பாத்திமா காட்சிகள் - நூலைப் பற்றி...

பாத்திமா பற்றிய முழு விபரமும் அடங்கிய நூல் இது.  தாமஸ் வால்ஷ் என்பவர் எழுதியுள்ள  “Our Lady of Fatima” என்ற உலகப் பிரசித்தி பெற்ற நூலை முக்கிய ஆதாரமாகக் கொண்டது. இவ்வாசிரியர் இந்நூலை எழுதுமுன் காட்சிகள் நடைபெற்ற கோவா தா ஈரியாவுக்கும், குழந்தைகளின் ஊரான அல்யுஸ்திரலுக்கும் நேரில் சென்று தங்கி மக்களுடன் பேசியுள்ளார்.  

காட்சி பெற்ற மூவருள் இன்னும் உயிரோடிருக்கும் சகோதரி லூஸியாவையும் 1946-ல் நேரில் சந்தித்துப் பேசி பல தெளிவுகள் பெற்றார்.  இவருடைய நூலில் காணும் தகவல்கள் முழு நம்பிக்கைக்குரியன என்று பொதுவாக ஒப்புக்கொள்ளப் பட்டுள்ளது.

இத்தமிழ் நூலில் கூறப்படும் காட்சிகளின் விவரம் சகோதரி லூஸியா எழுதியுள்ள ஞாபகக் குறிப்புகளில் இருந்து எடுக்கப் பட்டுள்ளது.  காட்சிகளின் போது நிகழ்ந்த உரையாடல்கள் “Lucia Speaks” - (லூசியா பேசுகிறாள்) என்ற வெளியீட்டில் லூஸியா எழுதியுள்ளபடியே கூறப்படுகின்றன.  

இதர உரையாடல்கள் தாமஸ் வால்ஷ், மார்ட்டின்டேல், இன்னும் மற்ற ஆசிரியர்களின் நூல்களில் கண்டுள்ளவாறு தரப்பட்டுள்ளன.  மாமரி அன்னையின் வாய்மொழி களும், குழந்தைகளின் பேச்சுக்களும், அவற்றின் கருத்து சிறிதும் மாறி விடாதிருக்கும்படி அப்படி அப்படியே மொழிபெயர்க்கப் பட்டுள்ளன.  இதனால் தமிழ் சொல்முறை சில இடங்களில் விகாரப் பட்டுத் தோன்றக் கூடும்.

படித்தபின் விட்டுவிடக் கூடியதல்ல இந்நூல் தரும் செய்தி.  இது நம் மீது ஒரு கடமையைச் சுமத்துகிறது.  பரலோக அன்னையின் வேண்டுகோளை நாம் ஒவ்வொருவரும் நிறைவேற்றும் கடமையை ஏற்றே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறது.  இந்நூலைப் படித்த பின் உங்கள் வாழ்வு முன்போல் இருக்க முடியாது--இருக்கவும் கூடாது.