பாத்திமா காட்சிகள் - பதிப்புரை:

தட்டிக் கழிக்கக் கூடாத கடமை!

முன்னேற்றம் முன்னேற்றம்தான். செளகரியம் செளகரியம் தான்.  விஞ்ஞான வளர்ச்சி வளர்ச்சிதான். ஆயினும் ஏதோ ஒன்று குறைபடுகிறதே.  அது எது?  மொத்தத்தில் மனதிற்கு நன்றாக இல்லையே, இது ஏன்?  இதன் காரணம்:

உலக நிலை திருப்தியாயில்லை.  இன்னொரு உலகப் போரை உலகம் தாங்கிக் கொள்ளாது. ஆனால் அதைத் தடுக்க வழியும் காணப்படவில்லை.

பாதி உலகம் கம்யூனிசத்துக்கு அடிமைப்பட்டு விட்டது.  எஞ்சிய சுதந்திர உலகம் ஆட்டங் கண்டு வருகிறது. எத்தனை நாளைக்குத் தாக்குப் பிடிக்கும்? கம்யூனிசம் வந்ததோடு உலகில் அடிமைத்தனமும் பயமும்தான் அதிகரித்துள்ளன.  மனித இரத்தம் சிந்தப்படாத நாள் இல்லை.  மீறப்படாத ஒப்பந்தம் இல்லை. மனிதனை மனிதன் பகைத்துத் துன்புறுத்திக் கொல்வது அன்றாட நிகழ்ச்சியாகி விட்டது.  உலகின் பாவங்களுக்காக கம்யூனிசம் ஒரு தண்டனையாக கடவுளால் அனுமதிக்கப்பட்டுள்ளது.

அரசியலில் உலகமெங்கும் ஒரு நிலைமை இல்லை.  ஊழல், மோசடி, எதையும் நம்ப முடியாத, எதுவும் நடக்கக் கூடிய பதற்ற நிலையையே எங்கும் காண்கிறோம்.  கடவுளின் ஒழுக்க சட்டங் களுக்கு அரசியலில் இடமே இல்லை என்று ஆகிவருகிறது.

சமூக வாழ்வில் பழி பாவங்கள் எல்லை கடந்து விட்டன. கொள்ளை, கொலை, ஒழுக்கச் சீர்கேடு, மனிதனை மிருகமாக்கும் கருத்தடை, அநியாயப் படுகொலையாகிய கருச்சிதைவு போன்றவை ஏற்றுக் கொள்ளப்பட்டு வருகின்றன.  உலக அரசாங்கங்கள் இப்பழி பாதகச் செயல்களுக்கு ஆதரவும், ஊக்கமும் அளித்து கடவுளை எதிர்த்து நிற்கின்றன.

இதன் காரணமாக கடவுளின் நீதி மூளுகின்றது.  இயற்கை தன் நிதானத்தை இழந்து வருகிறது. அளவுக்கு மிஞ்சி அதன் சீற்றம் வெளிப்படுகிறது.  பூகம்பம், எரிமலை, வெள்ளம், வறட்சி, புயல், இயற்கையின் கொந்தளிப்பு!  இவற்றின் விளைவாக எண்ணற்ற மரணங்கள்!  திடீரென இறக்கும் மக்கள் ஆன்ம தயாரிப்பில்லாததால் நித்திய  நரகத்தில்  புதைபடும்  பரிதாபம்!   
கொடிய  பஞ்சங்களும், கண்டுபிடிக்க முடியாத நோய்களும் பரவி உலகத்தை வாட்டி வருகின்றன!  “காலத்தின் அடையாளங்களான” இவற்றைக் கண்டும் உலக மக்கள் திருந்தியதாகத் தெரியவில்லை.  அதே பாவங்கள்!  அதே கொடிய கடவுள் பழிப்புச் செயல்கள்தான் அதிகரித்து வருகின்றன.

ஆன்மீகத் துறையிலாவது ஆறுதலைத் தேடிச் சென்றால், அங்கும் பெரும்பாலும் ஏமாற்றமே.  பக்திக்கு ஏதுவில்லாத ஆசார முறைகள், சந்தடி, கேளிக்கை அதிகரிப்பு, சிந்தனையற்ற சொற் பொழிவுகளான பிரசங்கங்கள், நிச்சயமற்ற ஒழுக்க விதிமுறைகள், தேவசிநேகத்தால் உள்ளத்தை நிறைவிக்காமல் அறிவுக்கு விளக்கம் தரும் அங்கலாய்ப்பான நிலை, நற்கருணைப் பக்தி மட்டந்தட்டப் படல், தேவதாய் மீது பக்தி ஒதுக்கப்படல், தவ முயற்சிகளும், பரித் தியாகமும் பரிகசிக்கப்படல், எது பாவம், எது புண்ணியம் என்று கூட கவலைப்படாத பரிதாப நிலை!

இவ்வாறு ஏகப்பட்ட சஞ்சல நிலைகளையே மக்கள் எங்கும் சந்திக்கிறார்கள், சிந்திக்கிறார்கள்!  உலகம் எப்போதும் இப்படித்தான் இருந்து வந்துள்ளது. வரலாறு மீண்டும் திரும்புகிறது என்று சாக்குப்போக்குச் சொல்ல முடியாது.  இது எப்போதும் வந்து போகும் வரலாற்று    நிலை மாதிரி தெரியவில்லை.  அதற்கும் அதிகமாக ஏதோ உள்ளது.  நாம் கவலைப்பட வேண்டிய நிலை உள்ளது என்றே உள்மனம் கூறுகிறது.

இந்நிலைக்குக் காரணத்தையும் இதிலிருந்து விடுதலைக்கு வழியையும் கடவுள் தம் திரு அன்னை வழியாகக் கூறியுள்ளார்.  உலக மக்கள் அனைவருக்கும் பதில் கூறி வழிகாட்டும் செய்திகளைக் கடவுள் நமக்கு எட்டச் செய்துள்ளார்.  இச்செய்திகளைத் தாங்கிய நூலையே நீங்கள் உங்கள் கரத்தில் பிடித்துள்ளீர்கள்.  இச்செய்தியை உலகம்--குறிப்பாக கத்தோலிக்கத் திருச்சபை--பின்பற்றும் அளவுக்குத் தான் உலகம் அழிவிலிருந்து காப்பாற்றப்படும்.  ஆகவே இந்நூல் ஒரு எச்சரிப்பு நூலாகவும் உள்ளது.

“பாத்திமா காட்சிகள்” என்றவுடன் ஆச்சரியப்பட வேண்டாம்!  எத்தனையோ ஆண்டுகளாக பாத்திமா பற்றிக் கேட்டு வருகிறோம்.  அதிலே அப்படி என்ன உள்ளது என்று எண்ணுகிறீர்களா?  பாத்திமா காட்சிகளில் மாமரி அன்னை கூறும் செய்திகள் அன்றி இன்று உலக மீட்புக்கு வேறு செய்தி இல்லை! 

சுவிசே­ச் செய்திகளை மறந்து விட்ட  உலகிற்கு அவற்றை வேகத்துடன் நினைவூட்டும் செய்தியே பாத்திமா செய்தி!  இதனை நாம் இன்னும் சரியாக அறியவே  யில்லை! புரிந்து கொண்டதுமில்லை! இனிமேல் காலந்தாழ்த்த நேரமுமில்லை!  விடுதலையையும் சமாதானத்தையும் கொண்டு வரும் இப்பரலோகச் செய்தியை முதலில் அறிந்து கொள்ளுங்கள்.  இதை அறிவது உங்கள் கிறீஸ்தவக் கடமை, தட்டிக் கழிக்கக் கூடாத  கடமை!

தேவ அன்னையை வாழ்த்தும் வலிமையுள்ள ஜெபமாகிய அருள்நிறை மந்திரத்தை ஜெபித்து நூலைத் திறந்து படியுங்கள்.  படிக்கப் படிக்க எந்த அளவுக்கு நீங்கள் உள்ளத்தில் பற்றி எரிவீர்களோ, அந்த அளவுக்கு கடவுளின் அரசையும், உலக சமாதானத்தையும் மாமரி வழியாக உலகில் கொண்டு வருவீர்கள்!

அ. சே.