பாத்திமா காட்சிகள் - பல இடங்களிலும் சூரிய அதிசயம் காணப்பட்டது

கோவா தா ஈரியாவில் மட்டுமல்ல, பல மைல்களுக்கும் அப்பால் பல இடங்களிலும் சூரிய அதிசயம் பல மக்களால் காணப்பட்டது என்ற செய்தி வெளியான போது மக்களின் ஆச்சரியம் இன்னும் மிகுந்தது.  

13.10.1917 அன்று கோவா தா ஈரியாவில் குழுமியிருந்த மக்கள் கூட்டம் மொத்தமாகவே ஏமாற்றப்பட்டிருக்கலாம்; அந்த இடத்தில் அவர்கள் எதையோ எதிர்பார்த்துக் கூடியதால், இப்படி ஒரு கூட்டுப் பிரமையாக எதையும் அவர்கள் கண்டிருக்கலாம் என்று கூட யாரும் கூற முடியாதபடி பல இடங்களிலும் இவ்வதிசயம் காணப்பட்டிருக்கிறது.

அல்போன்ஸோ லோப்பஸ் வியயய்ரா என்ற போர்த்துக்கீசிய கவிஞர் ஒருவர் பேத்ரோ மோல் என்ற தமது ஊரில், தம் வீட்டிலிருந்த படியே 40 கிலோமீட்டருக்கு அப்பால் இந்த சூரிய அதிசயத்தைக் கண்டார்.

சங். இஞ்ஞாசி லாரென்ஸ் என்பவர் அப்போது 9 வயது சிறுவனாயிருந்தார்.  அல்பூரிதா என்ற தமது கிராமத்திலிருந்து இவ்வதிசயத்தைக் கண்ட விவரத்தைக் கூறியுள்ளார். அக்கிராமம் பாத்திமாவிலிருந்து 19 கிலோ மீட்டர் தூரம். 

அப்போது பள்ளிக் கூடம் நடந்து கொண்டிருந்தது.  வெளியில் பல ஆட்கள் கூச்சலிடுவதைக் கேட்டு, அவரும் அவருடைய மாணவ தோழர்களும் வெளியே ஓடி வந்தனர்.  சூரிய அதிசயத்தை எல்லோரும் கண்டனர். பயந்த சிறுவன் லாரன்ஸ் மக்கள் கூட்டத்திற்கு நடுவே பாதுகாப்புக்காக ஓடினார்.  

கூட்டத்திலிருந்த எல்லோரும் உலக முடிவே வந்து விட்டதென கூக்குரலிட்டு அழுதனர்.  கூட்டத்தினர் அருகே ஒரு நாஸ்திக மனிதன்.  காலையிலிருந்தே பாத்திமாவுக்குச் சென்று கொண்டிருந்த மக்களைக் கேலி செய்து கொண்டிருந்த அந்த மனிதன் இவ்வதிசயத்தைக் கண்டு நடுங்கினான்.  

அச்சம் மேலிட முழங் காலிட்டு, “பரிசுத்த கன்னியே!  பரிசுத்த கன்னியே!” என்று கூக்குர லிட்டான்!  மக்கள் யாவரும் பாவப் பொறுத்தலுக்காக அழுது மன்றாடினார்கள்.  மக்கள் மீதும், எல்லாப் பொருட்களின் மீதும் பச்சை, சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் எனப் பல நிறங்கள் அள்ளி வீசப் பட்டன.  

சூரியன் ஒரு பெரிய உருளை போல் சுழன்று பூமியை நோக்கி நிலைதடுமாறிப்  பாய்ந்தது.   பத்து  நிமிடங்களாவது  இது நீடித்திருக்கும்.  அதன்பிறகே சூரியன் தன் இயல்பான நிலையை அடைந்தது.  உடனே மக்கள் யாவரும் கோவிலை நோக்கி ஓடினார்கள்.  வெகு விரைவில் கோவில் நிரம்பி வழிந்தது...

1917-ல் நிகழ்ந்த  சூரிய அதிசயத்தை நேரில் கண்டவர்கள் இன்னும் கூட உயிருடன் இருக்கிறார்கள்.  பாத்திமாவில் ஒரு பரலோகக் காட்சி அருளப்பட்டது என்பதை மறுக்க முடியாத ஆதாரங்களுடன் சர்வேசுரனே உலகிற்கு நிரூபித்துக் காட்டியுள்ளார்.

ஆனால் அந்தோ! கடின மனம் படைத்த மனிதர்கள் எதையுமே நம்புவதில்லை. ஆர்ட்டுரோ-- அவ்ரம் ஆட்சித் தலைவர் அதில் ஒருவர் போலும்!  இத்தனை மாபெரும் புதுமை நடந்தும் ஆர்ட்டுரோ அதை நம்பவில்லை!  

பரிசேயர்கள் சேசுவைக் கொலை செய்து புதைத்து, கல்லறைக்குக் காவலும் இட்ட பின், அவர் உயிர்த்த போது, அதை ஒப்புக்கொள்ள மறுத்ததைப் போல!  

இரண்டு மாதத்திற்குள் ஆர்ட்டுரோ பதவி விலக்கப்பட்டார். அதன்பின் அவரைப் பற்றி வந்த செய்தி, அவர் எதிரிகள் மீது வீசும்படி தயாரித்த குண்டு அகாலமாய் வெடித்ததால் காயப்பட்டார் என்பதே.

ஞான பாத்திரமே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.