புனிதர்களின் உத்தரிய பக்தி

திருச்சபையின் பல புனிதர்கள் அன்னையின் மேல் அளவற்ற அன்பு கொண்டு, அவர்களது உத்தரியத்தினை பக்தியுடன் எப்பொழுதும் அணிந்திருந்தனர்.

புனித அல்போன்ஸ் லிகோரியார், “உத்தரியத்தின் மகத்துவத்தை உணராமல், நவீன சீர்திருத்தவாதிகள், பிரிவினைவாதிகள், தப்பறைகளில் உழல்வோர் அதனை அணிவதை கேலிக்கூத்தாக எண்ணுகின்றனர். இதனை மிகவும் அற்பமான முட்டாள்தனமான செயலாக குறை கூறுகின்றனர்.” என அன்னையின் பாதுகாப்பினை நாடும் அனைவருக்கும் அறிவுரை கூறுகின்றார். 

பாப்பரசர் புனித இரண்டாம் அருள் சின்னப்பர், துப்பாக்கியால் சுடப்பட்டு அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப் பட்ட பொழுது, மருத்துவர்களிடம், “நான் அணிந்திருக்கும் எதனை வேண்டுமானாலும் நீங்கள் அகற்றலாம். ஆனால் எனது உத்தரியத்தினை மட்டும் எக்காரணம் கொண்டும் அகற்றக்கூடாது” என்று கோரிக்கை வைத்தார்.

பலர் இந்த பக்தி முயற்சியினை குறை கூறினாலும், ஏளனமாக எண்ணினாலும், பல பாப்பரசர்கள் இந்த பக்தி முயற்சியினை அங்கீகரித்து, இதனை விடாமுயற்சியோடு பின்பற்ற வலியுறுத்துகின்றனர்.

பரிசுத்த பாப்பரசர் பத்தாம் கிரகோரியார் உத்தரியத்தினை அணித்திருந்தார். உத்தரிய அற்புதம் நிகழ்ந்த 25 ஆண்டுகளுக்குப் பின்னர் அவரது உத்தரியத்துடன் அடக்கம் செய்யப்பட்டார். அவர் இறந்து 600 ஆண்டுகளுக்குப் பின்னர் அவரது கல்லறை திறக்கப்பட்ட பொழுது, அனைவரும் அதிசயிக்கத்தக்க விதமாக அவரது உத்தரியம் அழியாமல் அப்படியே இருந்தது.

கத்தோலிக்க திருச்சபையின் இருபெரும் சபைகளை நிறுவிய புனிதர்களான புனித அல்போன்ஸ் லிகோரியார் (உலக இரட்சகர் சபை) மற்றும் புனித தொன் போஸ்கோ (சலேசியன் சபை) இருவரும் பரிசுத்த கார்மல் மலை அன்னையின் மேல் பக்தி கொண்டு அவர்களது பழுப்பு நிற இரக்கத்தின் ஆடையை எப்பொழுதும் அணிந்திருந்தனர். இருவரும் இறந்த பின்னர் குருக்களுக்கான ஆடைகளுடன் அவர்களது உத்தரியத்தினையும் வைத்து அடக்கம் செய்யப்பட்டனர். 

பல ஆண்டுகள் கடந்த பின்னர், அவர்களது கல்லறைகள் திறக்கப்பட்ட பொழுது அவர்களது உடலும், குருக்களுக்கான ஆடைகளும் அழிந்து போயிருந்தன. ஆனால், இருவரும் அணிந்திருந்த பழுப்பு நிற உத்தரியம் மட்டும் அழியாமல் அப்படியே இருந்தது. புனித அல்போன்ஸ் லிகோரியார் அணிந்திருந்த அவரது உத்தரியமானது இன்றும் ரோமில் உள்ள அவரது சபையின் தலைமை மடத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.

*****உத்தரியம் சாத்தானுக்கு எதிரான பாதுகாப்பு கேடயம்*****

பரிசுத்த கார்மல் அன்னையின் உத்தரிய பக்தியினை பரப்பும் அன்பர்களுக்கு எதிராக சாத்தான் ஒரு வெறிநாயினைப் போல செயல்படுகின்றான். அது ஏன்? என்பதற்கு தேவதாயாரின் மைந்தர்களில் ஒருவரான வணக்கத்திற்குரிய பிரான்சிஸ் ஏப்ஸ் வாழ்க்கையில் நடந்த நிகழ்வின் வாயிலாக நாம் அறிந்து கொள்ளலாம்.

ஒருநாள் அவர் அணிந்திருந்த அவரது உத்தரியம் கீழே விழுந்துவிட்டது. அவர் அதனை மீண்டும் அணிந்த பொழுது சாத்தான், “இந்த பழக்கத்தினை கைவிட்டுவிடு, இந்தப் பழக்கம்தான் எங்களிடம் வந்து சேரவேண்டிய எத்தனை எத்தனையோ ஆன்மாக்களை தட்டிப் பறித்துவிட்டது” என அலறியது.

அப்பொழுதே அவர், சாத்தான் எதற்கெல்லாம் மிகவும் பயப்படுவான் என கேட்ட பொழுது, மூன்று வகையான செயல்களுக்கு மிகவும் பயந்து நடுங்குவதாக சாத்தான் அறிக்கையிட்டது. அந்த மூன்று செயல்கள் எது என அவர் மீண்டும் கேட்டபொழுது, சாத்தான், “இயேசு கிறிஸ்துவின் திருப்பெயர், பரிசுத்த கன்னி மாமரியின் திருப்பெயர் மற்றும் கார்மல் சபையின் பழுப்பு நிற உத்தரியம்” என பதிலுரைத்தது. இவற்றுடன் நாம் பரிசுத்த செபமாலையினையும் சேர்த்துக்கொள்ளலாம். 

*****சிந்தனை*****     

இவ்வுலக வாழ்வில் நாம் அன்றாடம் பள்ளிச் சீருடை, காவலர் சீருடை போன்ற வெவ்வேறு வகையான சீருடை அணிந்தவர்களைப் பார்க்கின்றோம். அவர்கள் அணிந்துள்ள சீருடைகளின் வாயிலாக நாம் அவர்களது பணியினை அறிந்து அதற்கான மரியாதை கொடுக்கின்றோம். அதற்கும் மேலாக, நமது பண்பாட்டில், தாலி அணிந்திருக்கும் பெண்களை திருமணமானவர்கள் என அடையாளம் கண்டு கொள்கின்றோம்.

அனைத்திற்கும் மேலான நமது நித்திய வாழ்வினை நோக்கிய பயணத்தில், எப்பொழுது நம்மை விழுங்கலாம் என காத்துக்கொண்டிருக்கும் சாத்தானிடமிருந்து நமது ஆன்மாவினை பாதுகாக்கும் கவசமாக அன்னை நமக்கு வழங்கியது உத்தரியம். இதை நாம் எப்பொழுதும் பக்தியோடு அணிந்திருக்கும் பொழுது, நாம் தேவதாயின் பிள்ளைகள் என சாத்தானுக்கு அடையாளம் காட்டுகின்றோம்.

சாத்தான், இயேசு கிறிஸ்துவையோ அல்லது அன்னை மரியாளையோ எதுவும்  செய்ய முடியாமல் அவளது எஞ்சி இருக்கும் பிள்ளைகளின் மேல் போர் தொடுக்கின்றது. அன்னையின் உத்தரியத்தினை எப்பொழுதும் அணிந்து கொள்ளும் பொழுது, எதிரிகளிடமிருந்து தன் குழந்தையைக் காக்கும் தாயினைப் போல, தமத்திருத்துவத்திடம் நமக்காக மன்றாடி, சாத்தானின் சோதனைகளை எளிதாக வெற்றி கொள்ளக் கூடிய எண்ணற்ற அருள் வரங்களைப் பெற்றுத் தருகிறார்கள்.

அன்னையின் இரக்கத்தின் ஆடையினை அணிந்து கொண்டு நாம் அவளது பிள்ளைகள் என அனைவருக்கும் அடையாளம் காட்டத் தயாரா????

இயேசுவுக்கே புகழ்!!!! மாமரித்தாயே வாழ்க!!!!

நன்றி : சகோ. ஜெரால்ட்