பாத்திமா காட்சிகள் - கூட்டம் கலைந்தது

சூரிய நடன அதிசயத்தைக் கண்டு அதிசயித்து, மெய்மறந்து, சர்வேசுரன் இருக்கிறார் என்ற உண்மையின் நேரடி சாட்சியான இம்மாபெரும் காட்சியைக் கண்டு திருப்தியும் பெருமிதமும் அடைந்த மாபெரும் மக்கள் திரள் அமைதியுடன் கலைந்து சென்றது.  

அன்னை காலூன்றி நின்ற அஸின்ஹேரா மரம், இலை, கிளைகளை இழந்து பரிதாபமாகக் காட்சியளித்தது!  மக்கள் அன்னையின் நினைவுச்சின்னமாக அகப்பட்டதையெல்லாம் கொண்டு சென்றனர்.

மூன்று குழந்தைகளும் மிகவும் சோர்ந்து களைப்புற்றுக் காணப்பட்டனர்.  லூஸியாவை ஒரு மனிதன் தோளில் தூக்கிக் கொண்டு கூட்டத்திற்குக் கூட்டம் எடுத்துச் சென்றான். 

லூஸியா மக்கள் மிகவும் விரும்பித் தேடிய செய்தியாகிய, “யுத்தம் விரைவில் நிற்கும்; யுத்த வீரர் சீக்கிரம் வீடு திரும்புவார்கள்” என்ற செய்தியைக் கூறிக் கொண்டேயிருந்தாள். 

குழந்தைகளின் ஆடையின் ஓரங்களும், தலைமுடியும் அருளிக்கங்களாக சிறுகச் சிறுக கத்தரித்து எடுக்கப் பட்டிருந்தன.  அவர்கள் வீடு வந்து சேர வெகு நேரமாயிற்று. வழியில் யாரும் அவர்களை உடனே விடுவதாயில்லை.  

அவர்கள் கரத்தை முத்தம் செய்தனர். மாலைகள் சூடினர்.  குழந்தைகள் வீட்டுக்கு வந்த பிறகு, அவர்கள் வீடுகளைச் சுற்றி கும்பல் நின்று கொண்டேயிருந்தது.  எல்லோரும் குழந்தைகளை அருகில் வைத்துப் பார்க்கவும், பேசவும் விரும்பினார்கள்.

மாலை 7 மணிக்கு சங். மனுவேல் போர்மிகோ அல்யுஸ்திரலுக்கு வந்தார்.  யாரும் குழந்தைகளைப் பேட்டி காணுமுன், தாம் பார்த்து விட நினைத்து வந்தார். கூட்டத்தைக் கலைந்து போகக் கூறிவிட்டு மூன்று குழந்தைகளையும் கேள்விகள் பல கேட்டுக் குறித்துக் கொண்டார்.  

இப்படிப்பட்ட ஒரு கேள்வி பதிலின் வேதனையைத் தாங்கக் கூடியவர்களாக குழந்தைகள் இல்லை. எனவே அவர் கேள்விகளைக் குறைத்துக் கொண்டார். மீண்டும் அம்மாதம் 19-ம் தேதி அவர் வந்து குழந்தைகளிடம் கேள்விகள் கேட்டார். 

அவர்கள் அக்டோபர் 13-ம் நாளின் வியப்பிலிருந்தும், களைப்பிலிருந்தும் முழுவதும் இன்னும் விடுபடவில்லை.  அவர் தம் விசாரணையை திருப்தியுடன் முடித்துக் கொண்டார். காட்சிகள் உண்மையிலேயே நடந்தன என்ற உறுதியான எண்ணத்துடன் திரும்பினார்.