தொடமுடிகிறது. ஆனால் நம் கடவுளை நம்மால் நாவில் தொடமுடியவில்லை. அவர் எங்கே? நாம் எங்கே? மூவொரு கடவுள் நோயை பரப்புவாரா? அல்லது குணமாக்குவாரா? இந்த எண்ணத்திலே பலர் விசுவாசத்தை இழந்துவிடுகிறார்களே ! அவர்களுக்கு எப்படி அவர் குணம் தருவார்.

அப்பவடிவில் நம்மை நம்மைத்தேடி வரும் தெய்வீக இயேசுவை நாம் இப்படித்தான் பார்ப்போமா? அப்பத்தின் குணத்தை மாற்றாமல் தன் உடலாக அதை மாற்றி உலகத்தை படைத்தவர் அதனுள் தன்னை அடக்கி எல்லாம் வல்லவராக வரும் அவரை ஒரு சுத்தப்பார்வையில் பார்த்து கரங்களில் வாங்குவதுதான் முறையா? இதிலும் பல பேர் இடது கையால் வாங்குகிறார்கள். இட்லி தோசைக்கும், மட்டன் சிக்கனுக்கும் வலது கை தெய்வீக பரிசுத்தருக்கு இடது கை. எங்கே போகிறது நம் கத்தொலிக்க விசுவாசம். “ கேட்டால் எங்களை அப்படித்தான் வாங்க சொல்கிறார்கள்” என்று பதில் வருகிறது.

இன்னும் ஒரு சில இடங்களில் கேட்கப்பட்டவர்கள் வாய் கூசாமல் சொல்கிறார்கள். “ அதுதான் சுத்தம், நாவில் வாங்கினால் நோய் பரவும் “ என்று.கேட்கப்பட்டவர்கள் யார் என்று இங்கே கூறினால் அது கத்தொலிக்கத்திற்கு கவுரவக்குறைவு 2000 வருடங்களாக நற்கருணையை பக்தியாய் பெற்று குணமானவர்கள் லட்சக்கணக்கில் உண்டு. நோய் வந்தவர் ஒருவரேனும் உண்டா?. இதை எழுதவே வெட்கமாக இருக்கிறது.

ஒரு இந்து மத சகோதரன் விபூதியையோ, பிரசாதத்தையோ இடது கையில் வாங்கமாட்டார் கோயிலுக்குள் செருப்பு போட்டு செல்லமாட்டார்.

உலகத்தையே படைத்து நம்மை பாதுகாத்து, வழி நடத்தி, நமக்காக தன் திருஇரத்தத்தை சிந்தி “ இதோ உலகம் முடியும் வரை எந்நாளும் உங்களோடு இருக்கிறேன்” என்று நற்கருணையில் நம்மோடு வாழும் நம் தெய்வத்திற்கு இவ்வளவுதான் மரியாதை.

நவீனங்கள் உள்ளே நுழைய நுழைய அவசங்கைகளும், தப்பரைகளும், கேடுகளும்தான் வரும்.

 “ சில நாகரீக பாணிகள் புகுத்தப்படும். அவை நமதாண்டவரை மிகவும்  நோகச்செய்யும். சர்வேசுரனுக்கு ஊழியம் செய்பவர்கள் இப்பாணிகளைப் பின்பற்றக் கூடாது. திருச்சபையில் நாகரீகப் பாணிகள் கிடையாது. நமதாண்டவர் மாற்றமடைவதில்லை.”- பாத்திமா சிறுமி ஜெசிந்தா

1917-லேயே தீர்க்கதரிசனம் எவ்வளவு அழகாக சொல்லிவிட்டார் பாத்திமாவில் மாதாவைக் கண்ட சிறுமிகளில் ஒருத்தி. அன்னையின் பாத்திமா காட்சியின் நூறாவது வருடத்தில் நவீனம் கொடிகட்டி பறக்கின்றது.

ஆரம்பகால கத்தோலிக்க திருச்சபையில் இயற்றப்பட்ட விசுவாசப்பிரமாணத்தை சுருக்கப்போகிறார்கள் என்று கேள்வி. உண்மையா என்று தெறியவில்லை. நம் விசுவாசம் சுருங்கினால் என்னவாகும்?

“அருள் நிறைந்த மரியே வாழ்க” என்ற தூய தமிழ்வார்த்தை “ அருள் மிகப்பெற்றவரே “ என்று தப்பரையாக மாறுகிறது. ஆண்டவரை வாங்குவதில் மாற்றம். எல்லாமே ஒரு இருபது வருடங்களுக்குள்ளாக.. இப்போது சில வருடங்களாக ஒவ்வொரு வாரமும் ஒரு மாற்றம் ஏன்…???

நம் ஆண்டவர் நேற்றும்..இன்றும்..என்றுமே.. மாறாதவர்.. ஆனால்  நாம்…???????

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !