சலேத் மாதா காட்சி

சலேத் நகர் மலையில் மாதா காட்சி நடந்த முறையை காட்சி பெற்ற மெலானி கால்வெட் எழுதியபடியே இங்கு தருகிறோம்.

1846 செப்டம்பர் மாதம் 18-ம் தேதி அன்று மாதா காட்சிக்கு முந்தின நாள் வழக்கம் போல் நான் தனியாக என் எஜமானரின் பசுக்களை மேய்த்துக்கொண்டிருந்தேன். காலை பதினொரு மணியளவில் ஒரு சிறுவன் என்னை நோக்கி வரக்கண்டேன். நான் பயந்தேன். காரணம், நான் எவ்வகையான தோழமையையும் ஒதுக்கி வந்த விஷயம் எல்லாருக்கும் தெரிந்திருக்க வேண்டும் போல் எனக்குத் தோன்றியது. அந்தப் பையன் என்னிடம் :

"நான் உன்னுடன் வருகிறேன். என் ஊரும் கார்ப்ஸ் தான்'' என்றான். என் இயல்பான கெட்ட குணம் சீக்கிரம் வெளிப்பட்டது. சில எட்டுகள் பின்னோக்கி எடுத்து வைத்த நான்: "யாரும் இந்தப் பக்கம் வர நான் விரும்பவில்லை. நான் தனிமையில் இருக்க விரும்பு கிறேன்" என்றேன். ஆனால் அவன் என்னைப் பின் தொடர்ந்தான்.

"நான் உன்னுடன் இருக்கவிடு. என் எஜமானர் நான் என் பசுக்களை உன் பசுக்களுடன் சேர்ந்து மேய்க்கும்படி சொன்னார். நான் கார்ப்ஸ்ஸிலிருந்து வருகிறேன்" என்று சொன்னான். நான் அவனை விட்டு தூரப் போய் யாரும் என் பக்கம் வர நான் விரும்பவில்லை என்று சைகை காட்டிவிட்டு சற்று தொலைவில் புல்தரையில் உட்கார்ந்தேன். அங்கே நான் அந்த புற்களிடமாவது அல்லது நல்ல ஆண்டவரிடமாவது பேசுவது என் வழக்கம்.

சற்றுப் பின் நான் பின்னால் திரும்பிப் பார்க்க, அங்கே எனக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறான் மாக்ஸிமின்! "என்னை உன்னுடன் வைத்துக் கொள். நான் நல்லபடி நடந்து கொள்வேன்'' என்கிறான்.

ஆனால் என்னிடம் இயல்பிலே இருக்கிற கெட்ட குணம், அறிவை ஏற்க மறுக்கிறது. சடாரென எழுந்தேன். ஒன்றும் பேசாமல் கொஞ்சத் தூரம் ஓடிப் போய் மறுபடியும் ஆண்டவருடைய பூக்களோடு விளையாடத் தொடங்கினேன். மறுபடியும் மாக்ஸிமின் வந்து, தான் நல்லபடி நடப்பதாகக் கூறுகிறான். அவனை உட்காரும்படி சயிக்கினை காட்டிவிட்டு நான் ஆண்டவருடைய பூக்களுடன் விளையாடியபடியே இருந்தேன். கொஞ்ச நேரத்தில் மாக்ஸிமின் 'களுக்' என்று சிரித்தான் (அவன் என்னை பரிகாசம் செய்வதாக நினைத்தேன்). அவன் நாம் ஏதாவது விளையாடலாம் என்றான். எனக்கு விளையாட்டு என்றாலே என்னவென்று தெரியாது. எப்போதும் தனிமையில் இருந்ததால் மற்றவர்களுடன் எப்படி விளையாடுவது என்று தெரியவில்லை. அப்போது திரிகால மணிச் சத்தம் கேட்டது. உடனே நான், மாக்ஸிமினிடம் அவன் தன் ஆத்துமத்தை கடவுளிடம் எழுப்பும்படி சயிக்கினை காட்டினேன். அவனும் தன் தொப்பியை எடுத்து விட்டு சற்று நேரம் மவுனமாயிருந்தான். பின் நாங்கள் சாப்பிட்டோம்...

மறுநாள் செப்டம்பர் 19. மலைக்கு ஏறுகிற பாதையில் மாக்ஸிமினைச் சந்தித்தேன், மேலே சென்றோம். மாக்ஸிமின் ஒரு நல்ல எளிய குணமுள்ள சிறுவன் எனத் தெரிந்து கொண்டேன். நான் சற்று தள்ளிப் போய் ஆண்டவருடைய பூக்களுடன் பேசுவதை கண்டவுடன் ஓடி வருவான். நான் என்ன செய்கிறேன், ஆண்டவருடைய பூக்களிடம் என்ன பேசுகிறேன் என்று பார்ப்பான். பிந்தி விட்டால் நான் என்ன சொன்னேன் என்று கேட்பான்.

பின் ஒரு விளையாட்டுச் சொல்லித் தரக் கேட்டான். நேரம் மத்தியானம் ஆகிக் கொண்டிருந்தது. ''மோட்சத்திற்கு" பூக்கள் கொண்டுவரும்படி சொன்னேன். பூக்கள் வந்தன. பின் கொஞ்சம் உயரமான இடத்திற்கு பசுக்களை ஓட்டிச் சென்றோம். அங்கே "மோட்சம்'' கட்டுவதற்கு கற்கள் இருந்தன. அங்கே மதிய உணவைச் சாப்பிட்டோம். பின் கற்களை அடுக்கிக் கட்டினோம். கீழ் மாடியில் நாங்கள் இருப்பதாகவும், அதை ஒரே கல்லால் மூடி அதை "மோட்சம் " என்று அழைத்தோம். அதைச் சுற் றிலும் பூமாலைகளைத் தொங்க விட்டோம். வேலையை முடித்துவிட்டு உட்கார்ந்து எங்கள் "மோட்சத்தைப் பார்த்துக் கொண்டிருந்தோம். பிறகு எங்களுக்கு உறக்கம் வந்தது. சில அடி தூரம் சென்று புல்லில் படுத்து உறங்கி விட்டோம்.

நான் விழித்த போது பசுக்களைக் காணவில்லை. மாக்ஸிமினைக் கூப்பிட்டேன். நான் ஒரு மேட்டில் ஏறினேன். அங்கிருந்து பசுக்கள் அமைதியாக மேய்வதைக் கண்டேன். நான் கீழே இறங்க, மாக்ஸிமின் மேலே வந்து கொண்டிருந்தான். அப்போது ஒரு அழகிய ஒளி சூரியனை விட அதிக பிரகாசமாயிருப்பதைக் கண்டேன்.

'மாக்ஸிமின். அங்கே என்ன இருக்கிறதென்று பார்த்தாயா? ஓ! கடவுளே!" என்று கூறினேன். அதே சமயம் என் கையிலிருந்த கோலைக் கீழே விழ விட்டேன். அந்நேரம் நினைக்க முடியாத வியப்பான ஒன்று எனக்குள் நடந்தது. நான் ஈர்க்கப்படுவதை உணர்ந்தேன். அன்பு நிரம்பிய பெரும் மரியாதையை உணர்ந்தேன். என் இருதயம் வேகமாக துடித்தது.

அந்த ஒளியிலேயே என் பார்வையைப் பதித்தேன். அது அசையாமல் இருந்தது. பின் அது திறந்தது. அங்கே, அதைவிடப் பிரகாசமான இன்னொரு ஒளியைக் கண்டேன். அது அசைந்தது. அதிலே நான் ஒரு அழகிய மாது தன் தலையைத் தன் கரங்களால் தாங்கியபடி எங்கள் "மோட்சத்தின் மேல் அமர்ந்திருக்க கண்டேன்.

அம்மாது எழுந்து நின்று தன் கைகளைக் குறுக்காக சேர்த்து எங்களைப் பார்த்து :

''வாருங்கள் என் பிள்ளைகளே! பயப்படாதீர்கள் . உங்களுக்குப் பெரிய செய்தியை அறிவிக்க வந்திருக்கிறேன்'' என்றார்கள்.

இந்த மென்மையான இனிய வார்த்தைகள் என்னை நித்தியத்திற்கும் அவர்களிடம் பறந்து செல்லச் செய்தன.

நான் அவர்கள் பக்கத்தில் சென்றேன். அவர்களின் முன்பாக வலது பக்கமாய் நின்றேன். அவர்கள் பேசத் தொடங்கினார்கள். அவர்களின் அழகிய கண்களிலிருந்து கண்ணீரும் வழியத் தொடங்கியது.

''என் மக்கள் எனக்குக் கட்டுப்பட்டு நடக்க விரும் பாவிட்டால், என் குமாரனின் கரங்களை நான் விட்டுவிட வேண்டியது வரும். அவை எவ்வளவு பாரமாயிருந்து என்னை அழுத்துகின்றன என்றால் இனி மேலும் அவற்றை என்னால் தாங்கிப் பிடிக்க முடியவில்லை.

எப்போதும் முழு நேரமும் நான் உங்களுக்காகக் கஷ்டப்பட்டிருக்கிறேன். என் குமாரன் உங்களைக் கைவிட்டு விடாதிருக்க வேண்டுமானால், அதற்காக இடைவிடாமல் ஜெபிப்பதை என் பொறுப்பாக நான் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. நீங்களோ இதைப் பற்றிச் சிந்திப்பதேயில்லை. உங்கள் சார்பாக நான் ஏற்றுக் கொண்டிருக்கிற கஷ்டங்களுக்கு, உங்கள் ஜெபங்களோ செயல்பாடுகளோ ஒருபோதும் ஈடாகாது.

நீங்கள் உழைப்பதற்கு நான் 6 நாட்களை கொடுத்து 7-ம் நாளை எனக்கென வைத்துள்ளேன். அதை யாரும் எனக்குத் தர நினைக்கவில்லை. இதுவே என் குமாரனின் கரம் பாரமாய் இறங்கச் செய்கிறது.

வண்டி ஓட்டுகிறவர்கள் என் குமாரனின் நாமத்தை நடுவில் இழுக்காமல் பேச முடியவில்லை . ''என் மக்கள் எனக்குக் கட்டுப்பட்டு நடக்க விரும்பாவிட்டால் என் குமாரனின் (தண்டிக்கும் கரங்களை நான் விட்டு விட வேண்டியிருக்கும்" - மாதா .

இவ்விரண்டும் என் குமாரனின் கரம் பளுவாக இறங்கச் செய்கின்றான். அறுவடை கெட்டுப் போவதன் காரணம் நீங்கள்தான். இதை நீங்கள் உணரும்படி உருளைக்கிழங்கு சாகுபடியில் நான் காண்பித்தேன். நீங்கள் அதைச் சட்டை பண்ணவில்லை. மாறாக, நீங்கள் கெட்டுப்போன கிழங்குகளைக் கண்டதும் ஆணையிட்டு சத்தியம் செய்து அதிலே என் குமாரனின் பெயரையும் உட்படுத்தினீர்கள். அவை கெட்டுப் போய்க் கொண்டேயிருக்கும். கர்த்தர் பிறப்பு விழாவில் மிச்சம் எதுவுமிராது.''

இவ்விடத்தில் நான் "உருளைக் கிழங்கு” என்பதை ஆப்பிள் என்று கண்டு பிடித்ததாக எண்ணினேன்.* அந்நல்ல மாது என் எண்ணத்தைப் புரிந்து கொண்டு அதை மீண்டும் இப்படிக் கூறினார்கள்.

(* Pommes de terre என்பது உருளைக்கிழங்கு. Pommes என்பது ஆப்பிள். இரண்டும் Pommes என்பதால்தான் மெலானி அப்படிக் கண்டுபிடித்தாள்.)

"நீங்கள் கண்டுபிடிக்கவில்லை குழந்தைகளே அதையே வேறு வகையில் கூறுகிறேன்."

அறுவடை கெட்டுப் போனால் அது உங்களைப் பாதித்ததாகத் தெரியவில்லை. நீங்கள் அதை உணரும்படி செய்ய போன வருடம் உருளைக் கிழங்கைக் கொண்டு காட்டினேன். அதை நீங்கள் சட்டை பண்ணவில்லை. மாறாக கெட்டுப்போன கிழங்குகளைக் கண்டதும் நீங்கள் ஆணையிட்டு சத்தியம் செய்து அதிலே என் குமாரனின் பெயரையும் உட்படுத்தினீர்கள். அவை கெட்டுப் போய்க் கொண்டேயிருக்கும். கர்த்தர் பிறப்பு விழாவில் மிச்சம் எதுமிராது.

உங்கள் வசம் தானியம் இருந்தால் அதை விதைக்க வேண்டாம். நீங்கள் விதைப்பதையெல்லாம் மிருகங்கள் தின்று விடும். முளைத்து வளருவதெல்லாம் நீங்கள் போரடிக்கும்போது தூசியாகி விடும். ஒரு பெரும் பஞ்சம் ஏற்படும். அப்பஞ்சம் வருமுன் ஏழு வயதுக்குட்பட்ட குழந்தைகள் நடுக்கம் கண்டு அவர்களை ஏந்தியிருப்பவர் களின் கரங்களிலே மடிவார்கள். மற்றவர்கள் பசியை அனுபவித்து தவஞ் செய்வார்கள். பருப்பு வகைகள் கெடும். திராட்சைப் பழங்கள் அழுகிப் போகும்.

இச்சமயம் என்னைக் கவர்ந்த அந்த மாது பேசியது சற்று நேரம் எனக்குக் கேட்கவில்லை . ஆனால் அவர்கள் பேசியது போல் உதடுகள் அசைந்தன. இப்போது தான் மாக்ஸிமின் தன் இரகசியத்தைப் பெற்றுக் கொண்டான். பின் என் பக்கம் திரும்பி, பரிசுத்த கன்னிகை எனக்கு ஒரு இரகசியம் சொன்னார்கள். பிரெஞ்ச் மொழியில் கூறினார்கள். அதை முழுவதும் இதோ கூறுகிறேன்:

சலேத் இரகசியங்களைப் படிக்கும்போது நாம் மறவாமல் சில காரியங்களை நம் கருத்தில் கொண்டிருக்க வேண்டும்:

1. மாதாவின் இரகசியமே நம் உள்ளங்களில் பேச விட வேண்டும். அதைப் பற்றி நாம் என்ன நினைக் கிறோம் என்பதை அல்ல. அப்போதுதான் உண்மையான செய்தி நமக்கு எட்டும். அதற்காக மன்றாட வேண்டும்.

2. சலேத் இரகசியம் ஒரு தீர்க்கதரிசனம். ஆகவே பொதுவாகவே தீர்க்கதரிசனங்கள் உவமைகளாலும் உபமானங்களாலும் நிரம்பியிருப்பது போல் இதிலும் இருப்பதை கவனத்தில் கொண்டிருக்க வேண்டும்.

3. வார்த்தைகளை அவை வெளியில் காணப் படுகிற அர்த்தப்படுத்தாமல் அவற்றின் உண்மையான பொருளைக் காணும் கருத்துடன் இந்த இரகசியத்தை வாசிக்க வேண்டும். உதாரணமாக அந்திக் கிறீஸ்து ஒரு மேற்றிராணியாருக்கும் எபிரேய கன்னியாஸ்திரீக்கும் மகனாகப் பிறப்பான் என்பது. இவற்றை அவற்றின் ஞானப் பொருளில் காணவேண்டும். இந்த உவமைகள், உண்மையைக் கண்டுபிடிக்க உதவும் குறிப்புகளா யிருக்கின்றன.

4. கால முரண்பாடுகள் காணப்படலாம். முன் நடந்தவை பிந்தியும் பிந்தியவை முந்தியும், ஒரே காரியம் மறுபடியும் வேறு வகையிலும் கூறப்படுவதைக் கண்டு மனச் சோர்வடையலாகாது. மொத்தத்தில் கடவுளின் செய்திகளை நமக்கு புலப்படுத்தும்படி பரிசுத்த ஆவியான தேவனை மன்றாடி இந்த இரகசியம் படிக்கப்பட வேண்டும்.